குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சைவர். Show all posts
Showing posts with label சைவர். Show all posts

Friday, June 4, 2021

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் நாம் சைவர்களா இந்துக்களா கட்டுரை ஆய்வு

மதம் கொண்ட யானையை விட மத வெறி பிடித்த மனிதன் கொடூரமானவன். மதவெறியினால் எதையும் சாதித்து விட இயலாது என்று காலம் காலமாக உலக வரலாற்றில் பல்வேறு செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அவரவர் சிந்தனை, பெற்ற கல்வி அறிவு, சூழல் அறிவு, சார்பு அறிவு, சுய அறிவு போன்றவற்றைக் கொண்டு பல்வேறு கருத்துகளைச் சொல்வார்கள். அக்கருத்துக்கள் முழுமையானவையா? சரியானவையா? என்று தெரிந்து கொள்ள இயலாத வகையில் இருப்பதால் உண்மை எதுவென அறிந்து கொள்ள இயலாது.

அவ்வகையில் ஒரு சில சமுதாயத்தில் முக பிரபல்யமும், கருத்து பிரபல்யமும் கொண்டவர்களால் சொல்லப்படும் கருத்துகள் உண்மை என்பது போல பதிந்து விடும். ஒரு சிலர் மனம் புண்பட்டு விடக்கூடாது என்று பட்டும் படாமலும்  சொல்லி இருப்பார்கள்.

அவ்வகையில் நாம் சைவர்களா இந்துக்களா என்ற கட்டுரையினை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்  அவர்கள் 28.05.2021 மற்றும் 04.06.2021 ஆகிய தேதிகளில் தினமணி வெள்ளிமணியில் எழுதி இருக்கின்றார்கள். கட்டுரையினை வாசித்த போது எனக்குள் எழுந்த கேள்வியும் அதன் முடிவும் தான் இப்பதிவு.

கட்டுரையின் இரண்டாம் பகுதியில் வேதமே நம் சமயத்தின் முதல் நூலாம் என்று சொல்லி இருக்கிறார். 

ஆனால் முதல் பகுதியில் சைவர்கள் தமது தோத்திர நூலாக திருமுறைகளையும், சாத்திர நூலாக சைவ சிந்தாந்த சாத்திரங்களையுமே காலாகாலமாக ஏற்றுப் பின்பற்றி வருகின்றனர். திருமுறைகளும், சிந்தாந்த சாத்திரங்களும் சிவனையே முழு முதற் தெய்வமாய் வலியுறுத்துகின்றன. ஆதலால் நாம் சைவ சமயிகளேயாம். இதில் எந்தக் குழப்பத்திற்கும் இடமில்லை.

இன்று திருமுறைகளை தோத்திரமாகவும், சைவ சித்தாந்தத்தை சாத்திரமாகவும் கொள்ளாது, பகவத் கீதை போன்ற நூல்களைத் தோத்திரமாகவும், வேதாந்த தத்துவத்தை தமது சாத்திரமாகவும் கொண்ட, பல சமைய அமைப்புகள் மெல்ல,மெல்ல நம் மண்ணில்  புகுந்து வேரோடத் தொடங்கியுள்ளன.

அத்தோத்திரமும் சாத்திரமும் கூட தவறானவை அன்றாம். ஆனாலும் சைவ சாத்திர தோத்திர நூல்களைப் பின்பற்றி, ஒருமித்து வாழ்ந்த மக்களிடையே வேறுபட்ட சமய அமைப்புகள் புகுந்ததால், நிச்சயம் அது பூசல்களுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

வலிமையாய்ச் சைவ வாழ்வை ஏற்றுக் கொண்ட, நம் ஊர்கள் பல வேற்றுத் தத்துவக்காரர்களை உள் நுழைய விடாமலே வைத்திருந்தன.

