அன்றைக்கு வெள்ளிகிழமை. முட்டம் நாகேஸ்வரரையும், முட்டத்து வாளியம்மனையும் தரிசித்து வரலாம் என்று ஆலாந்துறை புறப்பட்டேன். தன் வாழ்நாளில், விபரம் தெரிந்த நாள் கொண்டு காசைக் கையால் தொடாமலே வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ‘சத்குரு ஞானி வெள்ளியங்கிரி சுவாமிகள்” அவர்களைத் தரிசித்து வாருங்கள் என்ற நண்பரின் அறிவுரையின் படி, முட்டம் நாகேஸ்வரர் ஆலயத்திலிருந்து செம்மேடு வழியாக பூண்டி வெள்ளியங்கிரி ஆலயம் செல்லும் வழியில், வன காளியம்மன் ஆலயத்தின் இடதுபுறம் செல்லும் வழியில் சென்றேன். வலது புற பாதை வழியாகச் சென்றால் ஈஷா யோக மையம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இடதுபுறச் சாலையில் சென்றால் புளியமரங்கள் நிரம்பிய காடு தென்படுகிறது. அங்கிருக்கும் பதி வரை செல்லும் சாலை அங்கேயே முடிந்து விடுகிறது. சத்குருவின் ஜீவ சமாதிக்கு ஒற்றை அடிப்பாதைச் செல்கிறது. அதில் சென்று ஆஸ்ரமத்தை அடைந்தேன்.
சத்குருவின் ஜீவ சமாதியில் வேலை நடந்து கொண்டிருந்தது. தியானம் செய்ய முடியவில்லை. செல்லும் அனைவருக்கும் உணவளிக்கின்றார்கள். ஜீவசமாதியின் அருகில் செல்ல முடியவில்லை. கல் பதிக்கின்றார்கள். அடுத்த வாரத்திற்குள் வேலைகள் நிறைவு பெறும் என்றார்கள். ஜோதி சுவாமி, அருண், சீனிவாசன் ஆகியோரிடம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினேன்.
ஈஷாயோகமையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கி வரலாம் என்று சென்றேன்.செல்லும் வழியில் தென்பட்ட ஒருவரை நிறுத்தி ஈஷா யோகமையம் செல்லும் சாலைதானே இது என்று விசாரித்தேன். அது வேறு பாதை என்றுச் சொன்னார். பைக்கை திருப்பியவுடன், “இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள், பக்கத்தில் தான் வெள்ளியங்கிரி சுவாமி திருக்கோவில் இருக்கிறது, கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுச் செல்லுங்களேன் ” என்றார்.
சுற்றிலும் காடு, அதன் நடுவே வளைந்து நெளிந்து செல்லும் கருமை படர்ந்த தார்ச்சாலை. கணேசர் அடிக்கடித் தென்படுவார் என்ற எச்சரிக்கை வேறு மனதுக்குள் நிழலாட திக் திக் நெஞ்சுடன் வெள்ளியங்கிரிக்கு பயணமானேன்.
ஏழுமலை தாண்டி இருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி சுவாமி கோவிலின் அடிவாரத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சேர்ந்தேன். வருடத்தின் ஒரே ஒரு நாள் நடக்கும் பூப்பந்தல் விழாவாம் அன்று. நல்ல தரிசனம். ஆலயத்தில் தீபம் அருளி, மலர்களும், பூக்களும், பிரசாதமும் தந்தார்கள். சத்குருவைத் தரிசிக்கச் சென்றால், அவர் இறைவனைத் தரிசிக்க அனுப்பி வைத்து விட்டார். பூண்டி கோவிலுக்குச் செல்லும் நினைப்பே என்னிடத்தில் இல்லை. எல்லாம் சத்குருவின் ஆசீர்வாதம்.
நிறைவுடன் திரும்பிய வழியில் மையம் சென்று திருநீறும், எள் உருண்டையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். இதோ கீழே இருக்கும் படத்தில் இருப்பவர்தான் வெள்ளியங்கிரி சுவாமி.
வெள்ளியங்கிரி சுவாமி ஆஸ்ரமத்திற்கு அருகில் இருக்கும் பதியில் வசிக்கும் கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும், மலைகளில் அலைந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு, கோவை டவுனிற்குள் வந்து சித்த மருந்துக் கடைகளிடம் மூலிகைகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் சமைத்து அவர்களுக்குத் தருவாராம். மனிதனுக்கு என்றுமே தீரவே தீராத பிணி “பசிப்பிணி” அல்லவா.
பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கோ அல்லது மையத்திற்கோ செல்பவர்கள் நான்கைந்து நிமிடங்கள் ஆற்றங்கரையோரத்தில் அமைதியாய் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவ சமாதியில் அமர்ந்து தியானம் செய்து விட்டுச் செல்லுங்கள். வற்றவே வற்றாத மூலிகை ஆற்றில் ஆர தீர குளித்து விட்டுச் செல்லுங்கள். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
ஆஸ்ரமம் செல்ல விரும்புபவர்கள் இப்போது ஆஸ்ரமத்தில் தங்கி இருக்கும் ஜோதி சுவாமியிடம் பேசி விட்டுச் செல்லுங்கள். இவர் திடீரென்று குகை, மலை என்று சென்று விடுவார். நீங்கள் அங்குச் சென்றால் ஒருவாய் தண்ணீராவது தர ஆள் வேண்டுமே அதற்காகத்தான் சொல்கிறேன். அது மட்டும் காரணமல்ல. அங்குச் செல்பவர்களுக்கு உணவளிக்கின்றார்கள். சொல்லாமல் சென்று விட்டால் அளவோடு சமைக்கும் உணவை நமக்கு அளித்து விடுவார்கள். தொலைபேசி எண் : 98948 15954.