குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label pm care fund. Show all posts
Showing posts with label pm care fund. Show all posts

Thursday, October 22, 2020

சட்டம் சிக்கலானது - வருமானம் பிரதானமானது

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் இந்தியாவின் உயிர் நாடி. சட்டம் தான் ஒரு நாட்டை இயக்கும் அச்சாணி. ஆனால் இந்தியாவில் இப்போது உருவாக்கப்படும் ஒவ்வொரு சட்டமும் இன்னொரு சட்டத்திற்கு விதி விலக்குகளைத் தருகிறது. 

தற்போதைய சட்ட உருவாக்கங்கள் இதே போல பல பிரிவுகளில் விதிவிலக்குகளையும், உட்பிரிவுகளையும் கவனிக்காமல் சட்டமாக்கப்படுகின்றன. அதன் காரணமாக சட்டத்தில் ஓட்டைகள் விழுகின்றன. தேச விரோதிகளும், தேசத் துரோகிகளும், விலை போகும் பராரி ஈனர்களும், அதிகார பிசாசுகளும் அவைகளைச் சரியாகப் பயன்படுத்தி பிழைக்கிறார்கள். அதற்கு நீதிமன்றங்கள் துணை போகும் அவலமும் ஏற்பட்டு விடுகின்றன. உதாரணம் ஜெ-சசி வழக்கில் முன்னாள் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பு. பிறகு அதை ரத்துச் செய்த உச்ச நீதிமன்றம். நீதிபதிக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? ஒன்றுமில்லை. சட்டம் தன் கடமையைச் சரிவர செய்யாத நாள் அது. எவரும் அதைப் பற்றிப் பேசவே இல்லை. அந்த நீதிபதியைப் பற்றி ஒரு வார்த்தை? இதுதான் ஜன நாயகமா?

இதையெல்லாம் கவனித்து சரி செய்ய வேண்டிய சட்டத்துறை அலுவலகமோ ஆட்டு ஆட்டு என தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் என்ன நடக்கின்றது என்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கப்படுகிறது. இந்தியா எத்தனையோ கட்சிகளின் ஆட்சிகளையும், பிரதமர்களையும் கண்டு விட்டது. ஆனாலும் சட்டம் எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போதோ??? கேள்விக்குறியாய் நிற்கிறது.

இந்தியாவை ஒரு தாய் என்றால் அவள் உடுத்தி இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் எனும் சேலையில் ஆங்காங்கே ஓட்டையைப் போட்டு, அவளின் ஆடையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் பாப்ரி மசூதியை வேண்டுமென்றே இடிக்கப்படவில்லை என்கிறது.




இதை வெகு எளிதாக சரி செய்து இருக்கலாம். பிற கட்சிகளை இணைக்க சிப்பிஜி ராஜ தந்திரம் பயன்படுத்துவதைப் போல எதிர்ப்பாளர்களை சரி செய்து, இராமர் கோவில் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் உணர்ச்சியை தூண்டி விடுவதுதான் ஆகச் சிறந்த அரசியல் தர்மம் என்ற கொள்கை கொண்டவர்களுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை தேவையில்லை என்பது தெளிவு.

அடுத்து, முன்பே இருக்கும் சட்டத்தை எப்படி ஒன்றுமில்லாதவாறு ஆக்குவது என்பதைப் பற்றிய உதாரணம்.

பி.எம்.கேர் ஃபண்ட் பற்றி நியூஸ் ஆர் சாய் எனும் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையை கீழே படத்தினைக் கிளிக் செய்து படித்துப் பாருங்கள். 



செய்தி உதவி : NewsAurChai - Magazine (Thanks)

இதைத் தெளிவு பெற செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. அரசே அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது சரியல்ல. எதிர்வரும் ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். அறமும் வேடிக்கை பார்க்காது என்பதும் உண்மை.

தமிழ் நாட்டில் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது. லாட்டரி, ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டங்கள் போன்றவை சட்ட விரோதமானது. ஆனால் ஆன்லைன் ரம்மி மட்டும் சட்டபூர்வமானது. அதற்கென தனி ஆர்டினன்ஸ் இருக்கிறது போலும். வரி வருமானம் மட்டுமே பிரதானம் என்கிறது அரசு. மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன? இது தான் நடக்கிறது இப்போது இங்கே. 

ஜூவியில் ஒரு கட்டுரை. ஆன் லைன் ரம்மியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது அது. நீங்கள் ஏன் விளையாடப் போகின்றீர்கள். அரசு ஒன்றும் அழைக்கவில்லையே என்பார்கள்.

பிள்ளைக்கறி விற்பனைக் கடைக்கு அனுமதி தருவது அரசு. பிள்ளைக்கறி தின்னாதே என்கிறது அரசு. நானா உங்களை அழைத்தேன் என்கிறது அரசு. கொடுமையிலும் கொடுமை. 

இதைத்தான் சொல்கிறேன் இந்தியத் தாயின் உடையில் ஆளும் அரசாலும், மத்திய அரசாலும் போடப்படும் ஓட்டைகள் இவைகள் என.

சட்டங்கள் தங்களுக்குள்ளேயே வேறுபாடுகளைக் கொண்டிருப்பது மிகப் பெரும் ஆபத்து. இந்திய ஜன நாயகம் கொஞ்சம் கொஞ்சமாக குழப்பத்துக்கு உட்படுத்தப்படுகிறதோ எனத் தோன்றுகிறது.

நீதிமன்றங்கள் தங்கள் வழங்கும் தீர்ப்புகள் பற்றிய சட்ட விளக்கங்கள் கொடுக்கின்றன. ஆனால் பெரும்பான்மையானவற்றில் அது பின்பற்றப் படுவதில்லை என்பது சரியாக இருக்காது. நீதிபதிகளின் வாழ்க்கையும் அறத்தின் முன்னால் விசாரணைக்கு உட்பட நேரிடும் என்பதை எவரும் மறந்து விடலாகாது.

நன்றி..!

வணக்கம்....!