குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label விவசாய நிலம் விற்பனை. Show all posts
Showing posts with label விவசாய நிலம் விற்பனை. Show all posts

Sunday, May 17, 2020

நிலம் (65) – விவசாய நிலங்கள் வாங்குவது எப்படி?


கொரானாவில் தப்பித்து விடலாம் போல. ஆனால் இந்த இந்தியப் பொருளாதார திட்டங்களிடமிருந்தும், தினந்தோறும் வரும் தமிழக அரசின் அறிவிப்புகளைப் புரிந்து கொண்டும், வாழ்வியலை நகர்த்திச் செல்வது பெரும் பாடாய் இருக்கிறது.

ஒவ்வொரு அரசியல்வாதியும் கல்லூரிகள், பள்ளிகள் வைத்திருக்கின்றார்கள். பலர் பள்ளி, கல்லூரிகளில் முதலீடுகளை ரகசியமாகச் செய்திருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறையினரின் செயல்பாடுகளைக் காணும் போது சந்தேகம் எழுகிறது.

குழந்தைகள் மீது கொரானா தொற்று எனும் கத்தியைத் தொங்க விடுகிறது கல்வித்துறையின் அறிவிப்புகள். கொரானாவில் இருந்து தப்பித்து வீட்டுக்குள் இருக்கும் குழந்தைகளின் உயிரைப் பணயம் வைத்துதான் கல்வியை வளர்க்க வேண்டுமா? அப்படி என்ன அவசரம் ஏற்பட்டு விட்டது?

இயற்கைப் பேரழிவு நடந்து கொண்டிருக்கும் போது, நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத போது ஏன் இப்படியான அவசரத்தை தமிழக கல்வித்துறை காட்டுகிறது என்று சிந்தித்தால், கல்வி நிலையங்கள் வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் தானா என்றும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. ஆனால் பதில் கிடைக்குமா? கிடைக்காது. இட்லிகள்-கோடி ரூபாய் கதைதான் நினைவுக்கு வருகிறது.

எல்லாம் அந்த கதிர்-வேலனுக்கே வெளிச்சம்.

தேர்வு எழுத வரப்போகும் குழந்தைகளுக்கு கொரானா தொற்று ஏற்பட்டு, தொடர்ந்து விபரீதம் ஏற்பட்டால் தமிழக கல்வித்துறை இரங்கல் செய்தி வெளியிட்டு, நிவாரணம் கொடுப்பார்கள். ஆனால் குழந்தைகளின் உயிர்?

கதிர்வேலா, கதிர்வேலா கொஞ்சம் கருணை வை தமிழக குழந்தைகள் மீது. 

கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாடசாமி, தமிழக குழந்தைகளைக் காப்பாற்றி அருளும்.

***
அன்பு நண்பர்களே,

இந்த கொரானா லீவில் பெரும்பாலானோர் விவசாய நிலம் வாங்குவது பற்றி தொலைபேசினீர்கள். உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும், அழைப்புக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத் தொழில் – காதலியைப் பார்த்துக் கொள்வது போல இருக்க வேண்டும். ஒரு நாள் கவனம் இல்லையென்றாலும் மகசூல் குறைந்து போகும்.

உங்களுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லப் போகிறேன்.

முன்பு பெருநடவுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார்கள். வீட்டில் விதை நெல் சி.ஆர் குதிருக்குள் வைத்திருப்போம். வெயிலில் காய வைத்து, சூடு ஆறியவுடன், சணல் மூட்டையில் கட்டி மாலையில் குளத்துக்குள் ஊற வைப்போம். ஒரு நாள் பூராவும் குளத்துக்குள் ஊறிக் கொண்டிருக்கும். இரண்டாம் நாள் மாலையில் எடுத்து வந்து தண்ணீரை வடிய விட்டு, விதை நெல் மூட்டைகளின் மீது மேலும் பல சணல் சாக்குகளைப் போட்டு இறுக்கமாக மூடி வைப்போம். மீண்டும் மறுநாள் மாலையில் குளத்துக்கு கொண்டு சென்று நீரில் முக்கி, மீண்டும் எடுத்து வந்து, சாக்குகளைப் போட்டு சூடாக இருக்கும் படி மூடி வைப்போம். மறுநாள் நெல்மணிகளில் இருந்து வெண் நிறத்தில் முளை வெளி வந்திருக்கும்.

