கரூர் விவேகானந்தா மேல் நிலைப்பள்ளியில் கணிப்பொறி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கணிப்பொறி என்றாலே ஒரு கிளாசிக்காக இருந்தது. சாதாரண பிளாக் அண்ட் வொயிட் கணிப்பொறியின் (விண்டோஸெல்லாம் அப்போது பிரபலமாகவில்லை) விலையே அறுபது ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. பேசிக், டிபேஸ் என்ற கணிணி மொழிகள் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டன.
எனக்கு கரூர் டி என் பி எல் பள்ளிக்கு எக்ஸ்டர்னல் எக்ஸாமினராகச் செல்லும் படி அரசு ஆர்டர் போட்டிருந்தது. தேர்வு நாளன்று பள்ளியில் இருந்து கார் அனுப்பி வைத்து விட்டார்கள். வேண்டாம் என்று மறுத்தும், காலையில் அமர்ஜோதி ஹோட்டலில் டிபன் வாங்கிக் கொடுத்தார்கள். (ஆரம்பமே அசத்தல்)
கரூரில் டி என் பி எல் பள்ளி என்றால் மிகவும் புகழ் பெற்றது. அப்பள்ளி பல தடவை நல்ல ரிசல்ட் கொடுத்துக் கொண்டு வந்தது என்றெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன்.
மலைக்க வைத்த லேப். மாணவர்கள் படு சுத்தமாய் ரொம்ப மரியாதையாய் (வேறு வழி இல்லை) பேசினார்கள்.
அங்கிருந்த இண்டர்னல் எக்ஸாமினர் அதாவது அப்பள்ளியின் கணிப்பொறி ஆசிரியர் (பெண்மணி) அன்பொழுக வரவேற்றார்.
மாணவர்களுக்கு கொஸ்டின் பேப்பர் கொடுத்து எக்ஸாம் எழுதச் சொல்லி பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் எழுதி முடித்து விட்டார்கள். ஒவ்வொரு பேப்பராய் கரக்சன் செய்து கொண்டிருந்த போது ஃப்ளோ சார்ட்(FLOW CHART)டில் ஒரு தவற்றினைக் கண்டுபிடித்தேன். சொல்லி வைத்த மாதிரி அனைத்து மாணவர்களும் அதே தவற்றினைச் செய்திருந்தார்கள். சிலர் மட்டும் சரியாக வரைந்திருந்தார்கள். ஃபார் லூப்பில் மேல் கீழ் அம்புக்குறியை இடாமல் பிராக்டிக்கல் நோட்டிலும், தேர்வின் விடைத்தாளிலும் எழுதி இருந்தார்கள்.
தேர்வில் எக்ஸாம் பேப்பர் திருத்தி மதிப்பெண் போடுவதற்கு சில வழிமுறைகள் கொடுத்திருப்பார்கள். டயக்கிராம் வரைவதற்கு இத்தனை மார்க் என்று இருக்கிறது. ஆசிரியரிடம் கேட்ட போது நான் லூப் லைனெல்லாம் போட்டு படிக்கவில்லை என்றுச் சொன்னார். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வழிகாட்டி புத்தகத்தை வரவழைத்துப் பார்த்த போது அதில் சரியாக லூப் லைன்கள் காட்டப்பட்டிருந்தன. அதைக்காட்டி விபரம் கேட்ட போது ஆசிரியர் வேறு மாதிரிப் பேச ஆரம்பித்தார். நீங்கள் வேண்டுமென்று பிரச்சினை செய்கின்றீர்கள் என்று ஆரம்பித்தார். சில பெண்களிடம் இதுதான் பிரச்சினை. அவர்கள் தவறே செய்தாலும் நாம் சரியென ஒத்துக் கொள்ளவில்லை எனில் அதை அவர்கள் வேறு மாதிரி திசை திருப்பி விடுவார்கள்.
எனக்குள் டென்ஷன் எகிறியது. இதற்குள் மேனேஜ்மெண்ட்டிற்கு விபரம் தெரிந்து பிரின்ஸிபல் விசாரிக்க வந்து விட்டார். அவரிடம் தெளிவாக எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள் என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
மாணவர்கள் அனைவரும் எக்ஸாம் எழுதி முடித்து விட்டனர். பேப்பர் அனைத்தும் என் கையில் இருக்கிறது. ஃப்ளோ சார்ட் அனைத்தும் தவறாக இருக்கிறது. கட்டாயம் மார்க் குறைத்தே ஆக வேண்டிய சூழல். விபரம் தெரிந்து மாணவர்கள் உட்பட அங்கு பலருக்கும் டென்சன். மதியம் பேப்பர் கரெக்ஷன் வித் கணிப்பொறியில் பிராக்டிக்கல் செய்முறை விடை சரிபார்க்க ஆரம்பித்தேன். ஆசிரியரை வெளியில் சென்று விடச் சொல்லி விட்டேன். முறைத்துக் கொண்டே வெளியில் சென்று விட்டார்.
நன்றாகப் படிக்கும் மாணவர்கள் புரோகிராமை நன்றாகச் செய்து விடையைக் காட்டினார்கள். அவர்களிடம் பிராக்டிக்கல் நோட்டினையும், விடைத்தாளையும் கொடுத்து ஃபார் லூப்பை மீண்டும் சரி செய்யச் சொல்லி அதன் பிறகு கேள்விகளை ஆரம்பித்தேன்.
மாணவிகளில் பல பேர் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் விழிக்க ஆரம்பித்தனர். அவர்களை சகஜ நிலைக்கு திரும்ப கொண்டு வர, ஒரு மாணவியிடம் வத்தல் குழம்பு வைக்கத் தெரியுமா? என்று கேட்டு அப்பெண் அப்படின்னா என்னங்க சார்? என்று என்னிடமே கேட்டு எனக்கு டென்சன் ஏற்றினார். விசாரித்துப் பார்த்தால், அம்மாணவி வட நாட்டைச் சேர்ந்தவராம். மாணவர்களிடம் சகஜமாகப் பேசி கணிப்பொறி பற்றிய ஒரு சில கேள்விகளை கேட்டு விடை பெற்று அதைக் குறித்துக் கொண்டேன்.
எல்லாத் தேர்வுத்தாளையும் திருத்தி முடித்து, மார்க்கை அரசின் மார்க் ஷீட்டில் குறித்து கையெழுத்துப் போட்டு சீல் வைத்து ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டு திரும்பினேன்.
ரிசல்ட் வந்த பிறகு அப்பள்ளியில் இருந்து ஒரு மாணவன் நேரில் வந்து நன்றிச் சொல்லி விட்டுச் சென்றான். அது ஏன் என்பது அரசு ரகசியம் என்பதால் “ரகசியமாய்” இருக்கட்டும்.
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்