ரிலையன்ஸ் எனக்கு பெரிய பாடத்தை முன்பு புகட்டிய அனுபவம் இருக்கிறது. முன்பு 150 ரூபாய்க்கு போன் கொடுத்தார்களே நினைவிலிருக்கிறதா அந்தச் சம்பவம்? அப்போதெல்லாம் அவுட்கோயிங் காலுக்கு பெரும் தொகை செலவாகும். செங்கல் சைசில் நோக்கியா போன் இருந்தது. முதலில் பேஜர் வந்தது, அதன் பிறகு செல்லுலர் வந்தது. அந்தக் காலத்தில் தான் ரிலையன்ஸ் செல் போன் விற்பனையில் பத்தாயிரமோ ஒரு லட்சமோ சரியாக நினைவில் இல்லை வாங்கிக் கொண்டு ஏஜென்சிகளை உருவாக்கி செல்போன் விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த ஏஜென்சி எடுத்தவர் எனது நண்பர். பல லட்சம் இழந்தார். அடியேனும் சப் ஏஜென்சியில் பெரும் தொகையினை இழந்தேன்.
ஆகவே ரிலையன்ஸ் என்றாலே எனக்குள் அலாரம் அடிக்கும். முகேஷ் அம்பானியின் ஜியோ பற்றி எனக்கு அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே ஏற்படவில்லை. ரிலையன்ஸ் என்றாலே பாலியஸ்டர் பிரின்ஸ் என்ற இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகம் நினைவில் வந்து விடும். பெரும் முதலாளிகள், அரசே சலாம் போடும் போது நாமெல்லாம் என்ன சுண்டைக்காய்.
இவர்களால் அன்லிமிடெட் வாய்ஸ் காலினை எப்படி இலவசமாகக் கொடுக்க முடியும்? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. வேலைப்பளுவால் அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க முடியவில்லை.
நேற்றைய தினமலர் இது உங்கள் இடம் பகுதியில் தினமலர் வாசகர் சென்னை வினோத் அவர்களின் கடிதம் படிக்க கிடைத்தது.
இதோ அந்தக் கடிதம்.
ஆர்.வினோத், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று, நாடு முழுவதும் இளைஞர்கள் அதிகமாக உச்சரிப்பது, 'ஜியோ' என்ற சொல்லை தான். முகேஷ் அம்பானியின், 'ஜியோ' தொலைத் தொடர்பு நிறுவனம், பல அதிரடி சலுகைகளை அறிவித்து உள்ளது.அதில், 'கால்கள், எஸ்.எம்.எஸ்., முற்றிலும் இலவசம்; பயன்படுத்தும் இன்டர்நெட் டேட்டாவுக்கு மட்டும் கட்டணம். அதிலும், '149 ரூபாய் திட்டத்தில், 300 'எம்பி' முதல், 4,999 ரூபாய் வரை, பல பிளான்கள்' என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நமக்கு எப்படி லாபம், கம்பெனியால் எப்படி தர முடிகிறது என, ஆராய்ந்தால் அதில் பெரிய சூட்சமமே அடங்கியுள்ளது. தொலைத்தொடர்பில், '2ஜி, 3ஜி'க்கு அடுத்தபடியான ஆற்றல் கொண்டது, '4ஜி' தொழில்நுட்பம்.
இதை விட மேம்பட்ட, '4ஜி வோல்டி' தொழில்நுட்பத்தில், 'ஜியோ' சேவை வழங்குகிறது. இதில், அழைப்பு அல்லது, எஸ்.எம்.எஸ்., செய்யும்போது, டேட்டா கணக்கில் கழியும். 'அவுட் கோயிங்' காலுக்கோ அல்லது, 'இன்கம்மிங்' காலுக்கோ, டேட்டா கணக்கில், ஒரு நிமிடத்திற்கு, 0.75-1 'எம்பி' டேட்டா செலவாகும்.தினமும் ஒரு மணி நேரம், 'அவுட் கோயிங்' கால் பேசினாலும், 30 நிமிடங்களுக்கு 'இன்காம்மிங்' கால்கள் வந்தாலும், 8,0-90, 'எம்பி' வரை டேட்டா கணக்கில் குறையும்! இன்டர்நெட் பயன்படுத்தினால் கூட, இரண்டு நாட்களுக்குக் கூட தேறாது.
அதுவே, 499 ரூபாய் பிளானில் ஓரளவிற்கு பயன்பாடு உள்ளது. 499 மற்றும் அதற்கு மேல் செலவு செய்பவர்களுக்கு லாபம்; மற்றவர்களுக்கு இருக்காது.
'ஜியோ'வுக்கு மாதம் ஒருவர், 499 ரூபாய் செலவு செய்வார். அது, கம்பெனிக்கு மிகப்பெரிய லாபம் தானே! அது மட்டுமின்றி, டிசம்பர் வரை இலவசம் என, அறிவித்து உள்ளனர். இதை பயன்படுத்துவோரை போக பொருளாக ஆக்க பழக்கி, அதற்கு அடிமையான பின், கட்டணம் வசூலிப்பது ராஜதந்திரம்!
இணைப்பு :