நேற்றைக்கு முதல்
நாள் மாலையில் தண்ணீர் மோட்டார் வேலை செய்யவில்லை. ஃஃபியூஸ் போயிடுச்சு. ஃபியூஸ் போட்டு
மாட்டினால் திரும்பவும் வேலை செய்யவில்லை. தண்ணீர் இல்லாமல் எப்படி? டென்ஷனாகி விட்டார்
மனையாள். இரவில் எவரும் வரமாட்டார்கள். இபி மணி சொந்த ஊருக்குச் சென்று விட்டார். இருந்தால்
அரை மணி நேரம்தான்.
மறு நாள் காலையில்
ஆள் இருக்காரா என பார்த்து அனுப்பி வைப்பதாகச் சொல்லி விட, சிக்கனமாக பயன்படுத்தும்படி
பசங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மனையாள்.
விடிகாலை, வழக்கம்
போல எழுந்தேன். எனக்கு ஒரு நாளின் ஆரம்பம் சில்லென்ற தண்ணீரில் குளிப்பதுதான். குளிக்கவில்லை
என்றால் அன்றைக்குப் பூரா எனக்கு ஆகாது. ஆகவே காக்கா குளியல் ஒன்றினைப் போட்டு விட்டு,
இன்னைக்கு என்னங்க சமைக்கணும் என்று கேட்டுக் கொண்டிருந்தவரிடம், வெங்காய சாம்பார்
வை என்றுச் சொல்லி விட்டேன்.
சட்டியில் வெங்காயத்தை
வதக்கிக் கொண்டிருந்த போது வெளியில் சத்தம். ரூடோஸும், மணியும் விடாமல் குலைக்க, பக்கத்து
வீட்டு ஆள் அய்யோ பாம்பு பாம்பு என கதற வெளியில் சென்று பார்த்தால், கேட்டின் அருகில்
இருக்கும் தண்ணீர் தொட்டியின் மூளையில் குழந்தை போல படுத்துக் கிடந்தது கண்ணாடிவிரியன்
பாம்பு.
கண்ணாடிவிரியன்
விஷத்தின் தன்மை வீரியமானது. இது பார்ப்பதற்கு மலைப்பாம்பு போல இருக்கும். புஷ் புஷ்
என சத்தம் விட்டுக் கொண்டே இருக்கும். கடித்தால் நான்கு நிமிடம்தான். இந்தப் பாம்பு
கடித்தால், முதலில் இதயம் செயல்படுவது நின்று விடும். அடுத்த நான்காவது நிமிடத்தில்
உயிர் போய் விடும். கடுமையான விஷம் கொண்டவை இப்பாம்புகள். இவைகளைச் சீண்டினால் கோபத்தில்
நாய்கள் கடிப்பது போல சீறிக் கொண்டு கடிக்கும்.
நல்ல பாம்பு கடித்தால்
20 நிமிடம் தாங்கும். பயப்படாமல் இருந்தால் 25 நிமிடம் வரை விஷம் பெரிதாக பாதித்து
விடாது. ஆனால் விரியன் வகை பாம்புகளின் விஷம் உடனடி மரணம்.
மூலையில் படுத்து
இருந்தது சுமார் மூன்றரை அடி நீளம். கைபெருசு கணம். பாம்பின் தலையோ பெரியது. பக்கத்து
வீட்டு நண்பர்(???) ராஜ்குமாரை அழைத்தால், நான் சிறு பையனாக இருக்கும் போது, பாம்பு
என் தலைக்கு மேல் படம் எடுத்து ஆடியது. அதன் பிறகு அடிப்பதில்லை என்றுச் சொல்லி விட்டார்.
பக்கத்து வீட்டு ஆள், கேட்டைத் திறக்கும் போது அவர் வீட்டுக்குள் நுழைய சென்ற பாம்பை
மிதிக்கப் போய், தவறியதால், நடு நடுங்கிக் கொண்டு வீட்டுக்குள் உட்கார்ந்து விட்டார்.
அந்த அதிர்ச்சியில் அவர், என் வீட்டுக்குள் வந்து விட்டார்.
எதிர்த்த வீட்டு
செந்தில் மாடியில் நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். எட்டிக் கூட
பார்க்கவில்லை. எதிர்த்த வீட்டு கீழ் வீட்டில் இருக்கும் பாட்டி, பாம்பை வந்து பார்த்து
விட்டு அய்யோ ஆத்தா என்று ஓடியே போய் விட்டார்.
ஊட்டி நண்பர் வந்தார்.
பாம்பு பெரிதாக இருக்கிறது. அடிக்க முடியாது என்று சொல்லி விட்டார்.
அடியேனுக்கு பாம்பு
என்றால் அதைக் கொல்வது என்றால் சர்க்கரை சாப்பிடுவது போல. சிறிய வயதில் கரட்டான்கள்,
எலிகள், பாம்புகள் இவைகளை கொல்வது எனக்கு ஜாலிலோ ஜிம்கானா.
