குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, October 26, 2022

யார் உங்களுக்கு ஓட்டுப் போட்டது? பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

பிறப்பில் குஜராத்தி (கவனிக்க), பிரிட்டனில் செட்டில் ஆன ரிஷி சுனக் திடீரென்று பிரதமரானார். இந்திய சங்கிகள் கொண்டாடி தீர்க்கின்றனர். என்ன காரணம்?

பிராமணரான இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மகளை இந்த ரிஷி சுனக் திருமணம் செய்துள்ளார்.

இனி பிரிட்டன் பார்ப்பனியத்தால் ஆக்கிரமிக்கப்படும் என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை என்பதை பார்ப்பனிய வரலாறு சொல்கிறது. பொய் எதுவும் இல்லை. 

எகிப்திலிருந்து நாடோடியாக மாடுகள் மேய்க்க வந்தவர்கள் இந்தியாவின் உயர் பதவியில் உட்கார்ந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு இந்தியாவை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எங்கு நோக்கினும் பசியும் பட்டினியும் ஏழையுமா பஞ்சைப் பராரியாக இந்தியர்கள் திரிகிறார்கள். 

இதே கதைதான் இனி பிரிட்டனிலும் நடக்கும். பாவம் பிரிட்டிஷ் மக்கள்.

டெய்லி மிரர் பத்திரிக்கை, ‘யார் உங்களுக்கு ஓட்டுப் போட்டது?’ என்று கேள்வி கேட்கிறது. இதோ ஸ்கீரின் ஷாட்.

பிரிட்டனில் திடீரென்று என்ன நடந்தது? இதற்குப் பின்னால் இருக்கும் சதிதான் என்ன? காலம் தான் பதில் சொல்லனும்.

யாரும் ஓட்டுப் போடாமலே பிரிட்டனில் ஒரு பிரதமர்.

 நன்றி : டெய்லி மிரர் பத்திரிக்கை

Sunday, October 23, 2022

அம்மா குட்டியம்மாள் - தீரா வலி - அஞ்சலி

விடிகாலை நான்கு மணி பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கு வரச்சொல்லி அறிவிப்பார்கள். வாசலில் ’வறட் வறட்’ சத்தம் கேட்கும். அரை ஏக்கரில் பரந்து விரிந்த மனை. கல் பாவிய வாசலின் முன்பிருந்து - வீட்டுக்குப் பின்னால் வைக்கோல் போர் இருக்கும் வரை கூட்டிப் பெருக்க வேண்டும். ஈக்கு குச்சி விளக்குமாறால் கூட்டிக் கொண்டிருப்பார்.

கட்டுத்தறியில் மாடுகளின் சாணத்தை அள்ளி குப்பைக் கிடங்கில் போட்டு விட்டு, அவைகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, குடத்தடிக்கு வந்து கைகால் அலம்பி, அடுப்பங்கரைக்குள் நுழைவார். அடுப்பில் சாம்பலை எடுத்து தட்டில் வைத்து விட்டு, சோற்றுப் பானையில் தண்ணீர் வைத்து அடுப்பை மூட்டுவார்.

குடத்தடிக்கு பாத்திரங்களைக் கொண்டு போய், தண்ணீர் தெளித்து விட்டு, அமர்ந்து சாம்பலால் பாத்திரங்களைக் கழுவி, பொக்கையில் நிரம்பி இருக்கும் நீரில் அலசி வீட்டுக்குள் வருவதற்குள், அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும்.

அரிசி களைந்து உலையில் போட்டு, அடுப்பைத் தூண்டி விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று பாலைக் கரந்து வருவார். பாலை இன்னொரு அடிப்பில் காய வைத்து விட்டு, தூரியில் தொங்கிக் கொண்டிருக்கும் மோர் பானையை இறக்கி மத்தை வைத்து கடைந்து வெண்ணெய் எடுப்பார். 

எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஒரு உருண்டை வெண்ணெய். கொஞ்சம் மோர்.

சோறு பதம் பார்த்து விட்டு, கஞ்சி வடிக்க சோற்றுப்பானையை கவிழ்த்து விட்டு,  மீந்த குழம்பினை பால் காய்ந்த அடுப்பில் சுட வைத்து, கஞ்சி வடிந்த பானையை இறக்கு துணியால் சுற்றிலும் துடைத்து, பானை வாயில் சோற்றுப் பருக்கைகளை வழித்து உள்ளே போட்டு, பிருமனை மீது வைப்பார். 

