குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, November 1, 2014

நிலம் (14) - இப்படியும் பிரச்சினை வருமா?

மாலை நேரம். மழை தூரிக் கொண்டிருந்தது. சிலு சிலுவென காற்று. அலுவலகத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு பத்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.

என்னைத் தேடிக் கொண்டு ஒரு வயதானவர் வந்தார். வரவேற்று அமர வைத்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மெதுவாக அவர் வந்த காரணமென்ன என விசாரித்தேன்.

அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு தலை சுற்றியது. 

எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவு என்பது உண்டு என்பது என்னைப் பொறுத்தவரை உண்மையே. தேவர் சமுதாயத்தில் பிறந்ததால் என்னவோ எனக்கு விசுக்கென்று மூக்கின் மீது கோபம் வந்து விடும். ஆள் சரியில்லை என்றால் அடுத்த நொடியில் முடிவெடுத்து விடுவேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. 

எனது குரு நாதர் தனபால் அவர்கள் நில பேரங்களில் நடந்து கொள்ளும் விதம், அவர் எப்படி ஒவ்வொரு நில பேரங்களையும் வெற்றிகரமாக செய்கிறார் என்பதற்கு காரணம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். 

பொறுமை, நிதானம் மேலும் ஒரு காரணம் உண்டு (அது ரகசியம்)

அவரின் வழிகாட்டுதலின் காரணமாக, அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடத்தின் காரணத்தால், சமீபத்தில் குத்து வெட்டாக நடந்து விட வேண்டிய ஒரு பிரச்சினையை வெகு சுமூகமாக முடித்தேன். அது ஒரு தனிக்கதை. அதை இன்னொரு பதிவாகப் பார்க்கலாம்.

சரி பெரியவர் பிரச்சினையைப் பார்ப்போம்.

பெரியவர் மூன்று ஏக்கர் நிலத்தினை ஒரு கூட்டுக்குடும்பத்திடம் இருந்து கிரையம் பெற்றிருக்கிறார். கொஞ்ச நாள் சென்ற பிறகு மூன்று ஏக்கரில் சுமார் இரண்டு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். நாட்கள் கழிந்தன. மீதமிருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தினைக் கிரையம் செய்து கொடுக்க சுத்தம் செய்ய முயன்ற போது வேறொருவர் வந்து தடுத்திருக்கிறார். அந்த ஒரு ஏக்கர் பூமி எனக்குச் சொந்தமென்று சொல்லி இருக்கிறார் தடுத்தவர்.

இருவரும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவரிடம் முன்பு நிலத்தை விற்றவர்களில் ஒருவர் ஒரு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். 

கூட்டுக் குடும்பச் சொத்தினை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக விற்று விட்டார்கள், மீண்டும் மறுபடியும் விற்ற சொத்தை வேறு ஒருவருக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்த ஒருவர் மூலம் விற்க முடியுமா? இதுதான் பிரச்சினை. 

இதில் நடந்திருப்பது என்ன தெரியுமா?

கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் சொத்தினை விற்கும் போது கோர்ட்டில் பாகம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவர்களின் பணத்தேவைக்காக பெரியவரிடம் சொத்தில் ஒரு பகுதியை விற்றிருக்கின்றார்கள். இது தெரியாமல் பெரியவர் சொத்தினை வாங்கி இருக்கிறார். பெரியவர் தான் வாங்கிய மூன்று ஏக்கர் பூமியில் இரண்டு ஏக்கர் நிலத்தினை விற்று விட்டார். 

கோர்ட்டு மூலம் பாகம் பிரிக்கப்பட்டு அவரவர் சொத்துக்கு பாகம் வந்ததும் பாகத்தைப் பெற்றவர் மீண்டும் அந்தச் சொத்தில் ஒரு ஏக்கரினை வேறொருவருக்கு விற்றிருக்கின்றார்.

பெரியவர் கிரையம் பெற்றதும், விற்றதும் சட்டப்படி சரியானது அல்ல. இதில் தவறு செய்திருப்பவர்கள் அந்தக் கூட்டுக் குடும்பத்தார்கள். வழக்கு கோர்ட்டில் இருக்கும் போதே சொத்தினைக் கிரையம் செய்து கொடுப்பது கிரிமினல் குற்றம்.

இப்போது பெரியவருக்குப் பிரச்சினை. சொத்தின் விலையோ பெரிது. என்ன செய்வது? கையைப் பிசைந்துக் கொண்டிருக்கின்றார் பெரியவர்.

பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். பார்ப்போம். 

சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை டெம்ப்ளேட்டாக எழுத முடியாது. பலரும் மெயிலில் கேட்கின்றார்கள். எப்படி எழுதுவது? சாத்தியமிருக்கிறதா? ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருப்பதைக் கவனித்துக் கொண்டுதானே வருகின்றீர்கள்?

குறிப்பு: லீகல் ஒப்பீனியனுக்கு எவ்வளவு கட்டணம் என்று பலர் கேட்கின்றார்கள். பல பேர் போனில் விபரம் கேட்கின்றார்கள். லீகல் ஒப்பீனியனுக்கு ரூபாய் 25,000/- கட்டணம். இதில் பத்திரத்தின் டிராப்டும் அடங்கும். கிரையம் முடித்ததும் மீண்டும் லீகல் ஒப்பீனியன் வழங்கப்படும். கட்டணத்தை ஆவணங்களுடன் வங்கி வரையோலையாக “M.THANGAVEL" என்ற பெயருக்கு அனுப்பி வைக்கவும். 

அலுவலக முகவரி மேலே இருக்கிறது.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.