குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, September 27, 2024

திருப்பதி வெங்கிடாசலபதி பெருமாள் தண்டிக்கிறார்

திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் லட்டு விற்ற வகையில் சுமார் 550 கோடி வருமானம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்ல அவரிடம் சுமார் 11000 கிலோ தங்கமும் இருக்கிறது. அத்துடன் 5000 கோடி வருமானமும் வருகிறது அவருக்கு.

பெருமாளிடம் இருக்கும் அத்தனையும் அவரின் பக்தர்களின் அன்பு அல்லவா? அவர் மீது பக்தர்கள் கொண்ட பக்தி அல்லவா? எல்லா துன்பங்களையும், துயரங்களையும் அவரின் காலடியில் கொட்டி விட்டு - கசப்போடு வந்த பக்தனுக்கு இனிப்பைக் கொடுத்த பெருமாளின் பிரசாதத்தில் கலப்படத்தை கலந்த அத்தனை பேருக்கும் எம் பெருமான் தண்டனை கொடுத்தே தீருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

திருப்பதி லட்டுவில் கலப்படம் என்றால் - பொறுப்பாளர்களுக்கு இதில் தொடர்பில்லையாம். கலப்பட பொருளைத் தயாரித்தவர் தான் காரணமாம். இப்படித்தான் சொல்கிறார்கள். அதை எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

நெய்யில் கலப்படமிருந்தால் வாடையே காட்டிக் கொடுக்கும். அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நெய் கொடுத்தவர்கள் தான் தவறானவர்கள். அவர்களைச் சட்டத்தின் முன்னால் நிற்க வைப்போம் என அரசாங்கம் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது. கடந்த பத்து வருடமாக அரசு கண்ணில்லாமல் தானே இருக்கிறது. 

நெய் தயாரிக்கும் நிறுவனங்களில் அரசாங்கம் ரெய்டு விட்டுக் கொண்டிருக்கிறது. வெங்கடாசலதிபதி பெருமாளுக்கு நெய் சப்ளை செய்ததற்காக - கலப்பட நெய்யை ஏனய்யா லட்டுவுக்கு கொடுத்தீர் எனத் தண்டிக்கிறார். 

ஆனால் மூக்கில் வாசனை கூட தெரியாமல் லட்டு பிடித்தவர்களை மட்டும் எப்படி மன்னிப்பார் பெருமாள்? அவர்கள் தங்களுக்குள் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாமர்த்தியமாகத் தப்பி விட்டோம் என. ஆனால் பெருமாள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

நிர்வாகம் பண்ணினவர்களை எப்படி மன்னிப்பார் பெருமாள்?

உனக்கு கொடுத்த வேலையைச் செய்யாமல் - விரதம் இருக்கிறேன் பேர்வழி ஒருவர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் அல்லவா? அவருக்கும் எம் பெருமான் தகுந்த தண்டனையைத் தந்தே தீருவார்.

எம் இறைவன் - நான் வணங்கும் எம் பெருமான் வெங்கடாசலபதி பெருமாள் - கலப்பட நெய்யை விற்றவர்களை மட்டும் தண்டிக்காமல், லட்டு பிடித்தவர்களை மட்டும் விட்டு விடமாட்டார் என நம்புகிறேன்.

யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசுக்கும் பெருமாள் தகுந்த தண்டனை தந்தே தீருவார். இது வேடிக்கைப் பதிவு அல்ல. உண்மையான பதிவு. மனம் வருந்தி - பெருமாளிடம் வேண்டிக் கொண்ட பதிவு.

விரைவில் பாருங்கள் எம் பெருமானின் சன்னதியில் உளத்தூய்மை கொண்ட பக்தர்கள் பெருகி - அவர்களின் கைகளில் இறைச் சேவைப்பொறுப்பு சென்று சேரும். விதியின் விளையாட்டு லட்டு உருவத்தில் வெளியாகி இருக்கிறது. திருடர்களை எம் பெருமான் காட்டிக் கொடுத்திருக்கிறார். அவர்களை அவர் சன்னதியில் இருந்து விரட்டி அடிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் ஆரம்பம் தான் லட்டு வடிவில் ஆரம்பித்திருக்கிறது.

திருமலையில் இனி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, நாடகம் போடுபவர்களை எம் பெருமான் சும்மா விடமாட்டார் என்பது விதி. 

இனி பெருமாளின் கைங்கரிய களையெடுக்கும் சேவை தொடரட்டும். உண்மையான பக்தர்களுக்கு இனி எல்லாம் சுகமே...!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.