கிராமத்து வீட்டில் வேல்கம்பு, ஈட்டிக்கம்பு, வீச்சறிவாள், கொடுவாள் என ரக ரகமாய் இருக்கும். எனக்கு கொஞ்சம் விபரம்
வந்தவுடன் ஒன்றரை அடிக்கு சுளுக்கி செய்து வைத்திருந்தேன். சுளுக்கி என்றால் என்ன தெரியுமா?
கைப்பிடியிலிருந்து நான்கு கீற்றுகளாக நீன்று, முனையில் கொக்கி போல இருக்கும். ஈரக்குலைக்குள்
சொருகி இழுத்தால் ஆள் காலி. வயிற்றுக்குள் சொருகி இழுத்தால் குடல் வெளியில் வந்து விடும்.
ஊரில் ஏர்கன் ஒன்று வைத்திருந்தேன். புல்லட்டைப் போட்டு அடித்தால் பாம்பின் தலைக்குள்
புல்லட் பாய்ந்து விடும். சுருண்டு விடும். சுளுக்கியால் கரட்டானைக் குத்தி அது துடிப்பதை
ரசித்துக் கொண்டிருப்பேன். சின்ன வயதில் அப்படி இருந்தேன். இப்போது ஜீவகாருண்யம் பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறேன். அது ஒரு காலம், அனுபவமறியா வயது.
இங்கு கோவையில்
அதெல்லாம் ஏது?
கோவை வீட்டில்
பாம்புகள், முயல், கவுதாரி, மயில்கள் அதிகம். மயில்களில் ஒன்று கூட பாம்பு பிடித்துப்
பார்க்கவே இல்லை. வாசலில் உட்கார்ந்திருப்பேன். ஏழு அடி நீளத்தில் சாரையார் கேட்டின்
வழியாக தலையை நீட்டுவார். பார்த்துக் கொண்டிருப்பேன். நான் ஏதாவது எதிர்க்கிறேனா என்று
உளவு பார்ப்பார். ஒன்றும் சிக்னல் இல்லை என்ற உடன் சுவற்றைச் சுற்றிக் கொண்டு தவளை
பிடிக்கச் செல்வார். பெட்ரூம் சன்னலில் சென்று பார்ப்பேன். சந்து பொந்துகளுக்குள் தலையை
விட்டு ஏதாவது சிக்குகிறதா என்று பார்த்துக் கொண்டிருப்பார். மேற்கு மூலையோரம் பாம்பு
புற்றுக்குச் சென்று விடுவார். இப்போது வீட்டைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டி
விட்டதால் வருவதில்லை.
இந்த கண்ணாடி விரியனார்
வேப்பமரத்தடியில் படுத்துக் கொண்டு உருண்டு கொண்டிருப்பார். மனையாள் அவ்வப்போது விரட்டி
விடுவார். பக்கத்து காலி மனைக்குள் சென்று விடுவார். ஆனால் இன்றைக்குப் பார்த்து வீட்டுக்குள்
வந்து விட வேறு வழி இல்லை.
பரலோக பிராப்தி
கொடுத்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதற்குள் நண்பர் தீயணைப்பு துறைக்கு
அழையுங்கள் என்று சொன்னார். அழைத்தேன். அவர் பாம்பு பாதுகாப்பாளர்கள் என்று சொல்லக்கூடிய
ஆட்களின் தொலைபேசி எண்ணைக் கொடுக்க, அழைத்தேன். அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று
சொன்னார்கள். படம் பிடித்து, வாட்சப்பில் அனுப்பி வைத்தேன். இரண்டு பசங்க வந்தார்கள்.
விக்னேஷ் மெதுவாக சாக்கு ஒன்றினை விரித்து வைத்து, அதற்குள் பாம்பினை நேக்காக தள்ளி
விட, சாக்குக்குள் சென்றது பாம்பு. அதைக் கொண்டு போய் மருதமலை காட்டில் விட்டு விடுகிறேன்
என்றுச் சொல்லி சென்று விட்டார் விக்னேஷ்.
வீடியோவைப் பாருங்கள்.
திக்கென்று திடுக்கிடும் அளவுக்கு பெரிய பாம்பு.
அடுத்த பிரச்சினை, மோட்டார். எனது தோழி அனுப்பி வைத்திருந்த இபி வேலை செய்பவர் வந்து ஃபியூசை பார்த்தார். நான் போட்ட ஃபியூஸ் போயிருந்தது. சிறிய
கம்பி தாங்காது என்று சொல்லி இரண்டு காப்பர் கம்பிகளை இணைத்து போட, மோட்டார் ஓடியது.
இதற்கிடையில் வெங்காய
சாம்பாரில் வதக்கப்பட்ட வெங்காயம் கண்ணாடி போல கரைந்து விட, எங்கடா வெங்காயத்தைக் காணவில்லையே
என சாப்பிடும் போது தேடிக் கொண்டிருந்தேன்.
கண்ணாடிவிரியனுக்கும்
வெங்காயத்துக்கும் ஆகாது போல.