குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 28, 2019

நிலம் (53) - மலிவு விலை வீடுகள் என்றால் என்ன?

எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிகழ்வுகள் இந்த ஆண்டு தமிழகத்திற்கு நடந்திருக்கும். குழப்பமான சூழல் தமிழகத்தில் நிலவியதால் உருவானது இந்த நிலை. நண்பர்களே, இந்தியா பிஜேபிக்காக மாற்றப்பட்டு விட்டது. இனி அந்த அமைப்பை உடைக்க முடியாது. உடைக்க பெரும் விலை கொடுக்க வேண்டும். பெரும் புத்திசாலிகள் பின்னால் இருக்கின்றார்கள். அந்த புத்திசாலிகள் இந்தியாவை பகுதி பகுதியாகப் பிரித்து, தடைகள் ஒவ்வொன்றையும் நீக்குகின்றார்கள். தமிழகத்தில் அதிமுகவில் ஆரம்பித்தது. அடுத்து திமுக என நீளும் அவர்களின் திட்டங்கள். இது தான் நடக்கப் போகிறது என நாமெல்லாம் நம்பும்படி ஒரு செயல் நடக்கும். ஆனால் எதற்கும் தொடர்பில்லாமல் இன்னொரு செயலை சத்தமில்லாமல் செய்து விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்தியாவில் இனி எதிர்காலத்தில் அரசியல் மக்களின் ஆசைப்படி நடக்காது. மக்கள் ஓட்டுப்போடுவார்கள். அது உரியவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்றெல்லாம் கேள்விகள் கேட்க முடியாது. இந்திய மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அரசியல் அதிகாரமிக்க அமைப்புகளின் டிசைன் மாற்றப்பட்டு விட்டது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில் கட்டுப்படுத்தபடும். மீறுபவர்கள் பதவியில் இருக்க முடியாது. ஆகவே இந்தியா அமெரிக்கா போல மாற்றப்பட்டு விட்டது என்பதை அறிக. அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் என்று நம்புகிறார்கள் அல்லவா அதே போல இந்தியாவில் மோடி பிரதமர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்புவதில் நமக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. ஆகவே நம்பி விடுவோம்.

நல்லது. இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஏழு ஆண்டுகளில் நடக்கும் ஆட்சியின் பலனை மக்கள் அனுபவிப்பார்கள். ஊழல் பேர்வழிகள் மொத்தமாக துடைத்து வீசப்படுவார்கள். மாநிலம் சார்ந்த சிறு கட்சிகள் அழிக்கப்படும். அல்லது ஓரங்கட்டப்பட்டு முகவரி இன்றி ஆக்கப்படுவார்கள். துரோகிகளின் கணக்கு நேராக்கப்படும். நல்லவைகளை எதிர்பாருங்கள். மக்கள் நலன் சார்ந்த, மதம் சார்ந்த நிகழ்வுகள் இனி மலரும் எந்த தடையுமின்றி. இன்னொரு மதம், மற்றொரு மதத்தை விழுங்க முடியாது. இந்தியா இந்து ராஜ்ஜியம் என்பதை எவரும் மறந்து விடாத சூழல் உருவாகும்.

மக்கள் மகிழ்வுடன் இருந்தால் அதுவே போதுமானது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்து, பசி இல்லாத இந்தியன் என்றொரு நிகழ்வு நடந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆனால் தமிழகத்தில் எதிர்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடியவரை இந்த அதிபுத்திசாலிகளால் ஒன்றும் செய்ய முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்கால தமிழகம் இந்தியாவின் மணி மகுடத்தில் சுடராய் திகழும். அதிமுக, திமுக இல்லாத அற்புதமான ஆட்சி நடக்கும் என நம்புங்கள். நம்பிக்கையே வாழ்க்கை. நல்லவற்றை நினைத்துப் பார்ப்பதில் என்ன சங்கடம் வரும்? நல்லது நடக்கும்.

சரி போகட்டும் விடுங்கள். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

இனி வரும் காலங்கள் ஒவ்வொருக்கும் வீடு குறைந்த விலையில் கிடைக்கும் சூழல் உருவாகும். ரியல் எஸ்டேட் தொழில் நன்கு வளர்ச்சி பெறும் பெருத்த லாபம் இன்றி. அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் உத்தரவாதத்தை ஜி.எஸ்.டி கவுன்சில் கூடிய போது உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வரி விகிதங்கள் 01/04/2019லிருந்து அமுலுக்கு வரும் என அறிவித்திருக்கின்றார்கள்.

அது சரி, மலிவு விலை வீடு என்றால் என்ன? என்று கேட்கத் தோன்றுகிறது.

மாநகராட்சி நகரங்களில் 968 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும், பெரும் நகரங்களில் 645 சதுரடி விஸ்தீரணம் கொண்ட வீடுகளும் அல்லது 45 லட்சம் மதிப்பு கொண்ட வீடுகள் மலிவு விலை வீடுகள் என்று கருதப்படும். இந்த வீடுகளுக்கு முன்பு 8% சதவீதம் வரி இருந்தது. இனி அது 1% சதவீதமாக இருக்கும்.

இதர வீடுகளுக்கு 12% சதவீத வரியிலிருந்து குறைந்து 8% சதவீதமாக இருக்கும் என கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நண்பர்களே, இனி உங்களின் கனவாகிய வீடு நனவாக சாத்தியங்கள் அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பயன்படுத்த முயற்சியுங்கள்.

மலிவு விலையில் இரண்டு படுக்கை அறை கொண்ட இயற்கை சார்ந்த, காற்றாடி இல்லாத, ஏசி இல்லாத, பகலில் விளக்குப் போடாத வீடுகளை கட்டிக் கொடுக்கலாம் என திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கான வடிவமைப்பு மற்றும் இதர பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன்.

