பிசினஸ் ஸ்டாண்டு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இந்தியக் கல்விச் சந்தையின் மதிப்பு வருடா வருடம் உயர்ந்து கொண்டே செல்கிறதாம். மக்களிடமிருந்து கல்விக்கு என்று செலவழிக்கும் தொகை வருடம் ரூபாய் ஆறு லட்சம் கோடி என்பது தான் அந்தச் செய்தி சொல்லும் உண்மை.
இந்திய மக்களிடமிருந்து தனியார் முதலாளிகள் கல்வி என்ற பெயரில் ஆண்டுக்கு ஆறு இலட்சம் கோடி வசூல் செய்து தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்கிறார்கள். இந்த ஆறு இலட்சம் கோடி இந்திய மக்களிடமே இருந்தால் அமெரிக்காவினை மிஞ்சும் இந்தியர்களின் வாழ்க்கைத் தரம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
அது மட்டுமல்ல இந்திய மருத்துவத்துறையில் வருடம் ஒன்றுக்கு புரளக்கூடிய பணம் மட்டும் 12 லட்சம் கோடிக்கும் மேல் என்கிறது இந்தியா பிசினஸ் எனும் பத்திரிக்கை செய்தி. ஆக வருடம் கல்விக்கும் மருத்துவத்துக்கும் 18 லட்சம் கோடி ரூபாயை இந்திய மக்கள் செலவு செய்கிறார்கள். அத்தனை பணமும் மக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது என்பதுதான் உரைக்கும் உண்மை.
அது மட்டுமல்ல நமக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, நாட்டை நிர்வகிக்க நாம் கொடுக்கும் வரிப்பணம் என்பது வேறு. அது எத்தனை லட்சம் கோடி என்பது நினைவுக்கு வரவில்லை.
வரியை விடுங்கள், கல்வி மருத்துவத்திறகான இத்தனை பணமும் இந்தியர்களிடம் இருந்தால் ஒவ்வொரு வீட்டிலும் பென்ஸ் காரல்லவா நிற்கும்? இந்தியாவில் பசி, பஞ்சம், பட்டினி, ஏழை என்று யாரையாவது காட்டத்தான் முடியுமா?
இத்தனைக்கும் காரணம் யார்? யோசித்துப் பாருங்கள்.
நம்மிடம் இருக்கும் பணத்தை நயவஞ்சக் கூட்டமொன்று கொள்ளை அடித்து கொழுத்துப் பெருத்து கூடி கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளும், ஏழைகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எவனாவது பேசுகின்றானா?
நம்மிடமிருந்து பெறும் பணத்திலும் கொள்ளை அடித்துக் கொழுத்து திரியும் அரசியல்வாதிகளின் பொய்யை நாம் என்று புரிந்து கொள்ளப் போகின்றோம் என்று தெரியவில்லை.
ஒரு அரசியல்வாதியின் பையன் தன் காரை முந்திச் சென்ற காரில் இருந்தவரைச் சுட்டுக் கொல்கிறார். ஒரு சினிமாக்காரன் குடித்து விட்டு வீடில்லாமல் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரேற்றிக் கொன்று விட்டு, கொலையே செய்யவில்லை என்று தீர்ப்பு பெறுகிறான். ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளிவந்த காரணத்தால் பணியாளர்கள் நெருப்பு வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். நம் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறும் மக்கள் பணியாளர்கள் மக்களை மதிப்பதே இல்லை.
இதுவா ஜனநாயகம்? இதுவா அரசு நடத்தும் விதம்? இவர்களா இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு உழைக்கப் போகின்றார்கள்? அத்தனையும் வேஷம்.
மக்கள் சேவைக்குத்தானே வருகின்றார்கள் அரசியல்வாதிகள்? அப்புறம் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்? யார் ஆட்சியில் இருந்தால் என்ன? இவர்கள் ஏன் தங்களுக்குள் அடித்துக் கொள்கின்றார்கள்?
அதிகாரமும், பணப்பசியும், பதவி வெறியும் கொண்டலையும் இவர்களை இந்திய மக்கள் என்றைக்குப் புரிந்து கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.
இந்தியாவை நேசிக்கும் ஒரு தலைவனை இந்திய மக்கள் என்றைக்குத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.
இந்தப் பாட்டைக் கேட்டுப் பாருங்கள். இந்தியாவின் உண்மை நிலையினைச் சொல்லும் அற்புதமான பாடல், இந்திய தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சில் ரத்தம் வடிய வைக்கும் பாடல்.
என்ன செய்யப்போகின்றோம் நாம்?
* * *
செய்தி உதவி :