குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சகோதரர்கள். Show all posts
Showing posts with label சகோதரர்கள். Show all posts

Saturday, November 15, 2014

கண்ணூ...!

சமீபத்தில் எனது பெரிய மாமா காலமாகி விட்டார். இறந்து கிடந்த மாமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணீர் பெருக்கெடுத்தது. உழைத்தே உயர்ந்தவர் அவர். சில சடங்குகளுக்காக செல்ல வேண்டியிருந்ததால் டிரைவரை அழைத்துக் காரை எடுக்கச் சொல்லி கிளம்பினேன்.

”அதுக்குள் ஏன் கிளம்புகிறாய்?” என்ற குரல் கேட்டது. திரும்பினேன். மாமாவின் மூத்த பையன். பெரிய மாமா மகனும் நானும் சிறிய வயதில்  பிரிக்க முடியாத தோழர்களாய் இருந்தோம். இடையில் என்னென்னவோ மாற்றங்கள். அவனும் நானும் பேசி பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டன.  ஏன் நானும் அவனும் பேசிக் கொள்ளாமலேயே இருந்தோம் என்று யோசித்தேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக யோசித்துப் பார்த்தேன். காரணம் மட்டும் புரியவில்லை. சிறிய வயதில், அறியாமல் செய்யக் கூடிய செயல்களின் பிடிவாதம் எவ்வளவு பெரிய அனர்த்தங்களை உண்டு செய்து விடுகின்றன.  இதனால் என்ன சாதித்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்த போது வெறுமை தான் மண்டியது. எரிச்சலில் மனசு எரிந்தது. சிறிய வயதில் அந்த காலத்துக்கே உண்டான பிடிவாத குணத்தினால் நாம் எத்தனையோ நல்லவைகளையும், நல்லவர்களையும் இழந்து விடுகிறோம் என்பது நிதர்சனமான உண்மை.

காலம் தான் மனிதர்களுக்கு பெரிய படிப்பினைகளைக் கற்றுக் கொடுக்கின்றன. அவன் முழுமையாகப் படித்து முடிக்கிற போது, அவனைத் தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. மீண்டும் வெற்றிடம் !

எனது நண்பரின் 86 வயதான தாயாருக்கு உடல் நிலை சரியில்லை. நண்பரோடு பிறதந்து மூன்று ஆண்கள். பெண்பிள்ளைகள் இல்லையே, நண்பரின் தாயாரை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற சிந்தனை. நண்பருக்கோ 50 வயது. இவர்தான் கடைக்குட்டி. நண்பரின் மூத்த அண்ணாவுக்கு 65 வயது இருக்கும்.

நானும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவமனைக்கு நால்வரில் ஒவ்வொருவரும் முறை வைத்து அம்மாவைப் பார்த்துக் கொள்கின்றனர். எனக்குள் ஆச்சரியம் மண்டியது. நான் அங்கு இருந்த நேரத்துக்குள் பால் வாங்கிக் கொண்டு வந்து ஆற்றி ஊட்டி விடுவதென்ன, வாய் துடைத்து விடுவதென்ன, தலை முடியைக் கட்டி விடுவதென்ன. அடடா என்ன பரிவு. ’கண்ணூ’ என்று நிமிடத்திற்கு ஒரு தடவை அந்த பாட்டி அழைக்க, ‘ஏம்மா? என்ன வேணும்?’ என்று நண்பரின் சகோதரர் கேட்க பத்து நிமிடத்தில் திரும்பி விடலாமென்று நினைத்துச் சென்றவன் ஒரு மணி நேரமாய் அமர்ந்து விட்டேன். 

கலைந்து கிடந்த தாயின் தலைமுடியை நீவி விட்டவர் என்னிடம், ‘என் தம்பி அம்மாவுக்கு அழகாய் தலை சீவி, பின்னலிடுவான்’ என்றார். எனக்கு கண்கள் பனித்தன. 

பெண் பிள்ளை இருந்தால் செத்துக் கிடக்கும் போது தலைமாட்டில் அமர்ந்து அழும் என்பார்கள். பெரிய மாமா இறந்த போது தம்பிக்கள் என்னிடம், ‘உனக்காவது ஒரு பெண் பிள்ளை இருக்கிறது, தலை மாட்டில் உட்கார்ந்து அழ ஆள் இருக்கு’ என்றார்கள். ’ஏன் கவலைப்படுகின்றீர்கள்? அவள் உங்கள் தலைமாட்டிலும் உட்கார்ந்து அழுவாள்’ என்றுச் சொன்னேன். 

ஆண் பிள்ளையானால் என்ன? பெண் பிள்ளையானால் என்ன? வளர்க்கும் வளர்ப்பில் இருக்கிறது. தன் தாயை எந்த வித அசூயையும் இன்றி குழந்தையைப் போல கவனித்துக் கொண்டிருக்கும் அந்த சகோதர்கள் போன்றோரால் தான் மனிதம் இன்னும் உயிருடன் இருக்கிறது. மனித சமூகத்தில அன்பும், பாசமும் என்றைக்கும் அழிவதில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நண்பரின் தாயாரின் குரல் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘கண்ணூ.....!’