சமீபத்தில் அக்கா பையன் திருமணத்திற்காக தஞ்சாவூர் வரை செல்ல வேண்டிய சூழல். தஞ்சைப் பக்கம் சென்று நீண்ட நாட்களாகி விட்டன. கல்லூரியில் படித்த போது இருந்த தஞ்சைக்கும் இப்போதைய தஞ்சைக்கும் வித்தியாசங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. தஞ்சாவூரைச் சுற்றிலும் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. ஆனால் ஊர் அப்படியே இருந்தது. ஆங்காங்கே வீடுகளும் கடைகளும் புதிதாக முளைத்திருந்தன. காவிரியில் தண்ணீர் வந்ததால் ஆங்காங்கே பச்சைகள் தெரிந்தன. கிளை ஆறுகளில் தண்ணீர் நிரம்பிச் சென்று கொண்டிருந்தன. கல்லூரிப் பருவத்தில் எங்கெங்கு நோக்கிலும் தண்ணீர் மயமாகத்தான் இருக்கும். தற்போது கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
நெற்பயிர்கள் ஆங்காங்கே பச்சை விரித்துக் கொண்டிருந்தன. ஆட்கள் நான் சென்ற மாலை வேலையிலும் வயல்களில் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக தஞ்சாவூரில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்தேன். சட்டை நாதர் சித்தர் அமர்ந்திருக்கும் திருப்பாம்புரம் கோவிலுக்குச் செல்லும் போது கும்பகோணம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வைத்துக் கொண்டேன். கும்பகோணத்தில் ஒரு அய்யர் ஹோட்டலில் இரண்டு இட்லி ஒரு வடை கொஞ்சம் காஃபி. வழக்கம் போல காஃபி சொதப்பியது.
உணவகத் தொழிலில் எவரும் சுவை, ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவனம் கொள்வதில்லை. கொடுமை! சாப்பிட வருபவன் இருந்தாலென்ன செத்தாலென்ன நம்ம கல்லாவில் காசு வருகிறதா? என மட்டுமே பார்க்கின்றார்கள். எல்லாம் வியாபாரமாகிப் போன கொடும் அவலம் உணவகத் தொழிலில் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது மீந்து போகும் விஷ உணவுகளை 50 சதவீதம் டிஸ்கவுண்டில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் ஸ்விக்கி, உபர் மற்றும் ஜூமாட்டோவில். அதையும் வாங்கி விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
நோய் வராமல் தடுக்க முனையாமல் நோய் வந்தால் மருத்துவமனை செல்ல இன்சூரன்ஸ் பாலிசியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசு. இதற்கு வெட்டிப் பெருமை வேறு. கொடுமை!
மறு நாள் காலையில் கோவை வீட்டில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. சாம்பாரின் மணம் வீடெங்கும் நிறைந்து புது வித நறுமணத்தை அக்கம் பக்கமெல்லாம் பரவிக் கொண்டிருந்தது. முட்டைகோஸ் பொறியலின் வாசமும், பறங்கிப் பிஞ்சுப் பொறியலின் வாசமும் சமையலறை முழுவதும் நிறைந்து ஒரு தெய்வீக மணத்தை தெளித்துக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் சாம்பார், கூட்டு, பொறியல் எல்லாம் தயாராகியது. ஒன்றரை மணி நேரம் ஆகும் சமையல் இன்றைக்கு அரை மணி நேரத்தில் முடிந்ததன் அதிசயம் தான் என்ன?
என் சிறு வயதில், அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார் என நினைவு. மழை ஊத்திக் கொண்டிருக்கும். இப்போது பெய்யும் மழையெல்லாம் ஒரு மழையே இல்லை. ஐந்து நிமிடம் தான் ஓய்வாக இருக்கும். விடாமல் கொட்டிக் கொண்டிருக்கும். ஓட்டு வீடு ஆகையால் சிலீரிட்டுக் கிடக்கும் வீடு. சத சதவென ஈரமாகிவிடும். சனல் சாக்குகளைப் போட்டு அதன் மீது பாய் போட்டுத்தான் இரவில் தூங்க முடியும். அப்போது காய்கறிகள் எல்லாம் கிடைக்காது. வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் இருக்கும் முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் கீரையைப் பறித்து வந்து கழனிசாறு தான் வைத்து தருவார்கள் அம்மா. அடுப்பில் வேகும் போதே கீரையும் பருப்பும் சேர்ந்த வாசம் நாவில் எச்சிலூற வைக்கும். கோவையில் இருக்கும் முருங்கைக் கீரை கூட தன்னிலை மாறி முடை நாற்றமடிக்கிறது.எங்கெங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் பூமிக்குள்ளே. மரமெல்லாம் விஷமாக மாறிப் போய் விட்டது. குளிக்கும் தண்ணீரையும், டாய்லெட் தண்ணீரையும் பூமிக்குள் இறக்கிக் கொண்டிருந்தால் பூமிக்கு மேல் வருபவை எல்லாம் விஷமாகத்தான் வரும்? அதைத்தானே ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் கோடிகளைக் கொட்டி கட்டப்போகின்றார்கள் அறிவார்ந்த பிசினஸ் மேன்களும், அரசியல்வியாதிகளும்.
