கோவை மசக்காளிபாளையத்தில் சில நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சில்லிட்ட காற்று உடம்பைத் தழுவ அந்தச் சமயத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புடன், அருகிலிருந்த பேக்கரியில் லெமன் டீ ஆர்டர் செய்தோம்.
கம கம வாசனையுடன் லெமன் டீ சாப்பிட்டு விட்டு, எதிர்ப்புறமாக இருந்த அகண்ட சாலையில் காருக்குள் அமர்ந்து கொண்டு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்த போது, மீன் வறுவல் வாசத்தை, காற்று எங்களிடம் கொண்டு வந்தது.
ஒரு தள்ளுவண்டியில் மீன் வறுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று தட்டுகள் நிறைய மீனை வறுத்தவர், அந்த எண்ணெயை அருகில் இருந்த சாக்கடையில் கொட்டினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது உலக அதிசயம் என்று எண்ணி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்குள் நண்பரொருவர் ஒரு தட்டு வறுவல் மீனை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
சார் என் கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் வருவார்கள். இரண்டு லிட்டர் பாமாயிலை மீன் வறுத்தவுடன் கொட்டி விடுவேன். மேலும் மேலும் எண்ணெய் சேர்த்து வறுப்பது கிடையாது. என்னால் பிறரின் உடலுக்கும், குழந்தைகளின் நலத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சார் அடிக்கடி எண்ணெயை மாற்றுகிறேன் என்றார்.
ஆச்சர்யம். மீந்து போன பொருட்களை மறு நாள் சூடாக விற்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் வெளியிட்டு மகிழ்வார்கள். கால்வதியான மருந்துப் பொருட்களை விற்பவர்களும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் பன்னாட்டு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழிலதிபர்கள் என்று அவார்டுகளை வழங்கும் நமது அரசாங்கம். வியாபாரம் என்ற பெயரில் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கொலைகாரர்கள் உலவும் இந்தப் பூமியில் தன்னை நம்பி சாப்பிட வரும் மனிதனின் நலத்தில், கவனம் வைத்துச் செயல்படும் மிஸ்டர் குமார் என்பவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.
அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்
1 comments:
//இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.//
உண்மை அண்ணா..
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.