குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Thursday, April 20, 2017

கிட்னியில் கல் நீக்க மருந்து

எனது நண்பரின் மகன் திடீர் வயிற்று வலிக்காக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்த போது ஸ்கேனில் கிட்னியில் கல் இருப்பதாகத் தெரிந்திருக்கிறது. ஆபரேசன் அது இதுவென்று பத்தாயிரத்துக்கும் மேல் செலவாகும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். கிட்னி கல்லை ஆபரேஷன் செய்து எடுத்தாலும் மீண்டும் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்றும் சொல்ல பையனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து தந்தையிடம் சொல்லி இருக்கின்றான். அட லூசுப்பயலே, இதுதானா பிரச்சினை, கவலையை விடு, சரி செய்து விடலாம் என்றுச் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு அவருக்குத் தெரிந்த ஒரு நாட்டு மருந்து கொடுப்பவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.

600 ரூபாய் விலையாம். அடுத்த இரண்டொரு நாட்களில் கிட்னியிலிருந்த கல் உடைந்து சிறு நீருடன் வெளியேறி இருக்கிறது. பையன் இப்போது மகிழ்ச்சியில் இருக்கிறான். பத்து எம்.எம். கல் இருந்தாலும் உடைந்து சிறு நீரோடு வெளியேறி விடுமாம். 

சாதாரண கிராமத்தில் இருந்து கொண்டு அந்த நாட்டு மருந்தினை பிரச்சினை இருப்பவருக்கு உடனுக்குடன் செய்து கொடுக்கின்றார்களாம். 

உங்களுக்குத் தெரிந்தவருக்கு கிட்னியில் கல் இருக்கிறது என்றால் என்னை அழைக்கச் சொல்லவும். மருந்து வாங்கித் தர ஏற்பாடு செய்து தருகிறேன். வெளியூரில் இருப்போர்கள் அவசியம் கோவை வர வேண்டும். பார்சலில் மருந்து வாங்கி அனுப்ப இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் நேரில் வர வேண்டுமென்பது கட்டாயம்.

தேவைப்படுபவர்கள் அழைக்கலாம். காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை மட்டுமே அழைப்புகளை எடுக்க இயலும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Friday, March 17, 2017

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு

”என்னங்க? வைத்தியரு இருக்காரான்னு கேட்டு போன் வந்துச்சு?”

“என்னா? வைத்தியரா? யாரது?”

“தெரியலிங்க, அவரு வந்தவுடனே அழைக்கச் சொல்றேன்னுச் சொல்லிட்டேன்”

இனி இவள் நக்கல் வேற தாங்க முடியாதே என்று நினைத்து முடிக்கவில்லை அதற்குள் போன் வர ”வைத்தியர் சம்சாரம் பேசுகிறேன்” என்று ஆரம்பித்தாள் மனையாள்.

யாரோ ஒருவர் எதைப் படிச்சாரோ என்னத்தைப் புரிஞ்சுக்கிட்டாரோ தெரியவில்லை. வைத்தியரு இருக்காருன்னு அழைச்சிருக்காரு போலன்னு நினைச்சுக்கிட்டு அவரைத் திரும்பவும் அழைத்தேன். மனதுக்குள் ஒரு குஷி இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் இடித்தது. அவர் ஏன் என்னை வைத்தியர் என்று அழைத்தார்? ஒரு வேளை புற்று நோய்க்கு மருந்து பற்றி எழுதி இருந்தேனே அதற்காக இருக்குமோ என்று கூட நினைத்தேன்.

எனக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் பிரச்சினை தேடி வரும் போல. பிளாக்கில் என்ன எழுதி இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போனார் போல என்னை வைத்தியர் என்று அழைத்தவர். இது ஒன்று தான் பாக்கி இருக்கிறது. இனி அந்த வேலையையும் செய்து விட வேண்டியதுதான்.

என்னிடம் அருமையான மூட்டு வலி நிவாரணிக்கான தைலம் ஒன்றின் செய்முறை இருக்கிறது. இனிமேல் அதைத் தயாரித்து விற்பனை செய்து விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்த எனக்குத் தலை கிறுகிறுக்காத குறைதான் போங்கள்.

அதைச் சொன்னால் நீங்கள் இரண்டு நாளாவது விட்டு விட்டு சிரித்துக் கொண்டே இருப்பீர்கள் என்பதால் சொல்லி விடுகிறேன். அவருக்கு ஒரு பெண் பழக்கமாம். அவருக்கும் அதுவுக்கும் நல்ல பிரண்ட்ஷிப் சென்று கொண்டிருந்ததாம். அதுக்குத் திருமணமாகி குழந்தைகள், கணவர் எல்லாம் இருந்தாலும் இவர் கூட நல்ல பிரண்ட்ஷிப்பாம். திடீரென்று அது இவருடன் பேசவில்லையாம். என்ன செய்வதென்றே தெரியவில்லையாம். அதை இவருடன் பேச வைக்க வேண்டுமாம். இதுதான் அவரின் பிரச்சினை. இவருக்கு நான் மருந்து கொடுக்க வேண்டும். இவர் என்னை என்ன நினைத்து வைத்தியர் என்று அழைத்திருக்கிறார் என்று இப்போது தெரிந்திருக்குமே?

ஆமாம், அதே தான். வசிய மருந்து வைத்தியர். மருந்து கொடுப்பவரெல்லாம் வைத்தியர் தானே? கேப்பிடேஷன் கட்டணம் கொடுக்காமல், நீட் எழுதலாமா கூடாதா என்றெல்லாம் யோசிக்காமல் அதுமட்டுமல்ல கல்லூரிக்கே போகாமல் எப்படி வைத்தியர் என்று அழைக்கப்படுகிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்? அவனவன் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து வைத்தியராகின்றான்கள். ஆனால் நானோ ஒரே ஒரு பதிவு எழுதியதன் காரணமாக வைத்தியராகி விட்டேன். 