குளிர் பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் மூனார், ஆலப்புழா ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் எனது அடுத்த புராஜெக்ட். மிகக் குறைந்த விலை, வலிமையான இயற்கை வீடுகள் என அதன் அமைப்புகள் இருக்கும்படி இருக்கும். உதாரணமாக ஊட்டியில் 25 லட்சத்தில் ஓய்வு இல்லம். அந்த வீட்டின் மூலம் மாதம் வருமானம் வரக்கூடியவாறு இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். இந்தச் சொத்துக்களின் லீகல் அனைத்தும் முன்பே சரி பார்க்கப்பட்டுதான் உங்களிடம் வரும். 

விரும்புவர்கள் தங்களின் தேவையை எனது இமெயிலில் தெரிவித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் இடத்தை பார்க்கும்படியும், வீடு வாங்கினால் அந்த வீட்டினைப் பார்க்கும்படி வசதிகளும் செய்து தரப்படும்.

மிகக் குறைந்த சரியான முதலீடு. எதிர்காலத்தில் நல்ல வருமானம், அமைதியான வாழ்க்கை என்பது அனைவரின் ஆவல். அந்த ஆவலை அடியேன் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் அருள் வழங்கட்டும்.

வாழ்க வளமுடன்....!

Monday, May 20, 2019

கொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்

மூன்றாண்டுகளுக்கு முன்பு கணபதியிலிருந்து விநாயகபுரம் பெருமாள் கோவிலைக் கடக்கும் போது சிலீர் காற்று உடலைத் தழுவும். மாலையில் மின் விசிறி தேவையில்லை. விடிகாலையில் குளிரில் நடுக்கம் எடுக்கும். காலை ஏழு மணி போலத்தான் வெயில் வரும் போது, கொஞ்சம் சூடு கிடைக்கும். ஒரு மழை பெய்தால் வீடே சில்லிட்டுப் போகும். வாசலிலும், வாசல் வேப்பமரத்திலும் மயில்களும், குருவிகளும் தவமிருந்து கொண்டிருக்கும். போரில் தண்ணீர் வழிந்து வெளியேறும். இப்படியான கோவை விளாங்குறிச்சி இப்போது இரவிலும்,பகலிலும் தகிக்கிறது. சூட்டில் உடல் வியர்த்து பிசுபிசுக்கிறது.

முன்பெல்லாம் வெயில் இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது உடல் சூடு அடைகிறது. காற்று வீசினாலும், அனல் போல கொதிக்கிறது. ஏன் இவ்வாறு ஆனது?

மனிதனின் பேராசை. தான் வாழும் மண்ணை பாழ்படுத்தி, கொடுமை செய்யும் அக்கப்போர்.

வீட்டிலிருந்து 1000 அடியில் ஒன்றரை ஏக்கரில் கீரை போட்டிருந்தார் ஒரு அம்மா. அரைக்கீரை, பாலக்கீரை இரண்டும் எப்போதும் கிடைக்கும். கோடையானாலும், மழையானாலும் கணபதியிலிருந்து விளாங்குறிச்சி செல்வோரும், சேரன் மா நகர் செல்வோரும் வண்டியை நிறுத்தி கீரை வாங்கிக் செல்வர். எனக்கும் தினமும் கீரை கிடைத்துக் கொண்டிருந்தது. பாலக்கீரையும், அரைக்கீரையும் அற்புதமான சுவையில் இருக்கும். பாலக்கீரைக்கு மருந்து அடித்துக் கொண்டிருப்பார். அதைப் பார்க்கையில் கொஞ்சம் பதறினாலும் வேறு வழி இன்று அடிக்கடி உணவில் பாலக் கீரைக் கடைசலும், அரைக்கீரை பொறியலும் இடம் பெறும்.

இந்தக் கீரைச் சமையலில் கவனிக்க வேண்டிய ஒரு சில அம்சங்கள் உண்டு. பெண்களின் கைப்பக்குவம் என்று ஒரு கதையை அவிழ்த்து விடுவார்கள். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாறுவதோ தெரியவில்லை. கைப்பகுவமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை. கொஞ்சம் கவனமும், சமையலில் சேர்க்கப்படும் பொருட்களின் தன்மையும் பழகப் பழக அவர்களுக்குப் புரிந்து விடும். எதை சிறிய அளவில் சேர்க்க வேண்டும், எதை அதிகரிக்க வேண்டுமென்ற அறிவு வந்து விடும். அதான் பரிசோதனை எலியாக ஆண்கள் கிடைத்து விடுகின்றார்களே? சோதனை செய்து பார்த்து, பார்த்து தெரிந்து கொள்வார்கள். உடனே கைப்பக்குவம் என்று கதையளந்து விடுவார்கள். பெண்களுடனே பொய்களும் அவர்களின் அழகு போல வந்து விடும். 

எனக்குப் பிடித்தது தண்டுக் கீரை, சிறு கீரை. இதில் எல்லாவற்றிலும் ராணி முருங்கைக்கீரை.  அம்மா, வீட்டின் பின்புறம் இருக்கும் மரத்திலிருந்து ஆய்ந்து, உருவி, சுத்தப்படுத்தி அதனுடன் கொஞ்சம் பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து தாளிதம் போட்டு, சீரகத்துடன் கொஞ்சம் பூண்டை இடித்து அரைத்து சேர்த்து வைத்து தரும் முருங்கையிலை ரசம் இருந்தால் நான்காள் சாப்பாடு சாப்பிடுவேன். கீரையின் வாசமும், சீரகத்துடன் சேர்ந்து பருப்பின் ருசியும் எந்த ஹோட்டலிலும் கிடைக்காத சுவையில் அள்ளும். மூன்று வேளையும் கீரை ரசம் இருந்தாலும் தொட்டுக்கொள்ள துணைவி இன்றி ஜரூராக உள்ளே செல்லும்.