காய்ந்த பாலை உரியில் வைத்து விட்டு, இரவு மீந்த குழம்பினை சூடு செய்வார். காலையில் யாரும் காப்பித்தண்ணி, டீத்தண்ணி குடிப்பதில்லை. தாத்தா மாணிக்கதேவர் கடைத்தெருவுக்கு டீத்தண்ணி குடிக்கச் சென்று விடுவார். மாமா அருணாசலம் அரசு அலுவலராதலால், ஆவணத்தான் குளத்துக்கு குளிக்கச் சென்று விடுவார்.

பெரிய மாமா குழந்தைவேல் விடிகாலையில் வயற்காட்டு உழச் சென்று இருப்பார்.  அவருடன் போஸும், ஜெயராசும் சென்று இருப்பார்கள். 

தவளைப் பானையில் வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு கஞ்சி கலக்கி, பனை ஓலை எடுத்து, வெந்தய மாங்காய், வற்றல்கள், வடகங்கள் எடுத்துக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்குச் தலையில் சும்மாடு கட்டி அதன் மீது சோற்றுத் தவளைப் பானையை வைத்துக் கொண்டு, இடது கையில் கூடையில் கஞ்சிக்கு கடிப்பவைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.

* * *


(தோற்றம் 01.04.1939 | மறைவு 04.10.2022)

மூன்று நாட்களுக்கு முன்பே சுவாமியிடமிருந்து தகவல் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் எனக்கு மனச்சோர்வுடன் தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டது. பலப்பல எண்ணங்கள் மனதுக்குள். பல்வேறு சிந்தனை ஓட்டங்கள். அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. சின்னக்கா ஜானகியும், மகன் பிரவீனும் தான் ஊரில் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் அம்மா என்ன சாப்பிட்டார்கள் என்று விசாரிப்பது என நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று ஆயுத பூஜை, அக்டோபர் மாதம், நாலாம் தேதி விடிகாலை மூன்றரை மணி. ஊரில் இருந்து பிரவீன் அழைத்தான். 

அம்மா இறைவனடி சேர்ந்தார்கள்.

கோவையில் ஆறரை மணிக்கு கிளம்பினேன். சரியாக பதினொன்றரை மணிக்கு ஊர் சென்றேன்.

சின்னக்கா சொன்னார்கள்,”நான் சாகப் போறேண்டி, அழாதே” என்றுச் சொல்லி தலையைத் தடவிக் கொடுத்தாராம். தலை சாய்ந்து விட்டது என்று காலைக் கட்டிப்பிடித்து அழுதார்.

அம்மாவின் காலடியில் அமர்ந்தேன். தொண்ணூறு வயது வரை ஓடி ஓடி, நடந்து நடந்து, தேய்ந்த கால்கள் தட்டையாய் கிடந்தன. பேசாமல், இயங்காமல் படுத்திருந்தார். எனக்குள் குருதி கொதித்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

நெடுவாசல் கோவிலில் அன்று கொலுவின் இறுதி நாள் என்பதால், இரண்டு மணிக்கு அம்மா தகனம் செய்யப்பட்டார்.

பெற்றெடுத்த தாயின் தலைப்பக்கமாய் எதிரில் திரும்பி நின்று, பின்பக்கமாய் நெருப்பினை அவர் தலைமாட்டின் மீது வைத்தேன். 

’திரும்பிப் பார்க்காமல் போங்க’ என்று வெட்டியான் வேலை செய்து கொண்டிருந்தவர் சொன்னார்.

வீடு திரும்பினேன்.

என்னைப் பெற்றெடுப்பதற்காக, பாழாய் போன சொத்துக்காக, என் பாட்டி சின்னப்பிள்ளையால் அழிக்கப்பட்டவர் என் தாய் குட்டியம்மாள். அம்மாவுக்கு திருமணம் ஆன போது 20 வயது, அப்பாவுக்கு 50 வயது. அந்தக் கால வழக்கமாம்.

பலருக்கு அம்மாக்கள் சந்தோஷ நிகழ்வுகளாய் இருப்பர். 

என்னளவில் தீரா வலியாக அம்மாவின் நினைவுகள் என் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கிறார். 

* * *


அம்மாவின் இறப்புச் செய்தி 11.04.2022ம் தேதியன்று தினந்தந்தியில் வெளியானது