குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, October 27, 2017

பிள்ளைகளின் அன்பு பொய்யானதா?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அற்புதமான அனுபவத்தைத் தருபவை. விடிகாலையில் எழும் போது இன்றைக்கு நடக்க இருப்பவைகளைப் பற்றியும், புதிதாகச் சந்திக்க இருப்பவர்களைப் பற்றியும் ஆர்வமிருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். 

ஓஷோ சொல்வார் வாழ்க்கை மீது ஆர்வம் வேண்டும் என. 

ஆர்வம் இல்லாதவர்கள் ’வெந்த சோற்றைத் தின்று விதி வந்த அன்று செத்துப் போவார்கள்’. வாழ்க்கையில் ஆர்வமின்றி இருப்பவர்களால் இந்த உலகிற்கு மட்டுமல்ல அவர்களைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கும் துன்பமேயன்றி வேறொன்றுமில்லை. தற்கால மனிதன் இழந்தது இந்த ஆர்வம் என்ற குணத்தை என்பார் ஓஷோ. வாழ்வதற்காக வேலை என்பவர்கள் தான் புலம்பிக் கொண்டிருப்பார்கள். வேலையை ஆர்வமுடன் நேசிக்கும் ஒருவன் உயர உயர உயர்ந்து கொண்டே இருப்பான்.

விஜய் டிவியின் சந்திர நந்தினி (செம அழகு இந்தப் பெண்) தொடரை அடிக்கடிப் பார்ப்பதுண்டு. சந்திரகுப்தர் மவுரியருக்கு ஒரு பெண்ணை காதலிக்கத் தெரியவில்லை என்பதுதான் இந்தத் தொடரின் கதை முடிச்சு. இயக்குனர் சுற்றும் பூ உடல் முழுதும் பரவினாலும் அழகுப் பெண்களைப் பார்க்கும் போது சூரிய ஒளியில் மலரும் காந்திப் (எதார்த்தமாக வந்து விட்டது) பூ போல உள்ளம் மலர்ச்சி அடைகிறது. அவர்கள் நலமுடனும் நன்றாகவும் இருக்கட்டும். (அது ஏன் சூரிய காந்தி எனப் பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. காந்திக்கும் மலர்ச்சிக்கும் என்ன தொடர்பு?)

இந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மகள் சூடான சாதத்தில் பருப்பு விட்டு பிசைந்து கொண்டு சாப்பிடுவதற்காக ஷோபாவில் அமர்ந்தார். என்னைப் பார்த்ததும், “அப்பா, நல்ல மணமாக இருக்கிறதப்பா, ஊட்டி விடுகிறேன், சாப்பிடுகின்றாயா?” என்று கேட்க, மறுக்க முடியுமா?

சாதத்தைப் பிசைந்து கவளமாக எடுத்து என் உதட்டில் படாமல் வாய்க்குள் வைத்து ஊட்டி விட்டார். மணோன்மணியே அருகில் இருந்து ஊட்டிக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. மகள் கையில் தகப்பன் சாப்பிடுவது என்பது எவ்வளவு மகிழ்வு தரும் நிகழ்வு? ஆனால் உள்ளுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு ஏற்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குறுகுறுப்புக்கு விடை தேடி மனசு அலை பாய்ந்தது. விடை கிடைக்குமா?

மனைவி உணவு ஊட்டுகையில் வாய்க்குள் வைத்து உணவை ஊட்டுவார். அம்மாவும் அப்படித்தான். ஆனால் மகளோ தன் விரல் கூட உதட்டில் படாமல் உணவை ஊட்டி விட்டதனால் எனக்குள் ஏற்பட்ட அந்த குறுகுறுப்புக்கு விடை காணாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். காரணமின்றி காரியம் இல்லை. ஏதோ ஒரு மறைபொருள் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் தூங்கிப் போனேன்.

விடிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து மனையாளுக்கு காய்கறிகள் நறுக்கிக் கொடுத்து விட்டு ஓஷோவின் மனிதனின் புத்தகம் புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். நான்காம் பாகத்தில் மகன் என்றொரு தலைப்பில் விவரிக்க ஆரம்பித்தார்.