கோவை முருங்கைக்கீரை நாற்றமெடுக்கிறது. முருங்கைக் கீரை வாங்கும் போது இலைகள் விரைத்துக் கொண்டு இருந்தால் தூக்கி குப்பையில் போட்டு விடவும். கையால் கீரைக்குள் அலையும் போது பஞ்சு போல இருக்க வேண்டும். வாசம் வர வேண்டும். அது தான் நல்ல முருங்கைக் கீரை. இயற்கையில் கிடைக்கும் ஆர்கானிக் கீரை இது மட்டுமே. இதர கீரைகள் அனைத்தும் உரம் போடப்பட்டு வளர்க்கப்பட்டவை.

முருங்கைக்கீரை பொறியல் என்று ஒன்று உண்டு. சுடுசாதத்தில் பொறியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் ஆஹா. இந்தப் பொறியலில் பொருமா என்றொரு மசாலாவை சேர்க்க வேண்டும். அதைச் சேர்த்து செய்த பொறியலின் சுவைக்கு சைனாவை பாகிஸ்தானுக்கு எழுதிக் கொடுக்கலாம். இல்லையெனில் நயன் தாராவை மீண்டும் சிம்புவுக்கு ஜோடி சேர்த்துப் படம் எடுத்து பன்னாடையாகலாம். அந்த ருசிக்கு அப்படி ஒரு மகத்துவம்.

எனக்கும், மகள் நிவேதிதாவுக்கு கீரை கடைசல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இந்த தண்டுக்கீரை மட்டும் அடிக்கடி கிடைப்பதில்லை. தண்டுக்கீரையை சுத்தம் செய்து, தண்ணீரில் நன்கு அலசி விட்டு, சட்டியில் போட்டு அதனுடன் ஐந்தாறு சின்ன வெங்காயத்தை நறுக்கிம்  நான்கைந்து பூண்டு பற்களை தட்டி, அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை கீறிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சமாய் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன், மத்தில் நன்கு கடைந்து கொள்ள வேண்டும். கடைசியாக கொஞ்சம் சீரகத்தை நசுக்கி ஒரு கடைசல் விட்டு, உப்புச் சேர்த்தால் போதும். மிக்சியில் கூழாக்கி, மாவாக்கி, வடகமாக்கி, பருப்புச் சேர்த்து குழம்பாக்கி உண்பதில், கீரையின் உண்மைச் சுவை காணாமல் போய் விடும். இப்படி ஒரு தடவைச் சாப்பிட்டுப் பாருங்கள். கீரையின் சுவை நாக்கின் அடியில் பதுங்கும். 

சமீபத்தில் இந்திய பிரபலமான ஒரு ஆன்மீகப் பெரியவர் ஒருவரை, நிலம் தொடர்பான ஆலோசனைக்காக, அவரின் அழைப்பின் பேரில் சந்திக்கச் சென்றிருந்தேன். அங்கு கிடைக்கும் காய்கறிகளும், கீரைகளும் வார்த்தைகளில் விவரிக்க கூடிய தன்மையானவை அல்ல. இயற்கையின் கொடைகள் அவை. அதனை விவசாயம் செய்பவர்கள் கூட பூச்சி மருந்தோ, உரமோ கூட போடுவதில்லை. அப்படியான ஒரு அற்புதமான பூமி அது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் அந்தப் பகுதியினர். ஆனால் நாம் கோவையில் சாப்பிடும் உணவுகளை ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம். அத்தனையும் விஷம்.

கீரைப் புராணம் இத்துடன் முடிந்தது.

ஒன்றரை ஏக்கரில் அந்தப் பெண்மணி விவசாயம் செய்து வந்தது. பச்சைப் பசேல் என இருக்கும் அந்தப் பகுதி. வீட்டின் பின்புறம் மாட்டுக்குத் தீவனப்பயிரும், சோளமும் விதைத்திருப்பார்கள். அவைகள் இரண்டு வருடமாக காணாமல் போயின. குளிர்ச்சியும் போய் விட்டது. வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள், வாசலில் பெரும் வேப்பமரம் இருந்து வீடு ஓவன் போல கொதிக்கிறது. உடலுக்குச் சூடு பெரும் கேட்டினைத் தருகிறது. சூடு தாளாமல் அடிக்கடி ஏசி அறைக்குள் செல்ல வேண்டி இருக்கிறது. ஏசி சூரியனை விடச் சூடு கொண்டது. உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பிக்கிறது.

அடிக்கடி சளித் தொல்லை. மாதம் தோறும் மருத்துவமனை செல்ல வேண்டி வருகிறது. ஆரோக்கியமில்லா வாழ்வு, அயர்ச்சியை உருவாக்குகிறது. யாரோ ஒரு புண்ணியவான் அந்த விவசாய நிலத்தில் ஷெட் போட்டு பிசினஸ் செய்கிறான். விவசாயத்தை அழித்து பிசினஸ். தோட்டக்காரரும் என்ன செய்வார்? காசு தானே இங்கு எல்லாம். பணமில்லா வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஒன்றரை ஏக்கர் கீரைத் தோட்டம் வழங்கிக் கொண்டிருந்த ஆரோக்கியத்தை ஒரு பிசினஸ் செய்பவர் அழித்தார். அவர் மட்டும் வாழ பிறரைக் கொல்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக.

இதைத்தான் அற்புதமான, நாகரீகமான வாழ்க்கை என்கிறார்கள் நவ நாகரீகமானவர்கள்.

மழையும், காற்றும் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை சென்னை அனுபவிக்கிறது. ஆள்பவர்களும், அவர்களுக்கு கூட நிற்கும் அரசு அலுவலர்களும் அயோக்கியவான்களாக இருந்தால் அவர்களிடம் சத்தியாகிரஹம் பேசுவதில் பயனில்லை என்பதை எப்போது இந்த மக்கள் உணர்கின்றார்களோ அப்போது தான் விடியல் வரும்.


