குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கெளரிசங்கர். Show all posts
Showing posts with label கெளரிசங்கர். Show all posts

Sunday, February 15, 2026

அன்னபூர்ணா சுந்தர்ராஜன் - நினைவஞ்சலி

கோவை என்றாலே ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் உணவுப் பிரியர்களுக்கு நினைவிலாடும். எண் சாண் உடலுக்கு உணவே பிரதானம். அன்னபூர்ணாவின் காஃபியைக் குடிக்காதவர்கள் ராசி இல்லாதவர்கள் எனலாம். எனது இனிய நண்பர் கோவையின் முன்னாள் கமிஷனரின் ஒவ்வொரு நாளையும் அன்னபூர்ணாவின் காஃபி தான் துவக்கி வைக்கும். ’அதென்னவோ தெரியவில்லை சார், அந்தக் காப்பியைக் குடிக்காமல் ஒரு நாள் பொழுது போவதில்லை’ என்பார்.

இப்படி இன்னும் எத்தனையோ பேர் அன்னபூர்ணாவிடம் சரணாகதி அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கணபதி அன்னபூர்ணாவில் மாலை நேரம் கொழுக்கட்டையும், காஃபியுடன் தான் எனது அன்றைய நாள் முடியும். மதியம் போல ஒரு காஃபி.

ஒவ்வொரு பத்திரப்பதிவின் போதும் அன்னபூர்ணாவில் சாப்பிடுவது வாடிக்கை. இப்படி எத்தனையோ நாட்கள் உடலோடும், உணர்வோடும் ஒன்றியது அன்னபூர்ணா ஹோட்டலின் உணவு. 



அய்யாவுடன் எனக்கு முதலில் அறிமுகமானது நமது குருநாதரின் ஜீவசமாதியில் தான். சென்னையிலிருந்து வந்திருந்த ராசு என்ற நண்பரும் நானும் ஆசிரமம் சென்றிருந்தோம். இந்த ராசு என்பவர் இந்திய அளவில் மிக முக்கியமான பொருளாதார வல்லுனர் ஆவார். இவரும் அமமுக தலைவர் தினகரன் அவர்களும் கல்லூரித் தோழர்கள். அடியேனும் கூட.

காரில் அமர்ந்திருந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அருகில் ஜோதி சுவாமிகளும், அக்காவும் இருந்தார்கள். அப்போது அய்யாவும், அம்மாவும் என்னுடன் அறிமுகமானார்கள். 

அம்மாவுடன் அவ்வப்போது பேசிக் கொள்வதுண்டு. அவர்கள் ஆசிரமம் வரும் போது பேசுவது என தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒரு நிலம் விற்பனை தொடர்பாக ஆர்.எஸ்.புரத்திலிருக்கும் ஹோட்டலில் இரண்டவது தடவை சந்தித்தேன். ஒரு மணி நேரம் சென்றது. 

நானும் மகனும் வெளியில் வரும் போது, அவரிடம் கேட்டேன் ’சினிமாவில் முயற்சித்திருக்கலாமே? ஏன் விட்டு விட்டீர்கள்’ என.

’எனக்கு சினிமாவில் ஈடுபாடு இல்லை. இதுவரையிலும் நான் எந்தக் கிளப்பிலும் மெம்பராகவும் இல்லை’ என்றார். 

தகப்பனாருக்குப் பிறகு தொழிலில் கவனம் என அவர் முழு ஈடுபாட்டுடன் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டார். அவர் பல விஷயங்களை அன்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அவர் உயரத்தில் மட்டும் உ யர்ந்தவர் அல்ல.

அவரின் ஹோட்டலில் மூன்று தினமும் சாப்பிட்டு வந்தவருடன் அவர் அடிக்கடி பேசுவதுண்டு. அது இருவருக்கும் நல்ல நட்பாக இருந்தது. அந்த நபருக்கு வேலை போய் விட்டது. அதை இவருடன் சோகமாக பகிர்ந்து கொண்டார் அந்த நபர். உடனே சுந்தர்ராஜன் அவர்கள் அவருக்கு ஆட்டோ ஒன்றினை வாங்கிக் கொடுத்து அவரின் வாழ்க்கைக்கு உதவினார்.

அதுமட்டுமல்ல அவருடன் நட்பு பாராட்டிய ஒரு நண்பரின் சிரமத்தைத் தெரிந்து கொண்ட அவர், அவருக்கு ஒரு இனிப்பு பார்சலை அனுப்பி வைத்தார். அந்தப் பார்சலில் ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தது. இன்றைக்கு நினைத்துப் பாருங்கள். எந்த ஒரு நண்பராவது இப்படிச் செய்வார்களா?

1977ம் வருடம் இவரின் நண்பரின் திருமணச் செலவுகள் அனைத்தையும் செய்து திருமணம் நடத்தி இருக்கிறார். இதைப் போன்ற பல செய்திகளை அன்னபூர்ணா வேலுமணி அவர்கள் - எனது ஆதர்ச வழிகாட்டி என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

இரண்டாவது தடவையாக ஹோட்டலில் சந்தித்த போது,  மெலிந்திருந்தார். நோயின் வீச்சு அவரை சோர்வடைய வைத்திருந்ததைக் கண்டேன். நான் எத்தனையோ தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். சுந்தர்ராஜன் - ரமா தம்பதியினரைப் போல வேறு எவரையும் கண்டதில்லை. ஆதர்ச தம்பதிகள் இருவரும். தயை,  கருணை, அன்பு நிறைந்த ரமா அம்மா அவர்களைப் பார்ப்பதே கடவுளைப் பார்ப்பது போல.

அய்யாவின் ஆரம்பகால ஹோட்டல் தொழில் பற்றி அம்மா, பல தடவை என்னிடம் பல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு மனிதர் உள்ளத்தளவில் உயர்வானவர் என்பது அவரின் செயல்களிலே தெரியும். அவர் தன்னை நம்பியவர்களுக்கும், தன்னுடன் பயணித்தவர்களுக்கும் பாதுகாவலராய், அரணாய் இருந்திருக்கிறார்.

தகப்பனாரின் மறைவுக்குப் பிறகு, இவரின் நிர்வாகத்தில் அன்னபூர்ணா செழித்து வளர்ந்து பல கிளைகளைப் பரப்பி நிற்கிறது. தற்போது இவரின் புதல்வர் ஜெகன் இந்தக் காரியத்தை தொடர்ந்து செவ்வனே நடத்தி வருகிறார். ஜெகனுக்கு எல்லாம் வல்ல குரு நாதரும், இறைவனும் உதவி செய்து - இன்னும் உயர்ந்த நிலையில் ஹோட்டல் தொழிலில் உயர வைக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் நினைவுகள் - நாம் எப்படி வாழ வேண்டும் என நமக்குச் சொல்லித் தரும். வாழனும், வாழ உதவ வேண்டும். 

அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.