குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 24, 2018

2018 திருக்கார்த்திகை தீபவிழா காட்சிகள்

கோவையில் கார்மேகங்கள் கவிழ்ந்து சூரியனை மறைத்து நின்று குளுரூட்டியது. குளிர் நடுக்கத்துடன் ஆங்காங்கே மழை தூறல்களையும் தூவி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது வானம். காலை புலர்ந்து மயில்களும், குயில்களும், குருவிகளும், கிளிகளும் உற்சாகத்துடன் குரலால் கீதமிசைத்து வரக்கூடிய பொழுதினை வரவேற்றுக் கொண்டிருந்தன. 

கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த இந்த அற்புதமான நாளில் தமிழகமெங்கும் தமிழர்கள் இல்லங்களில் மாலை நேரத்தில் ஒளி விளக்குகளால் அலங்கரித்து, வீட்டுக்கும் உலகிற்கும் உயிராய் விளங்கும் ஒளியினை வணங்கி விழா எடுக்கும் இந்த நன்னாளில் தமிழகமே பொன்னை உருக்கி வார்த்தாற் போல ஒளிரக்கூடிய தினம் இது. சிறார்கள் பட்டாசுகளை பொறுத்தி தங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியினை நிறைத்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்த நாள். மழைமேகங்கள் கார்காலத்தைச் சொல்லி விட்டு பூமித் தாயைத் தழுவ வரும் நாள் என பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த நாளில் வழக்கம் போல நானும், மனையாளும் எமது குருவின் ஆசிரமம் நோக்கி பயணித்தோம். 

வழியெங்கும் அகல் விளக்குகள், வாழை மரங்கள், பூக்கள் விற்பனைக்காக கடைகள் மணம் வீசிக் கொண்டிருந்தன. மக்கள் பரபரப்பாய் பயணித்துக் கொண்டிருந்தனர். காலை பதினோறு மணிவாக்கில் ஆசிரமம் வந்து சேர்ந்தோம். மாவிலைத் தோரணங்களுடன் ஆசிரமம் மிளிர்ந்து கொண்டிருந்தது. மலையோரம் அமைதி தழுவ, சிற்றாரின் அருகில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் எம் குருவின் ஆசீர்வாதத்தில் அவ்விடம் முழுவதும் அமைதியில் திளைத்துக் கொண்டிருந்தது. குருவினைத் தரிசிக்கவும், மாலையில் ஏற்றப்படவிருக்கும் தீபத்தின் உள்ளொளியைக் கண்டு, குருவின் ஆசியினைப் பெற்றிடவும் எங்கிருந்தோவெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். குரு அமைதியாக அமந்திருக்கும் அற்புதமான அந்த மேடை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளியில் சுடர் வீசிக் கொண்டிருந்தது எம் குருவின் முகம் போல.

பக்தர்கள் குருவின் முன்பு வந்து வணங்கி, திரு நீறு பூசி, அவரைச் சுற்றி வந்து தங்களின் வேண்டுதல்களை குருவிற்குத் தெரிவித்து ஆசி பெற்றபடி சென்று கொண்டிருந்தனர். பலர் தியானம் செய்து கொண்டிருந்தனர். வெளியில் பக்தர்களுக்கு அமுது வழங்கிக் கொண்டிருந்தனர் சில பக்தர்கள். பக்தர்களுக்கு வழங்க பிரசாதப் பையில் பிரசாதங்களை இட்டுக் கொண்டிருந்தனர் பலர். மகளிர் பலர் அகல் விளக்குகளுக்கு குங்குமம், சந்தனமிட்டு விட, ஐந்தெண்ணெய் வார்த்து திரிகளை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மாலையில் விளக்கேற்றி அந்த வெள்ளிங்கிரி நாதர் தீபத்தில் எழுந்தருளப் போகும் அற்புதமான தீபக்காட்சியைக் கண்டிட சாரி சாரியாகப் பக்தர்கள் வந்த வண்ணமிருந்தனர். இளம் சிறார்கள் ஆங்காங்கே ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தனர். அங்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அறுசுவை உணவு சுடச் சுடத் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட போது, ”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய” வள்ளலார் பெருமகனாரின் அகவல் பாடல் உள்ளத்தே ஒலித்தது. பக்தர்கள் பசியால் வாடிடக்கூடாது என அங்கே அமுது தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