Saturday, May 4, 2019

எது சிறந்த வாழ்க்கை?

அன்பு நண்பர்களே,

வணக்கம். நீண்ட நாட்களாகி விட்டன எனது வாழ்வியல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு. காலச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் மனதுக்கு இனிமையானதாக இருந்திருப்பின், என்னுள்ளத்தில் பொங்கி வரும் உணர்வுகளை எழுதுவேன். பணிச் சூழலும், வாழ்க்கைச் சூழலும் இல்லாத ஒன்றைத் தேடி ஓடச் செய்கின்றன. 

ஓஷோவின் புத்தகத்திலே படித்தேன் இப்படி.

ஏதோ ஓர் நாட்டிலே ஒரு புத்தர் கோவில் இருக்கிறதாம். கோவில் என்றால் உள்ளே சிலை இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அந்தக் கோவிலில் புத்தர் சிலை இல்லை. கோவிலுக்குச் செல்வோர் ’எங்கே புத்தர்? எங்கே புத்தர்?’ என்று கேட்பார்களாம்.

அங்கிருக்கும் புத்த பிட்சுகள் என்ன சொல்லி இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்களேன். விடையைக் கீழே தருகிறேன். யோசித்துக் கொண்டே தொடருங்கள்.

எனக்கு அரசியலில் அனேக நண்பர்கள் உண்டு. நீதித்துறையிலும் அதிக நண்பர்கள் உண்டு. அரசியலில் இருக்கும் ஒரு நண்பரின் ஆக்கபூர்வமான சிந்தனைகள் என்னை சிலிர்க்க வைக்கும். பரம்பரைப் பணக்காரர் அவர். பணத்துக்கு பஞ்சம் இல்லை. அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். சமீபத்தில் அவரின் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன்.

அவரின் இப்போதைய தலைவரை நல்லவர், எளிமையானவர் என்றெல்லாம் விளித்திருந்தார். சிரிப்பு தான் வந்தது.

அந்த நண்பருக்கு சில கேள்விகள் கேட்க மனது ஆலாய்ப் பறக்கிறது.

இந்தியாவின் ஆன்மா அதன் அரசியலமைப்புச் சட்டம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் இருப்பிடம் சட்டசபைகள். ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்தவர்களுக்கு பதவியும், முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்களின் பதவிகளையும் பிடுங்கிக் கொண்டு, சட்டத்தை தன் காலடியில் போட்டு மிதித்துக் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நோக்கி அரக்கச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களில் ஒருவரைத்தான் நீங்கள் அவ்வாறு சொன்னீர்கள். உங்கள் கையில் கட்டி இருக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ணக்கயிறுகளை எந்த நம்பிக்கையில் கட்டி இருக்கின்றீர்களோ அந்த நம்பிக்கையை உங்களுக்கு கொடுத்தவர் எவரோ அவர் இப்படியானவர்களுக்கு என்ன பரிசு தருவார்? என அறிவீர்களா? பதிலை நீங்களே உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள்.

நீங்களும், நானும், ஏன் உங்களால் வல்லவர், நல்லவர், எளிமையானவர் என்று விளித்திருப்பவரும் கால ஓட்டத்தின் முன்பு காணாமல் போவோமே, ஆனால் இந்தியாவை ஆளும் அரசியலமைப்புச் சட்டம் என்றும் இருந்து கொண்டே இருக்குமே, அதைக் கேலிக்குறியதாக்கி மகிழும் சிறு குழுவும் நாளைக்குள் என்ன எந்த நொடியில் வேண்டுமானாலும் காணாமல் போவார்களே, அவர்களையா நீங்கள் உயர்த்துகின்றீர்கள்? ஆனால் நீங்கள் அப்படியானவர் இல்லையே? ஏன் இந்த மாற்றம்? ஏனோ??? ஏனோ???? உங்களின் அறம் என்னவாயிற்று? வாடகைக்கோ அல்லது வட்டிக்கோ விட்டிருக்கின்றீரா?

இந்தியாவை ஆன்மீக நாடு என்று சொன்னால் அந்த ஆன்மீகம் சொல்லித் தந்த, கவுரவர்களின் கயமைத்தனத்தின் முடிவினை மறந்தீரா? இராவணன் தூக்கிச் சென்று சிறை வைத்த சீதாவைப் போல, எம் இந்தியத் தாயை தமிழகத்தில் ஆளும் ஆட்கள், ஆளுக்கு ஆள் கற்பழித்துக் கொண்டிருக்கின்றார்களே அவர்களுக்கு ராவணனின் கதி நடக்காது என்றா நினைத்தீர்கள்? சுத்தமாக துடைத்து எடுக்கப்படுவார்கள். அந்தக் கூட்டத்தில் நீங்கள் இருக்க வேண்டாமென்பது என் ஆவல்.

கடவுள் என்னைப் பொறுத்தவரை முரண்பாடுகளின் மொத்த உருவமானவர். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் அவர் இன்பமாகவும் இருக்கிறார், துன்பமாகவும் இருக்கிறார். அவர் இருளாகவும் இருக்கிறார், வெளிச்சமாகவும் இருக்கிறார். அவர் உங்கள் கயிறுக்குள் தன்னைக் கட்டிக் கிடக்கவில்லை. அவரின் முரண்பாட்டின் விளையாட்டுப் பொம்மைகள் தான் நீங்களும், நானும், உங்களின் அந்த எளியவரும்.  ( நன்றி ஓஷோ)

உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொருவரின் இறுதியையும், மழையையும் எங்கே எப்படி என நடத்துபவன் அவனே. ஃபானிபுயலால் தமிழகம் நீரால் நிறையும் என்று கனவு கண்டாரே உங்களின் அந்த எளியவர். புயலின் தாக்கத்தால் இன்னும் அனேக கோடிகளை டெண்டரில் அள்ளலாம் என்று கனவு கண்டார்களே உங்களின் எளியவர்கள். ஒரு நிமிடத்தில் அது சென்ற பாதையைப் பார்த்தீரா? முடிந்தால் உங்களின் அவரை அதை மாற்றச் சொல்லித்தான் பாருங்களேன். சடுதியில் மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்களை வீட்டுக்கு விரட்டுபவரை மாற்றி அமைக்கச் சொல்லிப் பாருங்களேன். ரத்தத்தின் சூடும், பதவியின் நாற்காலியும் இருக்கும் வரை ஆடுவார்கள். ஆட விட்டு மொத்தமாக பிடுங்கி விடுவார் உங்களின் கையில் கட்டி இருக்கும் கயிற்றுக்கு நம்பிக்கை கொடுப்பவர்.

ஆகவே உங்களுக்குள் உறைந்து கிடக்கும் அந்த அறத்தினை கொஞ்சம் வெளியில் உலாவ விடுங்கள். கானல் நீரான நமது வாழ்க்கையில் கொஞ்சமேனும் உண்மையாக இருந்து விட்டுப் போகலாமே? 

உங்களை நான் நிரம்பவும் மதிக்கிறேன். அதற்காகத்தான் இந்தப் பத்திகள். நீங்கள் என்னை மதிக்கின்றீர்களா இல்லையா? என்னை பொருட்டாக கருதுகின்றீர்களா? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. நான் சொல்வதைச் சொல்லத்தான் செய்வேன். கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்.

நண்பர்களே, எங்கெங்கோ சென்று விட்டேன். மன்னித்தருள்க. உங்களின் பொன்னான நேரத்தின் ஒரு சில நொடிகளைத் தின்று விட்டன எனது இந்த முழுமையற்ற வார்த்தைகள். மன்னிக்கவும். இனி நம் விஷயத்துக்கு வருவோம்.

ஒரு யூடிப் சானலில் பார்த்தேன். யாரோ ஒரு பையன் சாலையோரத்தில், செருப்புத் தைக்கும் ஒருவரையும், நெருப்பில் வெந்து ஆறிய முகத்தோடு அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவியையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தான்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே...!




மிகப் பொறுமையாக இந்த வீடியோவை பாருங்கள். மனது நெகிழும். இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்களின் வாழ்க்கையை முன் பதிவுகளை கழட்டி ஓரமாக வைத்து விட்டு, நமது வாழ்க்கையையும், இந்த எளிய கணவன், மனைவியின் வாழ்க்கையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எது உண்மையான தாம்பத்தியம என்பது புரிய வரும்.

நீண்ட நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து கோவைக்கு பிள்ளைப் பேற்றுக்கு வந்த மனைவியை தன் பிள்ளையுடன், மீண்டும் அழைத்துச் செல்ல விரும்பிய கணவனின் ஆசையை மறுத்த மாமியாரால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதான் பணக்காரத் தாம்பத்தியம். இவர்களின் வாழ்க்கையில் அன்பு எங்கே இருக்கிறது?

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியின் காதலனுடன் பிரேக் அப்பாம். விகடன் செய்தி. காதலன் சொந்த சம்பாத்தியம் செய்யவில்லையாம், பெற்றோரின் உதவியால் தான் வாழ்கின்றானாம், அது ஸ்ருதிக்குப் பிடிக்கவில்லையாம். காதல் பிரேக் அப். உலகம் கொண்டாடுகிறது. விகடன் செய்தி வெளியிட்டு மகிழ்கிறது. அவர்கள் ஏன் பிரேக் அப் செய்தார்கள் என ஸ்ருதியின் நண்பர்கள் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்? இது என்ன மாதிரியான காதல்? (என் படத்தை வெளியிட மறுத்தால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கண்ணீர் விட்டவரை தலைவன் என ஓட்டுப் போடுகின்றார்கள் தமிழகத்தில். இதை விட வெட்கக்கேடான செயலும் இவ்வுலகில் உண்டா? யோசிக்கும் திறனற்றாப் போனார்கள் தமிழர்கள்?)

காதல் என்பது என்ன என்பதற்கான டெஃபனிஷன்கள் என்னிடம் பல உண்டு. இதுதான் காதல் என்று சொல்ல முடியாது. ’ஏக் துஜே கேலியே’ காதல் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். தேவதாஸ் காதலெல்லாம் படத்தோடு சரி. அதுதான் உண்மை என நம்பிக் கொண்டு சென்றால் வாழ்க்கை நக்கிக் கொண்டு போய் விடும்.

பிறந்தாய், வளர்ந்தாய், உருவானாய், பிறக்க வைத்தாய், வளர வைத்தாய், சென்று சேர்வாய் - இயற்கை மனிதனுக்கு விதித்தது இதுதான். இதற்கிடையில் நடப்பவை எல்லாம் வெற்று நாடகம். காட்சி கலைந்ததும் காணாமல் போய் விடுவோம். உங்களையும், என்னையும் சுற்றி இருப்பது எதுவும் இல்லாத ஒன்றிலிருந்து பிறப்பெடுத்தவை. எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடும். அது உங்களின் அருமை பிள்ளையானாலும் சரி, அழகான மனைவியானாலும் சரி, கடவுளுக்கு நிகர் தந்தை, தாயானாலும் சரி.

சரி முன் பத்தியில் கோவிலில் புத்தர் சிலை ஏன் இல்லை என்பதற்கான பதில் கீழே.

”இந்த தூய்மையான, வெறுமையான மெளனமான இடமே புத்தர்”

இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை இனிதாய் கழியும்.

உங்களுக்கும், எனக்கும் எக்ஸ்பைரி தேதி குறித்தாகி விட்டது நண்பர்களே.....!

