குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, December 2, 2009

ஏனோ மனிதன் பிறந்து விட்டான்

பனித்திரை என்ற திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் சொல்வது அனேகம். சமூகம் இந்தளவுக்கு கேடு கெட்டதாய் ஆக ஏதோ சிலரின் தன்னலப் போக்குதான் காரணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமையெனும்
பனித் திரையாலே மூடுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகள் என்றும் பீடைகள் என்றும்
மறு நாள் அவனே ஏசுகிறான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் - அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்

ஏதோ மனிதன் பிறந்து விட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்

Saturday, January 31, 2009

நாகேஷ் - காமெடி

மக்களின் மனதில் என்றும் மறையாத நடிப்புக் கொண்டவர் நாகேஷ். விருதுகளுக்கும் அப்பாற்பட்ட நடிகரின் மரணம் சற்று வேதனையாக இருந்தாலும் சினிமா உலகில் என்றும் மறையாத புகழுடையவர். நடிப்பின் மூலம் மற்றவரை சிரிக்க வைத்தவர் அவர். அழுவது அவருக்குப் பிடிக்காது என்பதால் தான் இந்த கிளிப்பினை இணைக்கிறேன்.

Friday, January 2, 2009

யாரது யாரது ????

புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி. எனக்கு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

வாழ்க்கை அதன் பாதையினை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கும்போது கொண்டாட்டங்களில் மனது செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.

எங்குபார்த்தாலும் தர்மம் கொல்லப்படுகிறது. பூமி முழுதும் அதர்மம் தலை தூக்கி மனிதர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உடம்பினை அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். மனிதர்கள் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை சுலபமாக இல்லாமல் கடும் இருள் சூழ்ந்த பாலைவனமாக மாறி வருகிறது. எங்கு செல்வது யார் மீது நம்பிக்கை கொள்வது என்று அறியாமல் மனிதர்கள் மனம் பிறழ்ந்து என்னென்னவோ செய்கிறார்கள்.

இருப்பினும் மனசினை சற்று ஆற்றுமைப் படுத்திக் கொள்ள சில பாடல்களை அவ்வப்போது கேட்பேன். எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. வெகு அழகான பாடல் வரிகள். நல்ல இசை... கேட்க கேட்க மனசு சற்று ஆறுதல் படுகிறது. இயற்கையினை விட எவரும் அழகில்லை இந்தப் பெண் உட்பட. ஆனால் இந்தப் பெண் அழகாக இருக்கிறார். இவரின் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்திப்போம்.


Friday, December 5, 2008

சின்னப்பயலே சின்னப்பயலே

எம்ஜியாருக்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல். எனது ஊருக்கு அருகில் இருக்கிறது இந்தப் பட்டுக்கோட்டை. கல்யாண சுந்தரத்துக்கு சாலையின் முக்கில் ஒரு சிலையுமுண்டு. என் மகன் என்னிடம் கேட்டான் ” யாரப்பா அவரு” பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் என்றேன். அவரின் பாடல் நினைவுக்கு வந்தது.

கம்யூனிச தத்துவம் இப்பாடலில் அங்குமிங்கும் வெளிப்படுகிறது. இன்றையக் கால கட்டத்தில் கம்யூனிச தத்துவமெல்லாம் எடுபடுமா என்ன ???

ஒரு பக்கம் உல்லாசத்தின் உச்சகட்டத்தை அனுபவிக்கும் மனிதர்கள்
மறு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லா தவிக்கும் மனிதர்கள்.



ஒருவன் மனதில் ஒன்பதடா...

மனிதனின் மனம் இருக்கிறதே, அதனால் செய்ய இயலாத காரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? அந்த அளவுக்கு வலிமை வாய்ந்த மனம் பற்றிய பாடல் இது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒவ்வொரு மனிதனின் மனதில் மறைந்து கிடக்கும் மர்மங்கள் எவ்வளவோ ???????

