குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, September 24, 2024

திருப்பதி லட்டுவும் அப்பு பிரியாணியும்

சென்னையில் ஒரு சாமானியர் அப்பு - பிரியாணிக் கடையை நடத்தி வந்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் இதர யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து, தன்னைப் பிரபலப்படுத்தி, தின்றே சாகும் தமிழர்களுக்கு நாவுக்கு சுவையாக, மணமாக பிரியாணியைக் கொடுத்தார். 


நாளொன்றுக்கு 6 மணி நேரம் யூடியூப் ஷார்ட்ஸ், வீடியோ, இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஷார்ட்ஸ் என போனுடன் குடும்பம் நடத்தி புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் தமிழர்கள் அப்பு பிரியாணியை நோக்கி படையெடுத்து தின்று தீர்த்தனர்.

எவ்வளவு வேண்டுமானாலும் தின்னலாம் என்கிற சுதந்திரத்தை, இந்திய ஒன்றிய அரசின் மோடி அவர்கள் இந்தியர்களுக்கு வழங்கி இருப்பதால், அந்தச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டே அப்பு பிரியாணியைத் தின்றார்கள் தமிழர்கள். 

ஒரு சில நேரம் சில இடங்களில் பிரியாணி குண்டாவையே தூக்கிச் சென்று தின்றார்கள் மோடியின் பக்தர்கள். இது வேறு டிபார்ட்மெண்ட். குழப்பிக் கொள்ள வேண்டாம். அப்புகடை பிரியாணி அண்டாக்கள் பாதுகாப்பாய் தான் இருந்தன.

பிரதமர் மோடி நான் பயாலிஜிகல் மனிதன் இல்லை என்று சொன்னார் அல்லவா? கடவுள் அவதாரங்களின் மீது அதீத நம்பிக்கை எனக்கு உள்ளதால் நானும் நம்பி விட்டேன். அதனால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் எனக்கு பிரியாணி பிடிக்காது. 

மோடியின் பக்தர் ஆவதில் இந்த ஒன்று மட்டும் தான் இடிக்கிறது. ஆகவே 99 சதவீதம் அடியேன் மோடியின் பக்தன் என்பதில் யாருக்கு எள்ளளவு சந்தேகம் வர வேண்டாம். அந்த ஒரு சதவீத கணக்கு இடிப்பது இந்த பிரியாணியால் தான். சைவமாக இருப்பதினால் எனக்கு இப்படி கடவுள் பக்தர் இணைப்புக்கு கொஞ்சூண்டு பிராப்ளம்.

அப்பு பிரியாணிக் கடை முதலாளி ஆடி கார் வாங்கி விட்டாராம். ஆகவே ஒரு சில யூடியூப் சானல்கார முதலாளிகளுக்கு, எனக்கு ஹிட்டும் வரவில்லை, ஒரு எழவும் வரமாட்டேன் என்கிறது. ஆனால் நான் போட்ட வீடியோவினால் பிரபலம் ஆகி ஆடி காரை வாங்கி விட்டாயா என்று ஏற்பட்ட சந்தோஷத்தில் பிரியாணியில் சந்தேகம் என்று கொழுத்திப் போட்டார்கள். ஒரு சிலர் புகார் வேறு தெரிவித்தார்கள். 

குறிப்பு: சிக்கன் பாக்டரி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கடமையே கண்ணான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அப்பு பிரியாணிக்கு மட்டும் சென்றால் போதாது என வேறு பல கடைகளுக்குச் சென்று கடமையை நன்கு ஆற்றினார்கள். கடைகளைச் சீல் வைத்தார்கள். அப்பு நெஞ்சு நெஞ்சாய் அடித்துக் கொண்டார். 

சாப்பிடும் உணவுப் பொருளில் கலப்படம் என்றால் பறந்து சென்று கடமையை ஆற்றும் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு லட்டு உணவுப் பொருள் இல்லை என்று நன்கு தெரியும். அது பெருமாள் பிரசாதம். பிரசாதம் என்பது வேறு, உணவுப் பொருள் என்பது வேறு.

தமிழ் நாட்டில் கடமையை ஆற்றிய அதிகாரிகள் போல ஆந்திராவில் ஏன் அதிகாரிகள் ஆற்றவில்லை என்று கேட்டு விடக்கூடாது. காரணம் உண்டு.

முன்னாள் முதல்வர் ஜெகன் அவர்கள் மாறு வேடம் போட்டுக் கொண்டு, நட்ட நடுராத்திரியில் நெய் டேங்கருக்குள் மாட்டுக் கொழுப்பையும், மீன் எண்ணெயும் கலந்து விட்டு, நழுவி விட்டார். அவர் ஒரு முன்னாள் முதல்வர் மட்டுமல்ல என்பதாலும், மோடியின் முரட்டு பக்தர் என்பதாலும் அதிகாரிகளுக்கு  பயம் ஏற்பட்டு, அந்தப் பயத்தின் காரணமாக கடமை ஆற்ற இயலாமல் மனத்தடை வந்திருக்கலாம் என நினைப்போம். 

திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் லட்டு பிடிக்கும் இடத்தை எந்த ஒரு உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகளும் எட்டிக் கூட பார்க்கவில்லை. 

கருவறைக்குள்ளேயே அனுமதி இல்லை, லட்டு பிடிக்கும் இடத்தை நினைத்துப் பார்க்கலாமா அதிகாரிகள்? இந்து மதத்தின் ஆகம விதிகள் அதற்கு இடம் தராது அல்லவா? உச்ச நீதிமன்றத்தில் ஆகமத்தின் பாதுகாவலர்கள் வழக்குத் தொடுத்து விட்டால்? ஆகமம் என்பது கடவுளின் விதிகள் இல்லையா? 