கோவையில் ஒரு மழை பெய்த அடுத்த நாள் கொசுக்கள் படையெடுக்கின்றன. நானெல்லாம் கொசு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவன். நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகி மனிதர்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பன்றி சாக்கடையில் இருக்கும் போது, அதுதான் இன்ப உலகம் என்று நினைத்துக் கொள்ளுமாம். நாமும் நரகத்தில் வாழ்ந்து கொண்டு இதுதான் வாழ்க்கை என சிலாகித்து பீத்திக் கொண்டலைகின்றோம்.
கடந்த ஞாயிறு அன்று சிங்கா நல்லூர் உழவர் சந்தைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஊட்டிக் காய்கறிகள் விற்பனை செய்பவர் முட்டைக்கோஸ் விவசாயத்தைப் பற்றி விவரித்தார். ’பிராய்லர் கோழி போல இப்போதெல்லாம் இருபதே நாட்களில் முட்டைக்கோஸ் வந்து விடுகிறது’ என்றார்.
முட்டைக்கோஸ் நாற்றமெடுக்கும், அவரைக்காயை குக்கரில் வேக வைக்க வேண்டும். கத்தரிக்காய் சப்பென்றிருக்கும். முருங்கைக்காயோ குடலைப் பிடுங்கும் வாசம் அடிக்கும். பீட்ரூட் அது ஒரு வித்தியாசமான முடை நாற்றமடிக்கும். புடலை, பீர்க்குப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பீன்ஸ், கேரட் வைக்கோலைப் போல கிடக்கும். இவைகள் தான் கோவையில் கிடைக்கும் காய்கறிகளின் சுவை. இவைகள் வேக ஒரு மணி நேரம் ஆகும்.
கும்பகோணத்திலிருந்து வாங்கி வந்த காய்கறிகள் அதன் உண்மையான தன்மையுடன் அடுப்பில் போட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் கூட்டாகவோ பொறியலாகவோ மாறி விடுகின்றன. அந்த அந்தக் காய்கறிகளின் மணமும் சுவையும் அலாதியானவை. வாழைக்காய் எப்படி மணத்தது தெரியுமா? முருங்கைக்காயை வாயில் வைத்தாலே கரைந்தது. புடலையும் பீர்க்கும் அள்ளி வீசிய நறுமணத்தில் வித்தியாசமான சுவையான கூட்டும், பொறியலும் கிடைத்தது.
கோவையில் விற்கும் அத்தனை காய்கறிகளும் விஷம்! விஷம்!! விஷம்!!! இதனால் எவர் கோபம் கொண்டாலும் சரி, அதுதான் உண்மை. அதன் உண்மையை உணர வேண்டுமெனில் கும்பகோணம் பக்கம் சென்று வாருங்கள். விபரம் தெரியும் உங்களுக்கு. இயற்கையாக விளைந்த காய்கறிகளின் தன்மைக்கும், உரமும் பூச்சி மருந்தும் கொட்டி வளர்க்கப்படும் காய்கறிகளுக்கும் மலையளவு வித்தியாசம். புற்றுநோய் வராமல் வேறு என்ன வரும்?
மீன் மார்க்கெட்டில் வரும் மீன்கள் எல்லாம் மூன்று மாதங்களுக்கு ஃப்ரீஷரில் இருப்பவை என உக்கடம் மொத்த விலை மார்க்கெட் வியாபாரி என்னிடம் சொன்னதிலிருந்து ஏன் கோவை மீன்கள் கருவாட்டு வாசம் வீசுகிறது என அறிந்தேன். முட்டையில் மருந்து, கோழியில் மருந்து, ஆட்டுக்கறியில் கூட கறியில் தண்ணீர் நின்று எடை கூட்டுவதற்காக சோடா உப்பு கலந்த தண்ணீர் கொடுக்கின்றார்களாம்.
கடந்த ஆறு ஆண்டுகளாக சுத்த சைவம். மருத்துவமனை பக்கம் அதிகம் செல்வதில்லை. கோவையில் விற்கும் காய்கறிகளை நினைக்கையில் பச்சாதாபம் எழுவதை தடுக்கவே முடியவில்லை. வீட்டுத்தோட்டம் போட முனைந்திருக்கிறேன்.