இதை என்றைக்கும் மறந்தும் மறந்து விடாதீர்கள்.

ஒரு பொண்ணு நெனச்சா திரைப்படப்பாடலும், அதன் வரிகளும் உங்களுக்காக.

" உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உனை இங்கு காணாததால் உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசாததால் இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் உதயமே உயிரே நிலவே அழைத்தும் வாராததேன் இதயமே இதயமே உருகுதே உருகுதே நிழலினில் தொடரும் தொடரும் எனது ஜீவனே உறவுகள் வளரும் வளரும் எனது தேவனே விழி சிந்தும் ராகம் ஒன்று உனை நாடுதே எதிர்காலம் நீயே என்று தினம் கூடுதே கண்மணியே கண்மணியே மனம் இங்கு மயங்கிடுதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் சாலையில் சோலையில் காலையில் மாலையில் நிதம் ஒரு புதுமை பழகும் எனது ராஜனே இனியதும் இளமை குலவும் எனது தேவியே வசந்தத்தின் தேசம் எங்கும் வலம் போகலாம் வருகின்ற காலம் தோறும் சுகம் காணலாம் இரவுகள் மலருதே அமுதங்கள் பருகிடவே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உனை இங்கு காணும் வரை உலகங்கள் பொய்யானதே மலர் வந்து பேசும் வரை இளந்தென்றல் தீயானதே உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன் உதயமே உயிரே நிலவே கவிதை நான் பாடுவேன்"



விரைவில் சந்திப்போம் நரலீலையில்....!

- 04/05/2019

Wednesday, May 1, 2019

நிலம் (52) - பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையம் செல்லுமா?

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலாளிதான். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். தொழிலாளி இன்றி பெரும்பான்மை உலகியல் இயக்கம் நடக்காது. அந்த வகையில் மாந்தர் வாழ்வியல் சக்கரங்களை தொழிலாளிகள் சுழல வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

சமீபகாலமாக சுப்ரீம் கோர்ட் பவர் ஆஃப் அட்டர்னி மூலமாக கிரையமோ அல்லது வேறு ஏதாவது ஆவணமோ எழுதப்பட்டு அதன் மூலம் சொத்துக்களின் உரிமை மாற்றம் செய்வது செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்ததாக ஒரு செய்தி வாட்ஸ்சப் மூலம் பலருக்கும் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த தீர்ப்பு ஒரு வழக்கிற்காக வழங்கப்பட்டது. அந்த வழக்கில் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை செய்யப்பட்டது செல்லாது என்பது தீர்ப்பு என நினைக்கிறேன். அந்த தீர்ப்பினைத் தேடினேன் கிடைக்கவில்லை. கிடைத்தால் ஏதாவது ஒரு பதிவில் இணைத்து விடுகிறேன். ஆனால் முழுமையான விசயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவு எழுதி இருக்கிறேன்.


(இதுதான் எனக்கும் வாட்சப்பில் வந்த செய்தி)

இது பற்றிய உண்மைதான் என்ன? என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். 

சொத்துரிமை மாற்றம் மற்றும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னி சட்டம் 1882ன் படி பகுதி 5 மற்றும் 54ல், ஜிபிஏ (GPA) மூலம் ஒரு அசையாச் சொத்தின் உரிமையை வேறொருவருக்கு அட்டர்னி மாற்றலாம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. ஆகையால் அந்த வகையான உரிமை மாற்றம் செல்லும் ஒன்றுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.

இதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் தேவையில்லை. ஆனால் இந்தப் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கிரையமோ அல்லது லீசோ கொடுக்கப்படும் போது பெரும்பாலானவர்கள் கவனிக்க தவறும் ஒரு சில அம்சங்கள் உள்ளன. அவைகளை எவரும் கவனத்தில் கொள்வதில்லை. அதைக் கவனிக்காது விட்டால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் உரிமை மாற்றம் ஏற்பட்டிருப்பது செல்லாது போய் விடும் ஆபத்து உள்ளது. அது என்ன அம்சம் என்பதை எழுத இயலாது. உருவாக்கப்படும் ஆவணங்களைப் பொறுத்து வேறுபடும் என்பதால் பொதுவாக குறிப்பிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் அரசாங்கத்துக்கு புதிய சட்டம் இயற்றுங்கள் எனவும், பவர் ஆஃப் அட்டர்னி பற்றிய தெளிவான சட்டம் அவசியம் என்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்டது. ஒரு சில இணைய தளங்கள் தலைப்பினை தவறாக குறிப்பிட்டு விட்டன. அதனால் பலரும் கிலி பிடித்தலைந்தார்கள் என்பது உண்மை. ஆகவே அது பற்றிய கவலைகளை விட்டு விடவும். ஆனால் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது வெகு கவனமாக இருத்தல் அவசியம். அதற்கு தகுந்த அட்வைஸ்சர்களை அணுக வேண்டியது அவரவர் கடமை.

சுப்ரீம் கோர்ட் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் பால் மட்டுமே தீர்ப்பு வழங்கும் அமைப்பு. அதற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. ஒரு சில விஷயங்களுக்கு அது சட்டத்துக்கு உட்பட்டு சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம். சட்டம் என்பது பல வித உள் விஷயங்கள் உடையவை. வெகு நுணுக்கமானவை. இது பற்றிய ஒரு பதிவினை முன்பே எழுதி இருக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் விடுபட்டது வெகு நுணுக்கமான விஷயம் ஆகும். இதை எழுதி இருக்கிறேன். தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லாம் வல்ல கில்லாடிகளுக்கு சட்டத்தினை உடைக்கும் வழி முறைகள் தெரியும். உங்களுக்குப் புரிய வேண்டுமெனில் கீழே விகடனில் வந்துள்ள ஒரு செய்தியை அளிக்கிறேன். சட்டத்தின் ஓட்டைகள் மூலம் எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதைத்தான் சட்டத்தின் ஓட்டைகள் என்கிறார்கள். ஓட்டை என்றால் ஏதோ பானை, ஓட்டை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நெடுஞ்சாலைத் துறையில் அடேங்கப்பா ஊழல்! - எடப்பாடி பழனிசாமி மீது ‘பகீர்’ புகார் - ஜூனியர் விகடன் - 01.05.2019ல் ( நன்றி ஜூனியர் விகடன்) 