Friday, November 28, 2008

ராதையின் காதல் வலி

ஒரு நாள் காதலியைக் காணவில்லை. வருவாள் வருவாள் என்று காத்திருந்தேன். காணவில்லை. அவளின் தங்கையையும் காணவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தேன். கலீல் ஜிப்ரானின் கவிதைகளை படித்து மனதினை தேற்றிக் கொள்வேன். இருந்தாலும் மனசு கேட்காது. எப்போது தான் வருவாளோ என்று பிரவச வலியால் துடிக்கும் பெண்ணைப் போல மனசு துடித்துக் கொண்டிருந்தது. என் நண்பன், நான் படும் வேதனையைக் காணச் சகிக்காமல் அழுதான். ஏனடா, இப்படி உன்னையே சாகடித்துக் கொள்கிறாய் என்று கண்ணீர் சிந்தினான்.

” இறந்த பிறகும் என் கண்கள் திறந்தே இருக்கும்
ஏனென்றால் இன்னும் உனக்காக காத்திருக்கிறேன் “

என்ற கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகளை அவனிடம் சொன்னேன். ஜெயதேவர் கண்ணனின் காதலி ராதை கண்ணனைப் பார்க்க இயலாமல் காதல் பிரிவில் படும் வேதனையை பாடலாக எழுதி இருப்பார். கண்ணதாசனின் வரிகளில் வழிந்தோடும் ராதையின் காதல் பிரிவின் வலிகள் நான் படும் துயரத்தின் வலியை விட சுமாராகத்தான் இருந்தது.

காதலிக்காக காதலன் பாடும் பாடல் என்று இந்தப் பாடலை எடுத்துக் கொள்ளுங்களேன்.


காதலிக்கும் போது கேட்ட பாடல்

நான் ஒரு காலத்தில் எனது வகுப்புத் தோழியுடன் காதல் வயப்பட்டிருந்தேன். எனக்கும் அவளுக்கும் காதல் தூது தோழியின் தங்கை. தோழி சுமாராகத்தான் இருப்பாள். ஆனால் இவள் தங்கையோ அழகு என்றால் அப்படி ஒரு அழகு. தேவதை போலவே இருப்பாள். உடல்வாகும், நடையும், முகமும் அவ்வளவு லடசணமாக இருக்கும்.

என் மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள். ஆனால் நான் தான் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டேன். எனக்கு மகன் பிறந்த பின்னர் எனது உறவினர் வீட்டுக்கு மகனுடன் சென்றேன். என் மனைவி மகனுக்குச் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த போது தோழியின் தங்கை என் மனைவியிடம் சொன்னது “ இவன் என் வயிற்றில் இருந்து பிறக்க வேண்டியவன், எங்கோ பிறந்திருக்கிறான்”. என் மனைவி என்னிடம் வந்து சொன்னாள். அப்படியா சொன்னாள் என்று சொல்லிச் சிரித்து வைத்தேன்.

தோழியுடன் காதல் வயப்பட்டிருந்த போது அவளின் சிரிப்புக்காக நாள் முழுதும் தவமிருப்பேன். அந்த நேரங்களில் இந்தப் பாடலைத்தான் அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பேன். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.




அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

Thursday, October 23, 2008

Survival of fitness

எனது சில நண்பர்கள் சினிமா இயக்குனர்கள். அந்த இயக்குனர்களில் ஒருவர் ” தங்கம், புது படம் கமிட் ஆகியிருக்கிறேன். புது முகம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகால ரேவதி போல, புதுமுகம் தேவை, உனக்குத் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்களேன் “ என்றார். எனது நண்பர்கள் பல பேரிடமும் சொல்லி வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பர் எனது முன் அனுமதி இல்லாமல் இரண்டு பெண்களிடம் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டார்.

மாலை நேரம், புது எண்ணிடமிருந்து அழைப்பு வந்தது.

