குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, January 9, 2015

சித்து விளையாட்டு

இரண்டாண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் வீடு தேடி வந்தார் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகச் சொன்னார். எனது பிளாக்கினைப் படித்துப் பார்த்தவர் என்னைச் சந்தித்து விட்டு அதன் பிறகு அவர் அவரின் முடிவினைத் தேடிக்கொள்ள இருப்பதாகச் சொன்னார்.

குடும்ப உறவுக்குள் பிரச்சினை. சொத்து சம்பந்தமாக கோர்ட்டில் வழக்காடுகிறார்கள். பணம் பிரச்சினை. குழந்தையில்லை. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் நண்பராகவும், குருவாகவும் மதித்த ஒருவரைச் சந்திக்கும்படியும், அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டாண்டுகள் ஓடோடின.  நேற்று என்னைச் சந்தித்தார் அவர்.

அவருக்கு ஒரு பெண் குழந்தை. ரோஜாப்பூ மாதிரி இருந்தது அப்பெண் குழந்தை. மீண்டும் பணப் பிரச்சினை. எந்தத் தொழில் செய்வது என்று தெரியவில்லை. குழப்பம். குழந்தையை எப்படி வளர்ப்பது? ஒரே பிரச்சினை. குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இன்னும் இழுத்துக்
கொண்டிருக்கிறது. புலம்ப ஆரம்பித்தார்.

தற்கொலை செய்ய முடிவெடுத்தவருக்கு கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து தன் சித்து விளையாட்டை ஆட ஆரம்பித்திருக்கிறான் இறைவன் என்று கண்டு கொண்டேன். கர்ம வினைப் பயனை அனுபவித்தாக வேண்டுமய்யா என்று கூவ வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவர். அவரை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி வைத்தேன். எம் குரு அவரைக் கவனித்துக் கொள்வார். இனி அவர் வாழ்க்கை சிறக்கும்.

யாருக்குப் பிரச்சினையில்லை இவ்வுலகில். புரிந்து கொண்டவர்கள் அமைதியாக வாழ்வார்கள். புரியாதவர்கள் புலம்புவார்கள். எனக்கும் பிரச்சினை வந்தது. 

எனது குரு என்னிடம் கேட்டார், “உங்களுக்கு எத்தனை கோடி வேண்டும்?”. 

உடனடியாக மறுத்து விட்டேன். கர்ம வினை துரத்துமே, பணமா கர்ம வினையை சரி செய்யும்? நீங்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே, இலங்கையிலும், தமிழகத்திலும் என்ன நடந்தது என்று. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடிந்தது?

எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விட்டால் !  இந்தப் பாடல் உங்களுக்குப் புரிந்தால் இப்பதிவும் புரியும்


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. - திருமூலரின் திருமந்திரம்