கோவை வடக்கு வட்டம் தாசில்தார் அலுவலகத்துக்கு குடும்ப அட்டைக்கான முகவரி மாற்றத்துக்காக மனையாளுடன் சென்றிருந்தேன்.
வாசலின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து விண்ணப்ப மனுக்களை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். 30 ரூபாய் கொடுத்தால் விண்ணப்பம் எழுதித் தருகின்றார்கள்.
விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டு கொடுத்தேன். இரண்டாவது தளத்தில் இருக்கும் குடிமைப் பொருள் அலுவலகத்திற்கு மனையாள் சென்று விட்டார். நான் அங்கிருக்கும் வேம்பு மரத்தின் நிழலில் வண்டியில் அமர்ந்திருந்தேன்.
அப்போது ஒரு ஆட்டோ வந்தது. அதிலிருந்து ஒரு வயதான பெண்மணியும் அவருடன் குச்சி போன்ற உடலுடன் ஒரு பெண்ணும் இறங்கினார்கள். இருவராலும் இறங்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் ஆகின. ஆட்டோ டிரைவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு ஆட்டோவிலேயே அமர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் அங்கிருந்த வாசலில் உட்கார்ந்தனர். அந்த வயதான பெண்மணி யாரையோ எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டிருந்தார். அந்தப் பெண்ணுக்கோ உட்காரக்கூட முடியவில்லை. அவர்கள் இருவருக்கும் யாரும் உதவி கூட செய்யவில்லை. ஏதாவது இயற்கை உபாதை ஏற்பட்டால் அந்த இருவரின் நிலை? யோசிக்கவே முடியவில்லை.
அடுத்து இன்னொரு டாக்சி வந்தது. அதிலிருந்து ஒரு பெரியவர் இறக்கப்பட்டார். இரண்டு கைகளாலும் தூக்கி வைத்து நடக்கும் கையூன்றியுடன் அவர் மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்தப் படிகளைக் கடந்து செல்ல முயன்று கொண்டிருந்தார். இரண்டு படிகளைக் கடக்க அவருக்கு பத்து நிமிடங்கள் ஆகின.
கைகால்கள் அடிபட்டு உடைந்து போன நிலையில் இருந்த மூன்று பெரியவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர். ஆதார் எடுக்க ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. ஆதார் கார்டு எடுக்க முடியவில்லை கணிணியில் ஏதோ பிரச்சினை என்றுச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இயலாமையுடன் அங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர். அவர்களுக்கும் குடும்பம் என்ற ஒன்று இருந்திருக்கும். அவர்களுக்கும் வாரிசுகள் இருப்பார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. திரும்பவும் வர அவர்களிடம் பணமிருக்குமோ இருக்காதோ தெரியவில்லை. அவர்களால் சம்பாதிக்க கூட முடியாது. மீண்டும் வர அவர்கள் யாரிடம் பணம் பெறுவார்களோ தெரியவில்லை.
முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த துவங்கியவுடன் தான் ஊனமுற்றோர் என்ற சொல் மாற்றுத்திறனாளி என்று மாற்றப்பட்டது. தனக்கு என்று வந்தால் தான் மாற்றங்கள் என்றால் ஒவ்வொரு தலைவரும் சக்கர நாற்காலியில் தான் வர வேண்டும்? இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா?
பேரூந்துகள், ரயில் வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் பயணம் செய்வது என்பது பியர் கிரில் காட்டில் விடப்பட்டு தப்பித்து வருவதை விட கொடிய நிகழ்வாக இருக்கிறது. இத்தனைக்கு சுற்றிலும் மனிதர்கள் இருக்கின்றார்கள். ஆனால் எவரும் யாருக்கும் உதவுவதே இல்லை. கோவிலுக்குச் சென்றால் கூட ஒதுங்கி வழி விட மாட்டார்கள் எதிர்கால வயோதிக மனிதர்கள்.
இந்த வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் மாறக்கூடியது என்பதை எவரும் அறிவார் இல்லை.
தாலுக்கா அலுவலகத்தில் அந்தப் பெண்ணும், பெரியவரும் பட்ட துன்பம் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. இது அத்தனையும் அனைவருக்கும் தெரியும். தெரிந்து என்ன நடக்கிறது? கண்டும் காணாமலே செல்கிறது ஆறறரிவு பெற்ற மனித உள்ளங்கள்.
எனது நண்பரொருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். ஊனமுற்றோருக்கு வெளி நாட்டில் செய்துதரக்கூடிய உதவிகளைப் பட்டியலிட்டார். அங்கிருப்பவர்கள் மனிதர்கள்.
உலகத்திற்கே முன்னுதாரணமான தமிழ் சமூகம் மாற்றுத்திறனாளிகளையும், வயோதிகர்களையும் நடத்தி வரும் போக்கும் சித்தவதைக்களமாக இருக்கிறது.
ஊனமுற்றோருக்கு என்றொரு வாரியம், சமூக அமைச்சர், அலுவலர்கள், மருத்துவர்கள் என்று அரசு பெரும் செலவுகளைச் செய்கிறது. இயங்கவே முடியாத வயதான பெரியவர்களுக்கும், ஊனமுற்றோர்களுக்கும், கண்பார்வை அற்றோர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று அரசு வழங்கும் நலத்திட்டங்களை வழங்கினால் என்ன?
அவர்கள் தங்கள் உயிர் மீது கொண்ட ஆசையினால் படும் துன்பத்தைக் காணச் சகிக்க முடியவில்லை. மனம் வேதனைதான் கொள்கிறது. வசதியும், வாய்ப்பும் இருப்பவர்களால் சமாளித்து விட முடியும். இல்லாதவர்கள் நிலை என்ன?
இந்திய அரசும், நீதித்துறையும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ஆவலாய் இருக்கிறது.