குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பட்டா பூமி. Show all posts
Showing posts with label பட்டா பூமி. Show all posts

Monday, July 18, 2016

நிலம் (24) - கண்டிஷனல் பட்டா பூமியை வாங்கலாமா?

மிகச் சமீபத்தில் கொல்கத்தாவில் வசிக்கும் எனது நண்பரொருவரின் பூமிக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று கேட்டார். அவர் மிக நீண்ட காலமாக கொல்கத்தாவில் வசித்து வருவதாலும், பெரும் நிறுவனத்தின் மேலாளராக இருந்த காரணத்தாலும் அவரால் வாங்கப்பட்ட பூமிகளை சரிவர மெயிண்டெய்ன் செய்யமுடியவில்லை.

அவரிடமிருந்த ஆவணங்களை எனக்கு அனுப்பி வைத்தார். ராமநாதபுரத்தில் அரை ஏக்கர் நிலம், சேலத்தில் வீட்டு மனை, மதுரையில் வீடு, கோவையில் ஒரு சிறிய மனையிடம், ஒரு கெஸ்ட் ஹவுஸ் என்று ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. ஒவ்வொன்றினையும் படித்துப் பார்த்தேன். மூன்று சொத்துக்கள் அவரின் தந்தையார் பெயரில் இருந்தன. ஒரு சொத்து அவரின் தாயாரின் பெயரில் இருந்தது. ஒரு சொத்து அவர் கிரையம் பெற்றது. அவரிடம் மேற்கண்ட விஷயத்தைச் சொல்ல அவருக்கே தெரியாத சொத்துக்கள் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.

மேற்கண்ட சொத்தின் பட்டாவை அவர் பெயருக்கு மாற்றி அதை சுத்தப்படுத்தி வேலியிட வேண்டுமென்றுச் சொன்னேன். அதற்கான வேலைகளில் இறங்கினேன்.

முதலில் அவர் கிரையம் பெற்ற சொத்தினை பட்டா மாறுதல் செய்வோமென்று ஆரம்பித்தேன். பட்டா விண்ணப்பத்தோடு கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்தேன். இது கண்டிஷனல் பட்டா பூமி என்பதால் பட்டாவை மாறுதல் செய்ய முடியாது என்றுச் சொல்லி விட்டார். அதுவரையிலும் அது கண்டிஷனல் பட்டா பூமி என்று எனக்குத் தெரியவில்லை. பஞ்சமி பூமி இல்லை என்பது நன்கு தெரியும். 

அது என்ன கண்டிஷனல் பட்டா பூமி? அரசு தன் நிலத்தினைப் மக்களுக்கு இனாமாக வழங்கும்போது ஒரு சில கண்டிஷன்களுடன் அவர்களுக்கு பட்டாவை வழங்குகிறது. அதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் பட்டா வழங்கப்பட்ட தேதியிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பட்டா பெற்றவர் எந்த வித வில்லங்கத்துக்கும் அந்தப் பூமியினை உட்படுத்தக்கூடாது. அப்படி உட்படுத்தினால் அந்தப் பட்டா ரத்தாகி பூமி அரசு வசம் சென்று விடும். இது ஒரு கண்டிஷன். பத்து வருடத்திற்கு பின்பு விற்பனை செய்யலாம் என்றாலும் அந்தப் பூமியை அவர் யாருக்கு விற்கலாம் என்றொரு கண்டிஷனும் இருக்கும். அது என்ன என்று தெரிய வேண்டும். அப்படித் தெரிந்து கொண்டால் தான் அந்தப் பட்டா பூமியைக் கிரையம் பெற முடியும். அந்தக் கண்டிஷன்கள் வழங்கப்பட்ட அந்தப் பட்டாவில் இருக்கும். ஒரு சிலர் பல கிரையங்களை உருவாக்கி விடுவதால் இது போன்ற விஷயங்களை எளிதில் கண்டுபிடிப்பது சிரமம்.

ஆகவே நண்பர்களே சொத்தின் மூல ஆவணங்களைஆராயும் போது பத்திரங்களை நன்கு ஆராய வேண்டும். அதன் பிறகு குறைந்தது மூன்று முறையாவது வில்லங்கச்சான்றிதழ்கள் எடுத்துப் பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படும் ஆவணங்களை நகல் எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். மேனுவலாக எடுக்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில் மனிதனின் தவறால் குறைபாடுகள் ஏற்பட்டு விடும். அதனால் பல அனர்த்தங்கள் வந்து விடும். 

ஆகவே கண்டிஷனல் பட்டா பூமியை அதன் கண்டிஷன் என்னவென்று தெரியாமல் வாங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்க.