ஒரு தாய் தன் பிள்ளை மீது அன்பு கொண்டிருப்பது இமயமலையில் இருந்து வழிந்தோடும் கங்கை நீரைப்போல. தாய்க்கு தன் பிள்ளை மீது அன்பு கொள்வது இயற்கை நியதி. பிள்ளைக்கு தாயின் அரவணைப்பும் அன்பும் தேவை. அதற்கான நான் உன் மீது அன்பாயிருக்கிறேன், ஆகவே நீயும் என் மீது அன்பாயிருக்க வேண்டுமென்று குழந்தையைக் கேட்பது மடத்தனம். அந்தக் குழந்தைக்கு தன் குழந்தையின் மீது தான் அன்பு இருக்குமே ஒழிய தன் தாயின் மீது இருக்காது என்று போட்டுடைத்தார் ஓஷோ.

ஓ...! இதுதான் காரணமா? என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல ஜோதி சாமியை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ”இது என்ன ஆண்டவனே பிரமாதம், இன்னொன்றும் சொல்கிறேன்” என்றார்.

”சொல்லுங்க சாமி” என்றேன். 

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

திரு மூலரின் ”யாக்கை நிலையாமையில் வரும் பாடலொன்று” இது.

ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொள்ளி இட்டுச்சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர். (பொழிப்புரை  ப.ராமநாதப் பிள்ளை)

”ஆண்டவனே, ஒவ்வொரு மனிதனும் எப்போதும் தனியாள் தான். மேலே சொல்லி இருக்கிற பாடலையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார். 

“ நச்சுன்னு மண்டைக்குள் ஏறிவிட்டது சாமி” என்றேன்.

ஆகவே நண்பர்களே, யாக்கை நிலையாமையும், அன்பின் தத்துவத்தையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கையை ஆர்வமுள்ளதாக மாற்றுவோம். 

Thursday, October 26, 2017

உள்ளம் சிவமானால் உடம்பு கோவிலாகும்

தீபாவளி அன்று இரண்டு மணிக்கு எழுப்பி விட்டார் மனையாள். தூக்கக் கலக்கத்தோடு சென்றால் ஒரு கூடை சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், வெல்லம், சுக்கு, ஏலக்காய் என்னைப் பார்த்துச் சிரித்தன.

”இன்னும் இரண்டு மணி நேரம் தான் இருக்கிறது, அதற்குள் வடை, சுழியம், பாலப்பம் செய்ய வேண்டும், படபடவென வெங்காயத்தை உரித்து நறுக்கி, மிளகாயை மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை வெகு சிறிதாக கட் செய்து விட்டு, அப்படியே சுக்குவை தனியாகவும், ஏலக்காயைத் தனியாகவும் பொடித்து தனித்தனியே வைத்து விடுங்கள். வெல்லத்தை பொடிப்பொடியாக தூள் செய்து வையுங்கள், அப்படியே அந்த ஆறு மூடி தேங்காயைத் துருவி வைத்து விடுங்கள்” என்றுச் சொன்னார். மலைத்துப் போய் விட்டேன். முடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. செய்து தான் ஆக வேண்டும். நானே விரும்பி காதலித்து திருமணம் செய்து பதினேழு வருடங்கள் கடந்து விட்டன. இருந்தாலும் சின்னதா ஒரு பிட்டைப் போடுவோமென நினைத்து, ”உடம்பு வலிக்கிறா மாதிரி இருக்கே”ன்னு சொல்வதற்குள் ”சுக்கு மல்லிக்காப்பி அதோ இருக்கிறது, குடித்து விட்டு, லூசுத்தனமா பேசாம வேலையைச் செய்யுங்கள்” என்றார்.

கண்கள் எண்ணைத் தேய்த்துக் குளிக்காமல் குளிக்க சிறிய வெங்காயத்தை உரித்து நறுக்கி, பச்சைமிளகாயை வெகு மெல்லிதாக நறுக்கி, இஞ்சியை தோல் உறித்து நறுக்கிக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் வடையின் வாசனை வந்தது. அடுத்து கத்தியால் வெல்லத்தைச் சீவி(புதிய டெக்னிக், காப்பிரைட் என்னிடம் உள்ளது) பருப்புடன் சேர்த்து அதனுடன் சுக்கு  கொஞ்சமும், ஏலக்காய் கொஞ்சமும் சேர்த்து வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்த்து கொடுத்தேன். சுழியம் அடுத்த அடுப்பில் வெந்தது. பாலப்பத்திற்கு தேவையானவைகளைச் சேர்த்து அம்மணியே பலகாரத்தைச் செய்தார்கள். 

ஒரு வழியாக சமைத்து முடிக்க பசங்க இருவரும் எழுந்து வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர். நல்ல நேரம் பார்த்து நால்வரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து பலகாரங்கள் சாப்பிட்டு குருவினைத் தரிசிக்க கிளம்பினோம்.

