குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, January 6, 2012

எச்சரிக்கை அயோடின் உப்பு ஆபத்து



எனக்குப் பிடித்த எழுத்தாளர், பேச்சாளர், பிடித்த அரசியல்வாதி திரு பழ.கருப்பையா அவர்கள். எதிலும் நேர்பார்வை, நேர்பேச்சு, பட்டென்று தெரிக்கும் வார்த்தைகள் என்று தூள் கிளப்பும் அவரிடம் எனக்குப் பிடித்தது அவரின் தார்மீக கோபம். அவரின் கோபத்தை நான் பொங்கி வழியும் எரிமலையாய்ப் பார்ப்பேன். கண்ணதாசனைப் போன்ற குட்டை உருவம், எனக்குப் பிடித்த செட்டியார்த்தனமான பேச்சு, நடை என்று உள்ளத்தினைக் கொள்ளை கொண்டவர் திரு பழ.கருப்பையா.

ஒப்புக்கும் பெறாத விஜய் டிவியின் தொடர்களில் “என் பெயர் மீனாட்சி” என்ற தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் திரு.பழ கருப்பையா நடிக்கிறார் என்றவுடன், ஒரு நாள் கூட விடாமல் அத்தொடரைக் கவனித்தேன். அவர் வரும் சீனுக்காக காத்திருப்பேன். அந்தளவுக்கு அவரின் எழுத்தின் மீதும் எனக்கொரு ஈர்ப்பு.

அவரின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.நேற்று முதல் நாள் தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றினை வாசித்த போது திடுக்கிட்டேன். அயோடின் உப்பால் தெற்கு தமிழர்கள் பெறும் நோய் பற்றி விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே கீழே. நன்றி தினமணிக்கும், ஆசிரியர் திரு.பழ கருப்பையா அவர்களுக்கும்.

பெரிய பதிவாக இருக்கிறதே என்பதற்காக உடனே விண்டோவை மூடிவிடாமல் அமைதியாய்ப் படியுங்கள். உங்களின் நலத்திற்காக, ஏதாவது சிலர் தெரிந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக எழுதுகிறேன்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்.

இனி, திரு பழ. கருப்பையாவின் ஆவர்த்தனம்....



வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


உப்பைப் பயன்படுத்தாத மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை.

உப்பைப்போல், அதையும்விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதும், இன்றியமையாததும் தண்ணீர்!

ஆகவே, மருந்துபோன்ற ஒன்று எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் கட்டாயம் அரசுக்கு இருக்குமானால் ஒன்று அதைத் தண்ணீர் விநியோகத்தில் கலந்து செலுத்தவேண்டும் அல்லது உப்பில் கலந்து செலுத்தவேண்டும்.

ஒவ்வொருவரும் குடிக்கின்ற தண்ணீர் முற்ற முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எல்லா மக்களும் பயன்படுத்துகிற உப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர முடியும்!

அயோடின்போன்ற இன்றியமையாப் பொருளை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்க உப்பைக் கருவியாக்கி அதில் கலக்குமாறு சட்டம் செய்தனர் மத்திய அரசினர்.

இதைத் தென்னாட்டுக்கும் செய்தது அறிவுடைய செயல்தானா என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!

சிலருக்குக் கழுத்தில் கல்போன்ற கடினத்தன்மையுடன்கூடிய கட்டியோடு கழுத்து வீங்கித் தொங்கும்; கைகள் நடுங்கும்; கண்கள் துயில மறுக்கும். அதோடு மட்டுமல்ல; கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிடும்.

யார்யாருக்கும் பசிப்பது நியாயம். ஆனால், சாப்பிடச் சாப்பிடப் பசி அடங்காது என்பது கொடுமை அல்லவா? சாப்பிடுவதையே வேலையாகக் கொண்டவனும் எடை குறைந்து 70 கிலோ, 40 கிலோவாகிக் கரைந்து தென்னை விளக்குமாற்றுக் குச்சிபோல் ஆகிவிடுவான்!

சிலருக்குக் குரல் மாறிவிடும்! சிலருக்குக் குரலே போய்விடும்! கழுத்தினுள்ளே குரல்வளையில் உள்ள நாண்கள் விரிந்து ஒன்றோடொன்று ஒட்டுவதால் பேச்சு வருகிறது. தைராய்டு முற்றிப் புற்றாக மாறிய நோயாளிகளுக்குக் காற்றுதான் வரும்!

தைராய்டு சுரப்பியில் கோளாறு உள்ளவர்கள் இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த நோய் ஆண்களைவிடவும் பெண்களுக்கு மிகுதியாய் இருக்கிறது.

தைராய்டு என்பது ஒரு நாளமில்லாச் சுரப்பி! இந்த நாளமில்லாச் சுரப்பியின் சுரப்புக் குறைபாடு ஹைப்போ தைராய்ட் என்னும் நிலை ஒரு கருவுற்ற பெண்ணுக்கு இருக்குமானால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை அதன் தாக்கம் பெற்றுப் பிறந்து வளர்கையில் மந்தத்தன்மையுடன் வளரும்! மூளை வளர்ச்சி குன்றி இருக்கும்! நினைவுத்திறன் ஏறத்தாழ இருக்காது!

எந்தத் தாயும் வயிற்றிலிருக்கும் குழந்தையின் தேவைக்கேற்பத் தன் உணவை மாற்றிக் கொள்வாள்! வயிற்றுப் பிள்ளைக்குக் கேடுவரும் என்றால் அதற்குக் காரணமான எதையும் தவிர்த்துவிடுவாள்!

அவ்வளவு பொறுப்பான தன்னலமற்ற தாயும் தான் கருவுற்றிருக்கும்போது தனக்கிருக்கும் அயோடின் குறைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவள் காக்கத் தவறிய இடத்தில் பிள்ளையின் நலத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு மத்திய அரசு நுழைந்தது.

கருவுற்ற தாய்க்கு உள்ள அயோடின் குறைபாடு, அதனால் பிள்ளைக்குப் பாதிப்பு என்பது நடைமுறையில் மிகமிகக் குறைவானது. இதற்காக நாடு தழுவி அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி இருக்க வேண்டியதில்லை.

அயோடின் என்பது மிக இன்றியமையாததுதான்! இதன் குறைபாடு பத்தாயிரத்தில் ஒரு தாய்க்கு மட்டுமே இருப்பதாக சென்னை, அரசு தலைமை மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி அறுவைத் துறையின் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் கூறுகிறார்.

