குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பட்ஜெட் 2025. Show all posts
Showing posts with label பட்ஜெட் 2025. Show all posts

Sunday, February 2, 2025

இந்திய ஒன்றியத்தின் 2025 ஆண்டு பட்ஜெட் - ஒரு பார்வை

இன்றைய ஆங்கில தினசரிகளிலும், ஒரு சில தமிழ் தினசரிகளிலும் 12 லட்ச ரூபாய்க்கு வருமான வரிக்கட்ட வேண்டியதில்லை என்பதைப் பெரிதாகப் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு 140 லட்சம் கோடி கடன் வாங்கப்போகிறதே ஏன் எனக் கேட்கவில்லை.  வரி விலக்கு அளித்திருக்கிறது - மக்களுக்கான பட்ஜெட் - இந்தியா வளர்கிறது - வளர்ச்சிக்கான பட்ஜெட் என சொரிந்து விட்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு வீசும் காசுக்கு கூவும் சேவல்கள் இவர்கள். நாளை சேவல்கள் எண்ணெயில் பொறித்தெடுக்கப்படும் என்பது தெரியாதவர்களா இவர்கள். எல்லாமும் தெரியும். ஆனால் இப்போதைக்கு கூவுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. இனித் தொடருங்கள்.

ர்வதேச நாடுகளில் பின்பற்றப்பட்டும்  நிதி ஒதுக்கீட்டு தரவுகளின் படி ஜிடிபி சதவீதத்தில் கல்விக்கு 6 சதவீதம், சுகாதாரத்துக்கு 6 சதவீதமும் குறைந்தப்பட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

இந்திய நாட்டின் 15 சதவீத மக்கள் தனியார் மருத்துவமனையிலும், 45 சதவீத மக்கள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெறுகின்றனர். மீதமுள்ள 40 சதவீத மக்கள் மருத்துவ வசதி கிடைக்காமல் செத்துப் போகிறார்கள்.

இந்திய பட்ஜெட் 2025ல் இந்திய ஒன்றிய அரசு கல்விக்கு 2.3 சதவீதமும், சுகாதாரத்துக்கு 1.8 சதவீதமும் ஒதுக்கியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இந்த பட்ஜெட்டை மக்களுக்கான பட்ஜெட் என சொல்கிறார். 

இந்திய மக்களின் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் உலகத்தரவுகளின்படி நிதி ஒதுக்காமல் மிகவும் குறைந்த பட்சமாக ஒதுக்கி விட்டு - இது மக்களுக்கான பட்ஜெட் எனச் சொல்வது எந்த வகையில் சரியென அவருக்கே வெளிச்சம். அவர் எப்போதும் இப்படித்தான். 

ஒரு சாயா குடித்தால் போதும் பசி தீர்ந்து விடும் என நினைப்பார் போல. அது அவரின் நினைப்பு. ஆனால் உண்மை அதுவல்ல.

விவசாயிகள் வைத்திருக்கும் கடன் சுமை 8.75 லட்சம் கோடி.  இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியான மிகவும் குறைவானது. 14 கோடி விவசாயிகளில் ஒருவருக்கு 1224 ரூபாய் மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது 1.71 லட்சம் கோடி ரூபாய். 

கார்பொரேட்டுக்கு 5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கியில் 14.56 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு குறு நிறுவனங்களின் கடன்கள் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. பெரு நிறுவனங்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. 

மேல்தட்டு பணக்கார மக்களின் 92 சதவீதமும், நடுத்தர மக்களில் 68 சதவீதமும், ஏழைகளில் 42 சதவீதம் பிள்ளைகளே கல்வி கற்கிறார்கள்.  

பண வீக்கம் 6.5 சதவீதமாக இருப்பதால் பெற்றோர்கள் விலையுயர்வினால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு விடுவதால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை மறக்கிறார்கள். அதுமட்டுமின்றி 25 வயதுகுட்பட்டவர்களில் 28.5 சதவீதமும், 35 வயதுகுட்பட்டவர்களில் 18.2 சதவீதமும், 45 வயதுக்குட்பட்டவர்களில் 12.4 சதவீதமும், 60 வயதுக்குட்பட்டவர்களில் 8.5 சதவீதம் ஆட்கள் வேலையின்றி இருக்கிறார்கள்.

