இணையதளத்தினைப் படித்து வரும் வாசகர் ஒருவர் அவர் வாங்கப் போகும் சொத்தின் விபரத்தைக் குறித்து பல கேள்விகளைக் கேட்டார். பெரும்பான்மையானோருக்கு போனிலேயே எல்லாமும் தெரிந்து விட வேண்டும் என நினைப்பு இருக்கிறது. ஆனால் அது சொத்து விஷயத்தில் படு பயங்கர பாதகங்களைக் கொண்டு வந்து விடும் என்பது பிரச்சினையில் சிக்கினால் தான் புரியும். படித்தவர்கள் தான் இப்படியெல்லாம் செய்கின்றார்கள்.
முடிந்த வரை விளக்கினேன். போனில் எவ்வளவு நேரம் தான் பேசமுடியும். விட்டால் நாள் முழுக்க பேசுவார் போல. எனக்கு அடுத்தடுத்த வேலைகள் இருந்ததால் பிறிதொரு நாள் கூப்பிடுங்கள் பேசலாம் என்றுச் சொல்லி முடித்து விட்டேன்.
அடுத்த இரண்டாவது நாள் மீண்டும் அழைத்து அதே ராமாயணத்தை ஆரம்பித்தார். அவர் சொத்து வாங்குகிறார். சொத்து பற்றிய ஓரலான விஷயங்களை வைத்துக் கொண்டு எவ்வளவு நேரம் பேசுவது? சொத்து பற்றிய ஆவணங்களை நேரில் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். படித்து விட்டு அதன்பிறகு பேசலாம் என்றுச் சொன்னேன். உங்கள் கட்டணம் எவ்வளவு என்று ஆரம்பித்தார். சொன்னேன். அரண்டு போய் விட்டார்.”சார் என்னால் அவ்வளவு எல்லாம் முடியாது” என்று பேச ஆரம்பித்தார். என் வேலைக்கான சம்பளத்தை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்றும் வேறு இடத்தில் ஆய்வு செய்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி மறுத்து விட்டேன்.
விஷயம் முடிந்தது என்று நினைத்திருந்தேன். அடுத்த பத்தாவது நாளில் மீண்டும் அழைக்க ஆரம்பித்தார். ”சார் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள், எனக்கு நீங்கள் தான் ஆவணங்களை தரவு செய்து தர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
முன்பு ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு ஆய்வு முடிந்தவுடன் கட்டணம் பெறுவேன். இப்போது பலரும் சொல்லி வைத்தாற்போல ஆய்வு முடிந்து ஓகே சொன்னவுடன் காணாமல் போய் விடுகின்றார்கள். இல்லையென்றால் பணம் கொடுப்பதற்கு பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். ஆவணங்களுடன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டுதான் ஆய்வுக்கான வேலையைத் தொடர்வது என்று முடிவு கட்டியதால் என்னால் அடுத்த பல வேலைகளைச் செய்ய முடிகிறது. எவ்வளவு நாள் தான் நானும் சும்மாவே வேலை செய்வது?
அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆய்வு முடிந்ததும் கட்டணம் தருகிறேன் என்றும் அடிக்கடி பேச ஆரம்பித்து விட்டார். மறுத்து விட்டேன்.
இப்படியே சென்று கொண்டிருந்த நாளில் ஒரு நாள் நேரில் வந்து அனைத்து ஆவணங்களையும் என்னிடம் கொடுத்தார். கேட்ட கட்டணத்தையும் கொடுத்தார். ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு அவரை என் முன்னால் அமர வைத்துக் கொண்டே பத்தாவது நிமிடத்தில் இந்த இடத்தினை வாங்க வேண்டாம் என்றுச் சொன்னேன்.
சார் என்றுச் சொல்லி பதட்டத்தில் எழுந்து விட்டார். மார்க்கெட் விலையை விட முக்கால் விலை என்று புரோக்கர் சொல்லியவுடன் ஆள் ஆசைப்பட்டு பெரும் தொகையினை அட்வான்சாகக் கொடுத்து பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினைப் போட்டு லீகல் பார்த்திருக்கிறார். அந்த சொத்தில் எந்த வித வில்லங்கமும் இல்லை என அவர் வைத்திருந்த லீகல் ஒப்பீனியனும் சொன்னது.
அவருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது. காரணத்தைக் கேட்டார். அவரின் முன்பு என்னிடம் இருந்த ஆவணத்தை எடுத்துப் போட்டேன். ”இதெல்லாம் உங்களுக்கு எப்படி சார் கிடைக்கிறது? படுபயங்கர மோசடியில் அல்லவா மாட்டிக் கொண்டேன்” என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.
கோவையில் ஒரு பிரபலமான இடத்தில் இருக்கும் வியாபாரக் கடை அது. சல்லிசான விலையில் வருகிறது என்றவுடன் ஆள் ஆசைப்பட்டு விட்டார். கடையின் உரிமையாளர் எல்லாச் சொத்துக்களையும் விற்று விட்டு அமெரிக்கா சென்று அவர் மகனுடன் தங்கப்போவதாகவும், அதனால் மார்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்பதாகவும் புரோக்கர் சொல்லி இருக்கிறார்.
அந்தக் கடை இருக்கும் இடத்தில் சாலையினை அகலப்படுத்துவதற்காக நோட்டிபிகேசன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நோட்டிபிகேசனில் இந்தக் கடையின் முக்கால் பாகம் சென்று விடும். அதாவது சுவர் மட்டுமே மிஞ்சும். நோட்டிபிகேசன் அறிவித்த நாளுக்கு அடுத்த வாரத்தில் தான் நம்ம ஆள் அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். சொத்தின் உரிமையாளர் அமெரிக்காவும் போகவில்லை ஆஃப்ரிக்காவும் போகவில்லை. புரோக்கருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பும் இருந்திருக்காது.
”கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிட முடியுமா சார்?” என்று கேட்டார். அதை எப்படிப் பெறுவது என்று சொல்லிக் கொடுத்தேன்.
புரோக்கரை அழைத்துக் கொண்டு சொத்தின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நான் அவரிடம் கொடுத்த நோட்டிபிகேசன் நகலையும், புகார் ஒன்றினையும் அவரிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கின்றார். அடுத்த அரை மணி நேரத்தில் கொடுத்த அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டு அக்ரிமெண்ட் காப்பியை அவர் முன்னால் கிழித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன் என்றுச் சொன்னார். புரோக்கர் நடுங்கிப் போய் விட்டாராம்.
இந்த விஷயம் எப்படித் தெரியும்? என்று புரோக்கர் அவரிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறார் என்றுச் சொன்னார். அவரின் நன்றியைத் தெரிவிப்பதற்கு மேலும் அதிக கட்டணம் தருவதாகச் சொன்னார். என் வேலைக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டேன். போதும் என்றுச் சொல்லி மறுத்து விட்டேன்.
ஆகவே கடைகள் வாங்கும் போது சாலை அகலப்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்றும், ஏதேனும் நோட்டிபிகேசன் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட பிரச்சினையில் சிக்கி இருந்தால் தகுந்த ஆவணங்களை அனுப்பி வையுங்கள். மிகச் சரியான ஆலோசனையைத் தருகிறேன். என் முகவரி கேட்டால் கிடைக்கும். போனில் ஆலோசனை கேட்க வேண்டாம். அது துல்லியமாக இருக்க இயலாது.