அம்புஜம் என்றொரு பெண்மணி. எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு ஒரு பெண், சற்றே பெருத்த சுமாரான அழகுடைய பெண். அம்புஜத்தின் கணவர் இருக்கும் இடம் தெரியாது. தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடினார்கள். அவர் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் இயக்குனர். நல்ல குடும்பம். வெகு சுமாரான குடும்பத்தினைச் சேர்ந்த அம்புஜம் மகள் அப்பெரிய இடத்திற்கு மருமகளாய் சென்றார். வாழ்க்கை வெகு அழகாய்ச் சென்று கொண்டிருக்கிறது. அம்புஜமும், அவள் கணவனும் மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அம்புஜம் எங்குச் சென்றாலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள். அம்புஜத்தின் கணவரோ பேசுவது என்றால் என்ன என்று கேட்பவர். அதிர்ந்த சத்தம் வராது. அந்தளவிற்கு மென்மையானவர். அம்புஜத்தினால் அவர்கள் உறவினர்கள் வீட்டில் ஒரு பிரச்சினையும் வராது. சென்ற தடம் கூட தெரியாமல் வீடு திரும்பும் வழக்கமுடையவர் அம்புஜம்.
இப்படியான அம்புஜத்தின் வாழ்விலே துன்பத்தின் சாயல் கொஞ்சம் கூட படியவில்லை. சாதாரண குடும்பத்தினைக் கட்டிக் காத்து, வேறு எவர்களின் கோபத்திற்கோ, வேறு எந்த வித பிரச்சினைக்கோ ஆளாகாமல் வாழ்ந்து வரும் அம்புஜம் எப்போதும் மகிழ்வாகத்தானே வாழணும்? அவர் அப்படித்தான் வாழ்கிறார்.
தர்மம் என்பது சத்தியம். சத்தியம் என்பது உண்மை. உண்மை என்பது நன்மை. நன்மை என்பது பிறருக்கு தீங்கு நினையாமை.
மகாபாரதத்திலே தண்ணீர் என்று கருதி தரையில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் பாஞ்சாலி. ஆன்றோர்களும் சான்றோர்களும் நிரம்பிய அரசவையிலே பலர் பார்க்க அவளை அவமானப்படுத்தினான் துரியோதனன். ஒரு சாதாரண கேவலச் சிரிப்பிற்கே கடவுள் இத்தனை பெரிய தண்டனையைக் கொடுக்கின்றான் என்றால் பெரிய தவறுகளுக்கு கடவுள் எத்தனை பெரிய தண்டனைகளைக் கொடுப்பான்?
இப்படித்தான் ஒருவர் பணம் ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்து வந்தார். அவரின் கதை என்ன? ..... ( அடுத்த பகுதியில் )