தேர்தலும் முடிந்து விட்டது.
இது நாள் வரை விசாரணையும் வரவில்லை.அடையாள அட்டையும் வரவில்லை.
தேவையின்றி இரண்டு நாள் அலைச்சல்தான் மிச்சமானது. பொது மக்களுக்கு தவறான செய்திகளை கொடுத்து அலைச்சலும், வீண் விரயமும் செய்யும் தேர்தல் கமிஷன் மீது வழக்குத் தொடுத்து, நஷ்ட ஈடு பெற இயலுமா ? விபரம் தெரிந்தவர்கள் சொன்னால், பிறருக்கு உபயோகமாய் இருக்கும்.
வேகாத வெயிலில் சென்று திரும்பி வருகையில், பசி வயிற்றைக் கிள்ள சாலையோரத்தில் நின்றிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் மொபைல் உணவகத்தைக் பார்த்தேன்.

தக்காளி சாதம் ரூபாய் 10.
வெஜிடபிள் பிரியாணி ரூபாய் 10
தயிர்சாதம் ரூபாய் 10
வடை, ஊறுகாய், குருமா, சாம்பார்
தக்காளி சாதம் சாப்பிட்டேன். சும்மா சொல்லக்கூடாது. வயிறும் நிரம்பி விட்டது. சுவையும் நன்றாகவும் இருந்தது. எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆகையால் அந்த சுய உதவிக்குழுவினருக்கு வாழ்த்துச் சொல்லும் பொருட்டு இப்படம்.

போளி :
இரண்டு மாதங்களுக்கு முன்பு டவுன் சென்று திரும்பும் போது நான் சாப்பிட்டு அறியாத இந்த வஸ்துவைப் பார்த்தேன். அருகில் சென்று விசாரித்தேன். போளி என்றார். சுவீட், காரம் என்று இருவகை போளிகள் இருந்தன. ஒன்று கொடுங்கள் என்றேன். ஏதோ ஒரு எண்ணெயைத் தடவி, மைதாவால் தயாரிக்கப்பட்ட மாவிற்குள் சுவீட் மிக்ஸை வைத்து தட்டி சூடாக எடுத்து தந்தார். முதன் முதலாக சாப்பிடும்போது நன்றாக இருந்தது. ஒன்றோடு முடித்துக் கொண்டேன். பத்து ரூபாய்க்கு மூன்றாம். அந்த போளி தான் செல்போனிற்க்குள் சிக்கிக் கொண்டது.
அம்முவின் அடாத தொல்லையால் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு விளையாட அழைத்துச் சென்ற போது வழியில் குறுக்கிட்டது ஊர்வலமொன்று. அதன் புகைப்படங்கள் தான் கீழே இருப்பவை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். யாரோ ஒரு பெண் வெகு சிரத்தையாக குடத்தில் தண்ணீர் மொண்டு மொண்டு தலையில் பால் குடம் வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் ஊற்றிக் கொண்டிருந்தார். அழகான பெண்கள் எல்லாம் ஆண்களின் பின்னே வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லுபவர்கள் நேரமாகிவிடுமோ என்று பதைபதைப்புடன் ஊர்வலத்தின் வலதும் இடதுமாய் கடந்து சென்றார்கள். புலி வேஷம் போட்டிருந்தவர் கண்ணில் கூலிங்க் கிளாஸ் மாட்டிருந்தார். வெறியேற்றும் மேளதாள முழக்கங்கள். வெடிகள். ஆடிக்கொண்டிருந்தனர் பலர். அம்மு என்னிடம் சுட்டிக் காட்டியது ” அப்பா, அந்த சாமி ஆடுதுப்பா”


இதுவரை பார்த்தே இராத இரு சிறுவர்கள் அம்முவை பார்க்கில் இருக்கும் ஊஞ்சலில் தூக்கி வைத்து ஆட்டிக் கொண்டு விளையாடினார்கள். ரித்திக் அந்த இரு சிறுவர்களும் அம்முவுடன் விளையாடுவதைக் கண்டு எரிச்சலுற்று என் அருகில் வந்து அமர்ந்து கொண்டான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அம்முவுடன் விளையாடிக் கொண்டிருந்தனர் இருவரும். போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது ஒரே சிரிப்பு. வண்டியில் வீட்டுக்குத் திரும்ப வரும்போது அம்மு என்னிடம் கேட்டது “ஏம்பா அவங்க அம்மா அவுங்க டிரஸ்ஸை தொவைக்க மாட்டாங்களா, அழுக்கா இருக்குல்ல” என்றாள். பெண்கள் சரியில்லை என்றால் சமூகம் கெட்டுப் போய் விடுமென்று ஆத்மானந்தா சாமி என்னிடம் அடிக்கடி சொல்வார்.

