குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label BIGG BOSS 8. Show all posts
Showing posts with label BIGG BOSS 8. Show all posts

Monday, January 20, 2025

பிக்பாஸ் 8 - முத்துகுமரன் வெற்றி - ஒத்துக்கொள்ள வைக்கும் வியாபார உத்தி

பிக்பாஸ் 8 - மக்கள் செல்வன் (ரம்மி விளையாடச் சொல்லும் விளம்பரதாரரின் விளம்பரக் கட்டணத்தில் சம்பளம் வாங்கியவர்) உலக நடிப்பு கலைஞர், உத்தம புத்திரன், எதார்த்தவாதி, நடிகர், ஹீரோ, வில்லன் எனப் பன்முகம் காட்டும் பல திறமைகளை உள்ளே வைத்துக் கொண்டு, ஒரு சிலவற்றை மட்டும் வெளியில் விட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேத்துபதி அவர்கள் இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார். 

எவ்வளவு பெரிய சாதனை? விஜய் சேத்துபதி பிக்பாஸ் வீட்டிலிருந்தோரிடம் பல பாடங்களைக் கற்றுக் கொண்டாராம். எல்லோருக்கும் அந்த வீடு பாடம் எடுத்ததாம். 

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் - பள்ளிகளை இழுத்து மூடி விடுங்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லோரையும் அனுப்பி வையுங்கள். வீடு பாடம் எடுத்து மிகச் சிறந்த திறமையாளர்களை - அதுவும் நம்ம பிரதமர் வாரம் 100 மணி நேரம் உழைப்பது போல, பல திறமையான உழைப்பவர்களை உருவாக்கி விடும். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சீசனைப் பார்த்து, ரசித்து, ருசித்து மகிழ்ந்த ஒவ்வொருவரின் வங்கி அக்கவுண்டிலும் சுமார் 40,50,000 ரூபாயைப் வழங்கி, அதனைப் பெற்று மக்கள் மகிழ்ந்த மிகச் சிறந்த சீசன் பிக்பாஸ் 8. அந்தளவுக்கு மக்களால் ரசிக்கப்பட்ட, ருசிக்கப்பட்ட, விரும்பப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

விஜய் டிவிக்கும் - உலகளவில் மக்களுக்காகவே நிறுவனம் நடத்தி - மக்களை மகிழ்வித்து மகிழும் எண்டமோல்ஷைன் இந்தியா நிறுவனத்துக்கும் -  தமிழ் ரசிக மக்களின் சார்பாக ஒரு வணக்கம்.

நம்ம பிரதமர் குஜராத்தில் பிரதமராக இருந்த போது,  இந்தியாவின் ஒரே ஒரு நம்பிக்கை என்று நாமெல்லாம் டிவிட்டர், ஃபேஸ்புக், பத்திரிக்கைகள், யூடியூப் ஆகிய உண்மையாளர்களின் உரைகற்களிடமிருந்து கற்று, அவரையும் தேர்ந்தெடுத்து, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

யூடியூப் சானல்களில் வழித்து, ருசித்து, எச்சில் ஒழுக சாப்பிடும் வீடியோக்கள் மூலம் முத்துகுமரனை பார்த்திருப்போம். ஒரு சில வீடியோக்களில் பேசியதையும் பார்த்திருப்போம். அதைத் தவிர அவனிடம் வேறு என்ன இருந்தது எனத் தெரியவில்லை. பட்டிமன்ற பேச்சுக்கள் வெற்று வார்த்தைகள். பொழுதினைக் கழிக்கலாம். ஆனால் ரசிக்க முடியாது.

பிக்பாஸ் 8 - வீட்டுக்குள் வந்த நாள் முதல் கொண்டு - அவன் சக போட்டியாளர்களை மனதளவில் சிறுமைப்படுத்துவதை வேலையாகவே வைத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நிகழ்விலும் அவனின் முடிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. அவனின் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பான். இதர போட்டியாளர்களை அவன் வழி நடத்தினான். ஆட்டு மந்தை போல செயல்பட்டார்கள் இதர போட்டியாளர்கள்.

ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கூட்டணி வைத்தான். ஜெயித்ததும் அதற்கு அவனே காரணம் என்பான். ஆனால் எல்லோரும் வெற்றி பெற்றிருக்க வேண்டுமென்பான். சக போட்டியாளர்களிடம் நீங்கள் ஜெயித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பான். ஆனால் நீதான் எனக்கு போட்டியாளர் என்பான். நான் என் கேமை விளையாடுகிறேன் என்பான். ஒரு சிலரை மூளைச்சலவை செய்து - அவன் மட்டுமே வெற்றிக்குத் தகுதி எனச் சொல்ல வைப்பான். தனக்கு எதிராக களம் இறங்கிய மஞ்சரியை வெகு நாசூக்காக கூட இணைத்துக் கொண்டான். அவரை தன் சகோதரி என்றான். சவுந்தர்யாவுக்கு ஒன்றுமே தெரியாது என ஒவ்வொரு தருணத்திலும் சொல்லிக் கொண்டே இருந்தான்.  ரயான் வெற்றி பெற்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. விஷால் 5 லட்சம் எடுத்தை வெறுத்தான். பரிசுப் பணம் குறைகிறதே எனக் கவலைப்பட்டான். பிக்பாஸ் குரலை விட - அவன் தான் இந்த பிக்பாஸ் 8 சீசனையே நடத்தினான். இந்த சீசனில் அவன் குரலே எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. பிக்பாஸ் குரல் அமுங்கி விட்டது.

பிக்பாஸ் 8 - முத்துகுமரன் வெற்றி அடைவதற்காக நடத்தப்பட்டது. பிக்பாஸ் குழுவினரும் அவனுக்காகவே உழைத்தனர். 

ஏன்? இதற்குப் பின்னால் உள்ள மர்மம் தான் என்ன?

தமிழ் - தமிழர் - இந்த தமிழ் நாட்டில் நல்ல வியாபாரம் ஆகும் உணர்வுகள். வார்த்தைகள். எண்டமோல்ஷைன் இந்தியா இந்த உத்தியைப் பயன்படுத்தியது. விஜய் டிவி பயன்படுத்திக் கொண்டது.

சோஷியல் மீடியாக்களில் முத்துக்குமரனின் மார்க்கெட்டிங் டீம் இதர போட்டியாளர்களை வெகு கடுமையாக, அசிங்கமாக விமர்சித்தது. ஆனால் அவனுக்கும் இதற்கும் தொடர்பே இல்லையென்பது போல நடந்து கொண்டான்.

ஒரு கட்டத்தில் எல்லாப் போட்டியாளர்களுக்கும் தெரிந்து விட்டது. இந்த பிக்பாஸ் 8ன் வெற்றியாளர் முத்துகுமரன் என. அனைவரும் ஒரு வழியாக ஒதுங்கிக் கொண்டனர்.

எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைக்கும் நரித்தந்திர வியாபார அரசியல் உத்தி இது. விஜய் டிவி தமிழ் - தமிழர் என்ற வியாபார உத்தியை சிரமேற்க் கொண்டுள்ளது. 

இனி திராவிடத்துக்கு எதிரான ஒரு உத்தியை இவர்கள் உருவாக்குவார்கள். திராவிடத்தினை உடைத்தால் தான் அரசியல் செய்ய முடியும் என இனி ஒவ்வொருவரும் ஆரம்பிப்பார்கள். 

பிக்பாஸ் 8 - நடத்தியது முத்துக்குமரன். இது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தே ஒரு நயவஞ்சகனுக்கு விருது வழங்கப்பட்டு ஆட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.

வளமுடன் வாழ்க..!