குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 7, 2016

சிற்றலையும் பேரலையும் பேசிக் கொள்கின்றன

”ஐயோ நான் எவ்வளவு அற்பமானவன், என்னை அந்தப் பெரிய அலைகள் பாய்ந்து வந்து அமுக்கி அழித்து விடுகின்றனவே” என்று மிகவும் வருத்தப்பட்டது ஒரு சிற்றலை.

அப்போது ஒரு பெரிய அலை பாய்ந்து வந்தது.

“ஐயோ!” என்று அலறியது சிற்றலை.

“உன் முகத்தை நீ பார்த்ததில்லையா, உண்மையான உன் முகத்தை?” என்று கேட்டது பேரலை.

”இல்லை, நான் யார்? நான் ஒரு அலைதானே?” என்று கேட்டது சிற்றலை.

“ நீ அலைதான், ஆனால் அலை உன் வடிவமல்ல. அது ஒரு தற்காலிக வடிவம், நீ தண்ணீர்”

“தண்ணீரா?”

“ஆம், தண்ணீர். என்னைப்போல, என் வடிவமும் ஒரு தற்காலிக வடிவம்தான். அடிப்படையில் நானும் தண்ணீர்தான் உன்னைப்போல. வீணாக நீ கவலைப்படுகிறாய். குழப்பமடைகிறாய். உன் உண்மையான நிலையை, அடிப்படையை உணர்ந்தால் அச்சம் இல்லை, அவலம் இல்லை”

“அப்படியா? நீயும் நானும் ஒன்றா?”

“ஆம்! மாபெரும் இயற்கையின் வெவ்வேறு தற்காலிக வடிவங்கள். அடிப்படையில் எல்லாம் ஒன்றே. கவலை விடு” என்றது பேரலை.

* * *

படித்தீர்களா? விஷயம் அவ்வளவு தான். எனக்குள் பல்வேறு கேள்விகள் எழுந்திருந்த காலம். மனிதர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் எதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றொரு கேள்வியை என் முன் வைத்தேன். அதே போல நானும் இன்னொருவருடன் எதற்காகப் பேசுகிறேன் என்றும் என்னையே கேட்டுக் கொண்டேன். இதே கேள்வியை ஒவ்வொரு ஆட்களையும் பார்த்து வைத்தேன். மனிதர்களை மட்டுமல்ல என்னையே நான் அறிந்து கொள்வதற்கும் எனது இந்தக் கேள்விகளே போதுமானவைகளாக இருந்தன. 

மனித வாழ்வு பொருளை முன்வைத்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் இன்னொரு மனிதனைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழலைக் கட்டியமைத்திருப்பது சக மனிதனின் பாதுகாப்புக்குத்தான். கோவிலுக்குச் சென்றாலும் பொருள் செலவழிப்பதற்கு இதுவே காரணம். பொருள் சார்புடைய வாழ்க்கைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு. மனிதனை இன்னும் கட்டிப்போடுவது குடும்பத்தின் சாரல்களான பந்தம், பாசம், உறவுகள். அனைத்து ஒவ்வொன்றாய் விட்டுப் போய் விடும் என்று காலம் மாற மாற ஒவ்வொருவருக்கும் புரிந்து விடும்.

இந்தப் பொருள் மட்டும் இல்லையென்றால் சிற்றலை பேரலை தத்துவம் மனிதனுக்கு எளிதில் விளங்கி விடும். மாயா உலகமல்லவா? கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்தப் பொருள். 

விட்டு விலக சாத்தியமே இல்லை. நீங்களும் நானும் தண்ணீர் தான் என்பதை புத்தி சொல்கிறது. ஆனால் மனசுக்கு அது புரியாது. புரிந்தாலும் புரியாது போய் விடும்.

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.