மாலையில் தீபத்தினை எம் குருநாதர் பூஜை செய்து ஏற்றிட தீபம் சுடர் விட்டுப் பிரகாசித்தது. எம் பெருமான் வெள்ளிங்கிரி நாதரும், எம் குரு வெள்ளிங்கிரி சுவாமிகளும் இணைந்து பக்தர்கள் வாழ்விலே சூழ்ந்து கொண்டிருக்கும் இருளைப் போக்கி ஒளிச்சுடராய் மிளிர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். அந்தத் திருக்கார்த்திகையும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில் தீப அருளில் தங்கள் உயிரையும், மனைதையும் புனிதப்படுத்திக் கொண்ட பக்தர்கள் பெரும் மகிழ்வெய்தி இன்புற்றனர்.

“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என பரிந்து பாடிய தாயுமானவரின் பாடல் வரிகளின் படி எம் குருவினை நாடி வந்த அத்துணை பக்தர்களுக்கும் எல்லாமும் கிடைத்திட எம் குருவினை வேண்டி வணங்குகிறேன்.

கீழே 2018ம் ஆண்டின் கார்த்திகைத் தீப பெருவிழாவின் புகைப்படக்காட்சிகள்

















வாழ்க வளமுடன் !

Monday, November 19, 2018

நிலம் (47) - அன் அப்ரூவ்ட் மனைகள் அரசு மீண்டும் அவகாசம்

20.10.2016ம் தேதிக்கு முன்பு வரை அனுமதியற்ற மனைப்பிரிவில் வீட்டு மனை வாங்கியவர்களும், அந்த மனைப்பிரிவு உரிமையாளர்களும் மனைப்பிரிவு வரன்முறைச் சட்டத்தின் படி வீட்டு மனைகளை வரன்முறைப்  படுத்தி அனுமதி பெறலாம் என தமிழக அரசு கடந்த 04.05.2017ம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு வரன்முறைக்கட்டணமும், மேம்பாட்டுக் கட்டணமும் குறைக்கப்பட்டு மீண்டும் காலக்கெடு வழங்கப்பட்டது. இந்த மாதம் 03.11.2018ம் தேதியோடு மூன்றாவது காலக்கெடுவும் முடிந்து விட்டது. இனியும் உள்ளாட்சிகளால் சேகரிக்கப்பட்டு மனைப்பிரிவு வரைபடங்களாக அனுமதிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் 50 சதவீதம் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அரசு அனுமதியல்லாத மனைப்பிரிவினை அனுமதி பெற்றுக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தும் மக்கள் கவனத்தில் கொள்ளாதிருப்பது சரியல்ல. 

அனுமதியற்ற மனைப்பிரிவினை ஏன் பத்திரப்பதிவு செய்தார்கள், அது அரசின் தவறல்லவா? என்று என்னிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். பத்திரப்பதிவு அலுவலகம் பதிவு செய்து கொடுக்க மட்டுமே உள்ளது. லீகல் ஒப்பீனியன் எல்லாம் அவர்கள் பார்க்க மாட்டார்கள். பத்திரப்பதிவாளர்கள் அது பற்றிய கேள்விகள் எழுப்ப வேண்டியதில்லை என்று பத்திரப்பதிவுச் சட்டங்கள் சொல்கின்றன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதால் அரசும் அவ்வப்போது பல விதிகளை உருவாக்கி மக்களின் தேவையற்ற கால விரயத்தையும், பொருளையும் இழக்கவிடாமல் செய்து வருகிறது. இருப்பினும் ஏமாறவே பிறப்பெடுத்த மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

