குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, May 10, 2021

ஒன்றிய அரசின் இலவச ஆண்ட்ராய்ட் ஆப் உருவாக்கும் பயிற்சி மற்றும் பல இலவச பயிற்சிகள்

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே இன்று உள்ளூர பதைபதைப்பில் இருக்கிறது. என்னால் உறுதியாக கூற முடியும் இதன் முழு காரணம் நமது ஆட்சித் திறனற்ற ஒன்றிய அரசும் அதன் தலைவர்களும் மட்டுமே.

மக்களை எப்போதும் பதைபதைப்பில் வைத்துக் கொள்வது ஒன்றிய அரசின் தலைமையில் இருக்கும் பிஜேபியின் அஜெண்டா. அதுமட்டுமல்ல இன்னும் பல வித கொள்கைகள் உண்டு. அவைகளை எல்லாம் நெட்டில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

கொரானா பரவலை எளிதில் ஒரு சில கடுமையான சட்ட திட்டங்களைப் போட்டு கட்டுப்படுத்தி இருக்கலாம். மக்களின் மீது அபிமானம் உள்ள தலைவர்களுக்கு அது தெரியும். ஆனால் அதிகாரத்தின் மீது மட்டுமே வெறி கொண்டலையும் தலைவர்களுக்கு மக்களின் மீதான அபிமானம் பற்றியெல்லாம் கவலை இல்லை. உலகப் பத்திரிக்கைகள் காறி உமிழ்கின்றன. அதனாலென்ன துடைத்துக்  கொள்வார்கள். 

இந்திய மக்கள் ஆப்பசைத்த குரங்காய் மாறி விட்டார்கள். ஆனாலும் தமிழகத்தில்  பாதுகாப்பு இருக்கிறது. ஆக்கபூர்வமான, குடிமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அவர் தமிழையும், தமிழர்களையும் பாதுகாப்பார் ஏனென்றால் அவர் ஒரு சிறந்த நிர்வாகி.

ஒன்றிய அரசின் கட்ட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்வயம் என்ற அமைப்பு இந்திய மாணவர்களுக்கு இலவச கல்வி பயிற்சியை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இப்பயிற்சிகளை கட்டணம் கட்டி படிக்க முனைந்தால் லட்சத்தில் செலவாகி விடும். ஆகவே கீழே இருக்கும் இணைப்பினை சொடுக்கி என்னென்ன கோர்சுகள் இலவசமாய் படிக்க இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து படித்து முன்னேறவும்.

இணைப்பு : https://swayam.gov.in 


 

 

10.05.2021 இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான செய்தி கீழே


 

 

Friday, May 7, 2021

தளபதி முதலமைச்சர் - ஜோதிடம் பொய் - சாட்சிகளுடன் ஒரு ஆய்வு

வாக்கு எண்ணிக்கை அன்று நான் டிவி பார்க்கவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். ஞானக்கூத்தனின் கவிதைகள் சுவாரசியமாக இருந்தது. 

மாலையில் திமுக ஆட்சிக்கு வருகிறது என்று தெரிந்தது. மகிழ்ச்சி. ஏனென்றால் யாருக்கு ஓட்டுப் போடலாம் என்ற பதிவினை எழுதி இருந்தேன். அது நடக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளுக்குள் இருந்தது. வெற்றி.

எனக்கு ஏன் அதிமுகவை பிடிக்காமல் போனது?

மனித சமூகத்தில் பேரவலங்கள் நடக்கும் போதெல்லாம் அதற்கு யாரோ ஒரு துரோகிதான் காரணமாக இருப்பான்.

அதிமுகவிற்கு முதலில் துரோகம் செய்தவர் ஓபிஎஸ். அடுத்த துரோகம் இ.பி.எஸ். 

துரோகிகள் எப்போதும் துரோகத்தைத்தான் செய்வார்கள். அவர்களுக்கு நன்மை செய்வது பற்றி தெரியாது. தான், தன் சுகம், தன் மக்கள் என்று தான் சிந்திப்பார்கள். அதைத்தான் இருவரும் செய்தார்கள். அதுமட்டும் காரணம் அல்ல.