எந்த ஒரு தாய்க்கு இந்த அயோடின் குறைபாடு என்பதைக் கண்டறிந்து, அவளுக்கு அந்த அயோடினை ஊட்டுவதை விடுத்து, ஒவ்வொரு பத்தாயிரத்திலும் மீதமுள்ள 9999 கருவுற்ற, கருவுறாத, விலக்கு நின்றுபோன தாய்மார்களுக்கும் சேர்த்து அயோடின் கலந்த உப்பைக் கட்டாயமாக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.

தாய்மார்கள் மட்டுமில்லை; தந்தைமார்கள், தனயன்மார்கள், மகன்மார்கள் என்று ஒவ்வோர் இந்தியனுக்கும், அவன் பாலகனாயினும், சிறானாயினும், இளையோனாயினும், முதியோனாயினும் யாராயினும், ஒவ்வொருவருக்கும் உப்பு என்பது சாதா உப்பில்லை; அயோடின் கலந்த உப்பே என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்தப் பணியினை மிதமிஞ்சிய உற்சாகத்தோடு செய்தவர் நம்முடைய திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐயா இராமதாஸின் மகன் மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி! அவர் அப்போது மத்திய அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.

முன்பெல்லாம் உப்பு என்றாலே சாதா உப்புதான்! அது பெருவெட்டாக இருக்கும்; உப்பு என்றால் அதில் உப்புக் கரிப்பு இருக்கும். அது கலப்படமற்றது.

அரிசியில் கல்லைக் கலப்பார்கள்; மிளகில் பப்பாளி விதையைக் கலப்பார்கள்; பாலில் தண்ணீரைக் கலப்பார்கள்!

அதனால் நாம் ஒரு லிட்டரில் உள்ள அரை லிட்டர் தண்ணீருக்கும் பாலின் விலையே கொடுக்கிறோம். அரசியல்வாதியின் லஞ்சத்தால் எட்டு அங்குலத் தடிமன் இருக்க வேண்டிய சாலை நான்கு அங்குலமாக மெலிவுற்று விடுவதுபோல! எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி களவு!

இவையெல்லாம் கலப்படச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவையே!

ஆனால், உப்பைக் கலப்படச் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தார்களே மத்திய அரசிலுள்ள அறிவாளிகள்! உப்பில் எதைக் கலப்படம் செய்யமுடியும்?

நம் தூத்துக்குடி உப்பளங்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் நிலைபெறுவதற்கே தவியாய்த் தவித்தன!

உப்பில் அயோடினைக் கலக்காவிட்டால், கலப்படச் சட்டத்தின்கீழ் தண்டனை என்றனர். கலந்தால் தண்டனை என்பதுபோய்க் கலக்காவிட்டால் தண்டனை என்னும் நிலை ஏற்பட்டது! இது காலவினோதம்தான்! இந்தச் சட்டத்துக்கு வேறு பெயர் சூட்டியிருக்கலாம்!

இப்போது முந்திய காலம்போல் அல்லாமல் சாதா உப்பாகிய பெருவெட்டு உப்பிலும் தண்டனை அச்சத்தால் அயோடின் கலக்கப்பட்டுவிடுவதால் நாடு முழுவதும் அயோடின் உப்பு மட்டுமே கிடைக்கிறது. சாதா உப்பு மருந்துக்கடையில் மாதிரிக்குக்கூடக் கிடைப்பதில்லை!

இது வடநாட்டுக்குத் தேவைதான்! மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ளோர், வடபகுதியினர் இவர்களுக்கெல்லாம் அயோடின் குறைபாடு இயற்கையாகவே இருக்கிறது. ஆகவே, இவர்களுக்கு அயோடின் கலந்த உப்புத் தேவையாக இருக்கிறது.

ஆனால், கடற்கரையோர மாநிலங்களுக்கு மண்ணிலேயே அயோடின் இருக்கிறது. கடலுணவில், குறிப்பாக மீன் போன்றவற்றில் மிகுதியாகவே அயோடின் உள்ளது. தென்னிந்தியாவில் அயோடின் குறைபாடு உள்ளதாக மெய்ப்பிக்கப்படவில்லை.

இங்கும் சிறிய அளவிலான மலைப்பகுதியினர்க்கு அது தேவையாக இருக்கலாம். மத்திய அரசினர் ஒழுங்காகச் சோதனை செய்யவே இல்லை! இவர்கள் அதீதமான இந்திய ஒருமைப்பாட்டுக் காதலர்கள். வடக்கு நோயுற்றால் தெற்கும் சேர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் என்னும் கொள்கையாளர்கள்!

தார்ப் பாலைவனத்தின் தாக்கம் பெறும் தில்லியில் டிசம்பர் மாதக் குளிர் 3 டிகிரி செல்சியஸ்; உதடு வெடிக்கும்! ஆனால், எதிலும் நிதானமான தமிழ்நாட்டில் குளிர் என்பதே 27 டிகிரிதான்! வடநாட்டுக் கம்பளியை நாம் போர்த்திக்கொண்டால் வெந்துவிட மாட்டோமா? பவானிப் பருத்திப் போர்வை நமக்குப் போதாதா?

நல்லவேளை! ஒரே மாதிரியாகத்தான் போர்த்திக் கொள்ளவேண்டும் என்று இதற்கும் மத்திய அரசினர் சட்டம் செய்யாமல் விட்டார்களே!

பழையகாலச் சாதா உப்பு நமக்குக் கிடைக்காததால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?

நான்கு அயோடின் மூலக்கூறுகள் சேர்ந்ததுதான் ஒரு தைராக்சின். தைராக்சின் என்பது தைராய்டு சுரக்கும் இயக்குநீர். தைராக்சின் அளவோடு வெளிப்பட வேண்டும். அப்படி இருந்தால் அது நோயில்லை.

அது அளவுக்கு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் நோய்.

அது அளவில் குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்னும் நோய்.

அயோடின் கலந்த உப்பு மட்டுமே நம்முடைய சோற்றில், குழம்பில், ரசத்தில், மோரில், இட்லியில், தோசையில், நாம் உபரியாகத் தின்னும் முறுக்குவரையில் அனைத்திலும் மத்திய அரசின் சட்டத்தால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சேர்ந்துகொண்டு வருவதால், உயர் நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், இந்தக் கட்டுரையை எழுதியவர், இந்தக் கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையினர், இந்த ஆராய்ச்சியைச் செய்த சென்னை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், செவிலியர்கள் மற்றும் தென்னிந்திய மக்களில் 35-ல் இருந்து 50 விழுக்காட்டினருக்கு அதிகப்படியான அயோடின் உப்பால் தைரோ டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் சிறிதளவாவது இருக்கும் என்கின்றனர்.

விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அது கூடுதலாக இல்லை என்பது ஆறுதலுக்கு உரியதா? இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைத் தென்னிந்தியர்கள் தின்றால் முழுவீச்சில் நோய் தாக்கலாம்!

நமக்கு அந்த நோயின் கூறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

அயோடின் என்பது 70 வயது வரை வாழும் ஓர் நபருக்கு ஒரு தேக்கரண்டி அளவே தேவை. அது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர வேண்டும்!

அயோடினைத் தவிர்த்த சாதா உப்பு என்பதையே நமக்குக் கிடைக்காமல் மத்திய அரசு சட்டம் போட்டுச் செய்துவிட்டதால், அதிகப்படியான அயோடினால் தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியே சிதைவுற்று விடுகிறது.

ஆகவே, தைராய்டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் 10-லிருந்து 17 வயதுவரை உள்ள இளையோருக்கு 35 விழுக்காடு உறுதியாக இருக்கிறது. 50 விழுக்காடாக இருந்தாலும் வியப்பதற்கில்லை என்கிறார் டாக்டர் சந்திரசேகர். ரத்தத்தைப் பரிசோதித்து இதை அறியலாம் என்கிறார். இந்த நோய்க்கூறுகளால் இளைய தலைமுறையின் அறிவு மந்தப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.

மூன்று பிள்ளைகளில் ஒன்று அழிவதற்கு மத்திய அரசின் சொரணை இல்லாத தடித்த தன்மைதானே காரணம்! அந்த ஒரு பிள்ளை நம்முடைய மகனாகவோ, மகளாகவோ இருந்தால்தான் நமக்கு உறைக்குமா?

ஜுவனைல் ஆட்டோ இம்யூன் தைராடிட்டிஸ் என்பது மத்திய அரசின் கொடையால் கிடைக்கும் அயோடின் கலந்த உப்பால் சிறு குழந்தைகளுக்கு வரும் நோய்!

அளவுக்கு மிஞ்சிய அயோடின், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியைச் சிதைத்துவிடுவதால், சிதைவுற்ற செல்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன உடனே நம் உடம்பிலுள்ள போலீஸ்காரனான இம்யூன் சிஸ்டம், ""எவனோ திருடன் வருகிறான்'' என்று தைராய்டு செல்லுக்கு எதிரான ஆன்ட்டி பாடீஸ்-ஐ உற்பத்தி செய்துவிடுகிறது

ஆன்ட்டி பாடீஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தைராய்டை அழித்துவிடும். முழுவதும் அழித்துவிட்டால் தைராய்டு இயக்குநீருக்கான மாத்திரையை நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!

இந்த நோயின் எளியநிலையில் மாத்திரைகள்; உச்ச நிலையில் அறுவை மருத்துவம்; இந்த நோயின் இன்னொரு நிலை 10 விழுக்காடு புற்றுநோயில் போய் முடிகிறது.

தாமாக வருகிற கொடிய நோய் என்றால் அதை "முன்வினை' என்று ஏற்றுக்கொண்டு, வைத்தியம் செய்துகொள்வதோடு, இந்தப் பிறப்பில் புதிய பாவங்களைச் செய்யாமல் இருக்கலாம்!

மத்திய அரசின் யோசனையற்ற, ஆராய்ச்சியற்ற சட்டத்தால் கொடிய நோய் வரும் என்றால், நெஞ்சு கொதிக்கவில்லையா?

விஞ்ஞானத்தில் தவறுகள் நேரும்; திருத்தி முன்னேறுவதை விஞ்ஞானம் அனுமதிக்கிறது!

பத்தாண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டங்கள் தவறாகப் போய்விடுகிறபோது அவற்றைத் திருத்திக்கொள்வதுதான் அறிவுடைமை!

உப்பு குறித்த மத்திய அரசின் கலப்படச் சட்டத்தோடு சேர்த்து முதலில் உப்புக்கென்று உள்ள தனித் துறையையும் கலையுங்கள். இதற்கு ஒரு ஐ.ஏ.ஏஸ் அதிகாரி வேறு!

வடஇந்தியப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அயோடின் உப்பைக் கொடுங்கள்! தென்னிந்தியப் பகுதிகளில் தேவைப்படும் நோயாளிகளுக்குத் தவிர, மற்றுமுள்ள பெருவாரியான மக்களுக்கு சாதா உப்பைக் கொடுங்கள்.

சாதா உப்பை எல்லாக் கடைகளிலும் விற்கச் செய்யுங்கள்; அயோடின் உப்பை மருந்துக் கடைகளில் விற்கச் செய்யுங்கள்! சும்மா இருக்கிறவனை நோயாளி ஆக்காதீர்கள்! இருக்கிற துயரம் போதாதா?

உங்களுடைய அயோடின் உப்புச் சட்டத்தால் உற்பத்தி செய்து கொழுப்பவை பெரு முதலீட்டு போன்ற உப்பு தயாரிப்பு நிறுவனங்கள்!

அவை உண்டாக்கும் நோயால் கொழுப்பவை மருந்து நிறுவனங்கள்!

வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?


பழ. கருப்பையா

* * * * *
தினமணி இணைப்பு : http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial Articles&artid=532416&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?



Thursday, January 5, 2012

சமோசா போண்டா பஜ்ஜிக்கு புற்றுநோய் இலவசம்



டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த வயிற்றுப் புற்றுநோயாளிகளிடம் அஃப்ரோஷ் நயீம் என்ற மாணவர் எடுத்த புள்ளியியலின் படி மேற்படி நோயாளிகளில் பெரும்பாலானோர் தினம் தோறும் பஜ்ஜி, வடை சாப்பிடுபவர்களாய் இருந்திருக்கிறார்கள். சில பேர் புகையிலை பயன்படுத்துபவர்களாகவும், சிலர் புகை பிடிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

டீக்கடைகளில் விற்கப்படும் போண்டா, பஜ்ஜி, வடைகள் ரீயூஸ் என்று அழைக்கப்படும் முன்பே பயன்படுத்திய எண்ணெய் கலந்து தயார் செய்யப்பட்டவை என்கிறது ஒரு புள்ளி விபரம். ரீபைண்ட் ஆயில்களினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்பே எழுதி இருந்தேன்.

