குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நாகராஜ் ஐயா ஜீவ ஐக்கியம். Show all posts
Showing posts with label நாகராஜ் ஐயா ஜீவ ஐக்கியம். Show all posts

Monday, November 9, 2020

குருபக்தியின் உதாரணம் மருத்துவர் அய்யா நாகராஜ்

தேடிச் சோறுநிதந் தின்று — பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்

வாடித் துன்பமிக உழன்று — பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து — நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல

வேடிக்கை மனிதரைப் போலே — நான்

வீழ்வே னன்றுநினைத் தாயோ?

என்று பாடிய பாரதியார் இன்றளவும் தமிழர்கள் மத்தியில் தன் கவிதையால் ஆளுமையாக இருந்து வருகிறார். மனிதர்கள் பிறக்கின்றார்கள் இறக்கின்றார்கள் என்பது இயற்கை. இதில் எத்தனை மனிதர்கள் தான் வாழ்ந்து சென்ற பூமிக்கும், தன்னுடன் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நன்மையும், எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தோமென்றால் விரல் நீட்டிச் சொல்லி விடும் அளவுக்கே இருக்கின்றார்கள்.

பாரதியாரின் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் கருவிற்கு உதாரணமாக பல்வேறு மகான்களும், புனிதர்களும், வீரர்களும், தேசத் தொண்டர்களும் வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள் இந்தப் பாரதப் பூமியிலே.

அப்படிப்பட்டவர்கள் மிக அரிதாகத்தான் இப்பூமியில் பிறக்கின்றார்கள். என் வாழ்க்கைப் பாதையில் நான் பழகியவர்களில் அப்படியானவர்களில் ஒருவர் தான் இவர்.


மருத்துவர் அ.நாகராஜ் அய்யா

தோற்றம்:01.10.1944 ஜீவ ஐக்கியம்:08.11.2020


இக்கட்டுரையை ஒலி வடிவில் கேட்க கீழே உள்ள யூடியூப் கிளிக் செய்யவும்



எம் குருவின் பிரதான சீடரும், கோவை இ.எஸ்.ஐயில் சிவில் சர்ஜனாகப் பணி செய்து ஓய்வு பெற்றவருமான மருத்துவர் நாகராஜ் அவர்கள் சமீபத்தில் குருவடி சேர்ந்தார். மருத்துவரின் ஜீவன் எம் குருவின் பாதக் கமலங்களில் ஐக்கியமானது. அவரைப் பற்றிய ஒரு சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது அவருக்கான அஞ்சலி என நினைக்கிறேன்.

2013ம் வருடம் முதற்கொண்டு குருவடிக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். 2014ம் வருடத்தில் மருத்துவரைச் சந்தித்தேன் முதன் முதலாக. குரு பூஜையின் போது அவருடன் நீண்ட நேரம் பேசக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அன்றைக்கு ஜோதி சுவாமிகளைக் காட்டி, இனி என்னால் இந்த ஆசிரமத்தினை நிர்வகிக்க வயது இடம் கொடுக்கவில்லை, மனதும் இடம் கொடுக்கவில்லை, குருநாதரின் அருளாசியால் இவரை இங்கு நியமித்திருக்கிறேன். இனி அவருடன் உங்களின் ஆன்மீக வாழ்க்கையைத் தொடருங்கள் என்றுச் சொல்லி புன்னகைத்தார். அன்றைக்கு குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஜீவசரிதம் புத்தகம் வெளியிடப்பட்டது என் நினைவுக்கு வந்து செல்கிறது.

கருமையான, சற்றே குள்ள உருவம். முகத்தில் வாசியோகத்தின் ஆத்ம அமைதி தெரியும். ஆழ்ந்த தியானத்தில் இருப்பார். இடது கையில் ஒரு வாட்ச், மோதிரம், கழுத்தில் செயின். வெள்ளுடையில் ஜொலிப்பார். நடை, உடை பாவனைகள் அனைத்தும் ஆழ்ந்த அமைதி கொண்டவையாக இருக்கும்.

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதியின் நிர்வாகம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. மனிதர்களின் மனமானது பல உள் சிக்கல்களைக் கொண்டது. பொருளாதாரமும், தன் முனைப்பு ஈகோவும் கொண்டவர்களால் தங்கள் வாழ்க்கையை தாங்களே சிக்கலாக்கிக் கொள்வது தெரியாமல் வாழ்வார்கள்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கருணை இல்லா மனதுடையோர் கடவுளின் கருணையைக் கருதி தொழுதிருப்பர். சக உயிரினத்தின் மீது கருணை வைக்காதவர்களுக்கு கடவுள் எங்கணம் தன் கருணையை அளிப்பார் என்று புரிந்து கொள்ளாதவர்களால் தான் இந்த உலகம் இன்றைக்கும் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. மானுடத்தின் வாழ்வியலும் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது.