இதற்கிடையில் நாற்றங்கால் சேறு அடித்து, இலை தழைகளைப் போட்டு நெய் கணக்காக மண்ணை சேறாக்கி வைத்திருப்பார்கள். விதை நெல் மணிகளை நாற்றங்காலுக்குள் பாவி, நீர் விட்டு வளர்த்து – வெகு கவனமாக பூச்சிகள் தீண்டா வண்ணம் பாதுகாத்து, உரமிட்டு வளர்த்து அதன் பிறகு நாற்றுக்களைப் பறித்து வயல்களில் நட்டு வளர்த்து, அது வளர்ந்து நெற்மணிகளை வெளியில் தள்ளும் போதுதான், அந்த விதை நெல்லின் மகசூல் எப்படி என்று தெரிய வரும்.

சி.ஆர் வகை நெல் ஏக்கருக்கு (100 செண்ட்) 36 மூட்டைகள் (60 கிலோ) கிடைக்கும். விதை நெல்லின் தரம் குறைவானால் விளைச்சல் 30 மூட்டையாகவோ அல்லது 20 மூட்டையாகவோ குறைந்து விடும். இந்த விஷயத்தை விளைச்சல் ஆனவுடன் தான் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

இப்போது புரிகிறதா விவசாயம் என்பது காதலியைப் பார்த்துக் கொள்வது போல என ஏன் சொன்னேன் என?

ஆனால் எந்தத் தொழிலும் தராத நிம்மதியை விவசாயம் தரும். கொரானா வந்தாலும் வந்தது எனது பெரும்பாலான நண்பர்கள் தோட்டத்துக்குச் சென்று குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கின்றார்கள்.

பத்து கத்தரிச் செடி, நான்கு வெண்டைச் செடி, அவரைக் கொடி, பூசனிக்கொடி, சுரைக்காய் கொடிகள், நான்கு தென்னை மரம், இரண்டு கொய்யா மரங்கள், வாழை, சப்போட்டா மரம் இரண்டு, நாவல் மரம் ஒன்று, மாமரம் ஒன்று – அரை ஏக்கர் தோட்டம் அதில் 400 சதுர அடியில் ஓடு வேய்ந்த வீடு – அசைவமென்றால் நான்கைந்து கோழிகள் - இது போதாதா நான்கு பேர் நிம்மதியாக வாழ?

ஐந்து தேங்காயை விற்றால் ஒரு கிலோ அரிசி. ஒரு நாளைக்கு போதும். இரண்டு கத்தரி, இரண்டு முருங்கைக்காய் – சாம்பாரோ குழம்போ ஆச்சு. கூட்டா பொறியலா? என்ன காய் தோட்டத்தில் கிடைக்கிறதோ அதைச் செய்தால் போதும். நாலு தென்னமரமும், கொஞ்சம் மரங்களும் போதும்  கேஸ் எதுக்கு? அசைவமா? நாட்டுக்கோழி கோழி இருக்கே. குளத்துப் பக்கம் தூண்டிலோடு போனால் நாலு கெண்டை, இரண்டு கெளுத்தி, நான்கு கொறவை மீன் – குழம்பு ரெடி. தீபாவளி பொங்கலா மட்டன். பசு மாடு இரண்டு இருந்தால் நெய், மோர், வெண்ணை.

அப்புறமென்ன? பிள்ளைகளைப் படிக்க வைக்க அரசு பள்ளி. சமூகம், சுற்றம், நட்பு போதும். அமைதியான வாழ்க்கை. ஏசி எதற்கு? கார் எதற்கு? கொஞ்சம் காசு சேர்த்தால் மாதம் ஒரு கோவில், இன்னும் கொஞ்சம் சேர்த்தால் வருடம் ஒரு சுற்றுலா.

நிம்மதி நம்மிடம் அல்லவா?

கொரானாவாவது தொற்றாவாவது?

தோட்டத்துக்கு செல்ல கொரானாவால் முடியுமா?

இனி விவசாய நிலம் வாங்குவது பற்றி பார்க்கலாம்.