இந்த வருடம் வெடிச்சத்தங்கள் அதிகம் இல்லை. சாலையெங்கும் பரவிக்கிடக்கும் பட்டாசுக் காகிதங்கள் சுத்தமாக இல்லை. ஆங்காங்கே ஊசிப்பட்டாசு வைத்துக் கொண்டு கையில் புகையும் ஊதிபத்தியுடன் சிறுவர்கள் திரிந்தார்கள். எவரின் முகத்திலும் மலர்ச்சி இல்லை. 

வரி என்கிற பெயரில் ஏகப்பட்ட பணத்தை மக்களிடமிருந்து பறிக்கிறது அரசு. வருமான வரி போக, ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுக்க வேண்டியதாகி உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருக்கும் பணத்தை கஜானாவுக்குள் கொண்டு சேர்க்கிறது மத்திய மாநில அரசுகள். லூசில் விற்கப்படும் பருப்புகளுக்கு வரி இல்லையாம். பாக்கெட் போட்டால் வரியாம். இந்தக் காலத்தில் எந்தக் கடை லூசில் பருப்பு விற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. வரி வாங்குங்கள் தப்பே இல்லை. ஆனால் ஊழல் இல்லாமல் செய்ய முடியவில்லையே? கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக கொடுக்க மாட்டேன் என்கிறதே அரசு. மிக நல்ல சிகிச்சைக் கிடைக்க வேண்டுமெனில் தனியாரிடம் அல்லவா செல்ல வேண்டி இருக்கிறது. 

முன்பெல்லாம் பில் இல்லாமல் பொருள் வாங்கினோம். அண்ணாச்சிகள் பெரும் பணக்காரனானார்கள். இப்போது பில் போடாத பெட்டிக்கடை அண்ணாச்சிகள் கல்லாவைக் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களை மத்திய அரசு என்ன செய்து விட முடியும்? வாட்சப்பில் ஒரு மெசேஜ் கிடைத்தது.

2000 ரூபாயை வங்கியில் வைப்பு நிதியாக வைத்திருந்தால் 8 சதவீதம் வட்டி ரூ.200 கிடைக்கும். அதே இரண்டாயிரம் ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்று நாம் வட்டி கட்டினால் 13 சதவீதம் ரூ.260 கட்ட வேண்டும். ஆனால் அதே இரண்டாயிரம் ரூபாய்க்கு ஹோட்டலில் சாப்பிடச் சென்றால் ரூ.300 வரியாகக் கட்ட வேண்டும். இதைத்தான் பகல் கொள்ளை என்கிறார்கள்.

ஏற்கனவே வருமானத்துக்கு வரி பிடித்துக் கொள்கின்றார்கள். மிச்சம் இருக்கும் பணத்துக்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி வாங்குகின்றார்கள். இப்படியே தொட்டதுக்கெல்லாம் வரி வாங்கினால் மக்களிடம் பணம் எப்படி மிச்சமாகும்? பணம் இல்லையென்றால் பொருட்களை வாங்க முடியாது. வேறு வழியே இன்றி பொருட்கள் விலை குறையும் சூழல் உருவாகும். இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கச் செய்யும் அல்லவா?

இந்த அக்கப்போரு என்றைக்கும் முடியப்போவதில்லை. அரசு எனும் பூனைக்கு மக்கள் எனும் எலிகள் என்றைக்கும் மணி கட்டபோவதில்லை. அது முடியவும் முடியாது.

அரசியல் களம் என்பது துரோகமும், அக்கிரமமும், அயோக்கியத்தனமும், திருட்டுத்தனமும், பொய்யும், சூதும், வாதும் நிரம்பியவை. அக்களம் அப்படித்தான் இருக்கும். உண்மையானதாக மாறவே முடியாது. அரசியல் என்பது அதுதான். ஊழலும், அதிகாரத் துஷ்பிரயோகமும் அரசியலின் இரு கண்கள். சுய நலம் என்பது அரசியலின் அடி நாதம். அதில் அயோக்கியத்தனம் என்பது தூண்கள். ஆகவே அரசியல் அக்கப்போரு பேசி ஒன்றும் ஆவப்போவதில்லை. பட்டுத்தான் தீர வேண்டும். நாம் நல்லவர்களாக இருந்தால் அல்லவா அரசியல்வாதி நல்லவராக இருப்பார்.

