குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. Show all posts
Showing posts with label சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. Show all posts

Tuesday, September 27, 2022

அதிரும் சென்னை உயர்நீதிமன்ற முறைகேடு - தீர்ப்புகள் திருத்தப்பட்டன - உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

சவுக்கு சங்கர் நீதிபதிகளை ஊழல்வாதிகள் என்று சொல்லியதற்காக தண்டிக்கப்பட்டு சிறைவாசம் - ஜனநாயகப் பரிசு. சட்டம் வழங்கிய மேல் முறையீடு வசதியைக் கூட அனுமதிக்கவில்லை நீதிபதிகள். அந்தளவுக்கு நீதிமன்றத்தின் மாண்பு மீது அக்கறை.

நல்லது.

சவுக்குக்கு தண்டனை கொடுத்து இன்றோடு பனிரெண்டு நாட்கள் ஆகி விட்டன. ஒரு சாமனியனுக்கு தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் நீதி மறுக்கப்பட்டது - பிரிட்டிஷ் ஆட்சியில் கூட சட்டம் சாமனியனுக்கு கிடைக்கும்படி மதிக்கப்பட்டதாம்.

ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்கிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

மதுரைக்கிளை நீதிமன்றம் - வழங்கிய தீர்ப்பினால் நீதிமன்றத்தின் மாண்பு பாதுகாக்கப்பட்டது. மக்கள் நம்பும் நீதிமன்றம் கேலிபடக்கூடாது.

ஒரு சாமானியனின் கருத்துரைக்கு எதிரான இந்த வழக்கின் அதிர வைக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட சூடு இன்னும் குறையவில்லை. அதற்குள் ஒரு பிரச்சினை

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த முறைகேடு. குற்றச் செயல், திருட்டு, ஊழல் இப்படி எந்த வார்த்தைகளாலும் அழைக்கும் தரமுள்ள அக்மார்க் குற்றம்.

இந்தச் செய்தி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் வெளி வந்ததா என்று தெரியவில்லை. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கு எண்: CMP 13117/2002 - CMP :7981/2022. ஒரிஜினல் வழக்கு - O.S.A.No.101/2014. 

இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு 01.09.2022ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தீர்ப்பு நீதிமன்றத்தில் 01.09.2022ம் தேதி படிக்கப்பட்டு, வழங்கப்பட்டது. தீர்ப்பின் நகல் உயர்நீதிமன்றத்தின் இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு விட்டது. 

இதுவரைக்கும் பிரச்சினை இல்லை. 

ஒரு வாரம் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பினை டவுன்லோடு செய்து பார்த்தால் தீர்ப்பு திருத்தப்பட்டிருக்கிறது. படிக்கப்பட்ட தீர்ப்பும் - டவுன்லோடு செய்யப்பட்ட தீர்ப்பும் - ஒரு வாரத்தில் மாற்றப்பட்டு அப்லோடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்திற்குச் சென்று தீர்ப்பினைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. இந்த தீர்ப்பினை 01.09.2022ம் தேதி வழங்கிய நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகிய இருவர்.

ஜனநாயகத்தின் தூணில் ஒரு மெகா ஓட்டை. ஓட்டை அடைக்க சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றார்கள்.

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. யார் இதைச் செய்தது எனக் கண்டுபிடிக்க சென்னை நீதிமன்றப்பதிவாளருக்கு உத்தரவு இடப்பட்டிருக்கிறது.

பலர் முன்னிலையில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரே வாரத்தில் மாற்றப்பட்டிருப்பது குற்றச் செயல். தேசத்துரோகம். என்ன சொன்னால் என்ன? அது கோர்ட்டு சமாச்சாரம்.

நீதிமன்ற பதிவாளர் எப்படி விசாரிப்பார்? அவருக்கு குற்றச் செயல்களை விசாரிக்கும் படி சட்டம் அனுமதி வழங்கி இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை.

நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியது யார்? யாருக்காக மாற்றப்பட்டது? யாரால் அப்டேட் செய்யப்பட்டது? இதன் பின்னால் இருக்கும் ஊழல் என்ன?  கேள்வி கேட்க முடியுமா சாமானியனால்.

என்ன காரணத்துக்காக தீர்ப்பு எடிட் செய்யப்பட்டது? எடிட் செய்யப்பட்ட தீர்ப்பினால் பலன் அடைந்தது யார்?  இப்படி எந்தெந்த தீர்ப்புகள் மாற்றப்பட்டனவோ? கேள்விகள் பல. பதில் கேட்க முடியாது. 