”சார் மதுமதி பேசறேன், தங்கம் சாரா?”
“எஸ் சொல்லுங்கள் “
“சார், போட்டோ கிடைத்ததா “
” ஓ... நீங்களா, கிடைத்து விட்டது. இயக்குனருக்கு அனுப்பி இருக்கிறேன்”
“ஏதாவது பதில் வந்ததா சார்”
“இல்லேம்மா, டைரக்டரைப் பிடிக்க முடியவில்லை. அவரே கூப்பிடுவார். அதன் பின்னர் தான் தெரியும்”
“சார், வேற ஏதாவது வேணுமா ”
“ வேற ஏதாவதுன்னா, என்னம்மா ?”
” உங்களை நேரில் வந்து பார்க்கலாமா “ என்றார்.

எனக்கு விர்ரென்று கோபம் தலைக்கேறியது. இந்தப் பெண் உமனைசர் என்று நினைத்து விட்டது போல தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டு,

“அதெல்லாம் வேண்டாம். உன்னை இயக்குனர் செலக்ட் செய்தால், நீயாச்சு, அந்த இயக்குனராச்சு. என்னை எதுக்குப் பார்க்கனும்?” என்று கர்ண கடூரமாக சொன்னேன்.

ஒரு நிமிடம் பேச்சே கேட்கவில்லை.

“சார், மன்னிச்சுக்கங்க “ என்று விம்மிய குரல் வந்தது.
“ பாரும்மா, எதுக்கு சினிமாவுக்கு வரனும்னு நினைக்கிறே” என்றேன்.
“ சர்வைவல் ஆஃப் பிட்னெஸ்” என்றார் அந்தப் பெண்.

இரண்டு வார்த்தைகளில் அவரின் சூழ்நிலையை விளக்கிய அந்தப் பெண்ணின் அறிவினை எண்ணி வியந்தேன்.

ஆம், சர்வைவல் ஆஃப் பிட்னெஸ். நினைத்துப் பார்த்தால் கொலை, கொள்ளை, போர், ஊழல், சர்வாதிகாரம் எதுவுமே தப்பே இல்லை என்று தான் தெரிகிறது.

வாழ வேண்டும். அதற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம்.

குறிப்பு : சர்வைவல் ஆஃப் பிட்னெஸ் என்று இரவில் புலம்பிக் கொண்டிருந்தீர்கள். அதற்கேற்ற கதையை எழுதவா ? என்று மனைவி இந்தப் பதிவை படித்த பின்னர் சொன்னார்.

Saturday, October 18, 2008

சூர்யவம்சம் - பாடல்

எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலாசிரியரும், இயக்குனரும், இசையமைப்பாளரும் ஒருங்கே ஒரு கோட்டில் இணைந்ததன் விளைவு இந்தச் சுவையான பாடல்.

Tuesday, September 16, 2008

மனதை மயக்கும் பாடலில் இதுவுமொன்று

இளையராஜாவின் குரலிலும் இசையிலும் இந்தப் பாடல் ஜொலிப்பதை கேளுங்கள். எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இந்தப் பாட்டை மிஞ்ச எவர் இருக்கிறார் இசையுலகில்.

சற்று நேரம் .. சற்று நேரம்.. மனதை இலேசாக்குங்கள். கால்களையும் கைகளையும் படர விடுங்கள். மூச்சினை மெதுவாக விடுங்கள். மனது லேசா லேசா இருப்பது போல உணருங்கள். இப்போது இந்தப் பாட்டைக் கேளுங்கள். மனம் மிதக்கும்.... கண்கள் சொக்கும்... குரலில் தேன் சொட்டும். அது உம்மை நனைக்கும்... நீங்கள் நனைவீர்கள்.. நிச்சயம் நனைவீர்கள் இசை மழையில்.... மனம் சட்டென்று ஒருமைப்படும்....

கேட்கும்போதே கிளுகிளுப்பைத் தரும் பாடல்

என் சிறு வயதில் வேலைக்காரர் ஜெயராஜ் என்னை மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து கொண்டிருந்த கீழே இறங்காமல் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அன்று கடைசி நாள். சுற்றி வரக் கயிறு கட்டி இருந்தனர். ஜெயராஜ் துண்டை விரித்து அமரச் சொன்னார்.

