மகளுக்கு கலைஞர் கல்லூரியில் என்.டி.பி.எல் - கிளவுட் கம்ப்யூட்டிங்க் தேர்வு.
பத்து மணி போல, ஆலந்துறை உயர் நிலைப்பள்ளி பாட்டி கடையில் இரண்டு தோசை. ஒரு வயதானவருக்கு இரண்டு தோசைக்கு பணம் கொடுத்து விட்டு பயணம்.
மகளை அழைத்துக் கொண்டு, நீலாம்பூர் வழியாக பைபாஸில் செல்லும் போது காரின் ஃபாஸ்ட் டேக் சார்ஜ் பற்றி நினைவு வந்தது. ஆக்சிஸ் பேங்க் ஃபாஸ்ட் டேக் செத்து விட்டது. சமயத்தில் வாரி விடுவதில் ஆக்ஸிஸ் வங்கி சமர்த்துப் பிள்ளை.
பாப்பம்பட்டி பிரிவு வழியாக சென்றால் பள்ளப்பாளையம் கலைஞர் கல்லூரி வரும். நல்ல வேளை டோல் இல்லை.
ஒண்டிப்புதூரிலிருந்து பைபாஸ் சாலையில் சரவண பவன் ஹோட்டலில் மகளுக்கு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தால் கொடுத்தது தக்காளிச் சாதம், வெஜ் குருமா, தயிர் பச்சடி.
சூப்பர்வைசரை அழைத்து ”இதுதான் வெஜ் பிரியாணியா?”
அவசரத்தில் மறந்து விட்டோம். மன்னிக்கவும் என்றார்.
ஒரு ஆரஞ்ச் ஜூஸ் 80ரூ, டீ கேட்டால் லேட் ஆகும் என்பதால் கேன்சல். தக்காளிச் சோறுக்கு 40 ரூ என பில்.
பாப்பம்பட்டி பிரிவு வழியாக கல்லூரி சென்று, மகளை விட்டு விட்டு, பள்ளப்பாளையம் வழியாக கண்ணம்பாளையம் பக்கமாய் சென்ற போது வீடுகளும், பாக்டரிகளும் இருந்ததைப் பார்த்தேன்.
பள்ளப்பாளையத்தில் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் இருக்கிறது. சுவாமி ஆத்மானந்தா நிர்வாகத்தில் இருந்த போது, அங்கு தங்கி இருக்கிறேன். அங்குச் செல்லலாமா என யோசித்தேன். மனதுக்கு சரியாகப் படவில்லை. இப்போது அங்கு நிர்வாகம் ஒரு தனி நபர் வசம் எனக் கேள்விப்பட்டேன். குடும்பத்துடன் நிர்வாகம் செய்கிறாராம். ஆத்மானந்தா சுவாமியின் இறப்பின் போது, அங்கு நான் சென்றிருந்த போது, என்னுடன் பிரச்சினை செய்வதற்கு ஆட்கள் செட் செய்யப்பட்டிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
ஏனென்றால் ஆசிரமத்தில் பங்கு கேட்டால்? எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.
எனது மகளுக்கும் மகனுக்கும் அவருக்குப் பிறகு, நிர்வாகம் செய்ய எழுதி வைக்கிறேன் என சுவாமி ஆத்மானந்தா அவர்கள் எனது வீட்டில் எனது பெட்டில் படுத்திருந்த போது கேட்ட போது வேண்டாமென மறுத்து விட்டேன். அவர் இறக்கும் தருவாயில் மகளின் பெயரைச் சொல்லிக்கொண்டே இயற்கை எய்தினார் என சுவாமியின் நண்பர் சொன்னார்.
அவர் என்னிடம் கேட்டது கரூரில் சுவாமி சித்பவானந்தர் பெயரில் பெரிய யுனிவர்சிட்டி ஒன்றினை உருவாக்க முடிந்தால், செய்யவும் என்பதுதான். இது நடக்க வேண்டுமென இருந்தால் நடக்கட்டும்.
கரூரில் இருக்கும் ஐந்து பள்ளிகள் மற்றும் மடம், பெண்கள் கல்லூரி, சேலத்தில் ஒரு கல்லூரி, காரைக்குடி அமராவதிபுதூரில் ஒரு பெண்கள் கல்லூரி, தஞ்சையில் 100 ஏக்கரில் ஒரு மடம், குற்றாலத்தில் ஒரு மடம், ராம நாதபுரத்தில் ஒரு மடம், குங்குமபாளையத்தில் ஒரு மடமும் பள்ளியும், கோவை பள்ளப்பாளையத்தில் மடமும், பள்ளியும், சென்னையில் கோயம்பேடு மார்கெட் பின்னால் ஒரு மடம் என அவர் உருவாக்கியது அனேகம். அதெல்லாம் இப்போது யார் யாரின் கையிலோ இருக்கிறது.