நடிகனுக்கு நாட்டைத் தூக்கிக் கொடுக்கும் நமக்கெல்லாம் மானம், ரோசம், நல்லவை, கெட்டவை எதுவும் இருப்பதில்லை என்கிற போது அரசியல் பற்றிப் பேச தகுதியே இல்லை. முட்டாளாக இருப்பதே சுகம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம் புத்திசாலித்தனத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பிரயோஜனம்?

ஒரு வழியாக வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ சமாதிக்குச் சென்று சேர்ந்தோம். அங்கு இரண்டு பேர் காத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு தீபாவளி அன்றைக்கும் வீட்டிலிருந்து செல்லும் பலகாரங்களைச் சாப்பிடுவதற்காக வருடம் தோறும் வந்து விடுவார்களாம். ஏன் தாமதம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதியம் போல நானும் ஜோதி சாமியும் பேசிக் கொண்டிருந்தோம்.

அடியேன் ஓஷோவின் புத்தகங்களை வாசிப்பவன். அடிக்கடி அவரின் பல கேள்விகள் என்னைக் குடைந்து கொண்டிருக்கும். கடவுள் இல்லவே இல்லை என்கிறார் அவர். ”அது சரிதானா? சாமி” என்றுக் கேட்டேன்.

“ஆமாம், கடவுளே!” என்றார் சாமி.

அதிர்ச்சியாக இருந்தது.

”பின்னே நான் ஒவ்வொரு கோவிலாகச் சென்று வழிபாடு செய்வது என்பதெல்லாம் என்ன?” என்றொரு கேள்வியைக் கேட்க, அவரோ ”அது உங்களின் அறியாமை” என்றார்.

கேட்ட எனக்கு குழப்பமே மிஞ்சியது.

“கோவில்கள் மட்டும் இல்லையென்றால் மனிதர்கள் மிருகமாகி விடுவார்கள் ஆண்டவனே!” என்றார் தொடர்ந்து.

“ஒன்றுமே புரியவில்லை சாமி” என்றேன்.

அதற்கு அவர், “உள்ளம் சிவமானால் உடலே கோவிலாகும்” என்றார்.

எனக்கு ஏதோ கொஞ்சம் புரிந்தது. உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?


Monday, October 16, 2017

அமேசான் ஜாக்கிரதை

ரித்திக் மியூசிக் பிளேயர் வேண்டுமென்று கேட்டிருந்தான். பாடலைக் கேட்டவுடன் கீபோர்டில் வாசிக்க முயற்சிக்கிறான். ஏற்கனவே பிளிப்கார்ட்டில் ஒரு எம்.பி 3 பிளேயரை வாங்கிக் கொடுத்திருந்தேன். அது ரிப்பேர் ஆகி விட்டது. ஆகவே மீண்டும் ஒரு பிளேயர் வேண்டுமென்றான். போன் வாங்கினாலும், எந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் வாங்கினாலும் விலை குறைவானதாகவே வாங்குவேன். ஐபோன் வாங்கி அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து ஒரு வருடம் முடிவதற்குள் அடுத்த வெர்சன் வந்து விட்டது. நான் வைத்திருந்த ஐபோன் இப்போது குப்பைக் கூடைக்குள் கிடக்கிறது. நிவேதிதா கேம் விளையாடுகிறார் அவ்வப்போது. 

பிளிப்கார்ட்டில் தேடினேன் கிடைக்கவில்லை. முதன் முதலாக அமேஜானில் தேடி ஆர்டர் செய்தேன். பத்து நாட்கள் கழித்து பதினைந்து தடவைக்கும் மேல் போனில் அழைத்து முகவரி கேட்டு ஒரு வழியாக வீடு வந்தார் டெலிவரி ஆள். 450 ரூபாய் கொடுத்து விட்டு பார்சலை வாங்கினேன். அப்போது சரியாக மழை பிடித்துக் கொண்டது. டெலிவரி ஆட்கள் இருவரும் வீட்டுக்குள் வர, பார்சலைப் பிரித்தால் உள்ளே ஒரு வாட்சும், விசிட்டிங் கார்டு ஹோல்டரும் இருந்தது. அதிர்ந்து விட்டேன். டெலிவரி ஆள் பணம் கொடுக்க முடியாது என்கிறான். கொரியர் அலுவலகத்திலிருந்து போன் செய்து நீங்கள் அமேசானில் கம்ப்ளைண்டு செய்து பணத்தை திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெத்தாகப் பேசினார்கள். கண் முன்னே பணம் இருக்கிறது, அதைக் கட்டி விட்டு மீண்டும் கிளைம் செய்து பணம் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். கதை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

விட்ட சவுண்ட் எஃபெக்டில் பணம் கைக்கு வர, பார்சலைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்டேன்வி. இதோ கீழே போட்டோ இருக்கிறது. ஆகவே அமேஜானோ வேறு என்ன ஆன்லைன் கடையானாலும் சரி காசு கொடுப்பதற்கு முன்பு பிரித்துப் பார்த்து விட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் போன் செய்தே மண்டை காய்ந்து விடும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். 


