குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 9, 2019

நிலம் (48) - டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நம்பி வாங்கலாமா?

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வாழ்த்தினைப் பிறருக்குச் சொல்லும் போதெல்லாம் திருப்பூர் குமரன் மண்டை உடைந்து செத்துப் போன செய்தியும், கோவையில் செக்கிழுந்த வ.உ.சிதம்பரனாரும் நினைவில் வந்து விடுகின்றார்கள். உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆங்கில ஆண்டு. அடிமையின் சின்னமாய் இருந்தாலும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடியாத வகையில் வரலாற்று சின்னமாகிப் போன அவலம் நினைவிலாடும். வரும் கால தலைமுறையினருக்கு இந்த எண்ணங்கள் வரச் சாத்தியங்கள் குறைவு.

ஆட்சிப் பொறுப்புக்கு தகுதியே இல்லாதவர்கள் வரும் போது, அவரவர் புத்திக்குத் தக்கவாறு வரலாற்றை மாற்றி சிறார்களுக்கு பாடப்புத்தகங்களை உருவாக்கும் அவலத்தை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் ஜாதிக்கு ஒரு வரலாறு எனவும், ஜாதிக்கு ஒரு பள்ளி எனவும் மாறினாலும் மாறலாம். பெண்கள் தனிப்பள்ளி இருப்பது போல இந்த ஜாதிப் பெண்களுக்குத் தனிப்பள்ளி, ஆண்களுக்கு தனிப்பள்ளி என்று கூட வரலாம். குறுகிய மனம் படைத்தோர் பதவிக்கு வரும் போது இத்தகைய அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பூனைக்கு எவரும் மணி கட்டுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தன் மொழி, தன் இனம், தன் சிந்தனை பற்றிய கவலைகள் தான். 

உடம்பு என்று இருந்தால் நோய் இருக்கும். அதே போல சொத்துக்கள் என்று இருந்தால் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர்கள் என்னிடம் கொண்டு வந்த சொத்துப் பிரச்சினை நான் எதிர்பார்க்காத ஒன்று.

கோவையில் சேரன் மாநகர் என்றொரு பகுதி இருக்கிறது. அந்தப் பகுதி விளாங்குறிச்சி என்ற ரெவின்யூ கிராமத்தில் அடங்கியது. இந்தப் பகுதியில் தமிழ் நாடு வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்ட நிலங்கள் அதிகம். கிட்டத்தட்ட 1200 ஏக்கருக்கும் மேல் என்று நினைவு. அது பற்றிய விபரங்கள் தெளிவாக இருக்கின்றன. இந்த நிலங்கள் அரசின் வீட்டு வசதித்துறையினால் எடுக்கப்பட்டவை. இதில் தகுந்த இடத்தில் தடையின்மைச் சான்று பெற்றால் ஒழிய வீடோ அல்லது விற்பனையோ செய்ய இயலாது. 

என்னிடம் வந்த பிரச்சினை விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள நான்கு டிடிசிபி அப்ரூவ்ட் சைட்கள். அவை டிடிசிபி அப்ரூவல் செய்யப்பட்டு மனை வரைபடம் வழங்கப்பட்டிருக்கின்றன. மனை வரைபடம் வழங்கப்பட்ட ஆண்டு 1992. ஹவுசிங் போர்ட் நிலம் எடுக்க உத்தரவிட்டு பதிவு செய்யப்பட்ட ஆண்டு 1983. ஆனால் 1992ம் வருடம் மனை அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த மனையை வாங்கியவர் தற்போது விற்க முனையும் போது அது ஹவுசிங் போர்டில் வருகிறது என்ற தகவல் கிடைத்து அதிர்ந்தனர் தற்போதைய நில உரிமையாளர்கள்.

இது எப்படிச் சாத்தியம் என்று அனைவரும் நினைக்கலாம். நான் முன்பே சேரன் மாநகர் பகுதியில் பதினைந்து வருடங்களாக பட்டா வாங்க இயலாத வீட்டு மனைகளைப் பற்றி எழுதி இருக்கிறேன். கிட்டத்தட்ட 70 வீட்டு மனைகள் டிடிசிபியால் அப்ரூவல் செய்யப்பட்டவை. தற்போது வரைக்கும் பட்டா பெற முடியவில்லை. காரணம் அந்த நிலங்கள் நில உச்ச வரம்புச் சட்டத்தில் அரசின் நிலமாக மாற்றப்பட்டவை. அந்த விஷயத்தை மறைத்து மனை அப்ரூவல் பெற்று விற்பனை செய்திருக்கின்றார்கள்.

டிடிசிபி அப்ரூவல் விதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். சொத்தின் உரிமையில் வில்லங்கம் ஏற்பட்டால் தகுந்த நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள் என. வில்லங்கச் சான்றிதழ் கொடுக்கும் போது இது முழுமையான ஆவணம் அல்ல என்று கொடுத்திருப்பார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

ஆகவே டிடிசிபி அப்ரூவ்ட் மனைகள் என்றுச் சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு வாங்கிட வேண்டாம். தகுந்த ஆட்களைக் கொண்டு அந்தச் சொத்தின் வரலாறு போன்றவற்றை ஆராய்ந்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவஸ்தைப் பட நேரிடலாம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

1 comments:

நிகழ்காலத்தில்... said...

DTCP அப்ரூவல் என்பதே போதும் என்பதே பொதுமக்கள் எண்ணம்.. அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாத காலகட்டத்தில் போடப்பட்ட உத்தரவுகள் தற்போது பொதுமக்களைப் பாதிக்கின்றது. சொத்து வாங்குமுன் தகுந்த ஆலோசனை அவசியம் என்பதே இதன் மூலம் தெரிகிறது.. உங்களின் பணி போற்றத்தக்கது தொடருங்கள் நன்றி

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.