குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பிரம்ம. Show all posts
Showing posts with label பிரம்ம. Show all posts

Saturday, February 26, 2022

குரு – பக்தன் – குருசேவை



இடமிருந்து இரண்டாம் இடத்திலே நிற்பவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்

குருநாதரின் ஆலயத்துக்கு அதாவது சற்குருவடிக்குச் சென்று வருவதில் எனக்கு எப்போதும் பேரானந்தம் உண்டாகும். வீட்டிலிருந்து சற்குருவடிக்குச் செல்லும் வழியில் குருநாதருக்கு பலகாரங்கள் கொஞ்சம் வாங்கிக் கொள்வேன். முன்பு விளாங்குறிச்சியிலிருந்து செல்லும் போது, வடவள்ளி சந்தையில் காய்கறிகள், பலகாரங்கள் வாங்கிச் செல்வதுண்டு.

இப்போது சற்குருவடியின் நேர் தெற்கே வீடு இருப்பதால் காய்கறிகள் இன்னபிற சமாச்சாரங்கள் எல்லாம் பெரும்பாலும் வாங்குவதில்லை. பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினமும் குரு நாதரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் நூற்றுக் கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு உணவும், நீரும் கிடைத்திடவும் அவர்களுடன் பேசவும் ஜோதி சுவாமிக்கு நேரம் போதவில்லை. கடந்த வாரம் அவருக்கு தொண்டை கட்டி விட்டது. 

குருநாதரையும், ஜோதி சுவாமியையும் பார்க்க வருபவர்கள் எங்கெங்கிருந்தோ பயணப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பக்தர்களும் தன் வீட்டிற்குச் செல்லும் போது ஏதாவது வாங்கிச் செல்வதைப் போல சற்குருவடிக்கு வரும் போது அவர்களால் இயன்றதை வாங்கி வருகின்றார்கள். ஆலயத்தினுள்ளே குருநாதரின் பாதமலர்களில் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

கடந்த குருபூஜை விழாவிலே பெரும் பக்தர்கள் கூட்டம் வந்து விட்டது. வருடத்தில் இரண்டு நாட்கள் அதாவது கார்த்திகை மகா தீபம் மற்றும் குரு நாதரின் குருபூஜை விழாவிற்கு மட்டுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாகும். பிற நாட்களில் தரிசனத்துக்கும், வியாழக்கிழமைகளில் வாசியோகப் பயிற்சிக்காக கொஞ்சம் அதிகமாக பக்தர்கள் சற்குருவடிக்கு வருகை தருவார்கள்.

காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை மட்டுமே ஆலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

எதிர்பாரா வண்ணம் பக்தர்கள் அதிகரித்து விட்டதால் முள்ளங்காடு வரையிலும் கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிறைந்து விட்டன. பக்தர்கள் குருவின் ஆலயத்திலே பிரார்த்தனை செய்து விட்டு, உணவருந்தி விட்டு வருவதும் போவதுமாக இருந்தனர். 

சற்குரு ஆலயத்துக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது கண்டு ஒரு சிலர் மனக்கிலேசம் கொண்டு பல்வேறு இன்னல்களை உருவாக்கி வருகின்றார்கள். லட்சக்கணக்கான பக்தர்களினால் பல்வேறு நன்மைகள் கிடைத்து சுகபோகத்தில் வாழ கனவு கண்டு அச்செயல்களை செய்யத் துவங்கி உள்ளார்கள். குருவானவர் தர்மமே உருவானவர். செய்த செயலின் பயனை அனுபவித்து தான் தீர வேண்டுமென்றும், வேண்டுமெனில் சிறிது துயரத்தை, துன்பத்தை ஆற்றுப்படுத்துகிறேன் எனவும் சொல்பவர். 

சற்குருவடி மிகுந்த ஆற்றல் மிக்கது. தர்மமற்ற எந்த ஒரு செயலும் இங்கு நடக்காது. அதர்மத்தை நிறைவேற்ற துணியும் நபர்களின் வாழ்வு முற்றிலுமாக சீரழிந்திருப்பதை கண்டிருக்கிறேன். 