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, ‘யாரை முதல்வராக்குவது’ என்று கூவத்தூரில் கூடி விவாதித்தபோது, எல்லா அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் ‘சமாளிக்கும்’ அளவுக்கு சமத்தர் என்றுதான் எடப்பாடியைத் தேர்வு செய்தது சசிகலா அண்ட் கோ. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான எடப்பாடி அந்தளவுக்கு செல்வத்தையும், செல்வாக்கையும் வைத்திருந்ததுதான் காரணம்!

முன்பு எல்லாம் அரசு ஒப்பந்தப் பணிகள் என்றால், 10 சதவிகிதம், 15 சதவிகிதம் என்று அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் வெட்ட வேண்டியிருக்கும். அ.தி.மு.க ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இந்த கமிஷன் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. உடனே, பணிகள் நியாயமாக நடக்கின்றன என்று ஆச்சர்யப்பட வேண்டாம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு பெரும்பாலும் பணிகள் தரப்படுவதே இல்லை. பெரும்பாலும் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்களே ஒப்பந்தங்களை ‘பறிமுதல்’ செய்துவிடுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டும் இதுதான்.

ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்த வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் அசராமல் இப்போது, 652 கோடி ரூபாய் மதிப்புகொண்ட ஒரு சாலை ஒப்பந்தத்தில் பிரமாண்டமான ஊழல் அரங்கேறியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘பழனி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்டச் சாலைகளை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கமான மதுரை நிறுவனம் ஒன்றுக்கு, விதிமுறைகளை வளைத்துக் கொடுத்துள்ளனர். இதில் முதல்வரின் அரசியல் உதவியாளரான மணியானவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது’ என்பதே அந்த குற்றச்சாட்டு.

பெயர் குறிப்பிட விரும்பாத சாலை ஒப்பந்ததாரர்கள் சிலர், “சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்த அழைப்பு மார்ச் 5-ம் தேதி விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விவரங்களை ஆன்லைனில் மார்ச் 22-ம் தேதிதான் பதிவேற்றம் செய்துள்ளனர். முன்அனுபவம் குறித்த தகவல்கள் ஏப்ரல் 1-ம் தேதிதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க மே 2-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயித்துள்ளனர். முன் அனுபவம் உட்பட முழுமையான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு 45 நாள்கள் அவகாசத்துக்கு பின்னரே ஒப்பந்தத்தை திறக்க வேண்டும். ஆனால், இவ்விவகாரத்தில் ஏப்ரல் 1ம் தேதி கணக்குப்படி முதல் 30 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதைக் கணக்கிட்டு முன்கூட்டியே ஒப்பந்த அழைப்பை விடுத்தவர்கள், நடத்தை விதிமுறைகள் முழுமையாக விலக்கப்படுவதற்கு முன்னதாகவே, இறுதி நாள் கெடுவையும் குறித்துள்ளனர். ஏன் இந்த அவசரம்? பெரும்பாலான சாலை ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் தேர்தல் முனைப்பில் இருக்கும் போது, சந்தடியில்லாமல் வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் ஆர்.ஆர். தவிர்த்து மற்ற இரண்டும் டம்மி நிறுவனங்கள். விதிமுறைகளைத் தளர்த்தி, முதல்வருக்கு நெருக்கமான மதுரை ஆர்.ஆர். இன்ஃப்ரா கன்ஸ்டிரக்‌ஷன் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.” என்றவர்களிடம், “எல்லா ஒப்பந்தங்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்படுவதாகவும், இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பே இல்லை எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

“கிடையாது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட 3,000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களில், வெறும் 30 கோடிக்குதான் ஆன்லைன் மூலமாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதி எல்லாம், டெண்டர் பெட்டியில்தான் போடப்பட்டன. சம்பந்தப்பட்ட பழனி கோட்ட ஒப்பந்தம்கூட ஆன்லைனில் கோரப்படவில்லை. டெண்டர் பெட்டியில் போட நாங்கள் செல்லும்போது, குண்டர்களாலும் அதிகாரிகளாலும் தடுக்கப்படுகிறோம். (இது ஒரு ஓட்டை)

மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்த அழைப்புகளில், இயந்திரங்கள் உரிமைகளுக்கான சான்றாவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ஒரு சாலைப் பணியை மேற்கொள்ள இருபது ரோடு ரோலர்கள் இருப்பதாகக் கணக்கு காண்பித்தால் போதுமானது. ஆனால், தமிழக நெடுஞ்சாலைத் துறையின், சாலை ஒப்பந்தங்களில் இயந்திரங்கள் இயங்கு நிலையில் இருப்பதற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர்தான் தரவேண்டும். அவர் யாருக்கும் தரமாட்டார். அமைச்சர் கைகாட்டும் நிறுவனத்துக்கு மட்டுமே தரச்சான்றிதழ் அளிக்கப்படும். மற்ற நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் செல்லும் அவலம் எல்லாம் இங்கு அரங்கேறுகிறது. (இது இன்னொரு ஓட்டை)