03.11.2018ம் தேதி கடைசிக்காலக்கெடு. இனி என்ன ஆகும்? என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள். திட்டக்குழுமம் அதற்கொரு வழியினைச் அரசுக்குப் பரிந்து செய்திருக்கிறது. 03.11.2018க்குப் பிறகு வரும் வரன்முறை செய்யும் மனைகளுக்கு அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கலாம் என்றொரு அறிக்கையை அரசின் கவனத்திற்காக அனுப்பி இருக்கிறது. அதன் படி 03.11.2018க்குப் பிறகு மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஆனால் அதற்கு வரன்முறைக்கட்டணத்தில் 03.11.2018ம் தேதியிலிருந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பித்தால் வரன்முறைக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும், அடுத்த ஆறாவது மாதத்திற்குள் விண்ணப்பித்தால் 25 சதவீதம் அபராதமும், 12 மாதங்களுக்குப் பிறகு விண்ணபித்தால் 50 சதவீதமும் அபராதக்கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன் முறை செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்து கொள்ளுங்கள். தவறும் பட்சத்தில் அந்த மனைகளை எக்காலத்தும் விற்கவும் முடியாது. அதில் வீடுகள் கட்டவும் முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Saturday, November 17, 2018

நிலம் (46) - அன் அப்ரூவ்டு வீட்டுமனைகள் என்ன நடக்கிறது?

அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அரசு முழு மூச்சாக வீட்டு மனைகள் அப்ரூவல் திட்டத்திற்கான அமைப்புகள் மூலம் வரன் முறை செய்ய இரண்டு முறை கட்டணக் குறைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியும் இன்றும் அன் அப்ரூவ்டு மனைகளில் பாதி கூட வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருவது கொடுமையான விஷயம்.

இனி அரசு அதிரடி முடிவுகள் எடுக்கலாமென்று பேசிக் கொள்கின்றார்கள். வரன்முறை செய்யாத வீட்டு மனைகளை ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பும் உரிய அலுவலகத்திற்கு விபரங்கள் அனுப்பி, அந்த மனைகள் பற்றிய வரைபடங்களைத் தயாரித்து மீண்டும் உள்ளாட்சிக்கே அனுப்பி வைத்திருக்கிறார்கள். முன்பு போல பல ஆவணங்கள் தேவையில்லை என்றும் அரசு சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறது. இருப்பினும் மீண்டும் பாதி மனைகள் அப்ரூவல் செய்ய வரவில்லை என அரசு சொல்கிறது.

இனி அரசு ஏதாவது மக்கள் நலன் சார்ந்து முடிவுகள் எடுக்குமா? என்று தெரியவில்லை. மக்கள் வரன்முறைக்கட்டணம் அதிகம் என்றுச் சொல்கிறார்கள். இன்னும் கட்டணத்தைக் குறைக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். என்ன செய்யப்போகிறது அரசு என்று தெரியவில்லை.

மீண்டும் அரசு கால நிர்ணயம் செய்தால் உடனுக்குடன் அன் அப்ரூவ்டு மனைகளை வாங்கியவர்கள் விண்ணப்பம் செய்து வரன்முறை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி வரலாம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதில் அர்த்தமில்லை.

2018 திருக்கார்த்திகை தீப திருவிழா அழைப்பிதழ்


அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். 

திருக்கார்த்திகை தீப விழா அன்று வெள்ளிங்கிரி மலை மீது ஏற்றப்படும் தீபத்தை தரிசித்து, இறை அருள் பெறவும், மன அமைதி பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ குருவருளின் ஆசி அருளை அடைந்து மகிழ வருகை தரும்படி அனைவரையும் மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்.

ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி : செம்மேடு தாண்டி பூண்டி வெள்ளிங்கிரி கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகில் இடது புறமாகச் செல்லும் வழியில் உள்ளது ஆசிரமம். அனைவரும் தியானம் செய்து குருவருள் பெற்று, அன்னம் அருந்தி ஆசிகள் பெறலாம். 