அப்படியான தருணங்களை மருத்துவர் தன் குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவேஸ்வர ஐக்கியமானது முதல் அனுபவித்து வந்திருக்கிறார். தம் குருவின் மீது கொண்ட அன்பினால், குரு பக்தியினால் இன்றைக்கு நொய்யல் ஆற்றங்கரையின் மீதோரம் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் குருவின் ஜீவ சமாதிக்கு அடிக்கல் நாட்டி, கோவிலாக உருவாக்கி தினமும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னம் அளித்து வரும் படியான தொண்டு செய்ய வழிகாட்டி நடத்தி வந்திருக்கிறார்.

இன்றைக்கு குருவின் ஜீவசமாதி ஆலயத்துக்கு வாழ்வியல் துன்பம் அகல குருவின் பாத கமலங்களைத் தரிசிக்க லட்சோப லட்ச மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தினம் தோறும் பத்து இருபது என்று ஆரம்பித்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது நூற்றுக்கணக்கில் பக்தர்கள் தங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட குருவினைத் தேடி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆரம்பகாலங்களில் ஐந்து ஆறு பேருக்கு அன்னமளித்து வந்த எம் குருவின் ஆலயத்தில், இன்றைக்கு தினம் தோறும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு அன்னம் அளிக்கப்படுகிறது என்று சொன்னால் அதற்கு காரணமாக இருப்பவர் மருத்துவர் நாகராஜ் அய்யா அவர்கள் என்றால் அது மிகையல்ல. இக்காரியத்தை பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு இன்றைக்கும் திறம்பட நடத்தி வரும் ஜோதி சுவாமிகளைக் கண்டுபிடித்து, அவரை இக்காரியத்துக்கு ஆட்படுத்திய செயலைச் செய்து பல ஆயிரமாயிரம் மக்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், துன்பங்கள் நேராமல் காத்து வரும் சீரிய பணியைத் திறம்பட செய்ய மருத்துவர் அய்யா அவர்களே காரணம் என்பது அங்கு வந்து செல்லும் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இவர் தன் குரு நாதரிடம் பெற்ற அனுபவங்கள் பல. அதில் ஒரு சில, குருவின் மீதான நம்பிக்கையினால் விளையக்கூடிய அற்புதங்கள் பற்றியவை.

மாந்தர்களின் வாழ்வு முழுமைக்குமான தேடல் பொருள். பொருள் தேடி ஓடி ஓடிச் செத்துப் போகும் அற்ப மானுட வாழ்வில் பொருள் என்பது எதையும் தந்து விடுவதில்லை என்பதை எவரும் அறிந்தபாடில்லை. மாட மாளிகையும், எண்ண இயலா பணமும் இருப்பின் அதை விட இன்பம் வேறில்லை என்று நினைக்கும் அற்பர்களுக்கு அதை அடைந்த பின்புதான் தெரியும் இதுவல்ல இன்பம் என்று. பணமுடையவருக்கு இன்பம் பணமல்ல என்று தெரிந்திருக்கும். அப்படியானவர்கள் படாடோப வாழ்க்கையில் இருந்து விடுபட்டு விடுவர்.

எண்ணற்றோர் அதிகார போதையும், பணத்தின் மீதான் ஆசையும் கொண்டு இந்த ஒரே எண்ணத்துக்காக மட்டுமே வாழ்ந்திருப்பர். எத்தனையோ எண்ணங்கள் இருப்பினும் ஒரே ஒரு எண்ணத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருப்போரை பைத்தியம் என்று அல்லவா சொல்வோம்?. ஆனால் இங்கு பாருங்கள் அவர்களை நாம் தலைவர் என்கிறோம். தலைவர்கள் அதிகாரப் பைத்தியங்களாகவும், பணப்பைத்தியங்களாகவும் இருப்பதை ஆராதிப்பவர்களும் யார் என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இப்படி பணம் தேடி ஓடித் திரிபவர்களுக்கு இறைவனே முடிவான வழியாகத் தெரிவார். கோவில் கோவிலாய் ஏறி இறங்கி பணம் கொடு இறைவனே என்று இறைஞ்சித் திரியும் மானிடர்களின் இடையே குருவின் ஆசியால் சொர்ணரேகையைத் தரிசித்து, அதனால் கொஞ்சம் கூட பொருளாசை இல்லாத வாழ்க்கையை மருத்துவர் வாழ்ந்தார். குரு எவ்வழியோ அவ்வழி சீடனும் என்பதற்கு ஏற்ப தனது வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்.