பெரும்பாலான டீக்கடைகளில் பாலை சுட வைப்பதே இல்லை. வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்கள் பயன்படுத்திய எண்ணெயுடன், புதிய எண்ணெயை சேர்த்துத்தான் தயார் செய்கின்றார்கள். அதுமட்டுமல்ல சுவீட் கடைகளிலும் கூட இதே வேலையைத்தான் செய்கின்றார்கள்.

யார் யாரெல்லாம் தினம் தோறும் டீக்கடையில் பஜ்ஜி, போண்டா சாப்பிடுகின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய நோய் “வயிற்றுப் புற்று நோய்”.  நோய் வேண்டுமா இல்லையா என்பதை சாப்பிடுபவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Wednesday, January 4, 2012

சிறுநீரக கல் சரி செய்வது எப்படி?

மனிதனின் மனம் நல்ல விஷயத்தைக் கிரகிப்பதை விட தீய விஷயத்தை உடனடியாக கிரகித்துக் கொள்ளும். உண்மையைப் புரிய வைப்பதை விட தீமையை எளிதில் புரிந்து கொள்ளும்.   நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே மனதில் எளிதில் பதிந்து விடும்.

எவ்வளவோ கடவுள் இருக்கின்றன. எவ்வளவோ நீதி போதனைகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்? மனிதர்களிடம் இருக்கும் எல்லா தீய குணங்களும் தினம் தோறும் வெளிப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.

கடவுளின் பிரதேசம் என்றழைக்கக் கூடிய கேரளா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது பாருங்கள். இவ்வளவிற்கு இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகமிருக்கின்றார்கள் இங்கே. படித்தவர்கள் தான் அதிகம் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். அணுகுண்டைத் தயாரித்தவர் கூட பெரிய படிப்பாளிதானேன்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எய்ட்ஸுக்கு மருந்து டெஸ்ட் நிலையில் இருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இது ஒரு நல்ல செய்தி தான் என்றாலும், இந்த எயிட்ஸ் பயத்தில் பல பெண்கள் பாதிப்படையாமல் இருந்தார்கள். இனி மருந்து வந்து விட்டால் பெண்களின் பாடு என்னாகுமோ தெரியவில்லை. அதுவும் தமிழ் நாட்டில் குடிகாரர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

ஆனால் தமிழ் மருத்துவத்தில் எயிட்ஸுக்கு மருந்திருக்கிறது என்கிறார்கள் பலர். ஏன் யாரும் அதைத் தயாரிக்க முயலவில்லை என்பது புரியவில்லை.

பின்குறிப்பு :

சிறு நீரகக் கல் வந்தால் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிய பதிவு ஒன்றினைப் படித்தேன். நீங்களும் படித்துப் பாருங்கள்.

இணைப்பு மற்றும் நன்றி  : http://kathirkamamblogspotcom.blogspot.com/2010/12/10.html

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்).

இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதளத்தில் சொன்னது போல்):

( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மணிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்

Tuesday, January 3, 2012

தயாரிப்பாளரை ஏமாற்றிய இயக்குனர்

கோர்ட்டுகள் குடும்பங்களின் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது மிகக் கொடுமையான ஒன்று. நீதிபதிகள் எவரும் கடவுள் அல்ல. மிக உயர்ந்த மனம் கொண்டவர்களும் அல்ல. வக்கீலாக பிராக்டீஸ் செய்து, அதன் பிறகு நீதிபதிகளாய் வருபவர்கள் தான்.

கணவன், மனைவிக்கு டைவோர்ஸ் கொடுப்பதில் நீதிமன்றங்கள் ஈடுபடுவது நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் சட்டம் தன் மூக்கை நுழைப்பது ஆகும். சட்டப்படி என்பது வாழ்க்கைக்கு ஒத்து வரவே வராது. தமிழ்ச் சமூகம் என்பது உயர்ந்த நம்பிக்கை சார்ந்த, சமூகச் சார்புடைய, கற்பியல் சார்ந்தது. அதில் சட்டத்துறையின் தலையீடு என்பது கேலிக்குறியதாகும். முன்பு ஒரு முறை அம்மாவின் அரசு பலியிடுதலை சட்டவிரோதம் என்றது. நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் அரசு தலையிட்டு, பின்னர் முக்கறுபட்டது நமெக்கெல்லாம் நினைவில் இருக்கலாம். இது போன்றதுதான் குடும்ப உறவுகளுக்குள் சட்டம் நுழைவது.

கணவன், மனைவி உறவென்பது சாதாரணமானது அல்ல. அது ஒரு டிவைன். இருவருக்கும் இருக்கும் பிணைப்பு என்பது கடவுள் தன்மை உடையது. அதையெல்லாம் சட்டத்தின் வரையறைகளுக்குள் கொண்டு வரவே முடியாது. என் நண்பருக்கு டிவோர்ஸ் ஆகி விட்டது. மனைவி தனியாக வாழ்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள். மூவரும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கின்றனர். மனைவிக்கு டைவோர்ஸ் வாங்கிக் கொடுத்ததில் மனைவியின் உறவினர்களுக்கு பெரும் பங்கு உண்டு. 

தனிமையில் வாழ்கிறார் நண்பரின் மனைவி. இவர் வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகின்றார் என்பது எனக்குப் புரியவே இல்லை. முடிவில் என்ன ஆகும் தெரியுமா? எவரும் இவரைக் கண்டு கொள்ளப் போவது இல்லை. தனிமையில் கிடந்து உழலுவார். தன் வாழ்க்கையை பலியிடுவார். இவரின் குழந்தைகள் கூட இவரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். குழந்தைச் செல்வங்களை கூட வைத்து, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்குவதில் இருக்கும் சந்தோஷத்தை விட மனிதனுக்கு வேறென்ன சந்தோஷம் பெரிதாய் இருக்க முடியும் சொல்லுங்கள் பார்க்கலாம். அதை இப்பெண்மணி இழந்திருக்கிறார். இவர் மட்டுமல்ல தன் கணவனையும் இழக்க வைத்திருக்கிறார்.

நானும் நண்பரும் வாரா வாரம் கோவை ரேஸ் கோர்ஸ் சென்று வருவோம். வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் வேறு வழியாக வந்தது. வழியில் நண்பரின் குழந்தைகள் தங்கிப் படிக்கும் பள்ளியின் ஹாஸ்டல் இருந்தது.

