குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 23, 2015

எம்.எல்.ஏ - தொடர் 2

டிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவது போல கதறிக் கொண்டிருந்தார்கள்.

”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா? கம்முனு இருக்காரு?”

“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள்? சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க?”

”மனச்சாட்சியா? மண்ணாங்கட்டி! ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம்? பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்?”

”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”

“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க! பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”

வாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.

“யாருன்னு பாருய்யா?”

“ரெகமெண்டேசனுக்கு வந்துருக்காங்கய்யா”

“சரி, சரி ! லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு” 

அரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.

”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”

குறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.