குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, August 2, 2017

சாண்டியின் ஏழு குட்டிகளும் கொஞ்சம் ஓவியாவும்

குழந்தைகளும் நானும் பிக் பாஸ் பார்த்து வருகிறோம். இருவரும் அதிர்கிறார்கள். அப்பா இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். பையன் மாணவர் துணைத் தலைவனாக வேறு இருப்பதால் பிக் பாஸ் மூலம் சக மனிதர்களை புரிந்து கொள்ள முயல்கிறான். மனிதர்கள் இப்படித்தான் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் புதிய உலகைக் காணும் குழந்தைகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. சகமனிதர்களின் உள் ரகசியங்கள் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். ஆகவே எவராவது உன்னைத் தவறாகப் பார்த்தால், பேசினால், துன்பமிழைத்தால் எளிதில் கடந்து விடுங்கள் என்று புரிய வைக்கிறேன். ஓவியா அதற்கு உதவுகிறார். மிக்க நன்றி ஓவியா! 

காயத்ரி என்று கேரக்டரைப் போல என் வாழ் நாளில் ஒரு பெண்ணை இதுவரை நான் சந்தித்ததே இல்லை. கொடூரத்தின் சாயல்.  தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களைக் கழுத்தை அறுப்பார்கள். அதைக்கூட எளிதாகக் கடந்து விடலாம் போல. இப்படியெல்லாம் பெண்கள் இருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. தமிழகமே அதிர்ந்து போய் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இந்தப் பெண் எலிமினேஷனுக்கு வரவே இல்லை. அதுதான் அந்தப் பெண்ணின் நரித்தனம்.

விகடனில் வெளியான ஒரு பத்தி கீழே !

ஓவியாவை எப்படியெல்லாம் துரத்தலாம்” என்று காயத்ரி தூங்காமலேயே யோசித்துக் கொண்டிருந்தாரோ என்னமோ, திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்டார். காலைக்கடன்களில் ஒன்றான புறம் பேசுதலை அப்போதே துவங்கி விட்டார். கூட பிந்துமாதவி.

‘பரணி வெளியேற்றத்தின் போது ஏன் எவருமே தடுக்கவில்லை. வெளியே வந்து குரலாவது தந்திருக்கலாமே?’ என்பது பிந்து மாதவியின் கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல, பிக் பாஸ் பார்வையாளர்களின் அனைவரின் மனதிலும் இன்னமும்கூட நெருடிக் கொண்டேயிருக்கிற கேள்வி.  

“அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமே?’ என்று பிந்துமாதவி கவலையோடு கேட்டபோது ‘என்ன கால் உடைஞ்சிருக்கும். அவ்வளவுதானே’ என்றார் காயத்ரி. ஒரு நாளின் தொடக்கத்தைக் கூட இத்தனை வன்மத்துடனும் மனிதத்தனம் துளிகூட இல்லாமலும் ஆரம்பிக்க முடியும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீங்கள்தானே தலைவர், தடுத்திருக்கலாமே’ என்கிற லாஜிக்கான கேள்வியைப் பிந்து மறுபடியும் கேட்க, அப்போதும் திமிராக ‘அவர் என்ன பேபியா?’ என்றார் காயத்ரி. ‘காயூ பேபி’ என்று மற்றவர்கள் அழைக்கும் போது உச்சி குளிர சிரிக்கும் காயத்ரி, பரணியை ‘பேபியா’ என்கிறார். 

ஓவியா கார்ப்பெட்டை இழுத்ததால் ‘ஜூலிக்கு ஏதாவது ஆகியிருக்கும்’ என்கிற போலிப்பதட்டத்துடன் பஞ்சாயத்து வைக்கிற காயத்ரி, பரணியின் நிலைமையை ரத்தம் x தக்காளி சட்னி என்று அலட்சியமாக அணுகுவது அராஜகமானது. 