ஒப்பந்தம் கோரும் நிறுவனத்தின் நிகர மதிப்பு, சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மொத்தத் தொகையில் 20 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆனால், பழனி கோட்ட சாலைகளைப் பராமரிக்க விடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த விதி தளர்த்தப்பட்டுள்ளது. 652 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, குறைந்தது 15 கோடியாவது கட்டியிருக்க வேண்டும். ஒப்பந்தம் எடுக்க விரும்பும் ஒரு நிறுவனம், ஒப்பந்தத்தில் கோரியுள்ள பணிகளைப் போன்று பல பணிகளை முன் அனுபவமாக முடித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்த வகையில் மட்டும் சராசரி ஆண்டு வரவு - செலவுக் கணக்கு, ஒப்பந்த தொகையில் 40 சதவிகிதத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இதன்படி பார்த்தால், பழனி கோட்ட ஒப்பந்தத்துக்கு 260.87 கோடி ரூபாய் வரவு - செலவுகொண்ட பணியை செய்துமுடித்த அனுபவத்தைக் கொண்ட நிறுவனம்தான் ஒப்பந்தம் எடுக்க முடியும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆண்டு வரவு செலவு 227.12 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்அனுபவ விதி 25 சதவிகிதமாக தளர்த்தப்பட்டு, 163.05 கோடிக்கு வரவு செலவு இருந்தாலே போதுமானது எனத் தகுதி குறைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.(இது சட்டமீறல், இதை கோர்ட் மூலம் நிரூபித்து டெண்டரையும் டெண்டர் கொடுத்தவரையும் டரியலுக்கு உட்படுத்தலாம்)

இதுபோன்ற பெரிய பணிகளைத் தவிர்த்து, சிறிய ஒப்பந்தங்களுக்கும் 17 சதவிகிதம் கமிஷன் தர வேண்டியிருப்பதாகவும் கூறும் ஒப்பந்ததாரர்கள், ‘‘எந்த ஒப்பந்தப்பணியை எடுத்தாலும், ஆட்சி மேலிடத்துக்கு மொத்த ஒப்பந்தத் தொகையில் 17 சதவிகிதம் கமிஷனாகக் கொடுக்கவேண்டும். அதிகாரிகளுக்கு ஏழு சதவிகிதம், உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸுக்கு இரண்டு சதவிகிதம், ஜி.எஸ்.டி ஐந்து சதவிகிதம் என 31 சதவிகிதத் தொகை இப்படியே போய்விடும். மீதமிருக்கும் 69 சதவிகிதத்தில்தான் பணி செய்யவேண்டும். அதிலும் லாபம் போக, 50 சதவிகிதத் தொகையில்தான் பணியே நடக்கிறது. இதில் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்? இந்த கமிஷனுக்காகவே 100 கோடி ரூபாய் பெறுமான வேலைக்கு, 200 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் விடப்படுகிறது. விதிமுறைகளுக்கேற்ப நிறுவனங்களைத் தேர்வு செய்யாமல் நிறுவனங்களுக்கேற்ப விதிமுறைகளைத் தளர்த்துவதுதான் இங்கு நடக்கிறது’’ என்றனர். (இந்த கமிஷன் பிரச்சினையை எளிதாக சரிசெய்யலாம். ஆனால் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அரசியல் செய்ய முடியாது. அரசும் இயங்காது. ஊழல் என்பது வலிக்காமல் செல்லமாக கிள்ளுவது போல இருக்க வேண்டும். ஆனால் இப்போது ஊழல் என்பது பெரும் பள்ளமாக தோண்டி பலருக்கும் தெரிய செய்யப்படுகிறது. ஊழல் இன்றி ஒரு அரசு இயங்க முடியுமா? என்றால் நான் அடித்துச் சொல்வேன் இயங்கவே இயங்க முடியாது. ஊழல் பற்றிய டெஃபனிஷன்கள் பல உண்டு. வாரிசுகளுக்கு பணி வழங்குவது கூட என்னைப் பொறுத்தவரை ஊழல்தான். யாரோ ஒருவரின் தகுதி அவ்விடத்தில் வாரிசு என்கிற முறையில் மறுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை)

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம், மதுரை பி.ஆர்.பி கிரானைட்ஸ் பழனிசாமியின் உறவுக்காரரான ராமு என்பவருக்கு சொந்தமானது. குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், “எல்லா டெண்டர்களும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒப்பந்தம் அளிக்கமுடியும். தரமில்லாத இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தகுதியுள்ளதா என்பதைக் கண்காணிக்கவுமே தரச்சான்றிதழ் கோரப்படுகிறது. யாருக்காகவும் விதியைத் தளர்த்தவில்லை. இதில் முறைகேடு நடக்கவாய்ப்பில்லை என நீதிமன்றமும் கூறியுள்ளது’’ என்றனர். (இது சட்டம், அதன் ஓட்டைகளை முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளேன்) சம்பந்தப்பட்ட ஆர்.ஆர்.இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவன தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.  

ஊழலுக்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் தமிழக நெடுஞ்சாலைத்துறையில், தரச்சான்றிதழ் கோருவது தொடர்பாக மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம், “செருப்புக்கேற்ப காலை வெட்டுகிற கதையாக, தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே, விதிகளைத் தளர்த்துகின்றனர். முன்பெல்லாம், சாலை புதுப்பிப்புப் பணி என்றாலும், புதிய சாலை போட வேண்டும் என்றாலும் அந்தந்த கோட்டப் பொறியாளர் மதிப்பீடு செய்து, மாநிலத் தலைமைக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டு அந்தக் கோட்டப் பொறியாளரின் கண்காணிப்பில் பணிகள் நடக்கும். பணிக்கான தொகையும் குறைவாக இருக்கும். இப்போது, 38 கோட்டங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையைத்தான் அரசு செய்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது” என்றார்.

ஊழல் நடக்கிறதென்பது ஊர் உலகத்துக்கே தெரிகிறது. யாரால், எப்போது, எப்படி முடிவுக்கு வரும் என்றுதான் தெரியவில்லை!

- ந.பொன்குமரகுருபரன்

குறிப்பு: சிவப்பு வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் இருப்பவை எனது குறிப்புகள்.