ஒரு பெண்ணும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவரும் இந்தப் பாட்டை ஒலிபெருக்கியில் போட்டு விட்டு ஆடினர். ஆட்டம் பட்டையக் கிளப்பியது. அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பார்க்கவும் படு ஜோராக இருந்தது. பாம்புபோல நெளிந்து வளைந்து ஆடி பார்ப்போரின் மனதினை சிதற வைத்த ஆட்டம் அது. அந்த வயதிலேயே பார்க்கும் போது கிளுகிளுப்பாய் இருந்ததன் விளைவு இதோ இன்று... கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டு எழுதுகிறேன்.

இந்தப் பதிவை எழுதும் போது மணி 10.56 இரவு நேரம். அருகில் உள்ள வீட்டார்கள் அனைவரும் உறங்கி இருப்பார்கள். தப்பித் தவறி யாராவது இந்தப் பாட்டைக் கேட்டால், தங்கம் வீட்டில் மஜாவா இருக்கான் பாருன்னு அப்படி இப்படின்னு பேசிக்கிட்டே அவங்க அவங்க வீட்டில ஏதாவது நடக்கும்ல.... நடக்கட்டும்.. நடக்கட்டும்...

பாட்டைக் கேட்க கேட்க கிளுகிளுப்பாய் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்ற நல்லெண்ணத்தில்.... இதோ சிலுக்கு ஸ்மிதாவும், கமலும்...

அடி தூள்...............


Sunday, August 31, 2008

தஞ்சாவூரென்றாலே குளிர்ச்சி தான் போலும் !

அடியேன் தஞ்சாவூர்காரன். எப்போதும் பசுமையும், தண்ணீரும், திருவிழாக்களும், காதணி விழாக்களும், திருமண விருந்துகளும் களை கட்டும் எங்கள் தஞ்சையில். இசையும், கொண்டாட்டமும் எங்கள் ஊரின் முக்கிய அம்சங்கள். உழைப்பு... உழைப்பு.... உறவுகள்... விழாக்கள்... இது தான் தஞ்சை மாவட்டம்.

ஆனால் பாருங்க, இந்தப் பாட்டில் தஞ்சாவூர் பெயர் வர, என்னவென்று எட்டிப் பார்த்தால்... ஆகா.. ஆகா.. இளமை துள்ளி விளையாடுகிறது பாருங்கள் இங்கே.... பாடல் வரிகளும் எங்க ஊர்க்காரனுங்க பேச்சுலே அசத்தற மாதிரி வேற இருக்கு. பச்சைப் பசேல்னு இருக்கு பாருங்க...

பார்த்து ரசிங்க .......... முடிந்தால் தஞ்சாவூர் பக்கம் ஒரு தடவை வந்து பாருங்க....

Saturday, August 23, 2008

தங்கத்தைக் காதலிக்கும் உலகம்

தங்கம்! உலகெங்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு உலோகம். அரசாங்கங்கள் தங்கத்தை சேகரித்து வைத்திருக்கின்றன. தங்க நகைக் கடைகளை காணும் போதெல்லாம் சொர்க்கலோகம் போல இருக்கும். உலகப் பெண்கள் பெரும்பாலோராலும் விரும்பப்படும் பொருள் தங்கம். ஆண்களும் விரும்புவார்கள்.

இந்தப் பாடலைக் பார்த்து வையுங்கள். எதுக்கும் இருக்கட்டும்.

பின்குறிப்பு : இந்தப் பாடலுக்கும் எனது பெயருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாடலைக் கேட்ட பின்னர் உங்களுக்கு தங்கத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வந்தால் நான் என்ன செய்ய.

Thursday, August 21, 2008

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 4

அவள் உயிர் பெற்று வந்த பிரம்மனின் படைப்புகளின் உன்னதம். அவள் சிரித்தால் பார்ப்பவனுக்குள் பூகம்பம் உண்டாகும். சில்லென்று ஒரு குளிர்ச்சி உடல் முழுதும் பரவும். சடக்கென்று மனசு அமைதி பெறும். அழகு என்பது இவளா. இல்லை இவள் தான் அழகா. இரண்டுக்கும் வேறுபாடு சொல்ல இயலாது மனிதனால். அப்படி ஒரு தேவதை. அவளுக்கு ஒரு தங்கை.