மதுரை சூரியன் எஃப். எம் ரேடியோவிலிருந்து சுடன் பால் என்பவர் எனது மாந்திரீக வைத்திய அனுபவத்தைப் பற்றி பேட்டி எடுத்து ஒளிபரப்பினார். அன்றிலிருந்து ஆரம்பித்தது வினை. என் தொடர்பு எண்ணை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சத்தியம் செய்து வாங்காத குறையாகக் கேட்டுக் கொண்டேன். கையில் அடித்தா சத்தியம் செய்தேன், சும்மா வாயால் தானே சொன்னேன் என்று நினைத்து கொடுத்து விட்டார் போல சுடன்ன்ன்ன் பால்..!

யார் யாரோ போன் போட்டு  உங்களைப் பார்க்க வரணும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். ஆசிரமத்திற்குச் சென்றேன் அங்கு ஒருவர் என்னை உங்களது சிஷ்யனாக்கிக் கொள்ளுங்கள் என்று படுத்த ஆரம்பித்தார். அந்தக் கலை உங்களிடமிருந்து அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் சிஷ்யனாகச் சேர விரும்புகிறேன் என்று அனத்த ஆரம்பித்தார். அவரிடமிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன். 

மதுரையில் இருந்து ஒருவர் அழைத்து புலம்ப ஆரம்பித்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாம். வெல்டிங்க் பட்டறை வைத்திருந்தாராம். கண் தெரியவில்லையாம். இப்போது டெய்லரிங் யூனிட் போட்டு தொழில் செய்கிறேன் சார், இருந்தாலும் கடன் கட்டி மாளவில்லை. வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கிறது என்னை எப்படியாவது இந்தப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கதற ஆரம்பித்தார். அவரின் அனத்தல் தாங்க முடியாமல் அவருக்கு கடன் பிரச்சினை மற்றும் தொழில் மந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர ஒரு உபாயத்தைச் சொல்லிக் கொடுத்தேன். என்ன ஆனதோ தெரியவில்லை? போனும் வரவில்லை. சரியாகி விட்டால் சந்தோஷம்.

இப்போது நினைத்துக் கொள்ளுங்கள். பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு இடத்தில் சொல்வாரே? 

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு!

Wednesday, January 4, 2017

மருத்துவக் கொள்ளைகள்

மலைகள் டாட் காம் இணையத்தின் 113 இதழில் அடியேனின் ’மருத்துவக் கொள்ளைகள்’ கட்டுரை வெளியாகி உள்ளது. கீழே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.


தொடர்ந்து எனது ஆக்கங்களை வெளியிடும் மலைகள் இணைய இதழுக்கும், ஆசிரியர் சிபிச் செல்வனுக்கும் மிக்க நன்றி.

Wednesday, November 2, 2016

வார்த்தைகளின் வீரியம்

வெளி நாட்டில் படித்த தன் மகன் திரும்ப வந்ததும் தன் மருத்துவமனையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க வேண்டுமென்று நினைத்தார் மருத்துவர். மகன் வந்ததும் அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு வீட்டில் அமைதியாக இருந்தார் மருத்துவர். ஒரு சில நாட்கள் கழிந்தன. 

மகன் தன் தந்தையிடம் வந்து, ‘அப்பா, நீங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து  கடந்த வாரம் வரை ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தீர்கள் அல்லவா? அந்தப் பெண்ணின் நோயை நான் மூன்றே நாட்களில் சரி செய்து விட்டேன்’ என்றான். அப்பாவை விட தனக்குத் திறமை அதிகம் என்ற பெருமையில் அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

மருத்துவர் அவனை நோக்கி நகைத்தார்.

‘மகனே, அந்தப் பெண்ணின் நோயை நான் ஒரே நாளில் சரி செய்து இருப்பேன். ஆனால் செய்யவில்லை. நீ வெளி நாட்டில் படித்தது, இந்த எனது வீடு, கார், நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் அந்தப் பெண்ணின் பணம்’ என்றார்.

மகனுக்கு விஷயம் விளங்கியது.

‘அப்பா, அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும், ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சினை என்றுச் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னால் அந்தப் பயத்திலேயே அந்தப் பெண்மணி நடுங்கி விடுவாள்’ என்றான்.

மருத்துவர் தன் மகனை அருகில் அழைத்துச் சொன்னார், ’மருத்துவ தர்மத்தைப் புரிந்து கொண்டாய்’ என்று.

உலக மெடிக்கல் கவுன்சிலுக்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் செய்ததாய் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் கேத்தன் சேதாய் தலைவராக்கப்பட்டிருப்பதை நினைத்த போது எங்கோ படித்த கதை நினைவுக்கு வந்து விட்டது.

மருத்துவர் அந்தப் பெண்மணியின் வசதியைப் பயன்படுத்திக் கொண்டார். அதனால் அவர் தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவர் மகனோ அவருக்கும் ஒரு படி மேல். நோயாளியிடம் மருத்துவர் சொல்வது ஒவ்வொன்றும் சத்தியமாக நம்பப்படும். யாரிடம் எந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொல்வார்கள்.

நன்றாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, ’என்ன ஆள் இப்படி ஆகி விட்டீரே, சுகரா? பிரஷர் இருக்குமோ? என்று சும்மா கேட்டு வையுங்கள்’. அவனுக்குத் தூக்கம் வருமா? நிம்மதியாகத்தான் இருப்பானா? 

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.