ஆந்திரா துணை முதல்வர் - இந்த அபச்சாரத்தை, அபசகுனத்தை, இந்தக் குற்றத்தை, அவலத்தை, அசிங்கத்தை நீக்க வேண்டுமென திருப்பதி பெருமாளை நோக்கி, பட்டினி கிடந்து, விரதம் இருந்து மன்னிப்புக் கேட்கப் போகிறாராம்.

பெருமாளும் நேரடியாக காட்சி கொடுத்து எல்லா அபச்சாரத்தையும் நீக்கி அருளப் போகிறார் என்பதால் அங்கு அதிகாரிகள் செல்லவில்லை. ஆக இப்படியான பல காரணங்கள் இருப்பதினாலே அதிகாரிகளுக்கு கிலி ஏற்பட்டிருக்கலாம். 

பெருமாள் - துணைமுதலமைச்சரின் விரதத்துக்கு மன்னிப்பு வழங்கி விட்டதை பட்டயத்தில் எழுதிக் கொடுப்பாரா? இல்லை பக்தர்களின் கனவில் வந்து சொல்லுவாரா? யூடியூப் செய்தி சானல்கள் அப்டேட் செய்வார்கள் என நம்பலாம்.

குளிர் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மாமிசக் கொழுப்பு உணவுகளை அதிகம் உண்ணுவர். சைவச் சாப்பாடு சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்காமல் பரலோக பிராப்தி அடைய நேரிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

திருப்பதியிலும் அதீத குளிர் இருக்கும். குளிரினைப் போக்க, உடலுக்கு மாமிசக் கொழுப்பு வேண்டுமென்பதற்காக - எவரேனும் துஷ்டன் நெய்யில் கலந்திருப்பானோ என்ற சந்தேகமெல்லாம் வந்து விடக்கூடாது. அது வேறு இது வேறு.

தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பன மாமி யூடியூப் பேட்டியில் நாங்கள் லட்டுவைத் தின்ன மாட்டோம் என்றார். ஒரு வேளை அவருக்குத் தெரிந்திருக்குமோ இந்த லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணை கலந்திருப்பது? இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம். நாமெல்லாம் பயாலிஜிகல் ஆட்கள் அல்லவா? 

நேற்று திருப்பதி லட்டு தயாரிக்கும் இடத்தில் கோமியம் தெளித்து தீட்டினை நீக்கி, லட்டுவை பரிசுத்தமாக்கி விட்டார்கள் எனச் செய்தி வந்தது. இனி லட்டுவில் மாட்டுக் கொழுப்போ அல்லது மீன் எண்ணெயோ இருக்காது. சுத்தமான பசுவின் காம்பிலிருந்து வடியும் நெய் - அதுவும் ஆர்கானிக் நெய் - அதாவது அமுல் விற்கும் கிர் நெய் போல - சேர்க்கப்பட்டு லட்டு பெருமாளுக்குப் பிரசாதமாய் படைக்கப்படும். 

நிற்க.. நிற்க...!

துக்ளக் ரீடர்ஸ் கிளப்பின் டிவீட்டுடன் இப்பதிவை முடித்து விடலாம் என்றாலும் மேலும் ஒரு செய்தி கீழே அதையும் படித்துப் பார்த்து, இந்திய மக்கள் மீது பெருமாள் வைத்திருக்கும் அன்பினைப் பார்த்துப் படித்து பெருமூச்சொன்றினை சொரிக.


பெருமூச்சு விடும் செய்தி - ஆந்திர பிரதேச ஃபுட்ஸ் சிவில் இணையதளத்திலிருந்து எடுத்தது.


2014ம் ஆண்டில் கடலை எண்ணெய் விலை ரூ 87.99/லிட்டர்.  கீழே நேற்றைய விலை அமேசானில் ரூ.345/லிட்டர்.


இனி பரிசுத்தமான பெருமாள் லட்டுடன் பக்தியைப் பரவவிடுங்கள் பக்தர்களே. நானும் இனி பக்தியை பரிமளிக்க விடுவேன். கோமியத்துக்கும் மாட்டுக் கொழுப்புக்கும் வித்தியாசம் பார்க்கும் அற்ப எண்ணத்தை அந்தப் பெருமாள் தான் எனக்குள்ளே உண்டு பண்ணினான். ஆகவே என்னைப் பொறுத்தவரை எல்லாமே பெருமாள் கைங்கரியம் என்று நினைத்தாலும் கூட, எனக்கு மாட்டுக் கொழுப்பு பிடிக்காது.

என்ன இருந்தாலும் பெருமாள் லட்டுவின் சுவைக்கு ஈடேது? இணையேது? 

அந்த லட்டுவின் சுவையை, பரிசுத்த பசுமாட்டின் மூத்திரத்தாலே (கோமியத்தை இப்படியும் சொல்லலாம்) பரிசுத்தமாக்கப்பட்ட லட்டுவின் சுவை மிஞ்சுமா? இல்லை கெஞ்சுமா? இந்த மாதம் வரும் லட்டுவைச் சுவைத்து விட்டுச் சொல்கிறேன்.

லட்டுன்னா ஏதோ லட்டுதானே என நினைக்காதீர்கள். போன வருடம் சுமார் 500 கோடிக்கு லட்டு விற்பனை செய்திருக்கிறார் எம்பெருமான் வெங்கடேசப் பெருமாள். 

லட்டுன்னா இதுவல்லவோ லட்டு...!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.