அன்பு அண்ணா, கோவையில் பஞ்சமி நிலங்கள் உள்ளனவா? அவ்வாறு பஞ்சமி நிலங்கள் என்று தெரியாமல் வாங்கி விட்டால் என்ன ஆகும்? என்று விபரமாக எழுதுங்கள். பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் - மதியழகன், பொள்ளாச்சி.
மதியழகன் நிலம் (19)ல் எழுதிய விபரங்களைப் படித்தீர்கள் என்றால் விளங்கி விடும். பரவாயில்லை மீண்டும் விபரம் தருகிறேன்.
கோவை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பத்து வட்டங்களில் பஞ்சமி நிலங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது. எந்தெந்த ஊர் என்று தெரியவில்லை. தமிழகமெங்கும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன. அவைகள் எந்தெந்த மாவட்டத்தில், வட்டத்தில், கிராமத்தில் உள்ள புல எண்கள் என்று அறிவது மிகவும் சிரமம். நிறைய பொருட்செலவும், நேரமும் எடுக்கும். இருப்பினும் நிலம் வாங்கும் போது எளிதில் கண்டுபிடித்து விடலாம். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் சூட்சுமம்.
பஞ்சமி நிலங்களை வேற்று வகுப்பினர் வாங்கினால் அது தானாகவே அரசுக்குச் சொந்தமாகி விடும். அரசு எந்த வித இழப்பீட்டினையும் தராது. அரசு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எந்த கோர்ட்டில் வழக்குப் போட்டாலும் ஒரே பதில் தான் அது பஞ்சமி நிலம். தலித் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர வேறு எவருக்கும் அந்த நிலத்தில் அனுபோக பாத்தியமோ எதுவுமோ கிடையாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் இதுதான் பதில்.
ஆகவே நிலம் வாங்கும் போது தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வாங்குவது சாலச் சிறந்தது.