”என் குழந்தைகள் மூவரும் ஜெயிலில் கிடக்கிறார்கள்” என்றார் குரல் கம்ம. டைவோர்ஸ் வழங்கிய கோர்ட் இந்தத் தகப்பனின் சோகத்துக்கு என்ன பதில் சொல்லும். தானே குழந்தையை வளர்க்கிறேன் என்றுச் சொன்ன தாய் மூன்று பேரையும் ஹாஸ்டலில் கொண்டு போய் தள்ளி விட்டார். கோர்ட் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் தான் விடும். இது எத்தகைய ஒரு கொடூரம் என்பதைப் பாருங்கள். தகப்பன் நினைத்தால் கூட உடனே தன் குழந்தைகளைப் பார்த்து விட முடியாது. தாய், தந்தையின் அரவணைப்பில் வாழ வேண்டிய குழந்தைகள் தனியாய் வாழ்கின்றாஅர்கள்.  கோர்ட் ஒரு குடும்பத்தினை கெடுத்து, குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறதைப் பார்த்தீர்களா?

கோர்ட்டுகள் உறவுகளுக்குள் நுழைந்து கொடுக்கும் தீர்ப்புகளின் விளைவினைப் பார்த்தீர்களா? அவரின் மூடை மாற்றுவதற்காக பேச்சை மாற்றினேன். அப்போது அவர் சொன்னது.

இவரின் நண்பர் ஒரு இயக்குனர். எங்கெங்கோ சென்று யாரோ ஒருவரைப் பிடித்து ஒன்றரைக் கோடி பணத்தை வாங்கி விட்டார். வாங்கியது சென்னையில் ஒரு வீடு, சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கி விட்டார். படமெடுக்கிறேன் பேர்வழி என்று ஒப்புக்கு ஒரு படத்தினை எடுத்து, கொஞ்சம் வியாபாரமும் செய்து விட்டார். பணம் கொடுத்தவர் பெரிய பணக்காரர். அவருக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இப்படித்தான் பல இயக்குனர்கள் இருக்கின்றார்கள். இப்போது இந்த இயக்குனர் வேறு ஏமாளி தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார். எனக்கும் கூட சில அனுபவங்கள் உண்டு.

என்னிடம் ஒருவர் படமியக்க உதவி செய்யும் படி வந்தார். அவரை தமிழகத்தின் மிகப் பிரபலமான கோடீஸ்வர நண்பரிடம் அனுப்பி வைத்தேன். இயக்குனர் சென்று நண்பரைச் சந்தித்து விட்டு வந்து, “சார், என் வாழ்க்கையில் இவ்ளோ பணத்தினைக் கண்ணால் கூட கண்டது இல்லை சார் !” என்றார். என்ன இது இந்த ஆள் இப்படிப் பேசுகின்றாரே என்று நினைத்தேன்.

போனில் வந்த கோடீஸ்வர நண்பர் ”தங்கம், எப்படி நீங்க எல்லோரையும் நம்புகின்றீர்கள்?” என்றார். அதன் பிறகு இந்த இயக்குனரைப் பற்றி சில விஷயங்கள் சொன்னார். அவரின் கணிப்பு மிகச் சரியானது என்பதை அறிந்து கொண்டேன்.

இது நடந்து கொஞ்ச காலம் ஆனது. வேறொரு இயக்குனர் ஒருவர் என்னிடம் வாய்ப்பு பெற்றுத் தரும்படி வந்தார். அவரை காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவியில் இருக்கும் நண்பரிடம் அனுப்பி, ”நல்ல ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார், இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்” என்றுச் சொன்னேன். நண்பர் சரியான ஆராய்ச்சிப் பேர்வழி. இந்த இயக்குனரை உள்ளும் புறமும் சோதித்து விட்டு, “பத்துப் பைசாவிற்கு தேரமாட்டான் இவன்” என்றுச் சொன்னார்.

பிரபல அரசியல்வாதி  நண்பர் தன் மகனை ஹீரோவாக்க நினைத்து நல்ல ஸ்கிரிப்ட் தேடிக் கொண்டிருந்தார். பேச்சு வாக்கில் என்னிடம் சொன்ன போது, நல்ல ஸ்கிரிப்ட் ஒன்றினை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிய ஒரு புதிய இயக்குனரை அவரிடம் அனுப்பி வைத்தேன். “ஆள் சரியில்லைப்பா” என்றார் அரசியல்வாதி.

தகுதியற்றவர்களை சிபாரிசு செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் வேறுமாதிரியாய் இருந்தது. அத்துடன் சிபாரிசுகளை முற்றிலுமாய் நிறுத்தி விட்டேன்.

சினிமாவில் ஈகோ பிரச்சினை அதிகம். எனக்குத் தெரிந்த ஒரு இயக்குனர் புதியவர். அவரிடம் வேலை பார்க்கும் கேமரா மேன், “சார் எனக்கு பத்து வருடம் அனுபவம் சார், நீங்கள் புதிதாய் சினிமாவிற்கு வந்தவர். இந்தக் காட்சிக்கு இங்கே தான் கேமரா வைக்க வேண்டும்” என்று பலர் இருக்கச் சொன்னார். கேமரா அசிஸ்டெண்ட் இயக்குனர் சொல்வதைக் கேட்கவே மாட்டான்.இவரால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியவில்லை. வேறு வழி இன்றி சமாதானம் ஆனார் இயக்குனர்.

அது மட்டுமல்ல “சினிமாவில் நம்பிக்கைத் துரோகம்” என்பது மிக அதிகம். முன்னால் ஒன்று பேசுவர், பின்னால் ஒன்று பேசுவர். இதுதான் சினிமா. கூட இருந்தே குழி பறிப்பதில் சினிமாவில் தான் மிக அதிகம். நல்ல நண்பராக இருப்போர் திடீரென்று மிகப் பெரும் எதிரியாய் மாறி விடுவதும் சினிமாவில் தான் சாத்தியம் என்றார் எனது சினிமா நண்பர் ஒருவர்.