சட்டசபைக்குள் ஓ.பி.எஸ் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இணைந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அது உச்ச நீதிமன்றத்தில் வழக்காக விசாரிக்கப்பட்டு இன்னும் தீர்ப்பு வழங்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை கேலிக்குரியதாக்கி தர்மத்தை அழித்த கயமைத் தனத்தை பிஜேபியும் அதிமுகவும் இணைந்து செய்தன. 

காரணம் என்ன? பதவி ஆசை. 

இதுமட்டுமின்றி வேறென்னவாக இருக்க முடியும்? 

பிஜேபிக்கு நன்கு தெரியும் இருவரும் துரோகம் செய்தவர்கள் என்று. நாளை இதை அவர்களுக்கே திரும்பவும் செய்வார்கள் இவர்கள். செய்யமாட்டார்கள் என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது. அம்மிக்கல் என்றைக்கும் கோவில் சிலை ஆக முடியாது. ஏனென்றால் துரோகிகளின் டிசைன் அது. 

அதுமட்டுமல்ல இன்றைக்கு இந்தியர்களின் நம்பிக்கையாக இருக்கும் ஒரே நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் இந்தச் செயலால் சீரழிக்கப்பட்டது. இனி பதினோரு பேரின் அக்கிரமத்திற்கு தீர்ப்பு வந்தால் தான் என்ன வரவிட்டால் தான் என்ன? இனிமேல் வரக்கூடிய அந்த தீர்ப்பினால் என்ன பயன்? கேலிகுரியதாகி நிற்கிறது உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்சினையினால். இதற்கும் இவர்களே காரணம் அல்லவா? உலகிற்கே தெரியும் பதினோறு பேரும் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் என்று. பல்வேறு சாட்சியங்கள் இந்திய நீதித்துறையிலே கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் அவர்கள் பதவி நீக்கம் பெறவில்லை. அவர்கள் தன் பதவிக் காலம் வரை பதவியில் இருந்தார்கள். ஏனென்றால் துரோகத்தினை இந்த மக்களும் ஆட்சியும் அமைப்பும் ஏற்றுக் கொள்கின்றன. அதற்கான விலையைத்தான் இன்றைக்கு நாமெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

நல்லவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் அல்லவா மக்களின் துயரமென்ன என்று அறிந்து அதற்கேற்ப ஆட்சி செய்வார்கள்? ஆனால் நாம் செய்வது என்ன? 

சுரைக்காய் விதை போட்டு விட்டு, அரிசி வருமென்று நினைப்பது நம் தவறு அல்லவா?

அறமும் தர்மமும் தண்டனை தருகின்றன என்பது வரலாறு.

உடனே அவங்க யோக்கியமா என்று ஆரம்பிக்க வேண்டாம். பத்தாண்டு காலம் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளைப் படித்துப் பாருங்கள் தெரியும்.

அறம் மீறிய எந்தச் செயலையும் என்னால் ஏற்கவே முடியாது. ஏனென்றால் அதுதான் நம்மை எப்போதும் காத்து வருகிறது. இல்லையென்றால் இந்த நேரம் ஹிட்லரின் ஆட்சி அல்லவா இங்கு நடந்து கொண்டிருக்கும்?

நேர்மையாக இருக்கும் எந்த ஒரு தலைவருக்காக உழைத்திட இந்த மானிடம் தயாராக இருக்கும் எப்போதும். உண்மையற்ற, போலித்தனமான, கயமை எண்ணம் கொண்டவர்களை மக்கள் மன்னித்தாலும் அறமும், தர்மமும் மன்னிக்காது.

புதிய முதலமைச்சராக வரக்கூடிய ஸ்டாலின் பக்குவம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்கு திமுகவில் நிரம்பவும் பிடித்தது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு. மக்களிடம் உரையாடுவது போல அவர்களையும் தன் பேச்சுக்குள் இழுத்து கொண்டு வந்து, அனைவரையும் தன் மீது கவனம் செலுத்த வைக்கும் எளிமையான பேச்சு. 

இனிவரும் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கான அரசியல் களமாகத்தான் தமிழகம் இருக்கும் என நினைக்கிறேன். நல்லன செய்தால் நல்லன நடக்கும்.