ஆண்மகன் அவன். அழகு திருமகன். இவனுக்கு ஒரு அண்ணன். இருவரும் பெண்பார்க்கச் செல்வார்கள். அக்கா தம்பியை நோக்குவாள். தம்பியும் அப்படியே. அந்தப் பார்வையின் அர்த்தம் காதல். இதைத் தான் கம்பனும் கவி பாடியிருப்பானோ ? பார்வையில் காதலைப் பறிமாறும் அந்த உள்ளங்கள் தவித்துப் போகின்றன. ஏன்... அது தான் விதி என்பார்கள் மனிதர்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளின் பாதையில் அண்ணன் அக்காவையும், தம்பி தங்கையையும் மணக்க நேரிடுகிறது.

அண்ணன் இறந்து விடுகிறான். அக்கா விதவையாகிறாள். ஒரு குளிர்காலப் பொழுதில் மழை கொட்டுகிறது. இவனும் அவளும் தனிமையில் சந்திக்கும்படி நேர்கிறது. அவள் மனதில் விளையும் உணர்வுகளின் தொகுப்பு இது...

பாடலா இது... வாழ்க்கையின் கோரங்களைச் சொல்லும் பாடல் இது. விதவைப் பெண்ணின் தவிப்பை கொட்டி எழுதப்பட்ட பாடல். கேட்கும் என் மனதை உள்ளுக்குள் அழவைக்கும் இந்தப் பாடல். சோகத்திலும் சுகம் இருக்கத்தானே செய்கிறது.


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ -3

சத்ரியன் படத்தில் பானுபிரியா நடித்த இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசு லேசாகி விடும். மிகவும் அருமையான பாடல் இது.

எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 2

இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மனசு துள்ளி விளையாடும். என்றும் இனிமை தரும் பாடல்


எனக்குப் பிடித்த பாடலின் வீடியோ - 1

ஆகாய கங்கை - இளையராஜாவின் இன்னிசையில் எப்போது வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் இது.

Saturday, July 26, 2008

சமரசம் உலாவும் இடமே

அன்பு நண்பர்களே,

வாழ்க்கை ஒரு போராட்டம். வலிமை உள்ளவன் வசதியாய் வாழ்கிறான். மற்றவன் ஏங்கிச் சாகிறான். காசுதான் மனிதனின் அளக்கும் அளவுகோலாய் மாறிய இந்த உலகில் மதமும், மண்ணாங்கட்டியும் மிருகமாய் வாழ மனிதனைப் பணிக்கிறது. ஆடுகிறான். பாடுகிறான். அழிக்கிறான். அழிந்து போகிறான். ஆனால் இந்த இடத்தில் காசும் பகட்டும் பொன்னும் பொருளும் மதிப்பின்றி போய் விடும். நீங்களும், நானும் ஏன் பிரதமரும் கூட ஒன்று தான்..... பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

படம் : ரம்பையின் காதல்
வெளிவந்த வருடம் : 1956
பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன்
பாடல் : மருதகாசி
இசையமைத்தவர் : தெரியவில்லை



சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே


சேவை செய்யும் தியாகி சிங்காரப் போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலேயே
இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