ஒரு பிரபல இயக்குனரை தயாரிப்பாளர் எப்படித் திட்டினார் தெரியுமா? “ஏண்டா தேவடியாப்பயலே, என் காசுடா ! உன் இஸ்டத்திற்கு செலவு செய்வீயாடா நீ?” என்று பலர் முன்னிலையில் திட்டினார். அந்த இயக்குனர் ஏதும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். இயக்குனர் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். இவருக்கு இப்போது தேவையில்லாத பழக்கங்களெல்லாம் கூட ஒட்டிக் கொண்டன. தயாரிப்பாளர் தலையில் துண்டினை போட்டுக் கொண்டு ஓட்டு வீட்டில் வாழ்கிறார். சினிமாவில் ஜெயித்தவர்கள் இல்லவே இல்லை. அது எவரானாலும் சரி !

ஏதோ எழுத ஆரம்பித்து எங்கோ சென்று விட்டேன். விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

- அன்புடன் கோவை எம் தங்கவேல்


Monday, December 26, 2011

ரிலையன்ஸின் திமிரும் கண்டுகொள்ளாத மத்திய தொலைத்தொடர்பு துறையும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தாரின் இணையத் தொடர்பை பயன்படுத்தி வரும் பலருக்கும் யூடியூப் மற்றும் சில ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை பயன்படுத்த முடியாது. காரணம் இவர்களின் தயாரிப்பில் வெளியான “டான் டூ” என்ற திரைப்படம் வெளியான பிறகு ஃபைல் சேரிங் வெப்சைட்டுகளை தடை செய்தால் திரைப்படத்தை டவுன்லோடு செய்ய முடியாது என்பதால் இச்செயலைச் செய்திருக்கின்றார்கள். 

வெப்சைட்டை தடை செய்ய இந்திய அரசு மட்டுமே உத்தரவிட முடியும் என்கிற போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இத்தகைய செயல் “வாடிக்கையாளருக்கான் துரோகம்” ஆகும். 

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய இந்திய தொலைத் தொடர்பு நிறுவனம் இதுவரை ஏதும் செய்யவில்லை. இந்திய அரசின் வேலையை ரிலையன்ஸ் செய்து கொண்டிருக்கிறது. பேசாமல் காங்கிரஸ் அரசுக்கு ரிலையன்ஸ் அரசு என்று பெயர் சூட்டி விடலாம். நேற்று, கஸ்டமர் கேரில் கேட்ட போது, கம்ப்ளைண்ட் கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

இது பற்றிய செய்திகளை கீழே இருக்கும் இணைப்பில் பாருங்கள்.


இது பற்றி சிலரின் கருத்துக்களை கீழே பார்க்கலாம்


இந்தியா கார்ப்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் கை விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது என்பதை மீண்டும் உறுதி செய்கிறது ரிலையன்ஸின் போக்கு.

- அன்புடன் 
கோவை எம் தங்கவேல்

குழந்தைகளை தடம் மாறச் செய்யும் சினிமா



( இது நாட்டுச் சுரைக்காய் )


( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)



வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல்.  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும். 

உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”. 

பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.

ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.

ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து. 

சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.

மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.


இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். 

என்ன இருக்கு?

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.


யாருக்கு நல்லது?

எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.


என்ன பலன்கள்? 

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Saturday, December 24, 2011

சசிகலா ஜெயலலிதா பிரச்சினை உண்மை என்ன?





தினமலரில் தினமும் சசிகலா பற்றிய கட்டம் கட்டிய செய்திகள். தினமணியில் அதிகமாய் ஒன்றையும் காணவில்லை. ஜூனியர் விகடனில் சசிகலா பிரச்சினை, நக்கீரனில் இன்னும் பிளாக்குகளில் எல்லாம் சசிகலா போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார். சசிகலா கும்பல் களையெடுக்கப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாய் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.டீக்கடைகள், கட்சிகள், பத்திரிக்கைகள் என்று மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் பரபரப்பான செய்தி “சசிகலா பெயர்ச்சி”.

இத்தனை பரபரப்பாய் பேசப்படும் செய்தியில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டால், யாருக்குமே தெரியாது. உண்மைப் பிரச்சினை தான் என்ன?

ஜெயலலிதா அவர்களுக்கும், சசிகலா அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை ஏதோ இவர்கள் தினமலர், தினமணி, ஜூனியர் விகடன், நக்கீரன் பத்திரிக்கை முதலாளிகளை அழைத்து வந்து விலாவரியாகச் சொன்னது போல எழுதுகின்றார்கள்.

இருவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மையை, எதுவும் தெரியாத இவர்களை கலந்து கட்டி எழுதுவது தான் “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்கிறார்கள். 

என்ன பிரச்சினை என்பதை இருவரும் யாரிடமும் சொல்லப் போவதுமில்லை, அது பிரச்சினையாய் உருவெடுத்து தமிழ் நாட்டை அழிக்கப்போவதும் இல்லை. எதுவுமே நடக்கப் போவதில்லை. ஆனால் ஏதேதோ நடக்கப் போவதாக எழுதுகின்றார்கள். நடந்து கொண்டிருப்பதாய் எழுதுகின்றார்கள். 

ஏன் இப்படி என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பத்திரிக்கைகளுக்கு முதலாளியாய் இருப்பவர்கள் ஹேஸ்யங்களை உண்மைகளாய் உருவகப்படுத்துகின்றார்கள். அதன்மூலம் தன் இருப்பை பிறருக்கு கவனப்படுத்துகின்றார்கள். அந்த இருப்பின் மூலம் தன் அதிகாரத்தை பிறரிடம் திணிக்க முற்படுகின்றார்கள். மீடியாக்கள் இதைத்தான் செய்கின்றன. இதற்குப் பெயர் பிழைப்புவாதம். மற்றொரு பெயர் “ பத்திரிக்கை தீவிரவாதம்”. 

இத்தகைய முதலாளிகள் தான் உண்மையான ”தீவிரவாதிகள்”. மக்களிடம் பீதியைக் கிளப்புவது, உண்மையற்ற செய்திகளை உண்மை என்பது போல எழுதுவது, மக்களிடம் குழப்பத்தை உருவாக்குவது, நடக்காத ஒன்றை நடந்தது போல எழுதுவது போன்ற இழிசெயல்களை பத்திரிக்கைச் சுதந்திரம் என்கிற பெயரில் எழுதுகின்றார்கள். இவ்வகை தீவிரவாதிகளிடமிருந்து மக்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். 

தினசரிகளைப் படிப்போரும், இதழ்களை படிக்கும் போதும் சுயசிந்தனை கொஞ்சம் தேவை.