அவரின் இறுதிக் காலத்தில் அத்தனை நிறுவனங்களுக்கு என்னை ஆலோசகராக நியமிக்க விரும்பினார். என்னிடம் கேட்டார். என்னால் நேர்மையாக சிந்திக்க மட்டுமே தெரியும். என்னென்ன பிரச்சினைகள் வருமென்று தெரியும். புலி வாலை பிடித்த கதையாகி விடும் வாழ்க்கை என்பதால் நாசூக்காக மறுத்து விட்டேன். வருந்தினார், நான் உனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றார். அதனால் என்ன உப்பிட்டவரை மறக்கவா முடியும்.
என் மனைவி சொல்வார், நீங்க ஆத்மானந்தா சுவாமி போலவே இருக்கீங்க என.
பள்ளப்பாளையம் ஆசிரமத்தில் தங்கி இருந்த போது, அங்கிருந்த அனாதைச் சிறுவர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். ஆஸ்ரமத்திலிருந்து எனக்கு பல விதமான இனிப்பு பதார்த்தங்களை தந்திருப்பர். எனக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காது. ஆகவே ஒவ்வொரு சிறுவனிடமும் எடுத்துக் கொடுத்து விடுவேன். வாய்க்குள் போட்டுக் கொண்டு வெளியே சென்று விடுவார்கள். நிர்வாகி பார்த்தால் தோல் உரிந்து விடும்.
இப்போது எப்படியோ? அது கடவுளுக்கே வெளிச்சம்.
நினைவுகளைப் புறம் தள்ளி விட்டு, கண்ணம்பாளையத்திலிருந்து திரும்பி கொண்டிருந்த போது அய்யனார் மெஸ் என்ற போர்டைப் பார்த்தேன்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆவணம் - கைகாட்டி ஊரிலிருந்த ஸ்டார் தியேட்டருக்கு நானும், மச்சான் ஆத்மநாதனும் மேட்னி ஷோவுக்குச் செல்வதுண்டு. நான்கு பரோட்டாக்களை வாங்கி அதில் குருமாவை கலந்து, இருவரும் தியேட்டருக்குச் செல்லும் வழியில் சாப்பிடுவோம். அன்றைக்குச் சாப்பிட்ட அந்த பரோட்டா, குருமா நினைவுக்கு வந்தது. அதே சுவை. ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது நினைவு.
மச்சான் ஆக்ஸிடெண்டில் செத்துப் போய் விட்டான். அவனும் நானும் வாழ்ந்த வாழ்க்கை - தகப்பன் மகன் போல. என்னை முதுகில் உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு அவன் நடக்காத இடமில்லை. பேக் போல அவன் முதுகில் ஒட்டிக் கொண்டிருப்பேன். நீச்சலடிக்க பழக்கியதிலிருந்து, கிட்டிப்புள், பேட்மிண்டன், கபாடி வரைக்கும் அவன் என்னுடன் விளையாடுவான்.
பொருளாதார பிரச்சினை அவனது வாழ்க்கையை முடித்து வைத்து விட்டது. அவன் தன் வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறான்.
மெஸ்ஸில் கூட்டம் அலைமோதியது. பார்சல்கள் சென்று கொண்டே இருந்தன. மற்றொரு அடுப்பில் புதிய குருமா கொதித்துக் கொண்டிருந்தது.
அந்தப் பக்கமாய் போனால் ஒரு பரோட்டாவும் சைவக் குருமாவும் சாப்பிட்டு பாருங்கள். எனக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியாது.
நமக்குப் பிடித்தால் போலவா எல்லாம் நடக்குது? ட்ரை பண்ணிப் பாருங்க.
கலைஞர் கல்லூரியில் காத்திருந்தோம். பெண்கள் உடைகள் முற்றிலுமாக மாறி விட்டதைக் கண்டேன். மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு முடிந்து திரும்பினோம்.
சூலூர் பிருந்தாவன் ஹோட்டலில் ஒரு காரக் கொழுக்கட்டை, அரை வாழைக்காய் பஜ்ஜி, இரண்டு காரப்பணியாரம். சூலூர் பக்கம் சென்றால் இந்த ஹோட்டலில் சாப்பிடுவது வாடிக்கை. மதியச் சாப்பாடு நல்லா இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க.
ஹாஸ்டலில் விட்டு விட்டு வீடு திரும்பினோம்.
காருண்யா வர இரவு ஏழு மணி ஆகி விட்டது.
குளித்து விட்டு, ஒரு தோசை சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.
அன்றொரு நாள் கடந்தது இப்படியாக.
வளமுடன் வாழ்க.

