குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 29, 2019

பசியின் கண்ணீர்

பாரதிக்கு மட்டும் அந்தக் கோபம் சொந்தமானதில்லை. பேச்சாளர்களும், ஆன்மீகக் குப்பைகளைக் கொட்டும் செப்டிக் ஆட்களும் அடிக்கடிச் சொல்வார்கள், ”தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம்” எனப் பாரதி கூறினார் என.

அந்தக் கோபம் பாரதிக்கு மட்டும் சொந்தமானதில்லை. பசித்திருப்போருக்கு உணவிடும்  ஒவ்வொருவருக்கும் அது உள்ளே உறங்கிக் கிடக்கும் தனியா நெருப்பு. சாலைகளில் பஞ்சைப் பறாரியாய் கிடப்போருக்கு சாப்பாட்டு பொட்டலம் வாங்கிக் கொடுக்கும் யாரோ ஒருவருக்குள்ளும் அந்த கோபம் இருக்கும். அவரால்  முடிந்தது அந்தப் பொட்டலம்.

கோடியாய்க் குவித்து மாதம் ஒரு முறை விண்ணில் பறக்கும் சேவகர்களுக்கும், காவலாளிகளுக்கும் இருக்க  வேண்டிய கோபம், சாதாரணன் ஒருவனிடம் இருக்கிறது. நாடக நடிகர்களும், சினிமா நடிகர்களும் தோற்று விடும் நடிப்பை நடிக்கும் நயவஞ்சக நரிகளாய், வேடமிட்டு வரும் வெண் தாடிகளும், வெள்ளுடைகளும் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவை தட்டிப் பறித்து தன் அடிப்பொடிகளுக்கும், தான் அடிமையாய்க் கிடக்கும் எஜமானர்களுக்கு கொடுக்கிறார்கள். பசியால் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் இந்தியர்கள்.

வங்கி கணக்கு என்றார்கள், மானியம் என்றார்கள். வங்கியில் கிடக்கும் பணத்தை உறிஞ்சி கயவாளிகளுக்கு கொடுத்து வெளி நாட்டுக்கு ஓட வைத்து வழி அனுப்பி வைக்கின்றார்கள்.

ஒரு வேளைச் சோற்றுக்கும் உணவின்றி தவிப்போர் இந்தியாவெங்கும் விரவிக் கிடக்கின்றனர். சாலைகள் தோறும் கவனிப்பார் இன்றி பசியால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துப் போகின்றார்கள். அரசு பிணக்கிடங்குகளில் கிடக்கும் அனாதைப் பிணங்களின் கணக்குகள் அரை சதவீதம் கூட இருக்காது. ஆதரவின்றி, கவனிப்பாரின்றி செத்துப் போகும் லட்சோப லட்சம் மக்களின் ஒரே தேவை உணவு. அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் பிடுங்கித் தின்னும் வெள்ளுடைய நயவஞ்சகர்கள் நரிகளாய் ஊருக்குள் ஊளையிட்டுக் கொண்டு, சிவப்பு விளக்குப் பொருத்தி சிங்காரமாய் பவனி வருகின்றார்கள். சிவப்பு விளக்கு சிங்காரன்கள் நாட்டைப் பிறருக்கு விற்கும் கயவாளிகள். 

நான்கரை லட்சம் டன் உணவு வீணாய் போனது இந்தியாவில். பசியால் செத்துப் போவோர் கணக்கு எனக்குத் தெரியவில்லை. செத்துப் போகும் விவசாயிகள் கணக்கு மட்டும் தெரிகிறது. விவசாயி கடனால் செத்துப் போகின்றார். ஆனால் பசியால் சாவோர் எண்ணிக்கையோ பல மடங்கு என்கிறார்கள். 7 ரூபாய் தருகின்றாராம் நாளொன்றுக்கு விவசாயிக்கு. என்ன ஒரு கொடூரம்?

போகட்டும் அறக்கோபம். கோபம் தெரிந்து விழும் வார்த்தைகள் மனதுக்குள் சற்றே ஆற்றுதலைத் தருகின்றன.

”அப்பா, இன்றைக்கு ஐ,ஐ.டி ரிசல்ட்” என்றார் நிவேதிதா.

“ போன தடவை, 98 மார்க் அல்லவா? இந்த தடவை 100 எடுத்தால் மாலையில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இரவு உணவு வாங்கித் தருவேன்” எனச் சொன்னேன்.