திருடர்களின் கூட்டத்தில் புகுந்த உளவாளி போலவே தள்ளியிருந்து நாசூக்காக விசாரணை செய்கிறார் பிந்துமாதவி. இதுவரையான காட்சிகளை அவர் ‘வெளியில்’ இருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

பரணி முதலிலேயே தப்பித்துவிட்ட பிறகு அந்த வீட்டில் உளைச்சலையும் தனிமையையும் மற்றவர்களின் ஒதுக்குதலையும் அதிகமாக எதிர்கொண்டவர் ஓவியா மட்டுமே. நமக்குக் காணக்கிடைத்த காட்சிகளிலேயே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கோபம் வந்தது. மிகக் குறிப்பாக அவரைத் தூங்க விடாமல் பெண்களின் படுக்கையறையில் காயத்ரி. நமீதா கும்பல் இணைந்து செய்த அடாவடித்தனம். இதுவே இப்படியென்றால் நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் இன்னமும் என்னவெல்லாம் அவருக்கு அவமானங்கள் தரப்பட்டிருக்கும்? ‘நீ ஒரு ஹேரும் கேட்க மாட்டே’ என்று காயத்ரி குரூரமாகக் கூறுவதைக் கூட ஒரு புன்னகையுடன் கடந்தவர் ஓவியா. ( நன்றி விகடன்)

ஓவியா நல்ல பெண்...! இப்படி ஒரு பெண்ணைப் பார்ப்பது இன்று வெகு அரிதாக இருக்கிறது. ஆச்சரியம்தான்.

இந்த விஷயத்தைக் கடந்து விடலாம்.

பக்கத்து வீட்டில் இந்தியாவின் மிகப் பிரபலமான ஒருவரின் சகலை கெஸ்டாக தங்கி இருந்தார். அவர் சாண்டி என்கிற பெண் நாயை வளர்த்து வந்தார். வீட்டு ஓனரும் அவரும் நண்பராகையாலும், வீட்டு ஓனரும் சேர்ந்து சேண்டியை வளர்த்தனர். அந்த கெஸ்ட் ரூடோஸைப் பார்த்து ஹாய் சொன்னால் சாண்டி அழ ஆரம்பித்து விடும். என்னிடம் சொல்லிச் சொல்லி மாய்வார். அவர் வேலை முடிந்ததும் ஊருக்குச் சென்று விட்டார். வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டி விட்டு, சாண்டியை வெளியில் விட்டு விட்டுச் சென்று விட்டார். சாண்டி நிறைமாசமாக இருந்திருக்கும் போல. எனக்குத் தெரியாது. காலையில் பார்த்தால் வீட்டு வாசலில் இருக்கும் தென்னை மரத்தடியில் ஏழு குட்டிகளோடு படுத்து பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது சாண்டி. ஒரு குட்டி வேறு பக்கம் கிடக்க அதை எடுத்து அதன் அருகில் போட்டால் விர்ரென்று சீறியது. அன்று முழுவதும் படுத்தே கிடந்தது. அதற்கு உணவு கொடுத்து, தண்ணீர் வைத்தோம். அழகான கண்கள் திறக்காத ஏழு குட்டிகள். அவைகளுக்கு சண்டி, மண்டி, டியூஸ்டி, வென்னிஸ்டி, தர்ஸ்டி, பிரைடி, சாட்டி என்று பெயர் வைக்கலாம் என பேசிக் கொண்டிருந்தோம்.

சாண்டி இரண்டு நாட்களாக படுத்தே கிடந்தது. ஒரு பிரச்சினையும் இல்லை. நேற்றைக்குப் பிரச்சினை ஆரம்பித்தது. அதற்கு உடம்பில் தெம்பு ஏறியவுடன் அந்தப் பக்கம் யாராவது வந்தால் துரத்த ஆரம்பித்தது.

வீட்டில் வளரும் நான்கு மாத ரூடோஸ் சாண்டியைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தது. அதற்கு சாண்டியைப் பிடிக்கவில்லை. இருப்பினும் சகித்துக் கொண்டது. ரூடோஸ் அடிக்கடி சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தது. சமாதானப்படுத்த வேண்டி இருந்தது. நேற்று காலையில் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்த சாண்டி ரூடோஸ்ஸைக் கழுத்தில் கடித்து விட்டது. மருத்துவரிடம் காட்டி சிகிச்சை முடித்து வீட்டுக் கூட்டி வந்தார் மனையாள். நானும் வீட்டுக்குச் சென்று விட்டேன். ரித்திக் வந்ததும் சாண்டியின் நிலை என்ன ஆகப்போகிறதோ என்ற பதட்டம் ஏற்பட ஆரம்பித்தது. வாசலில் ரூடோஸைக் கட்டி வைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். சாண்டி நைசாக ரூடோஸைக் கடிப்பதற்கு முயன்று கொண்டே இருந்தது. வீட்டுக்கு தபால் கொண்டு வந்த தபால்காரர் சாண்டியின் அதிர்ச்சித்தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடினார். கேஸ் கொண்டு வந்தவர் அலறிக் கொண்டோடினார். சாண்டி தன் குட்டிகளைக் காப்பதற்காக வீராவேசம் கொண்டு வீரத்தாயாக மாறியது.

