பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது? எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.
எதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது.
சமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.
என்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.
அன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.
பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை.
அன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா? அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் மீது குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.
அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை? ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.
அப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.
இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.
இனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா? அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.
வாழ்க வளமுடன் !!!