சிறிய புன்னகையுடன், “அப்பா, எனக்கும் திக் திக்குன்னுதான் இருக்கு?” என்றார்.

மாலைச் சரியாக நான்கு மணி பத்து நிமிடம்.

“அப்பா, 100ப்பா, என்னாலே நம்பவே முடியவில்லை” என்றார் போனில்

இரவு எட்டு மணி போல கணபதியில் இருக்கும் அன்னபூர்ணாவிற்குச் சென்றோம்.

திக்கித் திணறிச் சாப்பிட்டாலே 300 ரூபாய்க்கு மேல் சாப்பிட முடியாது. சிறிய எளிய உணவு, சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தோம். அங்கு ஒருவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியில் வருவோரிடமெல்லாம் சென்று பலூன் வாங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எவரும் வாங்கவில்லை. களைத்துப் போன முகம். வியர்வையில் நனைந்து உப்புக் காய்ந்து போன சுவடுகள் கொண்ட சட்டை. ஒருவர் குழந்தையுடன் வெளியில் வர அவரிடம் சென்றார். அவர் தலையாட்டி மறுத்து விட்டு நகர, அவர் தடுமாறி விழப்போனார். 

பசி.....!

எனக்குள் சுருக்கென்றது.

அவரை அருகில் அழைத்து கொஞ்சம் பணத்தைக் கையில் கொடுத்து ’சாப்பிட்டு வரும்படி’ கேட்டுக் கொண்டேன். காசை வாங்க முடியாது என்று மறுத்தார். இரண்டு பலூன்களைப் பெற்றுக் கொண்டு காசைக் கொடுத்தேன். அவர் கண்களில் கண்ணீர் பொசுக்கென்று அருவியாய் வழிந்தோடியது. முதுகில் தட்டிக் கொடுத்து, ”போய் சாப்பிட்டு விட்டு, வியாபாரத்தை தொடருங்கள்” என்று சொன்னேன்.

வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் மகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

“ஏம்பா, அவர் அழுகிறார்?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் நிவேதிதா. உள்ளுக்குள் எரிமலை கனன்று கொண்டிருந்தது. நிவேதிதாவுக்கு புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

ஹோட்டலுக்குள் செல்லும் முன்பு இவரைப் பார்த்திருந்தால் கூடவே அழைத்துச் சென்றிருப்பேன். அவர் சாப்பிடுவதைக் கண்டு என் மனது நிறைந்திருக்கும். அந்த வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

ஹோட்டலுக்குள் சென்று வயிறாரச் சாப்பிட்டு வருபவர்கள் தன் எதிரே நின்று கொண்டிருக்கும் சக மனிதனைக் கூடவா கவனிக்க மாட்டார்கள்? என்ன மாதிரியான உலகம் இது எனக்குள் ஆயிரம் கேள்விகள். மனிதர்களிடம் இருந்த மனிதாபிமானம் மறத்துப் போனதா? திண்ணை கட்டி சோறு போட்ட தமிழர்களா இவர்கள்? என்றெல்லாம் கேள்விகள் மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்தன.

”தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழி!” என்ற குரல் இரவு முழுவதும் எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பாரதியின் குரலா என எனக்குத் தெரியவில்லை. அது உங்களின் குரலாகக் கூட இருக்கலாம் அல்லவா?

* * * * *
29/03/2019 - 12.29 PM

Monday, March 4, 2019

நரலீலைகள் - சிவராத்திரி - (2)

அனைவருக்கும் வணக்கம். அடியேன் நரலீலைகள் நாவலின் ஆசிரியன். இன்றைக்கு சிவராத்திரியாம். மஹா சிவராத்திரியாம். எனக்கு அதன் அர்த்தமெல்லாம் தெரியாது.

சின்ன வயதில் அம்மா, “தம்பி, இன்னைக்கு சிவராத்திரிப்பா, ராத்திரி முழுக்க தூங்காம இருந்தா நல்லா படிப்பு வருமாம், உன்னைக் கொண்டு போய் கோயில்ல விட்டுட்டு வர்ரேன். விடிகாலம்மா வந்து கூட்டிட்டு வர்ரேன், போறியா” என்பார்.

”சரிம்மா” என தலையாட்டுவேன்.