தொடர்புக்கு 
ஜோதி ஸ்வாமி - 98948 15954

Wednesday, November 14, 2018

ஞானயோகமா? கர்மயோகமா? எது சரி


(சேலம் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியின் தாளாளரும், சுவாமி சித்பவானந்தரின் உண்மை சீடரும், எனது குருவும் ஆன ஸ்ரீ மத் சுவாமி ஆத்மானந்தாவுடன் - ஆனந்தனும், நிவேதிதையும்)

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இடையில் ஒரே ஒரு முறை சுவாமியை கோவையில் இருக்கும் பள்ளப்பாளையம் விவேகானந்தர் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருக்கும் அனாதைச் சிறார்கள் ஆஸ்ரமத்தில் சந்தித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் நிவேதிதைக்கு பள்ளியில் ’நிவேதிதா பற்றி’ பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. என்னிடம் மகள் நிவேதிதா பற்றிக் கேட்டதும், அவருக்கு சுவாமியின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவரிடம் பேசும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சுவாமியைத் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அடுத்த வாரத்தில் நிவேதிதைக்கு காரைக்குடி ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரியிலிருந்து நிவேதிதை பற்றிய புத்தகங்களும், சுவாமி விவேகானந்தர் பற்றிய புத்தகங்களும் வந்திருந்தன. சுவாமி அவருக்கு புத்தகங்களை அனுப்பி இருந்தார். என்னிடம் பேசிய போது குழந்தைகள் இருவரையும் அழைத்து வரும்படியும், ஆசிரமத்தில் தங்கி இருந்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற உள்ளூர ஆவல். ஐந்தாறு வருடங்கள் அவருடனே இருந்தவன். அவருடன் உண்டு, உறங்கி, பேசி, தொண்டு செய்து வாழ்ந்தவன். என் மீது அவருக்கு ப்ரியம் அதிகம். 

தீபாவளி மறுநாள் சந்திப்பதாகச் சொன்னேன். சேலத்தில் இருக்கும் கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். சேலம் ஓமலூர் வழியாக கல்லூரியைச் சென்றடைந்தோம். குடும்பத்துக்கே உடைகள் எடுத்து தந்தார். குழந்தைகளுடன் உரையாடினார். இருவருக்கும் அனேக புத்தகங்களைப் பரிசளித்தார். எனக்கும், இல்லாளுக்கும் ஆசீர்வாதங்களையும் புத்தகங்களையும் பரிசளித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு பனிரெண்டு மணி ஆரத்தியில் பங்கெடுத்தேன். மனசு நிறைவாக இருந்தது.  உணவருந்தி விட்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். 

எனக்குள் அமைதியாக வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, ஞான யோகம் பற்றிப் பேசினேன். அவர் உடனே,” மனிதப் பிறவி எடுத்து யாருக்கும் உபயோகமின்றி யோகத்தில் அமர்ந்து தன்னை மட்டும் உயர் நிலைக்குக் கொண்டு சென்று முக்தி அடைவதில் என்ன பயன்? ஒரே ஒருவருக்கு மட்டுமே அதனால் பலன் கிடைக்கும். ஆனால் இவ்வுலகில் பிறந்து பலரின் உதவியால் உயிர் பெற்று வாழ்ந்து விட்டு, தான் மட்டுமே உய்ய முனைவது சரியல்ல. சுவாமி விவேகானந்தர் இந்தப் பூமியில் ஒரே ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரையில் மீண்டும் மீண்டும் மனிதனாகப் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுச் சொல்லி இருக்கிறார்” என்றார். 

தொடர்ந்து, ”எனக்கு இன்னும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன. கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மடங்களைக் கட்டி அன்னதானம் செய்ய வேண்டும். பகவான் ராமகிருஷ்ணருக்கும், சாரதா தேவியாருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் மூன்று கோவில்கள் கட்ட வேண்டும், ஏழை மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து அவர்களை வாழ்வில் உயர வைக்க வேண்டும்” என்றார்.