ஒரு முறை வெள்ளிங்கிரி மலைக்கு குருவுடன் சென்றிருக்கிறார் மருத்துவர். வெள்ளிங்கிரி மலைவாசனைத் தரிசித்து திரும்ப வரும் போது அன்னை ஆதிபராசக்தியின் மூன்று பெண்களின் வடிவில் நின்றிருப்பதை மருத்துவருக்குக்காட்டி ஆசி பெறச் செய்திருக்கிறார். ஆசி வழங்கிய மூவரும் நொடியில் மறைந்து போயினர் என்பதை குருவின் நினைவாக அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

இந்த உலகம் சக்தி மயமானது. சக்தியே இயக்கி வருவது. ஆதிசங்கரரின் அன்னையான ஆதிபராசக்தி மூகாம்பிகை அன்னை குடி கொண்டிருக்கும் இடத்தில் தியானம் செய்வது சாலச் சிறந்தது என்று குருநாதர் மருத்துவரை அழைத்திருக்கிறார். அப்போது உடன் செல்ல இயலா காரணத்தால், வேறொரு தருணத்தில் மருத்துவர் ஆதிபராசக்தி அன்னை ஆதிமூகாம்பிகையத் தரிசிக்க குருவின் அனுமதி கேட்டிருக்கிறார். அனுமதி அளித்து, ஆங்கே ஒரு சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கு அமர்ந்து தியானம் செய் என்று சொல்லி அருளி இருக்கிறார்.

குரு சுட்டிய இடங்களில் அமர்ந்து தியானத்திலிருக்கும் போது, சொர்னரேகையை கண்டிருக்கிறார் மருத்துவர். தியானம் கலைந்து எழுந்திருக்கும் போது, அக்கோவிலில் பூஜை செய்து வரும் அடியவர் வந்து இந்த இடங்களில் எப்படி அமர்ந்திருக்கின்றீர்கள் என்று வினவி இருக்கிறார். குருவின் பெயரைச் சொல்ல, அவர் ஒரு மகான் என்றுச் சொல்லி விட்டு, மருத்துவரை அழைத்துச் சென்று வெள்ளிக் கவசத்தில் இருக்கும் சொர்ணரேகையைக் காட்டி இருக்கிறாஅர் அந்த அன்னைக்கு அடியவர். இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெற்றும் பொருளின் மீதும் எந்த வித ஆர்வமுமின்றி எளிய தவ வாழ்க்கையை வாழ்ந்து குருவின் திருவடியில் ஐக்கியமாகி இருக்கிறார் மருத்துவர் நாகராஜ் அய்யா அவர்கள். சொர்ணரேகை சக்கரம் எழுதத் தெரிந்தவர். அதை அவர் என்றைக்கும் தனக்காக செய்து கொள்ளவில்லை.

இதைப் போல இன்னும் எண்ணற்ற ஆச்சரியமளிக்கும் அற்புதங்களை நிகழ்த்திய குருவுடன் பயணித்தவர் இவர். இவரின் தவ வாழ்க்கையின் பலனாக, ஒரு குருவிற்கு சீடன் செலுத்திய குருபக்தியாக மலர்ந்து நிற்கிறது ஆலயம்.

அந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் எம் குருவின் ஆசியால் லட்சணக்கானவர்களின் துயர் துடைக்கப்படும். ஜீவசமாதி ஆலயங்களைத் தரிசிக்க அனுமதி பெற்றவர்களே வர இயலும். தாங்கள் செய்த கர்ம வினைகள் தங்களை அழித்திடா வண்ணம் குருவானவரே பாதுகாப்பார். அவ்வாறே இதுகாறும் என்னையும், என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆன்மீக அன்பர்களையும் குரு பாதுகாத்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து தவ வாழ்வு வாழ்ந்து வரும் என் சகோதரியும், மருத்துவரின் மகளுமான ராஜேஸ்வரி அவர்களுக்கும், சுவாமி ஜோதி அவர்களுக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் இவ்வுலகிற்கு தன் குருவின் ஆசி கிடைத்திட விட்டுச் சென்ற தொண்டினை தொடர்ந்து நடத்தி வர தம் குருவுடன் இணைந்து ஆசி வழங்குவார்.

குருவின் எல்லையில்லா கருணை மழையில் நாமெல்லாம் ஆனந்தமாக வாழ்ந்திடவும், பாதுகாப்பாய் இருந்திடவும் மருத்துவர் அய்யா அவர்களின் ஜீவ ஐக்கியத்தினை நினைவு கூர்ந்து, அவரின் ஆசி பெற விழைவோம்.

அன்புடன்

கோவை தங்கவேல்

08/11/2020 அன்று மருத்துவரின் மறைவுக்காக எழுதிய அஞ்சலிக் கட்டுரை.