உணவுப்பொருட்கள் 12.5 சதவீதமும், மருந்துகள் 15.8 சதவீதமும், போக்குவரத்துக்கு 18.2 சதவீதமும், கல்விக்கு 22.4 சதவீதமும் விலைவாசி உயர்வு அடைந்துள்ளது. ஆனால் ஊதிய உயர்வோ 4.2 சதவீதமாக உள்ளது. 

இந்த வருடம் பொதுத்துறைச் சொத்துக்களை விற்பதால் 10 லட்சம் கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதால் இன்னும் வேலை வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கும்.

இந்த வருடம் 140 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறது இந்தியா. ஒவ்வொருவரின் மீதும் கடன் 1.4 லட்சம் ரூபாய். இந்த பட்ஜெட் வெளி நாட்டு மூலதனத்தைச் சார்ந்து உள்ளது.  இந்த பட்ஜெட்டின் உள் ரகசியம் என்னவென்றால் உள் நாட்டு உற்பத்தியைக் குறைப்பது, சமூகத்தின் நலன்களை முற்றிலுமாக நிறுத்துவது, சமத்துவமின்மையை அதிகரித்து பதட்டத்தை உருவாக்குவது.

ஏனென்றால் இந்தியாவில் உள்ள மொத்த சொத்தில் மேல்தட்டு உயர்பணக்கார வர்க்கத்திடம் 40.5 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. அடுத்த நிலையில் உள்ள 9 சதவீதம் மக்களிடம் 35.8 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. 40 சதவீத மிடில் கிளாஸ் மக்களிடம் 20.6 சதவீதம் சொத்துக்கள் உள்ளன. மீதமுள்ள 50 சதவீத மக்களிடம் 3.1 சதவீதம் சொத்துக்களே உள்ளன.

இந்தியா எல்லாருக்குமான நாடு என்றால், மக்கள் பட்ஜெட் என்றால் இந்தச் சொத்துப் பகிர்வானது உயர்வடைந்திருக்க வேண்டும். ஆனால் உயர்வடைய விடமாட்டார்கள். அரசு வெகு கவனமாக ஏழைகளின் நிலையை உயரவே விடாது. அதைத்தான் பிரதமர் மக்களின் பட்ஜெட் என்கிறார். அந்த மக்கள் 1 சதவீதம். இதர மக்கள் அடிமைகள் என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.

அரசியல் சார்பற்று கிடைத்திருக்கும் தரவுகளின் படி இக்கட்டுரையை எழுதி இருக்கிறேன். இன்னும் இருக்கிறது எழுதுவதற்கு. ஆனால் என்னால் முடியவில்லை. 

ஒவ்வொரு ஆளும் அரசும் ஏன் இப்படி கொடூர மனப்பான்மையில் ஆட்சி செய்கிறது? இதை மக்கள் உணராமல் - பல சிக்கல்களுக்குள் சிக்கி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்களை ஒன்றாக சேர்ந்து இணைந்து வாழவே விடாத மதம், மொழி, இனம், சாதி, மா நிலம் எனப் பிரித்து வைத்துக் கொண்டு - ஒரு சிறு கூட்டம் காலம் காலமாக மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் பட்டவர்த்தனமாய் தெரிகிறது. ஆனாலும் மக்கள் எப்போதும் திருந்தவே போவதில்லை என்பது எவராலும் மறுக்கவே முடியாத உண்மை.

மற்றபடி வருமான வரி விலக்கு - பஞ்சு மிட்டாய் போன்றது. ஏற்கனவே ஜி.எஸ்.டி மூலம் வரிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 50 சதவீத மக்களிடம் இருக்கும் 3.1 சதவீதச் சொத்துக்களையும் இனி பறித்து விடும் இந்திய அரசின் பட்ஜெட்.

வளமுடன் வாழ முடியாது. நலமுடனும் வாழ முடியாது என்பதால் - ஒன்றும் சொல்வதற்கில்லை.

செய்தி ஆதாரம் : 02.02.2025 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழ், தினகரன் நாளிதழ்.

பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் ஜால்ரா செய்தி

நன்றி : தீக்கதிர், தினகரன், பிசினஸ் ஸ்டாண்டர்ட்