பெயிண்ட் அடிக்காத, சிதிலமடைந்த சிவன் கோவில். கிழக்கு வாசலில் பழைய துருப்பிடித்த கம்பிகள் வேய்ந்த மரக்கதவிடுக்கின் வழியே சிவலிங்கனார் இருப்பார். அந்த சிவலிங்கத்தை தாத்தா மாணிக்கதேவர் தான் மன்னார்குடிப் பக்கம் மாட்டு வண்டி கட்டிக் கொண்டு போய் ஏற்றிக் கொண்டு  வந்து, பிரதிஸ்டை செய்தார்கள் என்று சொல்வார்கள். வடகிழக்கு மூலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் வைத்திருந்த வள்ளலார் புகைப்படம் இருக்கும். அதை ஒட்டினாற் போல தெற்குப் பார்த்தா மாதிரி யாரோ ஒரு பெண் சாமி இருக்கும். எனக்கு நினைவில் இல்லை. சிவபெருமான் சன்னதிக்கு எதிரில் பாழடைந்த ஒரு நந்தி மண்டபம் இருக்கும்.

எல் சேப்பில் இருக்கும் கோவிலில் வாசலை அடைத்தாற் போல பந்தலிட்டு அங்கே ஒரு மேடையிட்டு, அதன் மீது அமர்ந்து மழையூர் சதாசிவம் ஏதேதோ பாடிக் கொண்டிருப்பார். வாண்டுகளும், கொஞ்சம் பெரியவர்களும் உட்கார்ந்திருப்பார்கள். நான் அந்த மண்ணுக்குள் தவழ்ந்து கொண்டிருப்பேன். விடிய விடிய அவரும் விடாமல் பாடிக் கொண்டிருப்பார். நானும் கண் அசராமல் கேட்டுக் கொண்டிருப்பேன். அவ்வப்போது அங்கே கிடக்கும் கல்லுக்கால்களில் உட்கார்ந்து கொண்டு ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். விடிகாலையில் யாரோ ஒருவர் சுக்கு மல்லிக்காப்பி கொடுப்பார். வாங்கிக் குடித்து விட்டு அங்கேயே சிவபெருமான் சன்னதி முன்னால் உருண்டு கொண்டிருப்பேன். தூக்கம் கண்ணைச் சுழட்டும். நல்லாப் படிப்பு வருமேன்னு தூங்க மாட்டேன்.

விடிகாலையில் அம்மா வந்து வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். இவ்வளவுதான் எனக்கு சிவராத்திரி பற்றித் தெரியும். சிவராத்திரிக்கு கண் முழிச்சா நல்லா படிப்பு வரும்னு அம்மா சொன்னாங்கல்ல, அதே மாதிரி நல்லாத்தான் படிச்சேன்.

”ஏய் நீர் யாரப்பா? இங்கே வந்து நின்னுகிட்டு இருக்கிறாய்?”

”எம் பேரு மாயன்”

“ஆ..... சிவபெருமானா????”

“அதே, அதே...! கொஞ்சம் கண்ணை மூடி என்னைத் தியானி!”

“அப்படியே செய்கிறேன் சிவபெருமானே!”

* * * * *



லூசுப்பய. இவென்லாம் நாவல் எழுத வந்துட்டான் பாருங்க. வாசகர்களே! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்தானே. மீண்டும் நானே உங்களுடன்.

”தெரியாமத்தான் கேட்கிறேன். இந்த ஆசிரியன் சிவராத்திரி அன்னைக்கு கண் விழித்திருந்தால் நன்றாகப் படித்ததாகச் சொல்கிறானே, அமெரிக்காரனும், பிரிட்டிஷ்காரனும், ஐரோப்பியனும் எந்த சிவபெருமான் கோவிலில் உட்கார்ந்திருந்தார்கள் என்று சொல்கின்றானா? பாருங்கள்?”

”அடேய்! அடேய்!! நீ யாரடா இடையில்? நில்லு நில்லு !!!!”

”அண்ணா, அடியேன் பேரு சந்துசிந்து. இந்த நாவலில் வருகின்ற ஒரு பாத்திரம். இந்த நாவலாசிரியன் எப்போது என்னைப் பற்றி எழுத ஆரம்பிப்பானோ தெரியாது. ஆனால் எனக்கு கொஞ்சம் அவசரம். ஆத்திரம். அதான் வந்துட்டேன்”

”வாப்பா, வா! நாவலின் முதல் பாத்திரம். என்னைப்போல ஒருவனா நீ!  ஆசிரியன் சொல் கேட்காத ஒரு கதாபாத்திரம். பரவாயில்லை. அதென்ன பேரு சந்துசிந்து?”