அந்த 81 வயது இளைஞரின் பேச்சைக் கேட்ட எனக்கு வெட்கமாகப் போய் விட்டது. அவரின் உயர்ந்த நோக்கம் எங்கே? எனது தனி மனிதச் சிந்தனை எங்கே? உள்ளம் வெம்பி வெதும்பியது. அவரின் கனவுகளுக்கு சிறிய அணில் போன்றாவது உதவி செய்ய வேண்டுமே என்ற ஆவல் மேலோங்கியது. 

ஐந்து வருடம் அவருடன் இருந்து தொண்டாற்றினேன். திருமணப் பந்தத்தில் இணைந்து தனி மனித வாழ்க்கைத் தொடரில் மூழ்கி விட்டேன். இருப்பினும் ஏழைகளுக்குத் தொண்டாற்ற முடிவு செய்தால் எவ்வழியிலேனும் அதைச் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

கர்ம யோகமே மிகச் சிறந்த யோகம். பிறருக்குப் பணி செய்தலே மனிதப் பிறவிப் பயன். அதை விடுத்து தனி மனித சுகத்திற்காக, உள்ளொளிக்காக இந்த உடம்பைப் பயன்படுத்துவது சரியல்ல என்று அவர் சொன்ன அந்தக் கருத்து, எனது உள்ளத்தில் தராசு தட்டு உயர்வது தாழ்வது போல ஆடிக் கொண்டிருந்தது. நீண்ட மனசின் துணை கொண்டு ஆராய்ச்சி செய்த பிறகு, ஒரு  வழியாக இரண்டும் தேவை என்று அறிந்து கொண்டேன்.

உள்ளத்தைச் செம்மைபடுத்திட ஞான யோகமும், ஊருக்கு உழைத்திட கர்ம யோகமும் அவசியம். கர்ம யோகத்தில் திழைத்திட்ட பக்தை நிவேதிதாவும், அன்னை தெரசாவும், மூவரின் பிம்பமான சுவாமி ஆத்மானந்தரும், எனக்குப் பிடித்த இன்றைய மனிதர் வ.மணிகண்டனும் என்றென்றும் மனித குல வரலாற்றில் உதாரண புருஷர்களாய் இருப்பார்கள், இருந்து கொண்டிருமிருக்கின்றார்கள். அவர்களைப் பற்றிப் பேசும் இந்த உலகம், சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதில்லை.

இந்தப் புண்ணியத்தை விட வேறென்ன பெரிதாய் வேண்டும் அழியப்போகும் நாற்றமெடுக்கும் உடம்புக்கு? ஞான யோகத்தில் மனதைச் செம்மைப்படுத்தி, கர்மயோகத்தில் உழைத்திடுவதைத் தவிர இந்த மனித உடம்புக்குச் சாலச் சிறந்த வேறு எதுவும் இல்லை.

சரி எனக்குப் பிடித்த ஒரு சிவபெருமானைப் பற்றிய திருவாசகப் பாடலைப் பற்றி கொஞ்சம் படியுங்களேன். எப்போதாவது உங்களுக்குள் அது ஒரு மலர்ச்சியை உருவாக்கலாம்.

கண்க ளிரண்டு மவன்கழல்
கண்டு களிப்பன வாகாதே
காரிகை யார்கடம் வாழ்விலென்
வாழ்வு கடைப்படு மாகாதே
மண்களில் வந்து பிறந்திடு
மாறு மறந்திடு மாகாதே
மாலறி யாமலர்ப் பாத
மிரண்டும் வணங்குது மாகாதே
பண்களி கூர்தரு பாடலொ
டாடல் பயின்றிடு மாகாதே
பண்டிநன் னாடுடை யான்படை
யாட்சிகள் பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம்
வந்து வெளிப்படு மாயிடிலே

இந்தப் பாடல் பன்னிரு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தில் பாடப்பட்டது.