முதலீடு எவ்வளவு? – இது உங்களின் தினசரி வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது

யார் விவசாயம் செய்வது? நீங்களா? இல்லை உறவினரா? இல்லை மேஸ்திரி மூலமா? – நீங்களாக இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை. ஆனால் உறவினர் அது அப்பாவாகவோ இல்லை மாமன் மச்சான்களாகவோ இருந்தால் – அவர்களின் அனுபவம், வயது, நிர்வகிக்கும் தன்மை ஆகியவை அவசியம் விசாரிக்கவும். மேஸ்திரி மூலம் எனில் இன்னும் கூடுதல் கவனம் தேவை.

விவசாயம் தான் இனி உங்கள் வேலை எனில் எந்தக் கவலையும் வேண்டியதில்லை. ஆனால் ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யலாம் எனில் யோசித்து, அதற்கேற்ப ஆட்கள் கிடைத்தால் செய்வது நலம்.

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, உங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலோ அல்லது உங்களின் விருப்பமான ஊரிலோ நிலம் வாங்கினால் – நிர்வாகச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள், விவசாயச் செலவுகள் என எல்லாவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

விவசாயத்தில் நிம்மதியான, பராமறிப்புக் குறைவான பயிர்கள் உண்டு. தென்னை மரம் அது தொடர்பான விவசாயம் என்பது குறைந்த அளவு ஆட்களை வைத்து நிர்வாகம் செய்யலாம். பணப்பயிர் விவசாயத்தில் கவனம் அதிகம் செலுத்தினால் கோடிகளில் லாபம் ஈட்டலாம். 

இதெல்லாம் உங்களின் விருப்பம், சூழல் சார்ந்த விஷயங்கள். எந்த மாதிரியான விவசாயம் செய்யப் போகின்றீர்கள் என்பது உங்களின் எண்ணம் சார்ந்தது.

தண்ணீர் வசதி, மழை நிலவரம், மண் தன்மை, ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற, பருவத்துக்கு ஏற்ற பயிர்கள் எவை, இப்படியெல்லாம் யோசித்து முடிவெடுக்கனும். இன்னும் அனேக காரணிகள் இருக்கிறது. அதை நாம் நேரில் சந்திக்கும் போது பேசலாம். இனி வரும் நிலம் பதிவுகளில் விவசாயம் தொடர்பான செய்திகளை எழுதுகிறேன்.

இத்தனை காரணிகளை ஆலோசித்து, முடிவெடுத்து அதன் பிறகு விவசாய நிலத்தினை வாங்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

***

லீகல், சர்வே, பத்திரப்பதிவு, பட்டா ஆகியவற்றுக்கு எங்களை அணுகுங்கள்.

மெக்கனைஸ்ட் ஃபார்ம்கள் தான் அதிகப் பிரச்சினைகள் இல்லாதவை.

விவசாயத்துக்கு அரசு கொடுக்கும் மானியங்கள், உதவிகள், இயந்திரங்கள் அதற்கான மானியங்கள் ஆகிய அனைத்து விபரங்களும் நமது நிறுவனத்தில் இருக்கின்றன. அனைத்து விபரங்களும் தரப்படும்.

நமது நிறுவனத்துடன் இணைந்து பணி ஆற்றும், பல ஆர்கானிக் விவசாய பொருட்களை உருவாக்கி வரும் பல்வேறு இணை நிறுவனங்களும், விவசாயத்துக்கு உரிய ஆலோசனைகள் தரும் வல்லுனர்களும் உண்டு.

தண்ணீர் இல்லாத காடு, கல்லும் மண்டிக்கிடக்கும் பயனற்ற பூமிகள் உங்களிடம் இருப்பின் என்னை அழைக்கவும். அப்பூமியிலிருந்து தங்கத்துக்கு நிகரான லாபம் தரும் விவசாயத்தை உருவாக்கி தருவோம்.

ஆ. அதெப்படி என நினைப்பீர்கள். அவ்வாறு உருவான நிலங்களைப் பார்வை இட என்னை அழைக்கலாம். வந்து பாருங்கள். அசந்து போவீர்கள்.

வாழ்க வளமுடன்…!