குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, July 22, 2012

அரசையும் மக்களையும் ஏமாற்றும் தனியார் மருத்துவமனைகள்


குழந்தைகள் படிக்கும் பள்ளியின் செக்யூரிட்டியின் கண்கள் கலங்கி இருந்தன. விசாரித்தேன். அவர் மனைவிக்கு கர்ப்பைப்பையில் கட்டி வந்து விட்டது என்று புலம்பினார். ஆபரேசன் செய்ய ஆகும் செலவை நினைத்து கலங்கிப் போயிருந்தார். அவரிடம் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் பற்றிச் சொல்லி உடனடியாக காப்பீட்டு அடையாள அட்டை பெறும்படியும், அதன் வழி முறைகள் பற்றியும் விளக்கம் கொடுத்து விட்டு வந்தேன். நான்கு நாட்கள் கழிந்து, வழியில் சந்தித்த செக்யூரிட்டி காப்பீட்டு அட்டை பெற்று விட்டதாக சொன்னார். அதன் பிறகு நடந்த விஷயம் தான் பதிவெழுதக் காரணம்.

சிகிச்சையின் போது காப்பீட்டு அட்டை இருக்கிறதா என்று கேட்ட தனியார் மருத்துவமனை, காப்பீட்டு அட்டையுடன் சென்றவுடன் திகிலைக் கிளப்பி இருக்கின்றார்கள். காப்பீட்டு திட்டத்தில் கர்ப்பை ஆபரேசன் செய்யலாமாம். கர்ப்பையில் இருக்கும் கட்டியோடு சேர்த்து ஆபரேசன் செய்ய முடியாதாம். அதாவது கர்ப்பப்பையை நீக்க வேண்டும். கட்டி இருப்பதால் அது வேறு நோயாம். என்ன ஒரு லொள்ளு பாருங்கள். படிக்காதவர்கள் என்றால் இந்த பகல் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகள் தலையை மொட்டை அடிப்பதையே வழக்கமாய் வைத்திருக்கின்றார்கள்.

அரசு பணம் கொடுக்கிறது, அதை வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கக் கூட தனியார் மருத்துவ மனைகளுக்கு கசக்கிறது. இலவசமாய் சிகிச்சை கொடுக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ உடனடி சிகிச்சைக்கு மறுக்கின்றன.

இது பற்றி சில நிரூபர்களிடம் பேசிய போது தனியார் மருத்துமனைகள் பல சிகிச்சை செய்யாமலே போலி குடும்ப அட்டைகளை வைத்துக் கொண்டு கட்டணங்களை வசூல் செய்து கொள்கின்றார்கள் என்றுச் சொன்னார்கள். 
அரசு மருத்துவமனைக்கு ஈசிசிஜி எடுக்கச் சென்றிருக்கிறார். 30 நாட்கள் கழித்து வரும்படி சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தாங்க முடியாத வலியுடன், நோயின் உச்சத்தில் இருப்பவருக்கு 30 நாட்கள் கழித்து ஈசிசி எடுக்க வாருங்கள் என்கிறார்கள். ( 30 நாட்களுக்குள் மேலுலகம் சென்று விடுவார் என்று அப்படிச் சொல்லி இருப்பார்கள் போல). இதே அரசியல்வாதிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருந்தால் உடனடியாக ஈசிசிஜி எடுத்திருப்பார்கள். படிக்காதவர், பாமரன் என்றால் அரசு மருத்துமனைகள் கூட எப்படி நடந்து கொள்கின்றன என்று பாருங்கள். இது கோவை அரசு மருத்துவமனையில் நடந்தது. 

பணமில்லாதவன், ஏழை பாழைகளுக்கு சிகிச்சை பெற வழி வகைகள் செய்தால் கூட அதைக்கூட மறுக்கும் இந்த வகை மருத்துவமனைகளை என்னவென்றுச் சொல்வது? இவ்வளவிற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு உள், வெளி நோயாளிகளில் 20 சதவீதம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உத்திரவாதத்தில் தான் அரசு அனுமதி அளிக்கிறது.

இதையெல்லாம் சரி செய்ய முடியாதா? என்று கேட்டால் நிச்சயம் செய்ய முடியும். டெக்னாலஜி வளர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் இந்தவகை ஏமாற்றுக்களை முற்றிலுமாக நீக்கி, நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை கிடைக்க அரசு ஏற்பாடு செய்யலாம். 

அரசு சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இதை அரசின் கவனத்திற்கு செல்ல வேண்டுமென்பதற்காக எழுதி இருக்கிறேன். 

காப்பீட்டு திட்ட அட்டை பெறுவது எப்படி?

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இதற்கென தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதற்கென தரப்படும் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து, கிராம நிர்வாக அலுவலரிடம் வருட வருமானச்  சான்றிதழ் பெற்று, மீண்டும் அலுவலகத்திற்கு குடும்பத்தோடு சென்றால் அங்கு புகைப்படம், ரேகை முதலியன எடுத்து அடையாள அட்டை எண் கொடுக்கின்றார்கள். வருட வருமானம் ரூபாய் 72,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். குடும்ப அட்டையை சான்றிதழ் கொடுக்க வேண்டும். 

http://www.cmchistn.com/index.html - இந்த முகவரியில் என்னென்ன நோய்க்கு சிகிச்சை கிடைக்கும் என்று விரிவாக இருக்கிறது. மேலும் விபரம் வேண்டுமெனில் அழைக்கவும் : Toll Free Number:  1800 425 3993 

- கோவை எம் தங்கவேல்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்களை விளக்கமாக தந்தமைக்கு நன்றி நண்பரே !

Desingh said...

நன்றி. பயனுள்ள தொகுப்பு. நான் இதை என்னுடைய blog and சில பொது வெப்சைட் ல போடபோறேன்..

Desingh said...

நோயாளியின் வயதென்ன, எந்த நிறுவனத்தில் பாலிசி எடுத்தார், எந்த மருத்துவமனை அவரை இப்படி படுத்தியது என்று விபரங்கள் தர முடியுமா?

Thangavel Manickam said...

தேசிங்கு, பின்னூட்டத்திற்கு நன்றி. ஒவ்வொரு ஊரிலும் இப்படித்தான் நடக்கிறது. ஒருவருக்கு மட்டும் பாதிப்பல்ல. ஏமாந்தவர்களைப் போட்டு தாக்குகின்றார்கள். இதற்கு மொத்தமாக விடிவு பிறக்க வேண்டும். அதற்கு ஆவன செய்யுங்கள்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.