சித்தர்கள் சற்குருவின் ஆலயத்தின் பின்னால் செல்லும் நொய்யல் ஆற்றில் நீராடி விட்டு, ஆலயத்தின் மேற்கு பகுதியிலே உலாவி விட்டு, பின்னர் ஆகாய மார்க்கமாக ஏழாம் மலைக்கு வெள்ளிங்கிரி நாதரை தரிசிக்கச் செல்லும் இடம் நம் குருவின் சற்குருவடி.

இந்த இடத்திலே அதர்மத்துக்கு எங்கே இடம்? அறம் செழித்திருக்கும் இடம் நம் குருவின் ஆலயம்.

பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் ஆலயத்தின்னுள்ளும் வெளியிலும் கூட்டி பெருக்கி சுத்தபடுத்துவதை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். அவர்கள் இருவரும் அக்காவும், தம்பியும் என்றும் வருவார்கள், தூய்மைப்படுத்துவார்கள், பிரார்த்தனை செய்வார்கள் சென்று விடுவார்கள் என்று ஜோதி சுவாமி சொன்னார்கள்.

எனக்கு மனம் எங்கோ சென்று விட்டது. 

ஆன்மீகத்தில் மூன்று வகை ஆனந்தங்கள் உள்ளன. அவைகள் பக்தி, பஜனை மற்றும் பிரம்மம் ஆகும். பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

கடவுள் எஜமான், பக்தன் பணியாளன் என்ற நிலையில் பக்தனொருவர் கடவுளின் மீது பக்தி கொள்வார். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக பார்த்தோமென்றால் இறைவன் இன்பம் என்றால் பக்தன் இன்பத்தை அனுபவிப்பவனாக இருப்பான்.  அதாவது இறைவன் இனிப்பு என்றால் அதை சுவைப்பவன் பக்தன். பக்தர்கள் கொண்டிருக்கும் பக்தியானது இவ்வகையானது தான்.

இந்தப் பக்தியில் இறைவனுக்கான சேவை என்பதின் மூலம் பக்தன் பல்வேறு பலன்களை அடைகிறான். இறைச் சேவையின் போது மனம் ஒடுங்க ஆரம்பிக்கிறது. பக்தனின் நினைவில் சேவை மட்டுமே இருக்கும். இறைவனின் நினைப்பில் ஆழ்ந்து விடுகிறான்.

பக்தனின் ஒடுங்கிய மனத்தோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது அப்பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. பக்தி யோகத்தின் சாரம் இதுதான். பக்தர்கள் இந்த நிலையில் இருப்பவர்கள். இவர்கள் இறைச் சேவைக்கும், இறைவனைக் கண்ணுற்று பிரார்த்தனை செய்வதின் மூலம் தங்களுக்கு வேண்டியவற்றை இறைவன் மூலம் அடைகிறார்கள்.

அந்த இரு உடன்பிறப்புகளும் சற்குருவடியில் செய்யும் சேவையின் மகத்துவத்தினை உணர்ந்தேன். சற்குருவடியிலே ஒரு சில பக்தர்கள் பிற பக்தர்களுக்கு உணவளிப்பார்கள். ஒரு சிலர் பாத்திரங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவார்கள். ஒரு சிலர் சற்குருவடி ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். பாட்டி ஒருவர் சற்குருவடியின் வெளியில் தூய்மைப் பணி செய்து கொண்டே இருப்பார். இப்படி சற்குருவடிக்கு வருகை தரும் பக்தர்கள் ஏதாவதொரு பணியைத் தங்களின் குருவின் மீது கொண்ட பக்தியாலே செய்து கொண்டே இருப்பார்கள்.

சற்குருவடியிலே ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சற்குரு எல்லோருக்குமானவர். பிற மதத்தினர் வாசியோகம் கற்றுக் கொள்ள வருவதைக் கண்டிருக்கிறேன். பிரார்த்தனைக்கு வந்து செல்வதையும் கண்டிருக்கிறேன்.

சற்குருவடியிலே தர்மமும், பக்தியோகமும், பிரம்மயோகமும் ஆட்சி செய்கின்றன. நம் குருவானவர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள் தன் பக்தர்களை பாதுகாக்கிறார் என்பதை இங்கு பக்தர்கள் நடந்து கொள்ளும் விதத்திலே அறிந்து கொள்ள முடிகிறது.

என்னையும் அவர் தன் பக்தனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதிலே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

குருவின் துணை இருப்பின் இந்த உலகத்தையே வெற்றி கொள்ளலாம் அல்லவா?