குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, March 27, 2011

மாதா பிதா குரு தெய்வம்


மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு எனக்கு நீண்ட நாள் கழித்து உதாரண விளக்கம் கிடைத்தது. எனது மகள் கோவையில் இருக்கும் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா பள்ளியில் எல்கேஜி படித்துக் கொண்டிருக்கிறார்.நேற்றைக்கு காலையில் நானும் மனைவியும் மகளின் பிரமோஷன் கார்டை வாங்குவதற்காக பள்ளிக்குச் சென்றிருந்தோம்.  நீண்ட நேரம் கழித்து திரும்பிய மனைவியிடம் “ஏன் இவ்வளவு தாமதம்?” என்று கேட்டேன்.


”வீட்டில் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தவர்கள், பால் குடி மறந்து பள்ளிக்கு வந்து , என்னையேச் சுற்றி வந்தார்கள். அவர்களுக்கு ஏபிசிடி சொல்லிக் கொடுத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, தூங்க வைத்து, பாட்டுச் சொல்லிக் கொடுத்து வந்தேன். என் பின்னாலேயே சுற்றிச் சுற்றி வருவார்கள்.சில பிள்ளைகள் பேசவே மாட்டார்கள். ஆனால் கடந்த ஒரு வாரமாக பேச ஆரம்பித்தார்கள். இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு, வகுப்பை விட்டுச் செல்லும் போது பேசுகிறார்களே என்று அழுகை அழுகையா வருகிறது. தூங்கும் நேரம் மட்டுமே அம்மாவிடம் இருந்தார்கள். பெரும்பாலான நேரத்தில் என்னுடனே கழித்த பிள்ளைகள் இப்போது வகுப்பை விட்டுச் செல்லுவதை நினைத்து என்னால் தூங்கவும் முடியவில்லை. சாப்பிடவும் முடியவில்லை . இனி யார் என்னைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். யாருடன் நான் விளையாடுவது? யாருக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பது? ”என்று எனது மகளின் ஆசிரியை அழுதார் என்றுச் சொன்னார். அழுது அழுது ஆசிரியையின் முகம் வீங்கிப் போய் இருப்பதாக சொல்ல, என் மனது பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சமல்ல. மனைவியோ கண்களில் கண்ணீரோடு என்னிடம் என் மகளின் ஆசிரியைப்பற்றி சொல்லிக் கொண்டு வந்தார். எந்த ஒரு பிரச்சினைக்கும் கலங்காத என் கண்கள் நேற்றைக்கு கலங்கி நின்றன.

இதற்கு தீர்வு தான் என்ன? இது தீர்வு காண வேண்டிய ஒன்று அல்ல. அந்த ஆசிரியையின் அன்பினை காட்டுகிறது. இனி புதிதாய் வந்து சேரக்கூடிய மாணவர்களோடு பழக ஆரம்பித்தால் கொஞ்சம் கொஞ்சமாய் புதிய மாணவர்கள் மீது பிரியம் கொள்வார். ஆனாலும் கடந்த ஒரு வருடமாய் பழகிய அந்த அன்பு உள்ளம், வரப்போகும் பிரிவினைக் கண்டு துடித்த, அந்த அன்பு உள்ளத்தின் பரிதவிப்பு கண்டு எங்கள் மனது பட்ட வேதனையை வார்த்தையால் எழுத முடியாது.

என் மகள் வகுப்பில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசில் பெற்றார். அதற்கு திருமதி நொய்லா அவர்களே காரணம். ஆசிரியை திருமதி நொய்லா அவர்களுக்கு பெற்றோர்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போன்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கிடைப்பது அரிதிலும் அரிது. இவரைப் போன்ற ஆசிரியைகளை நிர்வாகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது எனது ஆவல்.


திருமதி நொய்லா அவர்கள் தான் உண்மையான குருவிற்கு ஒரு எடுத்துக்காட்டு. முன்னோர்கள் இவர்களைத் தான் ”குரு” என்றழைத்தார்கள். காசே பிரதானமாகக் கொண்ட இவ்வுலகில் அன்புள்ளத்தோடு வாழும் இவ்வகை மனிதர்களால் தான் உலகம் இன்னும் ஜீவித்து வருகிறது. 

திருமதி நொய்லா அவர்களின் அன்பிற்கு இவ்வுலகில் ஈடானது ஒன்றுமே இல்லை. கடவுள் இவருக்கும், இப்பள்ளிக்கும் ஆசீர்வாதங்களை வழங்க நாங்கள் பிரார்த்திக்கிறோம்.




1 comments:

Unknown said...

so sensitive !

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.