எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள்.
எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாலும் கார் தெருவில்தான் நிற்கும். எத்தனை லட்சம் கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அது கிழிந்து சாயமிழந்து பழதாகி விடும். இன்றைக்கு எல்.சி.டி நாளைக்கு என்ன டிவியோ? வாங்கிய எல்சிடிக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. இன்றைக்கு ஆப்பிள் போன். நாளைக்கு அப்கிரேடு ஆனால் வாங்கிய போன் மதிப்பிழந்து போய் விடும். நான் பிராண்டட் சர்ட்தான் போடுவேன். நான் வைத்திருக்கும் காரின் விலை 20 லட்சம் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். இப்பெருமை வந்தது இப்பொருட்களால் என்றால் அது பொருட்களை தயாரிப்பவர்களுக்குத்தானே சேரும். உனக்கு என்ன இதில் தற்பெருமை இருக்கிறது? இப்படியான பொருட்களை விற்பவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கொட்டும். வாங்கியவர்களுக்கு ஈகோவினால் பொருள் இழப்புதான் மிச்சம். இப்படியான மக்களுக்குத்தான் இந்தக் கதை. தொடர்ந்து படியுங்கள்.
திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கமா போட்டு விடமுடியாது. வார்த்தைகளை மாற்றிப் போடவும் முடியாது. அப்படிப் போட்டால் பாடலின் அர்த்தமே மாறிப்போய்விடும். இப்படியான படைப்பை இன்றிருக்கும் எவராவது எழுத முடியுமா? ஏன் முடியவில்லை? என்ன காரணம்? யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? வள்ளுவரும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? வள்ளுவரும், அவரின் மனைவி வாசுகியும் ஒரே ஒரு ஆடையை ஒருவர் மாற்றி ஒருவர் அணிந்து கொண்டுதான் வெளியில் சென்று வருவார்களாம். வள்ளுவரின் தேவைகளை அறிந்து அவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே தன் வாழ் நாள் கடமையாக கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். இன்றைக்கு வாழும் கணவன் மனைவிகளில் எத்தனை பேர் இவர்களைப் போல இருக்கின்றார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் இருக்கலாம். கணவன், மனைவி உறவென்பது படைக்கும் தொழில், ஆக்கும் தொழில் கொண்டது. இல்லையென்று எவராவது மறுக்கமுடியுமா? இவ்வுறவுக்கு இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில், ஸ்டைல் என்ற பெயரில் எவ்வளவு கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப நல நீதிமன்றங்களில் பார்த்தால் தெரியும்? எத்தனை எத்தனை வழக்குகள். ஏன் ? எதற்கு? என்று கேட்டால் ஒரே ஒரு காரணம் தான் சொல்வார்கள். “பொருள்”
திருப்பதியில் ஜீவசமாதி அடைந்து திருப்பதி பெருமாள் சன்னிதிக்கே பெரும் புகழைத் தேடித்தந்த கொங்கனவர் என்கிற சித்தர் ஒரு முறை திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும் வசிக்கும் தெருவழியாகச் செல்லும் போது பசியெடுக்க, இவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் வாசலுக்கு வர, அங்கு கொங்கணவர் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.
இந்தக் கொங்கணவர் மகா தவ பலம் நிரம்பியவர். வழியில் வந்து கொண்டிருக்கையில் அவர் மீது எச்சம் போட்ட கொக்கினை கோபத்துடன் பார்க்க அந்த நிமிடத்தில் கொக்கு தீப்பிடித்து இறந்து விட்டது. அவரின் கண் வீச்சுக்கு அவ்வளவு சக்தி. அச்சம்பவம் முடிந்த பிறகுதான் வாசுகி அம்மையாரிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறார். அம்மையார் வர காலதாமதமானதால் கோபத்துடன் அவரை நோக்க, அவரைப் பார்த்துச் சிரித்த வாசுகி அம்மையார், “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க சித்தருக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாம்.
இவருக்கு எப்படி அச்சம்பவம் தெரியும் என்று குழம்புகிறார். பிறகு தெளிவுறுகிறார். எத்தனையோ காலம் தவம் செய்து கிடைத்த பலனை, ஒரு சாதாரண பெண் வெகு அலட்சியமாய் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கணவனுக்கு பணிவுடை செய்யும் மனைவிக்கு அத்தனை சக்தி எப்படிக் கிடைக்கும்? இதெல்லாம் சாத்தியமா?
ஆம். எல்லாம் சாத்தியமே.
அர்ப்பணிப்பு, தூயமனது, தியாகம்.
வள்ளவருக்கும் வாசுகிக்கும் இருந்தது அர்ப்பணிப்பு, தூயமனசு, தியாகம். வாசுகியின் அர்ப்பணிப்பு தான் வள்ளுவருக்கு திருக்குறளை எழுத வைத்தது.
கொங்கணவர் இவர்கள் இருவரும் இருக்கும் ஏழ்மை நிலையைப் பார்த்து விட்டு வள்ளுவரை தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தன் தவ வலிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்த அச்சித்தர், தன் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து எதிரில் இருந்த பாறை மீது தெளிக்க அது தங்கமாகிறது. வள்ளுவரிடம் காட்டி, இதை வைத்துக் கொண்டு வசதியாய் வாழுங்கள் என்றுச் சொல்லி இருக்கிறார்.
அவரைப் பார்த்து நகைத்த வள்ளுவர், இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த பாறையின் அருகில் சென்று அதன் மீது சிறு நீர் கழித்திருக்கிறார். அப்பாறையே தங்கமாகி விட்டது.
கமண்டலத்தின் தீர்த்தத்துக்கு இருந்த வல்லமை வள்ளுவரின் சிறுநீருக்கு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? யோசித்துப் பாருங்கள்.
வள்ளுவர், வாசுகியின் வாழ்க்கை புரியும்.
குறிப்பு : இக்கதைகள் எனது மாஸ்டர் சொல்லி நான் கேட்டது. அவரிடம் அனுமதி கேட்டு பதிக்கப்பட்டது.
4 comments:
வள்ளுவர் சித்தருக்கும் உணர்த்தி விட்டார்...
சிறப்பிற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
கொக்க் கதை மட்டும் கேட்டிருக்கேன்
அய்யா, இன்று குறளை சிலர் மக்கள்மயப் படுத்தவும் நடைமுறைக்கு ஏற்பச் செய்யவும் முயற்சிக்கிறார்கள்.ஆனால் நீங்கள் அதீத கற்பனையைக் க்லந்து மனிதர் பயன்படுத்தமுடியாதது குறள் என்று காட்டுவதாக உள்ளது. இப்படிப்பட்ட இலக்கிய உயர்வுநுகர்ச்சியை தவிருங்கள். குறள் வாழ்வியல் நூல் என்பதை நிலைநாட்ட முயலுங்கள். உங்கள் வீட்டில் யாராவது வாசுகி போல் இருக்க முடியுமா? இயலாததையும் மாயையையும் தவிருங்கள்.
இறைகற்பனை இலான் அய்யாவிற்கு - இலக்கியமென்றால் உயர்வு நுகர்ச்சிதான். இல்லையென்றால் அது இலக்கியமே இல்லை. உங்களுக்குத் தெரியாதது இல்லை. குறள் எழுதியவரைப் பற்றிதான் எழுதி இருக்கிறேன். வேறொன்றும் எழுதி இருக்கவில்லை.
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.