இன்று நம் மண்ணின் பலவீனப்பட்ட சமய அறிவு நிலையால், மெல்ல மெல்ல எல்லாக் கொள்கையினரும், வேறு வேறு அமைப்புகளின் பெயர்களோடு உள் நுழைய தொடங்கி விட்டனர்.

அங்கணம் உட்புகுந்ததால், இத்தத்துவங்களுள் எது உயர்ந்தது என்பதான சர்ச்சைகளும், மோதல்களும் உருவாகி அவை வீணாக நம் முக்தி வழியை தடை செய்து நிற்கின்றன.

அதனால் நாம் முன்பு போலவே ‘ஒருவனைப் பற்றி ஓரகத்திரு’ என்றாற்போல, சைவ சாத்திரத்தையும், தோத்திரத்தையும் மரபுவழி பின்பற்றி சைவர்களாய் வாழ்வதே உயர்ந்ததாம்.

இவ்வாறு எழுதிச் செல்லும் அவர், ஆங்கிலேயர்களால் ஆறு சமயங்களாக தெய்வ வழிபாடு கொண்டவர்களை எல்லாம் ஒருங்கே இந்து என விளிக்கப்பட்டது என்கிறார். அதென்ன ஆறு சமயங்கள்.

சிவனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சைவர்கள்

விஷ்ணுவை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள்

சக்தியை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் சாக்தர்கள்

விநாயகரை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் காணாபத்தியம்

முருகனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் கெளமாரம்

சூரியனை முழு முதற்கடவுளாய் ஏற்றுக் கொண்டவர்கள் செளரம் 

இவ்வளவுதான் சமயங்கள் என்கிறார் அவர்.

அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சத்தின்படி தமிழர்கள் சைவர்கள் ஆவார்கள் என கருத வேண்டி இருக்கிறது. ஏனென்றால் தமிழ் நாட்டில் தான் சிவன் கோவில்கள் அதிகம். நூறு சிவன் கோவில்களை கட்டிய மன்னர் என்கோ செங்கண்ணான் என்று வரலாறு சொல்கிறது.

இவ்வாறு சொல்லும் அவரின் கட்டுரையில் ஓரிடத்தில் ஆறு சமயங்களுக்கும் வேதமே முதலாம் என்று இருக்கிறது. சைவர்களுக்கு திருமுறைகளே முதலாம். வேதம் என்பது சைவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று நன்கு கற்று அறிந்து தெளிந்தவர்களுக்குத் தெரியும். ஏன் அவர் இப்படியான குழப்பமான வார்த்தையினை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை படிக்கும் வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம். 

தெளிவற்று இருந்த ஒரு சில விஷயங்கள் இக்கட்டுரையின் வாயிலாக தெளிவாயின எனலாம். ஆதி சங்கரர் அவர்களால் எல்லா கடவுள் வழிபாட்டு சமயங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன என்று தெரிய வருகிறது. அதற்கு ஆங்கிலேய ஆட்சியில் சூட்டிய பெயர் தான் இந்து என்றும் அவ்வகையில் தான் நீதிமன்றங்களில் பகவத்கீதை இந்து மத நூலாக கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் தெளிவாகிறது. ஆனால் ஆறு சமய வழிபாடுகளைக் கொண்ட சமுதாயத்தில் ஒரே ஒரு சமயத்தின் நூலை எல்லோரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது சமய நல்லிணக்கத்தைக் காட்டுகிறது எனவும் புலனாகிறது.

நான் இந்தியன், தமிழன், சைவ சமயத்தைச் சார்ந்த இந்து என்று அடையாளப்படுத்திக் கொள்வதுதான் சரி என நினைக்கிறேன். 



தமிழர்கள் தம் அடையாளத்தை என்றைக்கும் இழந்து விடக்கூடாது என்று இந்த நேரத்தில் இக்கட்டுரையினைப் பதிப்பித்த தினமணிக்கு மிக்க நன்றிகள் பல.

நன்றி : இலங்கை ஜெயராஜ் மற்றும் தினமணி