பரிசு கிடைக்கும்.  நீதிமன்ற அவமதிப்பு அதன் பெயர்.

டிஜிட்டல் மயமாக்கத்தின் பின் விளைவு - எப்போ வேண்டுமானாலும் டெலீட் செய்யலாம் - எடிட் செய்யலாம். ஜி.எஸ்.டி கவுன்சில் அறிவுறுத்தல்களை நிதியமைச்சகம் செய்வது போல. சட்டமா? சட்டசபையா? ஒப்புதலா? அதெல்லாம் என்ன? இது யார் ஆட்சி? என்ன கேள்வி?

அரசு நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆவணங்களை அழித்து விடலாம் என்கிற நிலை. எல்லாம் இந்திய தேச மக்களின் நன்மைக்காக - டெவலப்மெண்டுகளுக்காக.

அரசியல் எதிரிகளை அரசு என்னவெல்லாம் செய்யுமோ என்று நினைக்கவே கூடாது. தேசத்துரோகிகள் அவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நேரு இந்தியாவை நாசம் செய்து விட்டார். பெரும் கடமை முன்னால் இருக்கிறது. நாடு நாடாக சென்று திட்டமிடல் அவசியம். டிஜிட்டல் இந்தியா. இந்தியா வளர்கிறது. 

ஓப்பன் கோர்ட்டில் படிக்கப்பட்ட தீர்ப்பையே மாற்றி அப்லோடு செய்கிறார்கள் என்றால் நீதிதுறையில் என்ன நடக்கிறது என்பதை யார் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்?

அதே நீதித்துறையில் இருப்பவர்களே கண்டுபிடிப்பார்களா?

இந்த வழக்கை மக்கள் எவரும் மறந்து விடக்கூடாது. என்ன அவசியம். மறக்காமல் இருந்தால் பசியா தீரப்போவுது? என்கிறீர்களா? பசி தீர்ந்து விடும் நோயா என்ன?

இந்த வழக்கின் விசாரணை எப்படி நடக்கிறது? குற்றவாளி யார்? என்பது பற்றி மக்கள் கவனமுடன் கவனிக்க வேண்டும். சொல்லி வைக்கிறேன். கேட்பதும் கேட்காதது அவரவர் முடிவு.

சென்னை உயர் நீதித்துறையில் நடக்கும் மர்மங்கள், குற்றச்செயல்கள் பற்றி - மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் நீதிபதிகள் வெளிப்படையாக மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

வேறு எந்த உயர் நீதிமன்றத்திலும் நடக்காத குற்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதை வழக்காக எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஆணை பிறப்பிப்பது என்பது நீதிமன்றத்தின் மாண்பினை குலைக்காதா? நீதிமன்றத்தீர்ப்புகளை மாற்றினால் எப்படி ஆவணங்களை நம்புவது? இனி கோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் எப்ப்டி நம்புவார்கள்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த குற்றம் பற்றி விசாரித்த, உச்ச நீதிமன்ற உத்தரவு கீழே இருக்கிறது. 

ஊழல் இல்லையென்று சொல்லு முடியுமா? இல்லை தவறுதலாக நடந்தது என்று சொல்ல் முடியுமா? 

சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு இந்த வழக்கு ஒரு சாட்சியாக இருக்கிறதே? 

இந்த வழக்கைப் படிக்கும் போது இந்தக் கேள்விகள் எல்லாம் எழுகின்றன. 

எனது நோக்கம் நீதிமன்றத்தினை குற்றம் சொல்வது அல்ல. கடவுளைப் போன்ற நீதிபதிகள் சட்டத்தின் படி செயல்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கிறேன். நீதிபதிகளுக்கு மக்களும், இந்திய அரசியல் சாசனமுமே கடவுள்கள் ஆவர். ஒவ்வொரு சாமானியன் செலுத்தும் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறோம் என்ற சிந்தனை ஒவ்வொரு அரசு அலுவலருக்கும் இருக்க வேண்டும். அரசு அலுவலர் என்பவர் மக்களின் பணியாளர்கள்.





விசாரணை உத்தரவைப் படித்து விட்டீர்களா? இனி செய்தி கீழே. இந்த வழக்கில் தொடர்புடைய மகாசேமம் டிரஸ்ட்டின் (mahasemam trust) வரலாற்றினை நெட்டில் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். 

நீதிமன்றம் - அதுவும் சென்னை உயர் நீதிமன்றம் - என்ன சொல்வது?