குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Sunday, April 12, 2020

காதலின் இன்னொரு வடிவம் தாம்பத்தியம்

மகள் சிறுவயதாக இருக்கும் போது சூடத்தை விழுங்கி விட்டாள். வாயில் நுரை தள்ளி, இனி தாங்காது என்று ஒரு மருத்துவர் சொல்ல, ரேஸ்கோர்ஸில் மசானிக் மருத்துவமனையில் தான் ”இது சின்ன விஷயம். தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறோம்” என்று சொன்னார்கள். 

இடைப்பட்ட  நேரத்தில் கண்ணில் காணும் கோவில்களின் வாசலில் நின்று, “பகவானே, என் பிள்ளையைக் காப்பாற்று, காப்பாற்று, என் உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு, பிள்ளையைக் காப்பாற்று, காப்பாற்று” என்று அலறித் துடித்துக் கொண்டு, கண்களில் நெஞ்சின் வலி தாங்க முடியாமல் வலியும் கண்ணீரைத் துடைக்க கூட மனமின்றி அலைந்து கொண்டிருந்தேன். கடவுளுக்கு வாய் இருந்தால், நான் பட்டத் துயரங்களை அழுது கொண்டே சொல்லி இருப்பார்.

தகப்பன் ஒருவன் மனைவி, மக்களை நெஞ்சில் சுமந்து கொண்டு, அவர்களின் நல வாழ்வுக்காக வெயிலிலும், மழையிலும் அலைந்து கொண்டு சம்பாதித்து கொண்டு வந்து வீடு சேர்ப்பான். அசதியில் சாப்பிடக்கூட மாட்டான். மக்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிம்மதியாக உறங்குவான்.

அவனின் உடம்பில் தெம்பு இருக்கும் மட்டும் மனைவிக்காகவும், மக்களுக்காகவும் ஓடிக் கொண்டே இருப்பான். ஓடிக் கொண்டே இருப்பான். இதோ தன் பிள்ளைகளையும், மனைவியையும் காப்பாற்ற ஒரு பிள்ளையை தலையில், வைத்துக் கொண்டு, மனைவியைக் கையில் பிடித்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருக்கிறானே அவனை ஒரு நிமிடம் மனதுக்குள் கொண்டு வந்து பாருங்கள்.

கண்கள் தானாகவே கண்ணீரை நிரப்பும். இந்த உலகம் எங்கும் தகப்பன்களாலே நிறைந்து கிடக்கிறது. அந்த தகப்பன்சாமிகளை எவரும் கண்டு கொள்வதே இல்லை. 

வீட்டுக்கு திரும்பி வருவோமா? காலம் வருமா? மனைவியைப் பார்ப்போமா? பிள்ளைகளைத் தொட்டு தழுவி முத்தம் கொடுப்போமா? பெற்ற அன்னையைப் பார்க்க முடியுமா? அப்பாவின் முகம் காண முடியுமா? இல்லை கொரானா கொன்று போடுமா எனத் தெரியாமல் கோடானு கோடி தகப்பன்கள் வெளி நாடுகளில் சிக்கிக் கொண்டு, நான்கு சுவற்றுக்குள் மனம் குமைந்து கிடக்கின்றார்களே, அவர்களை விடவா இங்கு இறைவன் உயர்ந்தவன்? அந்தத் தகப்பன்கள் தனக்காகவா மாடாய் உழைக்கிறார்கள்? அந்த தகப்பன்களின் காதல் மனைவிகள் தங்களின் இன்பத்தை மறந்து, வருவார், வருவார், அவர் என்னைப் பார்க்க வருவார் என காத்துக் கொண்டிருக்கின்றார்களே. அவர்களை விடவா இறைவன் பெரியவன்?

வாழும் சாமிகள் அல்லவா அந்த தாய்களும்,தகப்பன்களும்....!

காதல் அன்பு வடிவெடுத்து எல்லா துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டு, தன் மனைவியும்,மக்களும் நலமாக இருக்க வேண்டுமென்பதற்காக மாற்றமெடுக்கிறது.

இதோ ஒரு சம்பவம். உங்களுக்கு கண்ணில் கண்ணீர் வரவைக்கும் ஒரு கணவனின் செயல். இவர்கள் அஜித், ஷாலினி போல அழகானவர்கள் இல்லை. ஆனால் இவர்களின் தாம்பத்தியத்தின் அன்பு, பிறருக்கு முன்னுதாரனமாக இருக்கிறது. வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார்கள்.

விவாகரத்துத் தேடி கோர்ட்டில் நிற்கும் தகப்பன்களும், தாய்களும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்களேன். கொடுப்பதில், சகித்துக் கொள்வதில் அன்பின் பெயரால் செய்யலாமே. இனிமேல் மனிதராகவா பிறப்பெடுத்து வரப்போகிறோம். அப்படியே என்ன குறை இருப்பினும் ஏற்றுக் கொள்ளலாமே. 

இனி அந்தச் சம்பவம்:



வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியிருப்பதால் விளிம்புநிலை மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், வயது 65. இவரின் மனைவி மஞ்சுளா (வயது 60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் - புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லை.

ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்க்குமளவுக்கு சக்தியில்லை. அதனால் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், துணிந்து அந்த முடிவை எடுத்தார்.

தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்… எவ்வளவு நேரமாகும், அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா.. நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா.. வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது… போலீஸ் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

2 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள். சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததும், எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று அறிவழகனிடம் மருத்துவர்கள் கேட்க, ``எம்பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல” என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியபோது, ``ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இல்லை. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை அந்த முதியவர் 130 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அழைத்து வந்ததாகக் கூறினார். அதனால் உடனே அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளித்தோம். குறிப்பிட்ட தூரம் வரைதான் எங்களால் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்க முடியும். ஆனால், அவர்களின் ஏழ்மை நிலைமையைக் கருத்தில்கொண்டு ஆம்புலன்ஸை இலவசமாகவே அனுப்பி வைத்தோம்” என்றது.

நன்றி : விகடன் செய்தி