* * *

இந்தக் களேபரத்தில் ஒரு நாள் ஒரு புத்தகம் படிக்க கிடைத்தது. படித்து முடித்ததும் அதிர்ந்தே போனேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் சில கீழே காட்டப்பட்டிருகின்றன. படித்துப் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் என்னிடம் இருக்கும் பல்வேறு ஜோதிட புத்தகங்களுடன் இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை ஆராய்ந்து பார்த்தேன். எல்லாம் ஒன்றுதான். எதுவும் அட்சரமும் பிசகவில்லை. அப்படியே இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றவில்லை, சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்கிறார் இந்த வேதகால புராண ஆராய்ச்சியாளர். அதன் அடிப்படையில் இன்றைய ஜோதிடம் இருக்கிறது. ஆரம்பம் தவறு. ஆனால் விடை மட்டும் சரி என எவ்வாறு சொல்ல முடிகிறது என்று சிந்தித்தால் அறியாமை என்ற வார்த்தை தான் முன்னால் வருகிறது.

மனது கிடந்து அடித்துக் கொண்டது. கோவில்களில் இருந்து எல்லாவிதமான நம்பிக்கைகளும் ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டவை அல்லவா? ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் தவறான கணக்கு எப்படி மனித வாழ்க்கையில் தாக்கத்தை இத்தனை காலமும் ஏற்படுத்தி இருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனென்றால் எதை ஆராய்ச்சி செய்ய இயலாதோ அதைப் பற்றி பேசினாலோ எழுதினாலோ எவராலும் பதில் சொல்ல முடியாது அல்லவா? தெளிவான கட்டமைப்பு. தெளிவான பாதை. மக்களை முட்டாளாக்கும் அற்புத திட்டம். ஜோதிடம் பொய் என்பதை நிரூபி என்றால் நம்மிடம் ஏதும் தரவுகள் இருக்காது. ஆகவே தான் அந்தக் காலகட்டத்தில் இந்த ஜோதிடம் பெருகி வளர்ந்து மனித வாழ்வியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே வருகிறது.

அவர் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டு விட்டார், அதுவெல்லாம்  இந்த ஜோதிடத்தில் கணக்கில்லை என்று வாதாடுவீர்கள். வைத்தீஸ்வரன் கோவில் ஏடுகள் எல்லாம் பொய்யா? என்பீர்கள். 

இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு ராசிக் கட்டங்களுக்குள் அடைபடும் ஜாதகத்தில் ஒன்பது நவக்கிரங்களின் பெயர்ச்சியால், அவைகளின் சேர்க்கை, விலக்கு ஆகியவைகளால் தான் பலன்கள் சொல்லப்படுகின்றன அல்லவா? டும் 12 ராசிக் கட்டங்களில் ஒன்பது நவக்கிரங்களில் முதல் கிரகமான சூரியன் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அறிவியல் நம்மிடம் யாரும் மறுக்கவே முடியாத சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது என்று காட்டி இருக்கிறது. இப்படியான சூழலில் நகரவே நகராத சூரியன் எங்கனம் ராசிக்கட்டங்களுக்கு நகர்ந்து செல்லும்? இதைத்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன். ஜோதிடம் சூரியன் பூமியைச் சுற்றுகிறது என்கிறது.

லீலாவதி சந்திர க்ரஹணம் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் விஷயமும் இப்போதைய ஜோதிட கணக்குகளும் ஒன்றாகவே இருப்பதை நீங்கள் மறுக்க முடியாது. நெட்டில் தேடுங்கள். இந்தப் புத்தகம் கிடைக்கிறது. அது போலியானது என்று சொல்வீர்கள். அதையெல்லாம் நான் நிராகரிக்கிறேன்.

ஏனென்றால் நம் மூளைக்குள் இருப்பது பிறரின் சிந்தனைகள், கருத்துக்கள், அவர்கள் காட்டிய வழிகள். நாம் நாமாக எப்போதும் இருந்ததே இல்லை.

வாழ்வியலுக்கு கல்வி பதிவு என்பது வேறு. வாழ்க்கையை நெறிப்படுத்தும் வாழ்வியல் கல்வி என்பது வேறு. பொருளாதார அறிவு என்பது வேறு. வாழ்க்கை அறிவு என்பது வேறு. உடனே கொடி பிடிக்கும் நம் மனதுக்குத்தான் இவ்வரிகள்.