மழை பெய்வது போல வானம் இடித்துக் கொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் சாண்டி தன் குட்டிகளுடன் ரூடோஸ் இடத்துக்கு வந்து விட்டால் ரூடோஸின் நிலை என்னவோ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன். சரியாக பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். அவரிடம் விபரம் சொன்னால் எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை, இந்த வீடே என் வீடு இல்லை என்றுச் சொல்லி நழுவ ஆரம்பித்தார். எனக்கு வந்த டென்சனுக்கு கத்த ஆரம்பித்தேன். அதற்குள் பையன் வந்து விட்டான். ரூடோஸை சாண்டி கடித்து விட்டது என்றதும் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்கிறான். அவனைச் சமாளித்து இந்தப் பிரச்சினையில் இருந்து எப்படித்தான் வெளிவருவது என்று டென்சன் ஏறிக் கொண்டிருந்தது.

(சாண்டியும் அதன் ஏழு குட்டிகளும்)

வீட்டுக்காரரை கோபமாக எகிறியவுடன் ஒரு வழியாக சாண்டியை நெருங்கி கம்பி போட்டுக் கட்டினார். அவர் தொட்டால் சிவனேன்னு நிற்கிறது. நாங்கள் அருகில் சென்றால் உர்ர்ர்ர் என்கிறது. அவர் எங்கோ பேசி, அவரின் நண்பரின் தோட்ட வீட்டுக்கு குட்டிகளையும், சாண்டியையும் கொண்டு சென்றார். தோட்ட வீட்டில் விட்டு விட்டு திரும்பவும் வீட்டிற்கு வந்தார். அவருடன் நான் பேசவே இல்லை. சாண்டியைக் கட்டிப் போட்டு வளர்த்து அதற்கு உணவிட்டு விட்டு, குட்டி போட்டதும் அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்கிறார் அவர். அதுமட்டுமாவது பரவாயில்லை. அந்த வீடே என் வீடு இல்லை, நான் கெஸ்ட் என்றார். அதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த வீடு இதுவரைக்கும் அவர் பெயரில் கிரையம் ஆகி உள்ளது. (யார் கிட்டே?)

ஹிந்தி வகுப்பு முடிந்து வந்ததும் ரித்திக்கும், நிவேதிதாவும் ரூடோசுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சேண்டியும், அதன் குட்டியும் வெயிலில் துயரப்படக்கூடாது என்பதற்காக அடியேனால் பின்னப்பட்ட தென்ன ஓலைத் தட்டி சும்மா கிடந்தது. குட்டிகளுக்குப் பால் கொடுத்து விட்டு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் சேண்டியின் நினைவு என்னைப் பாடாய்ப்படுத்த ஆரம்பித்தது. இரவில் கனவில் சேன்டி ஒரு குட்டியைக் கவ்விக் கொண்டு வீடு தேடி வருவது போல இருந்தது. தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டேன். விடிகாலையில் தென்னைமரத்தடியில் சேண்டி தன் காலால் சமன் செய்து வைத்த இடம் வெறுமையாக இருந்தது. எனக்குள் ஆற்றாமையும், எரிச்சலும் மண்டியது.

”சாண்டி உன் இயல்பு அது. ஆனால் அது பிறருக்கு கொடுமையாக இருக்கிறதே? நானென்ன செய்ய? என்னை மன்னித்து விடு தாயே!” என்று மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தேன். இதில் நானென்ன செய்வது? கையாலாகத்தனத்தின் வேதனை தான் மனசெல்லாம் நிரம்பி இருக்கிறது.

1 comments:

ராஜி said...

பாவம் சாண்டி

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.