மேற்கண்ட பாடலைப் பதம் பிரித்து எளிதில் படிக்க முடியாது. திருப்பராய்த்துறையில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணர் தபோவனத்தை நிறுவியவரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், சுவாமி ஸ்ரீமத் ஆத்மானந்தர் அவர்களால் பெரியசாமி என்று அழைக்கப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் அவர்கள் கீழ்கண்டவாறு மேலே இருக்கும் பாடலை தனது திருவாசகம் நூலில் விரித்து எழுதி இருக்கிறார். அது கீழே.

கண்கள் இரண்டும் அவன் கழல்
கண்டு களிப்பன ஆகாதே
காரிகையார்கள் தம் வாழ்வில்
என் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திரும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம்
இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண் களி கூர் தரு பாடலோடு
ஆடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான்
படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம்
வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன்
வந்து வெளிப்படும் ஆயிடிலே


இதன் அர்த்தம் கீழே !

மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன் எழுந்தருளினால், இரண்டு கண்களும் அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை, மகளிரோடு கூடி வாழ்வதில் முடிவு பெற்று விடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தினை மறத்தல் ஆகாதோ போகுமா? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன் ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளக்கூடிய தன்மைகளை பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் வந்து தோன்றுதல் ஆகாது போகுமோ?

திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் எனது சிற்றறிவுக்கு எட்டிய இந்தப் பதிவில் ஏதாவது பிழை இருப்பின் மன்னித்தருள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மாறிய எண்ணம் மாற்றிய குரு

ஆற்றங்கரையில் துண்டினை விரித்துப் படுத்து இருந்தேன். அருகில் கருவை மரம். கருவைக்கு இலைகள் சிறிது. நிழல் தரா மரம். அதன் மலர்கள் மஞ்சள் நிறத்தவை. பொசு பொசுவென குமிழாக இருக்கும். அந்த மலர்களில் வாசம் வருமா என்று தெரியவில்லை. தரையில் சிதறிக் கிடந்தன. இடதுபுறம் மலை அருவியிலிருந்து கொட்டிய நீர் செடி கொடிகளுக்குள் புகுந்து செல்லும் சலசல சத்தம். சுற்றி இருந்த மரங்களின் ஊடே உலாவிக் கொண்டிருந்த பறப்பனவைகளின் கூட்டு ஒலிகள். ஆற்றங்கரையோரமாய் இருந்து ஒலித்த மலை மக்களின் குழந்தைகள் தண்ணீரில் விளையாடிய சத்தமும் அதனூடே ஒலித்த ஓசையும் கேட்டுக் கொண்டிருந்தன.


(சிப்பிப்பாறை ஸேக்கியுடன்)

ஆழ்ந்த அமைதியில் மனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. புத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மனமும் புத்தியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். சிந்திக்கச் சொல்லும் புத்தி ஓய்வெடுக்க மனம் வெறும் பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ புல்லாங்குழலும் சாரங்கியும் இணைந்த ஓசை வந்தது. அந்த இசை ஈனக்குரலில் இசைப்பது போல இருந்தது.

ஆற்றில் குளித்து முடித்த மலை மக்களின் குழந்தைகள் காய்ந்து கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்புண்டாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் அருகே மரத்தின் கிளை மீது அமர்ந்து கொண்டு அரும்பு மீசை அரும்பிய இளைஞனொருவன் அரை அடி நீளமிருக்கும் அந்த இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த அமைதியான இடத்தில் ஈனக்குரலோசையில் மனதை தாலாட்டி ஒரு நிலைப் படுத்தும் அற்புதமான அந்த கானத்திற்குள் நான் புகுந்தது. தன்னை மறந்தது. இசை எங்கும் பரவியது.

பேரானந்தம்...!

