குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 19, 2019

நரலீலைகள் - நான் யார்? - 1






நரலீலைகள் - நான் யார்? - 1



உங்களுக்கு வணக்கம். நான் நாவல் பேசுகிறேன். இதுவரையிலும் நீங்கள் நாவலின் கதாபாத்திரங்கள் பேசியதாகத் தான் படித்திருப்பீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கதாபாத்திரங்கள் மாறிக் கொண்டே இருப்பவை. ஆனால் நாவல் என்கிற நான் எப்போதும் மாறுவதில்லை.  நான் எப்போதும் இருந்து கொண்டிருப்பவன். நான் அழிவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை. ஆனால் நாவலின் கதாபாத்திரங்கள் அழிந்து போகின்றவை. அழிக்கப்படுகின்றவை. இந்த நாவலின் கதாபாத்திரங்களும் கூட அவ்வாறனவைதான். அதனாலென்ன? நாவல் ஆகிய நான் அழிவதில்லை. 

உங்களுக்கும் கூட குழப்பமாக இருக்கலாம். ஏனென்றால் இந்த உலகில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் அடைமொழியாக இருக்கிறது. இவன் பொதுப்பெயரில் வந்து குழப்புகின்றானே என நீங்கள் சித்தம் கலையலாம். ஆகவே எனக்கொரு பெயர் வைத்து விடுகிறேன் முதலில். என்னை நீங்கள் மாயன் என்று அழைக்கலாம். அல்லது நினைவில் வைத்துக் கொள்ளலாம். இப்போது உங்களுடன் உரையாடுவது யார் தெரியுமா? நாவல் அல்ல மாயன்! மாயன் தான் நாவல். நாவல்தான் மாயன். புரிந்து விட்டதா?

நான் கடவுளும் அல்ல. கடவுள்களுக்கு கூட உருவங்கள் இருக்கின்றன. மொழிகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அவ்வாறு அல்ல. எல்லா மொழிகளும், எல்லா கடவுள்களும் எனது கட்டுக்குள் அடைக்கப்பட்டவை.

முதலில் இந்த நாவலுக்குரிய படைப்பாளியாகிய ஆசிரியனைப் பற்றிப் பேச வேண்டும்.  இந்த நாவலுக்கு ’நரலீலைகள்’ என்று பெயர் வைத்திருக்கின்றான் இந்தப் பயல். 2009ம் வருடம் எழுதப் போவதாக இதே பிளாக்கில் அறிவிப்புக் கொடுத்தான். ஆஹா எனக்குள் புதிதாக கதாபாத்திரங்கள் உருவெடுத்து உலா வரப் போகின்றார்கள் என்ற எனது சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்  போட்டான் இந்தப் படைப்பாளி. கிட்டத்தட்ட பத்து வருடம் காத்திருந்தேன். இன்றைக்கு ஆரம்பித்து விடலாம் என்று அவன் முடிவு செய்திருந்தான். ஆனால் பாருங்கள் நான் உங்களுடன் உரையாட வந்து விட்டேன். அவன் வெளியில் நின்று கொண்டிருக்கின்றான்.

”அதெப்படி என் வாசகர்களுடன் நீ உரையாடலாம்?” என என்னை அவன் முறைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இதெல்லாம் புரியாது. ஒரு நாவல் தான் கதையைச் சொல்லும். அதைப் படைப்பவன் படைப்புக்குள் மறைந்து போகின்றான். எப்படி தன் குழந்தைக்குள் தகப்பன் மறைந்து விடுகின்றானோ அப்படி. 

இனி அவனுக்கு வழி விட்டு நாவலைத் தொடரச் செய்யலாம் என நினைக்கிறேன். அடிக்கடி உங்களுடன் உங்கள் மாயனாகிய நாவல் ஆகிய நான் உரையாட வருவேன் இந்த ஆசிரியன் அசந்து உறங்கும் வேளையில் நாம் நம் கச்சேரியை ஆரம்பிக்கலாம். அது வரை உங்களிடமிருந்து விடைபெறுவது நாவலாகிய மாயன்!



* * * * * *
19/02/2019


தொடரும்.....!

1 comments:

நிகழ்காலத்தில்... said...

பரபரப்பான ஆரம்பம்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.