ஜெயலலிதா, சசிகலா பிரண்டாக இருந்தபோதும், இருவரிடமும் பிரச்சினை என்கிறபோதும் யாருக்கும் பணமோ வேறு ஏதோ வரப்போவதில்லை. இந்தச் செய்தியால் தமிழக மக்களுக்கு எள்ளளவு பிரயோசனமும் இல்லை.

உழைக்க வேண்டும். அதனால் வாழ வேண்டும். இதை விடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? தீமைதான் பரிசாய் கிடைக்கும். 

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்


Friday, December 23, 2011

பெரும்பான்மையான திரைப்படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன?











எல்லோருக்கும் பிடித்தமான பொய் உலகம் “சினிமா”. சினிமாவில் வெற்றியடைவோர் இல்லவே இல்லை. தோல்விதான் முடிவில். அது யாராக இருந்தாலும் சரி. படைப்பாளிகள் அனைவரும் வெற்றியடைகின்றார்களா என்றால் நிச்சயம் இல்லை. ஏன் இல்லை?

கலைஞர் டிவியில் திரைப்பட பிதாமகன், புரட்சியாளர் திரு பாரதிராஜாவின் “அப்பனும் ஆத்தாளும்” என்ற தொடரில் நடிகை சுகன்யா தாவணி போட்டுக் கொண்டு இளமை வேடத்தில் நடித்தார். நம்பினால் நம்புங்கள். எனக்கு திரு பாரதி ராஜாவின் நம்பிக்கையின் மீது சந்தேகமே வந்து விட்டது. கர்வமும், தானென்ற நினைப்பும் எந்த ஒரு படைப்பாளிக்கும் வந்து விட்டால் இது போன்ற அவலக்காட்சிகளைத் தான் படம் பிடிக்க முடியும்.

இயல்பு மாறும் எந்த ஒரு படைப்பும் முடிவில் தோல்வியைத் தரும் என்பதில் பாரதி ராஜாவும், பாலச்சந்தரும் விதிவிலக்கல்ல என்பதற்கு கண்களால் கைது செய் திரைப்படமும், பொய் திரைப்படமும் உதாரணம்.

இயல்பு மாறாத திரைப்படங்கள் வெற்றியைத் தந்தே தீரும். நாடோடிகள் திரைப்படத்தின் கதை மாந்தர்கள் கதையோடு ஒன்றியவர்களாய், கதைக்களம் நடிகர்களோடு ஒன்றியதாய் இருந்தது. 

மைனா படத்தின் காட்சிகள் ஆக்கமும், ஆடுகளம் திரைப்படத்தின் காட்சிகளும் வெகு இயல்பாய் படத்தின் கதைக்கும், நடிகர்களுக்கும், களத்திற்கும், இசைக்கும், உரையாடலுக்கும் எந்த வித மன அதிர்ச்சி வேறுபாடின்றி இருந்தன. 

இருட்டில் அமர்ந்து படம் பார்க்கும் ரசிகனுக்கு திரைப்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் அவனின் இருப்பு திரைப்படத்திற்குள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் படம் தோல்விப் படம் என்றுச் சொல்வதை விட படைப்பாளி தோற்று விட்டான் என்று அர்த்தமாகிவிடும்.

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ஓடுவதில்லை. ஓட வைக்கப்படுகின்றன. இவர்களுக்கான மார்க்கெட்டுகள் என்று எதுவுமே இல்லை. ஆனால் உருவாக்கப்படுகின்றன. இதற்கு சாட்சியாய் ரஜினி, கமல், சூர்யா, விஜய, அஜித் என்று காட்ட இயலும். ஆனால் இவர்களைத் தான் பெரும் நடிகர்கள் என்று காட்டுகின்றன மீடியாக்கள் (போலிகளின் ராஜ்ஜியத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கிறது)

திரைப்பட ரசிகனை தன் படைப்பிற்குள் இழுத்துக் கொள்ளாத எந்த ஒரு படைப்பும் வெற்றி அடையாது. தன் நடிப்பு எனும் மாயவலைக்குள் ரசிகனைக் கட்டிப் போடாத எந்த ஒரு நடிகனும் “சோப்” விற்கும் விளம்பர மாடலாக மட்டுமே நிலைக்க முடியுமே தவிர, நடிகனாய் பரிணமளிக்க முடியாது. இதற்குத் தேவை கர்வமற்ற, தானென்ற நினைப்பற்ற படைப்பாளிகளும் அவருக்கு உதவி செய்யும் சினிமாவைக் காதலிக்கும் டெக்னீஷியன்களும். கோடிகளில் சம்பளம் வாங்கும் “சோப்புக் கலைஞர்கள்” இது போன்ற படைப்பாளிகளுக்குத் தேவையே இல்லை.

தொழிலைச் சரியாகச் செய்தால் “பணம்” தானாக வரும் என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்.

Thursday, December 22, 2011

போலிகள் நடமாடும் புனைவுலகம்

இன்றைய செய்தித்தாள் ஒன்றில் எழுதும் எவையும் உண்மை என்று நினைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பத்தி வெளியாகி இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்று எப்படிக் கண்டுபிடிப்பது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்தால் பரவாயில்லை.

நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஆராய்ச்சிகள் புகுந்தால், கிடைக்கும் பலன்களைப் பற்றி பிரஸ்தாபிக்க ஒன்றுமில்லை. அது நம்பிக்கையின் பால் கட்டப்பட்டிருக்கும் இரும்புக் கோட்டையின் கதவுகளைத் திறக்கும் அளவுக்கு பலமான ஆராய்ச்சியாக இருந்தாலும் கூட.

சாகித்ய அகாதமி பெற்ற “காவல் கோட்டம்”  பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எதிர்க்கப்பட்டது என்கிறது ஒரு செய்தி. ஜெயமோகன் அந்த நாவலை ஆதரித்தார் என்கிறது மேலும் ஒரு செய்தி. இது பற்றிய விமர்சனங்கள் இனி இணைய பக்கங்களில் அள்ளிக் கொட்டப்படும். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இது வரையில் தார்மீக ரீதியிலான, தர்க்க ரீதியிலான, மனிதாபிமான வகையிலான, நீதி சார்பான, சுயச்சார்பற்ற எழுத்துக்கள் எவையேனும் எழுத்துலக பிரம்மாக்கள் நாங்கள் என்றுச் சொல்லக்கூடிய அல்லது நடிக்கக் கூடியவர்களால் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஒரு நிமிடம் மனச் சுத்தியுடன் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் இல்லை.