சாமி ஆசிரமத்திலிருந்து சோறும் குழம்பும் கொண்டு வந்தார்.  ஈரம் மண்டிய சில்லிட்ட தரையில் அமர்ந்து கொண்டு குரு பரிமாறும் சாப்பாட்டைச் சாப்பிடவும் ஒரு வரம் வேண்டும். அது என்னவோ தெரிவதில்லை. வீட்டில் அறுசுவையாக உணவிருந்தாலும் பத்து கவளம் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விடுகிறது. குரு நாதர் உணவிடும் போது அதிகமாக ஆகி விடுகிறது.

அப்போது அங்கு ஒருவர் வந்தார். சாமியுடன் ஒருமையில் பேசி விளையாடிக் கொண்டிருந்தார். எனக்குள் அவர் மீது கொஞ்சம் எரிச்சல் கிளம்பியது. அவர் கிளம்பிச் சென்று விட்டார்.

”சாமி, அவர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா?” என்றேன்.

”எதுக்கு ஆண்டவனே வரணும்? அது ஒரு உயிர். அதன் உடம்பும் எண்ணமும் செயலும் பேச்சும் எப்படியோ இருக்கட்டும். ஆனால் அதற்குள் ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரின் உடம்புக்கு அப்படித்தான் பேச முடியும். அதுதான் அதற்குத் தெரியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் எவர் மீதும் எப்போதும் கோபமும் எரிச்சலும் வரவே வராது” என்றார்.

ஒரு தடவை ஆசிரமத்திற்குச் சென்றிருந்த போது வாயிலில் வங்கு பிடித்த ஒரு நாய் வந்தது. அதன் உடம்பிலிருந்து வேப்பெண்ணெய் வாடை வீசியது. முகத்தைச் சுளித்தேன். சாமி தான் அதன் உடம்பில் இருக்கும் புண்கள் ஆறுவதற்காக அந்த நாயைப் பிடித்து அதன் உடம்பு முழுவதும் வேப்பெண்ணையைத் தடவி விட்டார் என்று சொன்னார் அங்கிருந்த ஒருவர். சாமி எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ எனத் தெரியவில்லையே என்று  அப்போது நினைத்துக்கொண்டேன்.

விடை இன்று கிடைத்து விட்டது.

எனக்குள் இது காறும் அடாது செய்யும் மனிதர்களின் மீதும், அவர்கள் செய்யும் செயல்களினாலும் கோபம் வரும். ஆத்திரம் வரும். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடியில் கோட்டையாக இருந்த அகங்காரம் நொறுங்கியது. மனசு லேசானது.

அன்றிலிருந்து மனிதர்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் பேசும் பேச்சிலிருந்து அவரவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்போது சர்க்கார் படப்பிரச்சினை நடந்து முடிந்து விட்டது அல்லவா? விஜயும், அரசையும் பகடையாக்கி பெரும் பணம் சம்பாதித்துக் கொண்ட புத்திசாலித்தனத்தை என்னால் உணர முடிந்தது. ஆர்.பி.ஐக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையின் மூலம் என்னவென்று தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்களை எளிதில் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எந்தப் பிரச்சினை வந்தாலும் அதற்கொரு தீர்வினை எடுக்கும் மனப்பக்குவம் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் எனது குரு அவர்களே காரணம். சொல்லிப் புரிவதை விட அனுபவப் புரிதல் மேல். அவ்வப்போது புரிந்து கொள்ள முடியாத பல்வேறு மர்மம் நிறைந்த விஷயங்களை எனக்கு புரிய வைத்து அவரின் அன்பு அருளில் நனைய வைக்கும் அந்த மகா சக்தி நிறைந்த அன்பு உள்ளத்துக்கு நானெப்போது செய் நன்றிக் கடனாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை.

அவரிடம் நானொரு உதவி கேட்டிருக்கிறேன். செய்கிறேன் என்றிருக்கிறார். செய்வார். அவளைப் பார்க்கப் போகும் அந்த நாள், அந்தப் பேரழகி உடன் உரையாடப்போகும் அந்த நாளே எனது பொன்னாள்.

எனது குருவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.