ஆயிரக்கணக்கில் ஜோதிடர்கள் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்னிடம். இனி கோவில்களுக்குச் செல்லும் போது ராகு, கேது, கிரகங்களை என் மனது எப்படி பார்க்கும் என்று சிந்திக்கிறேன்.

என் முன்பு கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்பின் போலித்தனத்தை என் மனது இனி எப்படி ஏற்கும்?

இனிமேல் குல தெய்வ வழிபாட்டினைத் தவிர வேறு எதையும் என்னால் ஏற்க இயலுமா என்றே தெரியவில்லை. இன்றைக்கும் தஞ்சை பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது சாட்சி. அம்மன் கோவில்களில் நவக்கிரகங்கள் இருப்பதில்லை என்பது இன்னொரு சாட்சி.

எனது மதிப்பிற்குரிய சுவாமி ஆத்மானந்தா அவர்கள் என்னிடம் அடிக்கடிச் சொல்வார். என்னை துறவி ஆக்கியது “வாழ்க்கையில் வெற்றி” என்ற அப்துற் றஹீம் எழுதிய புத்தகம் என. 

எனக்கு காசையும், நேரத்தையும் மிச்சமாக்கி செய்யும் தொழிலே தெய்வமென நம்பும்படி செய்தது 1961ம் வருடம் மறைந்த சுப்ரமணிய சாஸ்திரிகள் எழுதிய லீலாவதி சந்திர க்ரஹணம் என்ற புத்தகம் என்றால் அது மிகையாகாது.

இது எனக்கு நானே எழுதிக் கொண்ட பதிவு. ஆகவே நீங்கள் இப்பதிவினைப் படித்தாலும் என்னைப் போல சிந்திக்க வேண்டாம். உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் எது உண்மை, எது பொய் என்பதை உங்களின் அறிவு கொண்டு தெளிந்து கொள்ளுங்கள்.





 
கீழ்கண்ட படத்தில் இருப்பது இதே ஆசிரியர் எழுதிய தாரகா லீலாவதி வானசாஸ்திரம் புத்தகத்தில் 6வது பக்கம்



Friday, April 30, 2021

இயக்குனர் கேவி ஆனந்த் - ஒரு முற்றுப் பெறாத நாவல்

எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு மாலைமதி, ராணிமுத்து, குமுதம் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் ஆனது. ஐந்தாம் வகுப்பின் போது ராணிகாமிக்ஸ் படிக்க ஆரம்பித்து இருந்தேன்.

அடுத்த அடுத்த தொடர் நாட்களில் சுபா, ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பி.டி.சாமி போன்ற நாவல் ஆசிரியர்களின் நாவல்கள் படிக்க கிடைத்தன. குமுதத்தில் தொடராக வரும் சாண்டில்யன் நாவல்களின் தொகுப்புகள் கிடைத்தன.

கசாலி என்ற நண்பன் மூலமாக அம்புலிமாமா போன்ற பல காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இறந்து போன எனது நண்பன் ஜகாங்கீர் ஆலம் மூலமாக பலப்பல புத்தகங்கள் கிடைத்தன. 

பாடப்புத்தகங்கள் அதனுடன் இம்மாதிரியான புத்தகங்களுடன் பள்ளிகளில் இயங்கும் நூலகப் புத்தகங்களையும் அவ்வப்போது படிப்பதுண்டு.

இப்படியான நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) எழுதும் சுபா நாவல், சூப்பர் நாவல் ஆகிய நாவல்களில் வரக்கூடிய அட்டைப்படங்கள் படு டெரராக இருக்கும். அப்போதெல்லாம் இண்டெர்னெட் கிடையாது.

அந்த நாவல்களில் வரும் புகைப்படங்கள் நாவலில் வரக்கூடிய ஒரு சிறு சம்பவத்தைக் காட்டும். ஒவ்வொரு புகைப்படமும் அந்த வயதில் எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தரும்.




