குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஆலந்துறை. Show all posts
Showing posts with label ஆலந்துறை. Show all posts

Monday, August 13, 2012

6000 வருட பழமையான முட்டம் நாகேஸ்வரர் - முத்து வாளியம்மன்


எனது நெருங்கிய நண்பரொருவரின் உதவியால் ஆடிட்டர் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தது. பிசினஸ் விஷயமாய் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஜோசியம் பார்ப்பதாகச் சொன்னார். திருமணம் ஆன நாளில் இருந்து இது வரை நான் ஜோசியம் பார்க்க  சென்றதில்லை. என்  நெருங்கிய நண்பர்கள் சிலர் தான் எனது ஜாதகத்தை வைத்துக் கொண்டு அவ்வப்போது ஏதாவது பிரடிக்‌ஷன் சொல்லி வந்தார்கள். முதன் முதலாய் நானும் மனைவியும் ஆடிட்டரை ஜோசியம் சம்பந்தமாய் சந்தித்தோம்.

இன்று காலையில் மூன்று பேரிடம் பிசினஸ் பற்றிப் பேசி இருப்பீர்கள் சரியா? என்றார். மிகச் சரியாக ஆம் என்றேன். அதில் ஒருவர் உங்களை ஏமாற்றுகிறார் என்றார். அவரையும் கண்டு கொண்டேன் மிகச் சமீபத்தில். கடந்த காலம், நிகழ்காலம், வரும் காலம் படமாய் கொட்டுகிறார் ஆடிட்டர். அசந்து போய் விட்டேன். என் வாழ்க்கையில் நடந்த இதுகாறும் எவரும் அறியாத சில சம்பவங்களை அவர் கோடிட்டுக் காட்ட அசந்து தான் போய் விட்டேன். ஜாதகக் கணிப்பில் இப்படியும் சொல்ல முடியுமா என்ற பிரமிப்பு சூழ்ந்தது. நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து விட்டோம்.

மற்றொரு நாள், என்னை காளஹஸ்தி சென்று வரும்படிச் சொன்னார். அதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பற்றிச் சொன்ன போது, சரி பரவாயில்லை கோவை, ஆலந்துறையில் இருக்கும் முத்து வாளியம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்றார். பல கோவை நண்பர்களிடம் இக் கோவில் பற்றி விசாரித்தேன். ஒவ்வொருவரும் ஒரு மாதிரிச் சொன்னார்கள். கோவில் இருக்குமிடமும் சரியாகத் தெரியவில்லை. காட்டுக்குள் இருக்கிறது என்றார் ஒருவர். கிராமத்திற்குள் இருக்கிறது என்றார் மற்றொருவர். இப்படியே சில பல விபரங்கள் கிடைத்தாலும் அது முழுமையானதாக இல்லை. சரி என்னவானாலும் பரவாயில்லை, ஆலந்துறை சென்று விசாரிப்போம் என்று கருதிக் கொண்டு கிளம்பினேன். 

வட்டத்தில் கால் வாசியை வெட்டினால் எப்படி இருக்கும் அப்படியான பூமிக்குள் நுழைந்தேன். மூன்று பக்கம் மலைகள் சூழ இருந்த ஆலந்துறையைக் கண்டுபிடித்து, அப்படியே செம்மேடு வழியாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் “முத்து வாளியம்மனும், முட்டம் நாகேஸ்வரரும்” இவர்கள் குடிகொண்டிருக்கும் கோவிலையும் கண்டு கொண்டேன். சுற்றி வர மலை, பச்சைப் பசேல் செடிகள், மலையில் ஆங்காங்கே வெள்ளியை உருக்கி வார்த்தது போல நீர் வீழ்ச்சிகள், மேகங்கள் தழுவும் மலை முகடுகள், சில்லென்று காற்று, அவ்வப்போது தூறல்கள் என்று இயற்கை அன்னையின் அருள் தவழும் அற்புதமான இடம். மனச் சஞ்சலம் சுத்தமாய் அவ்விடத்தில் நம்மை விட்டு நீங்கி விடுகின்றது. சில்லென்று சூழ் நிலையில், மனம் ஒன்றிப் போய் இருவரையும் தரிசித்து விட்டு வந்தேன்.  

தடையால் நிற்கும் காரியங்கள், திருமணங்கள், முன்னோர்கள் செய்த பாவங்களால் அவஸ்தைப்படுவோர், துன்பத்தில் உழல்வோருக்கு அற்புத மனச் சாந்தியையும், ஆனந்தத்தையும் அருள்கிறார்கள் இருவரும். இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோக மையம் இருக்கிறது. 

ஆறாயிரம் வருடங்களுக்கும் மேலாக இருவரும் இவ்விடத்தில் இருக்கின்றார்கள் என்றார் ஆடிட்டர். முத்துவாளியம்மனுடன் பிறந்தவர்கள் தான் மதுரை மீனாட்சியும், கன்னியாகுமரி அம்மனும். 

ராகு, கேது பரிகார ஸ்தலம். ராகு காலத்தில் சிவனுக்குப் பால் அபிஷேகம் செய்கின்றார்கள். கறந்த பசும் பால் தான் கொண்டு செல்ல வேண்டும். பல ஆதீனங்களும் மடத்தினரும் ஒன்று சேர்ந்து இக்கோவிலை புதுப்பொலிவு பெறச் செய்திருக்கின்றார்கள்.

ராகு கேது பரிகாரம் தேடுபவர்கள் “முத்து வாளியம்மனிடமும், முட்டம் நாகேஸ்வரரிடமும்” செல்லலாம். நிச்சயம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். நிறைவேற்றியே தீருவார்கள்.

உங்களுக்கு அய்யன், அம்மன் அருள் வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் !

- கோவை எம் தங்கவேல்