ஏன் இல்லை என்று கேட்டால் “கொன்று போடுவார்கள்” என்பார்கள். கொல்வதற்காக சித்தாங்களும், வேதாந்தங்களும், உண்மைகளையும் மறைப்பேன் என்கிற புனைவுலகத்தாருக்கு என்ன பெயர் வைக்கலாம்?

புனைவுலகில் நடமாடும் போலிகள் முற்றிலும் சுயச்சார்பு உடையவர்களாய், சுய சிந்தனையை வருமானம் பெறக்கூடிய வகையில் மாற்றி, மக்களை தாங்கள் எழுதுவது “உண்மை” என்று நம்பும்படிச் செய்வதில் வல்லவர்கள். எழுத்து ஒரு தவம் என்பார்கள். ஆனால் இன்றைய பத்திரிக்கைகளைப் படித்துப் பாருங்கள். அது எங்காவாது, எவராலாவது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட கருத்துக்களின் வாந்திகள் என்பது புரியவரும்.

ஒரு சமூகம் தன்னை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள, அதன் மக்களால் அதன் மொழியால் உருவாக்கப்படும் படைப்புகள், சேகரிப்புகள், ஒழுங்குகள், நடைமுறைகள், விழாக்கள் போன்றவை உதவும். இவ்வகைப் புதுப்பித்தலில் புனைவுலகத்தாரின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் பெரும். இன்றைய தமிழ் உலக மக்கள் முகவரி அற்று, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எல்லாமே இன்பமயம் என்கிறதாய் மாறி நிற்க புனைவுலகப் போலிகள் தான் மிகவும் முக்கிய காரணிகளாய் நிற்கின்றார்கள்.

சூதும், வாதும், பொய்யும், புரட்டும், களவும், திருட்டும் கொண்டலையும் போலிகளிடமிருந்து தமிழர்கள் மட்டுமல்ல உலக மக்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள பெரும் தன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எப்படி நடக்கும், எங்கு நடக்கும், யார் முன்னெடுத்துச் செல்வார் என்பதெல்லாம் காலம் தான் சொல்ல வேண்டும்.

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்

Tuesday, December 20, 2011

விடைகள் தவறாகவே வரும் கணக்குகள்



அரசியல் இன்றி இவ்வுலகம் அணு அளவு கூட இயங்காது. ஆனால் அரசியலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் அரசியல் கணக்குகள் எதுவும் மிகச் சரியான விளைவுகளை அல்லது விடைகளைத் தருவதே இல்லை. இவ்வகைக் கணக்குளின் விடைகள் முற்றிலும் தவறானதாகவே முடிந்து போய் விடும்.

நேருவின் காஷ்மீர் கணக்கு, இந்திரா காந்தியின் ப்ளூ ஸ்டார் கணக்கு, ராஜீவ் காந்தியின் அமைதிப்படைக் கணக்கு, சஞ்சய் காந்தியின் அரசியல் கணக்கு, 2ஜியில் திமுகவின் கணக்கு, சினிமாவில் சன் குழுமத்தாரின் கணக்கு என்று நமக்குத் தெரிந்த பல கணக்குகளின் விடைகள் அனைத்தும் கணக்குப் போட்டவர்களுக்கு எதிராய் திரும்பியது வரலாறு.

அரசியல் என்பது ஆற்று வெள்ளம் மாதிரி. பதவிகள் என்பது அதில் மிதக்கும் துரும்பு மாதிரி. ஆனால் பதவி என்ற அந்தஸ்து வரும் போது கூடவே மூளை நோயும் வந்து விடும். யோசிக்க மறக்க வைக்கும் நோயை பதவி கூடவே கொண்டு வந்து விடும்.

2ஜியில் எளிதாய் தப்பி இருக்கலாம். அதாவது எந்த ஒரு ஊழலையும் சத்தமே இல்லாமல், யாருக்கும் தெரியாமல் செய்யலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு அந்தளவுக்கு யோசிக்கவே முடியாது. வழக்குகளில் இருந்து  வெகு எளிதாய் வெளியேறலாம் அது கொலைக் குற்றமாய் இருந்தாலும் கூட. அதற்குத் தேவை ஒன்றே ஒன்று தான் புத்திசாலித்தனம். அந்தப் புத்திசாலித்தனம் பதவியில் இருப்போரிடத்தில் இருக்கவே இருக்காது. அல்லக்கைகளிடம் கூட காண முடியாது. 

மக்கள் போடும் கணக்கு எப்படித் தவறாகிறது என்பதை இப்போது பார்த்து விட்டு இப்பதிவை முடிக்கலாம்.

தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? அவன் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவனாய் இருக்க வேண்டியது முதல் படி. அடுத்து அவன் மனிதாபிமானம் மிக்கவனாய் இருத்தல் வேண்டும். அடுத்து எதையும் பகுத்தறிவு செய்து பார்ப்பவனாய் இருத்தல் வேண்டும். மக்களின் நன்மையை உத்தேசிப்பவனாய் இருத்தல் வேண்டும். ஆனால் இன்றைய எந்த ஒரு அரசியல்வாதியும் அப்படி இருக்கின்றார்களா? என்று ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும் அரசியல். 

நல்லது செய்வார் என்றெண்ணி யாருக்கு ஓட்டுப் போடுகின்றார்களோ அவர்களின் தகுதி என்னவென்று தெரியாமல் இருப்பதால் மக்களின் நல்லது கணக்கு முடிவில் தவறான விடை தருகிறது. அதன் காரணமாய் அடுத்தவர் தேர்வாகின்றார்கள். போடக்கூடிய கணக்கில் தவறு இருக்கும் போது விடை என்ன சரியாகவா வந்து விடும் ?

அரசியல் என்பது மாயக்கயிறு. அதில் தலைவர்களெல்லோரும் ஊசலாடும் பொம்மைகள். மக்கள் பொம்மைகளின் ஆட்டங்களை வேடிக்கை பார்க்கும் ரசிகர்கள். தங்கள் உரிமை பரிபோவதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல் மயங்கிக் கிடக்கும் மடமைகள்.

அரசியல் பற்றிப் பேசி வீணாய் பொழுதினைப் போக்க வேண்டாம் என்பதற்குத்தான் இப்பதிவு. இனி இன்னும் பலப் பல செய்திகளை உங்களுடன் பகிர்வேன். அதுவரை தொடர்ந்திருங்கள். 

- அன்புடன் கோவை எம் தங்கவேல்