குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 9, 2024

தினமலரை ஒதுக்கிய தமிழ்நாடு

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்படி அமையட்டும். நீண்ட நாட்களாக இணையத்தில் எழுத முயன்று கொண்டிருந்த போதெல்லாம், ஏதோ ஒரு தடை வந்து விடுகிறது.

சமீப காலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதை அறிந்தவுடன், ஜோதி சுவாமி கொஞ்சம் பச்சிலைகளைத் தந்தார். அதை வாயில் போட்டு மென்று தின்றவுடன் நாக்கு புரண்டு விட்டது. அந்தளவுக்கு அதன் வீரியம் இருக்கிறது. தொண்டையோ ஒரு வித அழற்சியில் சிக்கியது. விடாமல் நான்கைந்து நாட்கள் சாப்பிட்டு விட்டேன்.  அதற்குப் பிறகு சாப்பிடும் முன்பு 100, சாப்பிட்ட பின்பு 160 இருக்கிறது. 

பச்சிலை சாப்பிடுவதற்கு முன்பாக,  சாப்பிடுவதற்கு முன்பு 240, சாப்பிட்ட பின்பு 350 இருந்தது. வாயைக் கட்டி விட்டேன்.

பால், டீ, காஃபி, எண்ணெய் பலகாரம் முற்றிலுமாக குறைந்து விட்டேன். சர்க்கரை ஒழுங்குக்கு வந்து விட்டது. முக்கியமாக வெளியே செல்லும் போது, உணவகங்களில் சாப்பிடும் போது தோசை மற்றும் இட்லியைத் தவிர்க்கவும். நான்கைந்து மாதங்கள் உணவகத்தில் சாப்பிட்டதன் விளைவுதான் சர்க்கரை. சாம்பாரில் சர்க்கரை, தோசையில் சர்க்கரை.  

உடல் பருமன் மற்றும் உடல் இளைக்க - அவ்வப்போது குடம்புளி ரசம் வைத்து குடித்துக் கொள்வேன். குடம் புளி  உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும். நடைப்பயிற்சி முடியாது என்பதால் இவ்வகையான உணவுப் பழக்கம்.

உங்களுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. 

நீண்ட நாட்களுக்கு முன்பு ஃபேட்டி லிவர் பிரச்சினை இருந்தது. ஜம்மி ஆயுர்வேத நிறுவனத்தில் ஒரு சிரப் விற்கிறார்கள். அதை வாங்கி பயன்படுத்தினேன். கத்தரிப்பூ கலரில் இருந்த நாக்கு சாதாரண நிலைக்கு வந்து விட்டது. ஃபேட்டி லிவர் பிரச்சினை இருந்தால் நாக்கு கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும் என ஆயுர்வேத மருத்துவ சகோதரி எனக்கு பரிந்துரைத்தார்.

தீராத முட்டுவலி, தீராத கழுத்து வலி பிரச்சினை இருப்பவர்களுக்கு நிரந்தரமாய் சிகிச்சை தர ஒரு மருத்துவமனை இருக்கிறது. மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். அதுபற்றிய தகவலைத் தருகிறேன். 

சமீபகாலமாக இந்து நாளிதழ், தினகரன் மற்றும் தீக்கதிர் நாளிதழ்களுடன் தினமலர் வந்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒரு காலத்தில் சாரு நிவேதிதா மூலமாக அந்துமணி அவர்களுடன் தொடர்பு இருந்தது. எனக்கும் அவருக்கும் ஒரே தேதி பிறந்த நாள்.  தினமலரை நான் பெரும்பாலும் இணையத்தில் வாசிப்பதுண்டு. 

அப்போதெல்லாம் சதித்திட்டங்களின் மறை நடவடிக்கைகளை அறிந்து கொள்ள இயலாத அறிவு இருந்தது. காலம் செல்லச் செல்ல ஒருவர் பேசும் போது, அவரின் மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தது.

தினமலரை நான் நீண்ட காலத்துக்கு முன்பு நிராகரித்து விட்டேன். படிப்பதே இல்லை. அது முற்றிலுமாக ஒரு சார்புநிலைப் பத்திரிக்கை என்பதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

நான் சொல்லாத போது தினமலர் பத்திரிக்கையை ஏன் போடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக முகவரை அழைத்தேன்.

இலவசமாய் ஒவ்வொரு வீட்டுக்கும் போடுபடி கேட்டுக் கொண்டார்களாம். அதனால் போடுகிறேன், பணமெல்லாம் கேட்க மாட்டேன் என்றார் அவர்.

எவ்வளவு குரூரமான தந்திரம் பார்த்தீர்களா? 

வேறு பத்திரிக்கைகளை வாங்க விடக்கூடாது என்பதற்காக - இவர்களின் பத்திரிக்கைகள் விற்பனையாகாத பகுதிகளில் தினமலரை வெகு தந்திரமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைப்பதைப் பாருங்கள்.

இலவசமாய் மார்க்கெட்டிங்க். 

தினசரி முகவர்கள் இதற்காக காசு கேட்பதில்லை. தினமலர் ஒவ்வொரு வீட்டுக்கும் எந்த விதச் செலவு செய்யாமல் செல்லும். தினமலரைப் பிடிக்காதவர்களின் வீட்டுக்குள்ளும் செல்லும்.  அவர்களுக்குச் செலவுதானே என்று நினைப்பீர்கள். ஆனால் அதுவல்ல காரணம்.

பிற பத்திரிக்கைகளின் விற்பனையைத் தடுத்தது போலவும் ஆச்சு, விற்பனையை உயர்த்தியது போலவும் ஆச்சு, இத்தனை பத்திரிக்கைகள் போடுகிறோம் எனக் கணக்குக் காட்டி விளம்பரதாரர்களிடம் அதிக கட்டணம் கேட்டது போலவும் ஆச்சு. தமிழ் நாட்டிலேயே நாங்கள் தான் அதிக பத்திரிக்கைகள் விற்பனை செய்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளவும் போலவும் ஆச்சு.

எப்படியான தந்திரம் பார்த்தீர்களா?

முன்பு ஒரு சில மசாலா பொடிகளை பத்திரிக்கைகள் இலவசமாய் பாக்கெட்டுகளில் தருவார்கள். அது இலவசமா? இல்லை விற்பனைத் தந்திரம்.

தினமலரை தமிழ் நாட்டு மக்கள் நிராகரிக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

நல்ல செய்திகளை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் இன்றி வெளியிட்டால் என்ன கெட்டுப் போகும்? 

தினமலர் என்பது பிராண்ட் - அது சார்பு நிலையில் இருந்து சரியான நிலைக்கு மாறவில்லை எனில் மக்கள் நிராகரித்து ஒதுக்கி விடுவார்கள். தினமலர் அந்த நிலையை நோக்கிச் செல்லும் என்று நம்புகிறேன். ஏனெனில் சுரை விதை - சுரைக்காயைத்தான் காய்க்கும்.

வளமுடன், நலமுடன் வாழ்க



0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.