ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்.
ஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என.
ஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.
விஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய காந்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு?)
இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா?” என்று கேட்க, மறுக்க முடியுமா?
சாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு? ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா?
மனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.
விடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.
ஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.
ஓ...! இதுதான் காரணமா? என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.
”சொல்லுங்க சாமி” என்றேன்.
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
திரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.
ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை ப.ராமநாதப் பிள்ளை)
”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்.
“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.
ஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம்.
1 comments:
அப்ப அம்மாதான் பிடிக்கும்ன்னு பசங்க சொல்றதுலாம் கப்சாவா
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.