இப்படித்தான் எனக்கு கே.வி.ஆனந்த் புகைப்படக்கலைஞராக அறிமுகம் ஆனார். சுபாவுக்கு கடிதம் எழுதி பதில் கடிதம் கூட வந்தது. அப்போது கே.வி.ஆனந்த் பற்றியான முழு ஈடுபாடு எனக்கு இல்லை.

அவரின் முதல் படமான கனா கண்டேன் திரைப்படத்தினை இதுவரை பார்க்கவில்லை. ஏனோ அது என்னை ஈர்க்கவே இல்லை. அடுத்து அவர் இயக்கி வெளியான அயன், கோ, மாற்றான், அனேகன், கவன் மற்றும் காப்பான் ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன்.

ஃபேண்டசி படங்கள் அவரின் தேர்வாக இருந்தது. சுபாவின் உளவாளி நரேந்திரன் வைஜெயந்தியின் ஃபேண்டசி நாவல்களைப் போல படமும் அப்படியே வந்தன. அயன் மற்றும் கோ விறுவிறுப்பினை கூட்டும் பாலிவுட் படங்கள் போல இருந்தன. அனேகன் வேறு வகையானது. கவன் மற்றும் காப்பான் இரண்டும் புனைவுகளின் உச்சம். ரசிக்கலாம். ஆனால் அது பார்வையாளனுக்கு எந்த வித உணர்ச்சியையும் தரவில்லை. காப்பான் போன்ற ஒரு மொக்கைப்படத்தினை கே.வி.ஆனந்த் எப்படி இயக்கினார் என்று புரியவே இல்லை.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெறும் அனுபவங்களின் சாரம் அவனை கூர்மையாக்கும். பலருக்கு அது என்றைக்குமே தெரியாமலே போய் விடும். 

தமிழ் சினிமாவின் கேடுகெட்ட ரசனை உலகத்தில் அவர் தன் பெயர் சொல்லக்கூடிய ஒரு நல்ல படத்தையாவது இயக்கி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

பல்வேறு குடும்ப நாவல்களை எழுதிய சுபாவின் நண்பரான கே.வி.ஆனந்த் ஏன் குடும்பதளத்தில் படைப்புகளை உருவாக்க தவறினார் என்பதற்கு ஒரே ஒரு காரணமாய் தெரிவது, அவர் தன்னை இன்னொரு ஷங்கராக நினைத்து விட்டார் என்பதாக இருக்கலாம்.

இயக்குனர் ஷங்கரின் கதைகள் காப்பி அடிப்படையிலானவை. காட்சி பிரம்மாண்டங்களையும், நடிகர்களின் புகழையும் வைத்து அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவரின் படைப்புகள் ரசிகர்களின் பல்வேறு கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகிக் கிடக்கின்றன. விற்பனை அளவிலும் கூட அவை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதில்லை. நடிகருக்கும், இயக்குனருக்கும் சம்பளம் கிடைத்து விடுவதுதான் தான் இவ்வகை இயக்குனர்களின் முதல் நோக்கமாகும். அவர்கள் தங்களை நம்பி பணம் செலவழிப்பவர்களை நட்டாற்றில் விட்டு விடுவார்கள். அதுமட்டுமின்றி நல்ல படங்களைத் தர வேண்டுமென்ற ஆவல் இல்லாதவர்கள்.  இயக்குனர் கே.வி.ஆனந்த் தன் படங்களை இவரைப் போல உருவாக்கியதால் இவ்வாறு எண்ணத் தோன்றிற்று.

கே.வி.ஆனந்த் கொரானாவால் தன் இன்னுயிரை இழந்து விட்டார். அது ஃபேண்டசி கதை விரும்பிகளுக்கு மாபெரும் இழப்பு. அவரின் சூப்பர் நாவல் புகைப்படங்கள் இன்றைக்கும் என் கருத்தை விட்டு அகலா வண்ணம் என்னை அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. அவரின் மறைவு நம்பக்கூடியதாக இல்லை. 

அவர் சுபா அவர்களின் தொடரும் நாவல்களின் வரிசைகள் போல வரலாற்றில் தொடரும் என்று போட்டு விட்டுச் சென்று விட்டார்.  அவர் முற்றும் போடாத ஒரு நாவலாகிப் போனார்.

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.