இந்த வருடம் ஆன்லைன் பிசினஸ் வர்த்தகம் 9000 கோடி ரூபாய் இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நேற்றைய ஒரு டிவி விவாவதத்தில் எனக்கு நிரம்பவும் பிடித்த விஜயதாரணி எம்.எல்.ஏ (தில்லு எம்.எல்.ஏ) அவர்கள் பொதுமக்களிடம் ரீடெயில் மார்க்கெட்டில் பொருள் வாங்குவது 40 சதவீதம் சரிந்து இருக்கிறது என்கிறார். பிஜேபியின் தலைவர் அமித்ஷாவின் குமாரர் பிரச்சினை பிரதமருக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கி விட்டது.

எனது நண்பர் ஒரு நாள் திடீரென போனில் அழைத்து, “வாழ்க்கையில் ஒன்றுமே நிலையில்லைப்பா” என தத்துவம் பேச ஆரம்பித்தார். ஒன்று இவருக்கு ஏதோ பிரச்சினை அல்லது ஏதாவது சம்பவத்தைப் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன். இல்லை என்றால் ஆள் இப்படியெல்லாம் பேசமாட்டார்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த இசையமைப்பாளர் ஒருவரின் மகன் தெருவில் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் காசு கேட்கிறாராம். அவரைத் தெரிந்தவர்கள் இருந்தால் பணம் கொடுக்கின்றார்களாம். கஜானா கடைக்கு (டாஸ்மாக்) செல்கிறாராம். ஊட்டியில் படிக்க பங்களா, சென்று வர கார் என வசதியெல்லாம் செய்து கொடுத்தார் இசையமைப்பாளர். யாருக்காக ஓடி ஓடி உழைத்தாரோ அவரின் இன்றைய நிலையோ பரிதாபகரம்.

பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கவில்லை என்றால் இப்படித்தான் ஆகி விடும். அமித்ஷா இருக்கும் பதவிக்கு அவரின் பிள்ளையால் வந்த தொல்லையினால் தலை(மை) பதவி போகுமா? தப்புமா? என்பதெல்லாம் பிரதமருக்கும் அமித்ஷா அவர்களுக்கும் இடையே இருக்கும்  பிணைப்பூ தான் நிர்ணயிக்க வேண்டும். 

பொருளாதாரம் சரிந்து இருக்கிறது என்று பேசிக் கொள்கின்றார்கள். அது என்ன எழவு பொருளாதாரமோ தெரியவில்லை. சாமானியனின் சம்பளம் மட்டும் ஏறாத பொருளாதாரத்தையும், அரசு அலுவலர்களின் சம்பளமும் கிம்பளமும் ஏறும் பொருளாதாரத்தையும், பதினெட்டு சதவீதம் லாபம் அடைந்த தனியார் நிறுவன பொருளாதாரத்தையும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் கோடி வாராக்கடனாக இருந்த வங்கிக் கடன், இந்த வருடம் ஒன்பது இலட்சம் கோடியாக உயர்ந்திருப்பதன் (வாராக்கடன்) பொருளாதாரத்தையும்.  ஃபேன் வாங்கக் கூட காசில்லாத தலைவர்கள் கோடிகளில் சொத்துக்கள் வாங்கும் பொருளாதாரத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

வழக்கம் போல வந்து செல்லும் தீபாவளி பலருக்கு பல செலவுகளை வைக்கும். ஒரு சிலருக்கு கடனைக் கொண்டு வந்து சேர்க்கும். சமூகத்தில் வாழ வேண்டுமெனில் அதற்கென ஒரு விலையை நாம் காலமெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். தவறாகப் பேசுவார்கள் என்ற ஒரு நிலைக்காக நாம் இழப்பது கொஞ்சம் நஞ்சமல்ல.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது கவனமாக இருங்கள். நல்லெண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். வாழ்க வளமுடன்!