Sunday, July 13, 2008

முனியாண்டி மூன்றாம் ஆண்டு விலங்கியல் - திரைவிமர்சனம்

கேண்டீன் வைத்து நடத்தும் பொன்வண்ணனின் மகனாக பரத். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறையில் படிக்கிறார். ஊர் பெரிய தாதாவின் பெண்ணுடன் காதல் வருகிறது. கதா நாயகியின் அறிமுகம் அவரது காலில் தொடங்குகிறது. என்ன ஒரு டைரக்டோரியல் டச் தெரியுமா இந்த சீன். இந்த சீனுக்கு பின்தான் படம் பார்க்க விருப்பமே வருகிறது. பரத் கல்லூரியில் பாடும் ஒரு பாட்டு. இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லுவது போல அமைந்துள்ளது இப்படத்தின் சிறப்பு. பொன்வண்ணனின் வேஷம் இதுவரை தமிழ் சினிமாவில் எவரும் போடாத வேஷம் என்பது இப்படத்தின் சிறப்புக்கு இன்னும் ஒரு காரணம். முடிவெட்ட கடைக்குச் செல்லும் பரத்திற்கு, பொன் வண்ணன் அட்வைஸ் சொல்லும் காட்சிகள் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். கல்லூரி தேர்தலை சாக்காக வைத்து இரு ஜாதிகள் மோதிக் கொள்ளும் காட்சிகள் இதுவரை ஹாலிவுட்டில் கூட எடுக்கப்படாத அளவுக்கு மயிர்க்கூச்செரியும் அளவுக்கு எடுக்கப்பட்டுள்ளன. இயக்குனர் திருமுருகன் இதற்காக மெனக்கெட்டு இருப்பது அவரின் சின்சியர் உழைப்பினை காட்டுகிறது. தமிழ் சினிமாவுக்கு உலகில் சிறந்த படைப்பினை வழங்க வேண்டுமென்ற அவரது எண்ணம், ஆர்வம், உழைப்பு வேறு எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒன்று.

கதா நாயகி பரத்தை கேவலப்படுத்த பரத் செருப்பால் அடித்து, தென்னந்தோப்பை கொளுத்தி விடுகிறார். இந்தக் காட்சி படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வரவழைக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. நாயகி தன் அப்பாவிடம் இந்த விஷயத்தை மறைத்து விடுவதால் பரத்தைக் காப்பாற்றுகிறார். கதை என்றால் இது தான் கதை. திருமுருகன் வைத்திருக்கும் இந்தத் திருப்பம்தான் கதையின் சுவாரசியமான போக்கிற்கு உறுதுணையாக இருப்பது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

பொன்வண்ணனின் மூத்த மகனை நாயகியின் அப்பா கொன்று விடுவது கதையில் இருக்கும் மர்ம முடிச்சு. இதுவரை எத்தனையோ சினிமாக்கள் வந்து இருக்கிறது. எந்தச் சினிமாவிலும் இதுவரை சொல்லப்படாத மர்ம முடிச்சு இந்தப் படத்தில் தான் இருக்கிறது. நாயகி அப்பாவின் எதிரி இன்னொரு ஜாதிக்காரன் தான் பரத்திடம் இந்த உண்மையினைப் போட்டு உடைக்கிறார். அதைக் கேட்ட பரத், நாயகியின் அப்பாவை புரட்டி எடுக்கும் காட்சியில் தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. விசில்களின் சத்தம் வின்னை முட்டுகிறது.

கதையின் முடிவாக மாணவர்களின் கூட்டத்தில் பரத் ஆற்றும் உரை, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையினை ஞாபகப்படுத்துகிறது. இப்படி ஒரு சீனை வைத்த திருமுருகன் தமிழ் சினிமாவில் எவரும் அசைக்க முடியாத , தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது கண்கூடு.

கதையில் பரத்திற்கு நண்பனாக முடியில் மணி கட்டி, இடுப்பில் மணிகளை தொங்க விட்டு வருபவர் யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பெயரைக் போட்டார்கள். ஆனால் வடிவேலுவைக் காணாமல் தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் வடிவேலு எங்கே, வடிவேலு எங்கே என்று சத்தம் போட்டார்கள். பின்னர் தான் தெரிந்தது இடுப்பில் மணி கட்டி நடித்தவர் தான் வடிவேலு என்று. ஹாலிவுட் தரத்திற்கு மேக்கப் கலை உயர்ந்து இருப்பது தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு முன்னேறியுள்ளது கண்டு வியப்புதான் மேலிட்டது.

படத்தின் முடிவும், பாடல்களும் சொக்க வைக்கும் ரகம்.. இந்த விமர்சனத்தில் பாதிக் கதையினைத் தான் சொல்லி இருக்கிறேன். மீதியை நீங்கள் தொலைக்காட்சியில் சாரி சாரி... தியேட்டரில் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டுகிறேன்.