”சிரிக்க மாட்டீங்கன்னா சொல்றேன்”

“சிரிக்க மாட்டேன் சொல்லு, அப்படி என்ன தான் சொல்லப்போறேன்னு பார்க்கிறேன். நான் பார்க்காத கதாபாத்திரங்களா?”

”இங்கே தான் கோயம்புத்தூர்ல ஈஷா ஈஷான்னு ஒரு இடம் இருக்கு. அங்கே ஒரு சிவராத்திரிக்கு அம்மாவும், அப்பாவும் போனார்களா? அடுத்த மாதம் நான் அம்மா வயித்துல கர்ப்பமாயிட்டேன்னாம். ஆனா ஏன் சந்துசிந்துன்னு பேர் வச்சாங்கன்னு கேட்டா, அம்மா சிரிக்கிறாங்க. ஒன்னும் புரியல”

“ஏன், உங்கப்பா கிட்டே கேட்க வேண்டியதுதானே?”

“அப்பா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே இல்லையே”

“என்ன????”

“அவரை நான் பாக்கவே இல்லை?”

என்ன இழவுடா இது? இந்த சந்துசிந்து மொத்தமா குழப்புகின்றானே. பார்த்தால் லூசுப் பய மாதிரி இருக்கான். இவனிடம் என்ன கேட்டு என்ன புரியப்போகிறது?

என் முகத்தைப் பார்த்த சந்துசிந்து,”எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”ன்னான்.

அவனே தொடர்ந்தான், “சநி”

மயக்கமே வந்தது எனக்கு...!

* * * * *

வெள்ளைக்காரனாவும் தெரியலை, நம்ம ஊர்க்காரனாவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கின்றானே யாராக இருப்பான் இவன்? இருக்கட்டும். என் பேரைக் கேட்டதும் தலையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டான். அவன் போகட்டும். நான் வந்த விஷயத்தை சொன்னாத்தான் நல்லா இருக்கும். அதுவும் இந்த நன்னாளில்.

சவுக்கு சங்கர் அண்ணே, இருக்காப்லே அல்லவா? அவரு ஒரு படத்தைப் பேஸ் புக்குல போட்டிருக்காரு. அந்தப் படத்தை உத்துப் பார்த்தால் சிவன் சக்தி மேலே ஏத்தி மன்னிக்கவும், அருள் புரிந்த மகத்துவத்தைப் பார்க்கலாம். அந்தப் படம் கீழே. நான் ஏன் இதை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன் என்றால் புரியாதவர்கள் நரலீலைகள் நாவலைத் தொடர்ந்து படிக்காதீர்கள். உடனே விலகி விடுங்கள்.

* * * * *

அன்பு நண்பர்களே! நரலீலைகள் நாவலின் கதாபாத்திரங்கள் என்னைக் கேட்காமலே உருப் பெற்று உங்களுடன் உரையாடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் நினைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள், நான் அறிமுகப்படுத்தும் முன்பே, உங்களுடன் பேசுவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாவலின் தொடர்ச்சி என்னவாக இருக்கும் என எனக்கு இன்னும் புரியவில்லை. நான் எழுத நினைத்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அது அதுபாட்டுக்கு வருவதால் ஒழுங்கின்றி நாவல் கலைந்து போகும் என்ற கவலைதான் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த நாவல் ஒரு சிலர் சைவத்துடன் அசைவ உணவையும் உண்பார்களே அதைப் போல வரும் என நம்புகிறேன். என் கதாபாத்திரங்களை கட்டி ஆள, சிவனை நோக்கி தியானம் செய்யப் போகிறேன். மனம் ஒழுங்கானால் எல்லாம் ஒழுங்காகும் அல்லவா?

”மாயனே! எனக்கு அருள்வாய்! என் நாவலின் கதாபாத்திரங்கள் என் சொல் கேட்கட்டும்..

மனத்தில் எழுகின்ற மாய நன் நாடன்
நினைத்தது அறிவன் என்னில்தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர்: இறைவன் 
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே - திருமூலர்

மாயனின் சிரிப்புச் சத்தம் காதில் ஒலிக்கிறது. அது உங்களுக்கும் கேட்கிறதா?

* * * * *
(04-03-2019)